Features அரசியல் நாடுவது நலம்

நிம்மதியான சூழலே நமக்குத் தேவை

Written by Administrator

இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

நாட்டில் தற்பொழுது ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. பொதுஜன பெரமுன சார்பில் இம்முறை கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுகிறார். ஐ.தே.மு சார்பில் சஜித் பிரேமதாச களமிறக்கப்பட்டுள்ளார். முதலில் நாம் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் கள மிறக்கப்பட்டிருப்பவர் யார் என்பதைப் பார்க்க வேண்டும். அவர்களது கொள்கைத் திட்டங்கள் என்ன? கடந்த காலப் பகுதியில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதுபோன்று இம்முறை ஐ.தே.க. சார்பில் போட்டியிடுபவர் யார்? அவரது கொள்கைகள் என்ன? அவரது கடந்த காலச் செயற்பாடுகள் எவ்வாறிருந்தன? அவர் மேற்கொண்ட பணிகள் என்ன? என்பது குறித்து மக்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது முக்கியமானது.

எமது நாட்டிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் எல்லோருக்கும் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் ஒன்றை உருவாக்கிக் கொள்வதே மிக முக்கியமானது. முதலாவது எமக்கு நிம்மதி வேண்டும். இந்த நிம்மதியை யாரால் பெற்றுத்தர முடியும். மக்களின் இந்த நிம்மதிக்காக வேண்டி உழைத்திருப்பவர் யார்? அந்த நிம்மதியை அடைந்துகொள்வதற்கு மக்கள் யார் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்?

எனவே இப்பிரதான வேட்பாளர்கள் இருவரில் ஒருவருக்கே மக்கள் அதிகமாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரின் வெற்றிக்காக வேண்டியே உழைக்கின்றேன். காரணம், சஜித் பிரேமதாச அவர்கள் ஐ.தே.க. பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஐ.தே.க.வில் அங்கம் வகிக்கின்ற இதர கட்சிகளின் தலைவர்கள் யார்? அதில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம் உள்ளார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ரிஷாத் பதியுதீன் உள்ளார். அதுபோன்று மனோ கனேசன், திகாம்பரம் மற்றும் கிறிஸ்தவ அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய பலர் இருக்கின்றார்கள். நாட்டின் சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் ஐ.தே.க.வுடன் கைகோர்த்துள்ளனர்.

யார் இந்த சஜித் பிரேமதாச? அவர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வர். அவர் ஏழை மக்களுக்கு தலைமை தாங்கிய ஒரு ஜனாதிபதி. ஏழை மக்களோடு நெருக்கமான உறவுகளைப் பேணிய ஒருவர். ஜனசவிய திட்டத்தை ஆரம்பித்தவர். மாதம் 2500 ரூபாவுக்கு குறைந்த வருமானங்களை பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களின் போது 25 மேலதிக புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தவர். இலவசக் கல்வியின் சலுகைகளை அதிகரித்து பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகளை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தவர். இவ்வாறு மக்களுக்கு இலவசமாக பல்வேறு விடயங்களைப் பெற்றுக் கொடுத்த ஒரு மனிதரின் புதல்வரே இவர். தந்தையின் வழிமுறையில் தற்போது வீடமைப்பு அமைச்சராக பல நூறு வீட்டுத் திட்டங்களை ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றார்.

கடந்த 4 வருடங்களை அவதானிக்கின்ற போது சஜித் பிரேமதாச அவர்கள் வடக்கு கிழக்கில் அதிகமான வீடுகளை நிர்மாணித்துள்ளார். அங்குள்ள வறிய மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார். இப்பேற்பட்ட ஒருவர் நாட்டின் ஜனாதிபதியானால் நாட்டு மக்களுக்கு இன்னுமின்னும் பாரிய சேவைகளை முன்னெடுப்பார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. சஜித் பிரேமதாசவின் கொள்கைத் திட்டத்தை பாருங்கள்! அவர் சமூக ஜனநாயகத்தையே வலியுறுத்துகிறார். அவர் கடும்போக்கு வலதுசாரிச் சிந்தனையை வலியுறுத்தவில்லை. அவர் முற்போக்கான சிந்தனை முகாமில் இருக்கின்றார். இதனாலேயே விக்டர் ஐவன் போன்ற சிரேஷ்ட ஊடகவிய லாளர்களும் அவரைப் போற்றி கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சஜித்தின் கரங்களைப் பலப்படுத்த அவரோடு இணைந்து கொண்ட முன்னாள் பிரதியமைச்சர் அதாவுத செனவிரத்ன “கோட்டாபய என்பவர் கடும்போக்குவாத சிந்தனை படைத்த ஒருவர், பாசிஸ சிந்தனை படைத்தவர், வெள்ளை வான் கலாசாரத்தை உருவாக்கியவர், சர்வாதிகாரப் போக்குடையவர், இந்நாட்டில் முதற் தடவையாக தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்கு பிரச்சினையை உருவாக்கும் கட்டத்தை ஏற்படுத்தியவர், இதனால் என்னால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவற்றை நாம் சிந்திக்க வேண்டும். சஜித் பிரேமதாச இளமைத் துடிப்பும் உற்சாகமும் மிக்கவர். ஒருநாளில் அவர் 5 மணித்தியாலமே நித்திரை கொள்வார். அவரிடம் அர்ப்பணிப்பு உள்ளது. தான் அதிகாரத்திற்கு வந்தால் நாடு முழுவதிலும் உள்ள ஜனாதிபதி செயலகங்களை தொழிற் பயிற்சி நிலையங்களாக மாற்றப் போவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் தனிநபர் வருமானத்தை மாத்திரம் பார்த்து சந்தோசப்பட முடியாது, நாட்டின் பெரும்பான்மை மக்களின் சிறப்பான வாழ்வாதாரம், அவர்களின் நிம்மதியைப் பார்த்தே நாம் சந்தோசப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசியாவில் மற்றுமொரு இம்ரான் கானாக இவர் வருவார் என்பதில் சந்தேகமில்லை. இம்ரான் கான் அரச வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை. சுகபோகங்களை அனுபவிப்பதில்லை. எனவே இவற்றைப் புரிந்து செயற்பட வேண்டும். நாம் சிந்தித்து செயற்பட வேண்டும். திரைமறைவுக்கு பின்னால் உள்ள இந்த யதார்த்தங்களை சிந்தித்து செயற்பட வேண்டும். தந்தையாரின் காலத்தில் இவர் அரசியலில் குதிக்கவில்லை. தனது 20 வயதிலேயே அரசியலில் பிரவேசித்தார். நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நன்கு புரிதலுள்ள இப்பேர்பட்ட மனிதரொருவரை தெரிவுசெய்வது எம் எல்லோரினதும் தலையாய கடமையாகும்.

About the author

Administrator

Leave a Comment