Features அரசியல் நேர்காணல்

“முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டத்தில் உள்ளது”

Written by Administrator

சட்ட முதுமாணியும் அரசியல் ஆய்வாளருமான வை.எல்.எஸ். ஹமீட்

  • இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு முறை எப்படி நடைபெறும்?

ஜனாதிபதித் தேர்தலில் மூவருக்கு மேல் போட்டியிடும் போது ஒருவர் ஆகக் கூடியது மூன்று வேட்பாளர்களுக்கு 1,2,3 என இலக்கமிடலாம். விரும்பினால் முதலாவது தெரிவுக்கு புள்ளடியும் ஏனையவற்றிற்கு இலக்கங்களும் இடலாம். (X,2,3). 1,2,3 இலக்கமிட வேண்டுமென்பது ஒரு வழிகாட்டி மட்டும்தான் என ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதேபோன்றுதான் வாக்களிக்க வேண்டுமென்று கட்டாயமில்லை.

அதேநேரம் பிரிவு 51(2) இன்படி ஒரு வாக்காளர் தாம் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார் என்ற எண்ணத்தை அவரது வாக்குச் சீட்டில் கீறப்பட்ட அடையாளம் பிரதிபலிக்கின்றது என்று திருப்தி கண்டால் அதனை ஏற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் 1,2,3 என எழுதுவது சிறந்தது. அதேபோல், விரும்பினால் ஒருவருக்கு மட்டும் வாக்களித்து விட்டு ஏனைய இலக்கங்களை விட்டுவிடலாம். அல்லது இருவருக்கும் வாக்களிக்கலாம். மூவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.

ஒருவர் முதலாம் இலக்கத்தை எழுதாமல் அல்லது புள்ளடி இடாமல் 2 என்றோ அல்லது 3 என்றோ அல்லது 2,3 என்றோ எழுதினால் வாக்கு நிராகரிக்கப்படும். இவ்விடயம் பிரிவு 51(1)(ந)(111) இல் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவது வாக்கு மாத்திரமே வாக்காகும் என்பதே இதன் மூலம் புரிந்துகொள்ளப்படுகிறது. ஏனையவை விருப்பத் தெரிவு வாக்குகளா? என்ற கேள்வியை எழுப்பினால் பதில் ‘இல்லை’ என்பதாகும். ஏனெனில் அவை நேரடியாக எண்ணப்படுவதில்லை. பதிலீடாகத்தான் எண்ணப்படுகின்றன. அதாவது பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்படுகின்ற மூன்று விருப்பத் தெரிவு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இங்கு அவ்வாறு இல்லை. ஆனால் சில நேரம் இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவு, வாக்காக எண்ணப்படலாம், விருப்பத் தெரிவு வாக்காக அல்ல.

சுருக்கமாகச் சொல்வதானால் ஒவ்வொருவருக்கும் முதலாவது தெரிவு மட்டுமே வாக்கு. சில நேரம் அவருடைய முதலாவது வாக்குக்குப் பதிலாக இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவு, வாக்காக மாறலாம். சுருங்கக் கூறின் ஒருவருக்கு முதலாவது தெரிவு, வாக்காக இருக்கலாம், இன்னொருவருக்கு இரண்டாவது தெரிவு, வாக்காக இருக்கலாம், இன்னொருவருக்கு மூன்றாவது தெரிவு வாக்காக இருக்கலாம். ஆனால் ஒரு போதும் மூன்று தெரிவும் அல்லது இரண்டு தெரிவுகள் வாக்காக அமைய முடியாது. ஒரு வருக்கு ஒரு வாக்கு மட்டுமே.

  • ிருப்பு வாக்கு முறை இந்தத் தேர்தலில் எவ்வாறு முக்கியத்துவம் பெறப்போகின்றது என்பது பற்றி சற்று தெளிவுபடுத்த முடியுமா?

முதலாவது சுற்றில் முதலாவது வாக்கு எண்ணப்படும். ஒருவர் 50 வீதத்தை தாண்டினால் அவர் ஜனாதிபதி. யாரும் 50 வீதத்தை தாண்டாத போது இரண்டாம் சுற்று எண்ணிக்கை நடைபெறும். மூன்றாம் சுற்று எண்ணிக்கை என்ற ஒன்று இல்லை. சிலர் நினைக்கிறார்கள் இரண்டாம் சுற்றில் இரண்டாம் வாக்கு எண்ணப்பட்டு அதிலும் யாரும் 50 வீதத்தைப் பெறாவிட்டால் மூன்றாவது சுற்றில் மூன்றாம் வாக்கு எண்ணப்படுமென்று. இது பிழையாகும். முதலாவது சுற்றில் முதலாம் வாக்கின் அடிப்படையில் ஒவ்வொருவரும் பெற்ற வாக்குகள் கூட்டப்படுவதோடு அவர்களது வாக்குச் சீட்டுக்கள் வெவ்வேறாக கட்டப்படும்.

இப்பொழுது முதல் இரு வேட்பாளர்களைத் தவிர ஏனைய வேட்பாளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள். உதாரணமாக A,B,C,D,E என்ற ஐந்து வேட்பாளர்களில் C,D,E போட்டியிலிருந்து நீக்கப்பட்ட பின் மீண்டும் அவர்களது கட்டப்பட்ட வாக்குகள் அவிழ்க்கப்பட்டு அவற்றில் A அல்லது B இற்கு இரண்டாவது வாக்குகளை யாரும் வழங்கியிருந்தால் அவை A அல்லது B யின் வாக்குகளோடு கூட்டப்படுவதுடன் அந்த வாக்குச் சீட்டுக்களும் A அல்லது B யின் வாக்குச் சீட்டுக்களுடன் கட்டப்படும்.

அதன் பின் C,D,E யின் எஞ்சிய வாக்குகளில் A அல்லது B யிற்கு யாராவது தமது மூன்றாவது வாக்கை அளித்திருந்தால் நான் மேலே சொன்னது போன்று அவையும் கூட்டப்பட்டு உரியவரின் வாக்குகளுடன் கட்டப்படும். இப்பொழுது யார் அதிகூடிய வாக்குப் பெற்றிருக்கின்றாரோ அவரே வெற்றியாளர்.

  • 2015 இல் நடைபெற்ற தேர்தலில் போன்று முஸ்லிம்கள் மொத்தமாக முடிவெடுப்பது நல்லதா? அல்லது தனித்தனியாக முடிவெடுப்பது நல்லதா?

இன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் என்பது ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பது போன்ற ஒரு முக்கியமான தேர்தல் என்பதை எத்தனை பேர் புரிந்திருக்கின்றோம்? ஆளுக்கொரு திசையில் ‘யானை பார்த்த குருடர்கள் போல்’ இவர்தான் சிறந்தவர், அவர்தான் சிறந்தவர் என பிரிந்து நின்று வாக்களிக்க முடியுமா? என்பது நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வியாகும்.

நாம் ஒரு வேட்பாளரை தெரிவுசெய்யும் போது சில முக்கியமான விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டும். ஒன்று பிரதானமாக வேட்பாளர், அவரது கட்சி மற்றும் அவரது பிரதானிகளின் தன்மை. இரண்டு, அவரது வெற்றி வாய்ப்பின் சாத்தியம் என்பதாகும். இவற்றை விரிவாக ஆராய்ந்தால், ஒரு வேட்பாளர் ஏனையவர்களை விட சிறுபான்மையை அரவணைக்கக் கூடியவர். அவருக்கு வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருக்கின்றது. அல்லது முஸ்லிம்கள் ஒன்றுபட்டு வாக்களித்தால் அவரை வெற்றி பெற வைக்கலாம் என்றால் அவர்தான் நமது வேட்பாளர். ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அவருக்கே வாக்களிக்க வேண்டும்.

அவ்வாறான வேட்பாளர் யாரும் இருக்கின்றனரா? அவர் நல்லவராக இருந்தும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் வாக்களித்தாலும் அவருக்கு வெற்றி பெற வாய்ப்பில்லை எனில், அவர் நமது வேட்பாளரல்ல. எல்லோரும் நல்லவர்களே! எனில் பிரிந்து வாக்களிக்கலாம். ஆபத்து இல்லை. எல்லோரும் பாதிப்பானவர்களே எனில் இங்கு இரண்டு இலக்குகள் எய்தப்பட முயற்சிக்க வேண்டும். ஆகக் கூடிய பாதிப்பானவர் தோற்கடிக்கப்பட வேண்டும். குறைந்த பாதிப்பானவர் வெற்றி பெறச் செய்யப்பட வேண்டும்.

பாதிப்பானவரின் வெற்றியை நாம் நூறு வீதம் ஒன்றுபட்டு மாற்றுதிசையில் வாக்களித்தாலும் தடுக்க முடியாது என்பது தான் கள யதார்த்தமானால் நாமும் அவருக்கே வாக்களிப்பதைத் தவிர வேறுவழியில்லை. அதன்மூலம் அவரது கடும் போக்கை சற்றுக்குறைக்க முடியுமா? என்பதற்கான ஒரு முயற்சியே அது. எனவே, இவை தொடர்பாக தெளிவான தேடல்களை நாம் செய்தாக வேண்டும். அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க முடியாது.

  • இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எந்தத் தரப்புக்கு வெற்றிவாய்ப்பு சாத்தியங்கள் அதிகம் என்பது பற்றிய கண்ணோட்டமொன்றை வழங்க முடியுமா?

2012 ஆம் அண்டு சனத்தொகை மதிப்பீட்டின் படி சிங்களவர்: 74.9% (இவர்களில் பௌத்தர்கள் 70.2% எனவே 4.7% வீதமானோர் பிரதானமாக சிங்கள கிறிஸ்தவர்களாகும்) இலங்கைத் தமிழர்: 11.2% சோனகர்: 9.2% (ஆனால் முஸ்லிம்கள் 9.7%) மலையகத் தமிழர்: 4.2%. எனவே இதன் சுருக்கம்: பௌத்தர்கள் 70.2% ஏனைய சிறுபான்மையினர் 29.8%  இவர்களுள் தமிழ் பேசும் சிறுபான்மையினர் 25.1% ஆகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் படி, மைத்திரிபால சிறிசேன 51.28% வாக்குகளை பெற்றார். மஹிந்த ராஜபக்ஷ 47.58% வாக்குகளை பெற்றார். இவற்றில் மஹிந்தவுக்கு சிறுபான்மை வாக்குகள் மிகச் சிறிய விகிதமே கிடைத்தது. அண்ணளவாக 43% தனி பௌத்த வாக்குகளாக இருக்கலாம். நிச்சயமாக கூறமுடியாவிட்டாலும் ஆகக் குறைந்தது 40% பௌத்த வாக்குகள் என்று ஓரளவு திட்டமாகக் கூறலாம்.

மைத்திரிக்கு கிடைத்த வாக்குகளில் சுமார் 25% அல்லது அதைவிட சற்றுக் குறைவான வாக்குகள் சிறுபான்மை வாக்குகளாக இருக்கலாம். எனவே, மைத்திரிக்கு கிடைத்த பௌத்த வாக்குகள் 25-27%  ஆக இருக்கலாம். இது ஜேவிபியின் வாக்குகளையும் உள்ளடக்குகிறது. இதன் சுருக்கம் என்ன வென்றால் 70% பௌத்த வாக்குகளில் சுமார் 40% மஹிந்தவின் வாக்குகளாக இருக்க மைத்திரிக்கு கிடைத்த பௌத்த வாக்குகளில் ஜேவிபியின் வாக்குகளை கழித்தால் சுமார் 20% பௌத்த வாக்குகளே மைத்திரிக்கு மிஞ்சியது. இதில் சுமார் 90% வாக்குகள் ஐதேக இற்கு உரியது.

மஹிந்தவின் பௌத்த வாக்கு வங்கி 2015இல் 40% இருக்க ஐதேகயின் பௌத்த வாக்கு வங்கி 20% இற்கு உட்பட்டதாகவே இருந்தது. ஏனைய 10% பௌத்த வாக்குகள் ஜேவிபி மற்றும் மைத்திரிக்காக அல்லது சிவில் அமைப்புக்களுக்காக அளிக்கப்பட்ட வாக்குகளாக இருக்கலாம். இது வோர் அண்ணளவான கணிப்பீடு மாத்திரமாகும்.

மக்கள் விடுதலை முன்னணி கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்ற சுமார் 6% மும் பெரும்பான்மையாக பௌத்த வாக்குகளாகும். 70% பௌத்த வாக்குகளில் சுமார் 10% பௌத்த வாக்கு களை ஜேவிபி இம்முறை கவரலாம். அவ்வாறாயின் எஞ்சுவது 60% பௌத்த வாக்குகள். ஐ.தே.க. சார்பில் சஜித் களமிறங்கியிருப்பதால் இம்முறை 22 வீத பௌத்த வாக்குகளையேனும் பெறுவார் என்பது நிச்சயம். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த பெற்ற 40.47% வீதத்தில் சிறுபான்மை வாக்குகளும் ஒரு சிறிய விகிதாசாரம் இருக்கின்றது. எனவே, பௌத்த வாக்குகள் 40% விடக் குறைவாகும். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மைத்திரி பெற்ற 12% வாக்குகளிலும் கணிசமான சிறுபான்மை வாக்குகள் உண்டு.

சுருக்கமாகச் சொல்வதானால் ஐ.தே.க.யின் சுமார் 22% பௌத்த வாக்குகளை கழித்தால் எஞ்சுகின்ற 48% வாக்குகளில் ஜேவிபி கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்ற சுமார் 5.5% (5.75 இல் 0.25% சிறுபான்மை என்று வைத்துக் கொள் வோம்) ஐக் கழித்தால் 42.5% வீத பௌத்த வாக்குகளே மஹிந்த மற்றும் மைத்திரியிடம் இருக்கின்றது. இரண்டொரு வீதம் வித்தியாசப்படலாம். எனவே தற்போதுள்ள களநில வரத்தில் மஹிந்த – மைத்திரி கூட்டு 40% இற்கு குறைவான பௌத்த வாக்குகளையே பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

மொத்த சிறுபான்மை வாக்ககள் 30%. அவற்றில் தமிழ் பேசும் வாக்குகள் 25%. இவற்றில் எத்தனை வீதத்தை ஐதேக 22% அடிப்படை பௌத்த வாக்குகளுடன் இணைக்கலாம்? இதுதான் வெற்றியாளரைத் தீர்மானிக்கப் போகும் கேள்வியாகும். சிறுபான்மைகள் மீண்டுமொரு முறை ஒன்றுபட்டு எதிராக வாக்களித்தால் மஹிந்த தரப்பு வேட்பாளர் தோல்வியடைவது உறுதி. இந்நிலையில் மீண்டுமொரு முறை ஜனாதிபதியை தீர்மானிக்கும் வாய்ப்பு சிறுபான்மைகளின் கைகளில் இருக்கிறது.

  • அதிகப்படியான பௌத்த வாக்குகளை கைகளில் வைத்திருக்கும் மஹிந்த தரப்பு மீண்டுமொரு முறை சிறுபான்மை வாக்குகளை இழக்காமல் இருப்பதற்கு மேற்கொண்டு வரும் உத்திகளை சற்று விளக்க முடியுமா?

சிறுபான்மை வாக்குத் தொடர்பாக மஹிந்த தரப்பு இரு உத்திகளை கையாள்கிறது. ஒன்று தங்களுக்கு சிறுபான்மை வாக்குகள் கிடைக்காது என்ற மனோநிலையை உடைத்து சிறுபான்மை வாக்கு கிடைக்கும் என்று பெரும்பான்மை மக்களுக்குக் காட்டுவதற்காக முடிந்தளவு முஸ்லிம் கட்சிகள் (பதிவு செய்யப்பட்டதோ, பதிவுசெய்யப்படாததோ மற்றும் அமைப்புகள், புத்திஜீவிகளை இணைத்து அவர்களுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்வது போல் ஏதோ ஒன்றைச் செய்து சிறுபான்மை வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும் என்று பெரும்பான்மை சமூகத்தை நம்ப வைக்க முயற்சி நடைபெறுகிறது.

இரண்டு மறுபுறம் ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் ஒரு தமிழ் வேட்பாளரையும் தனியாக இறக்குதல். இதிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். இதன் நோக்கம் முடிந்தால் இரண்டாவது வாக்கி னூடாக சிறுபான்மை வாக்குகளை முடிந்த அளவு பெற்றுக்கொள்ளல். அல்லது ஆகக் குறைந்தது அடுத்த தரப்புக்கு செல்லும் சிறுபான்மை வாக்குகளைக் குறைத்தல். தமிழ் பேசும் வாக்குகள் 25% இனை ஐ.தே.க.வின் அண்ணளவான பௌத்த வாக்குகள் 22% உடன் இணைத்தால் 47 வீதம் ஆகிவிடும். சிங்கள கிறிஸ்தவ வாக்குகளும் இருக்கின்றன. இந்நிலையில் ஒரு ஒரு 8% சிறுபான்மை வாக்குகள் ஐ.தே.கட்சிக்குச்

செல்வதைத் தடுத்தாலும் ஐ.தே.க. வாக்குகள் அண்ணளவாக 37% இற்குள் மட்டுப்படுத்தப்பட பெரமுன வாக்குகள் 40% வீதத்தை தாண்டும். அது தன் வெற்றியை உறுதிசெய்யும் என்று நம்புகிறார்கள்.

  • முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் களமிறங்கியிருப்பது முஸ்லிம்களது வாக்குகளில் எவ்வகையான மாற்றங்களை ஏற்படுத்தும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

முஸ்லிம்கள் தனித்துப் போட்டியிடுவது கொள்கை ரீதியாக பிழையான விடயமல்ல. அவ்வாறாயின் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் ஒன்றிணைந்து இதய சுத்தியோடு சமூகத்திற்காக ஒரு தீர்மானத்தை எடுத்து இரண்டாம் வாக்கை பொருத்தமான ஒருவருக்கு வழங்கலாம். அது வேறு விடயம். ஆனால் ஒரு தரப்பின் கைக்கூலியாக வந்து முஸ்லிம்களின் வாக்குகளைக் கூறுபோட்டு முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்து தான் தனது தனிப்பட்ட நலன்களை அடைய முற்படுவது மனவேதனையளிக்கிறது.

முஸ்லிம் வாக்குகள் சுமார் 15 லட்சம் இருக்கின்றன. இதில் வாக்குகளை கூறு போட நினைப்பவர்கள் மூன்று லட்சம் வாக்குகளையாவது பெற வேண்டும் என இலக்கு வைக்கிறார்கள். இது இவர்களது எஜமானர்கள் சொல்லிக் கொடுத்தது. மூன்று லட்சம் என்பது 10% முஸ்லிம் வாக்குகளில் 2% ஆகும். அளிக்கப்படும் செல்லுபடியான வாக்குகளில் சுமார் 3% ஆகும். இன்னுமொரு 2% நேரடியாக அந்தத் தரப்புக்கு போனாலும் முஸ்லிம்களின் 10% வாக்குகளில் 5.10% வீத வாக்குகள் பிரிக்கப்பட்டு விட்டன. எனவே ஐதேகவின் வாக்குகளில் 5.10% உடைக்கப்பட்டுவிட்டதாகி விட்டது. இது போன்று ஓரளவு தமிழ் மற்றும் மலையக தமிழ் வாக்குகளையும் பிரிக்க முடியுமானால் இலக்கை இலகுவாக அடையலாம்.

எனவே, நமது கண்களை நமது விரல்களை கொண்டு குத்துவதற்கு நம்மவர்களே துணைபோய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் திட்டம் சரியாக வேலை செய்யாவிட்டால் இவர்களே ஆட்களைப் போட்டு மறைமுகமாக ஜேவிபிக்கு ஆதரவளிக்க முஸ்லிம்களைத் தூண்டத் தயங்க மாட்டார்கள். சகல விடயங்களையும் சீர்தூக்கி ஆராய்ந்து முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு தீர்மானிக்க வேண்டிய சமயத்தில் உள்ளனர்.

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

About the author

Administrator

Leave a Comment