Features அரசியல் சிந்தனையாளர்கள்

முஸ்லிம் சமூகத்தின் புதிய அரசியல் முகாம் நோக்கிய பயணம்

Written by Administrator

லத்தீப் பாரூக்

2009 இல் யுத்தம் முடிந்த கையோடு மஹிந்த ராஜபக்ஷவும் பின்னர் வந்த மைத்திரி-ரணில் அரசாங்கமும் மேற்கொண்ட திட்டமிட்ட தொந்தரவுகளினால் அமைதியை விரும்பும் முஸ்லிம் சமூகம் இம்முறைய ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபிக்கு ஆதரவு வழங்குவது பற்றிப் பேசி வருகிறது. நாத்திகர்களாகவும் இனவாதிகளாகவும் புறமொதுக்கி வைத்திருந்தனால் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் ஜேவிபியை ஆதரித்ததில்லை. ஆனால் நிலைமை இப்போது வேகமாக மாறியிருக்கிறது. கிழக்கை மையப்படுத்திய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் ஜேவிபியுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறது.

சுதந்திரத்துக்கு முந்தியும் பிந்தியும் முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் இணைந்ததொரு பாகமாக கருதப்பட்ட காலமொன்றிருந்தது. முஸ்லிம்கள் என்றால் அவர்கள் Eating Buriyani, Voting UNP என்று அடையாளப்படுத்துமளவுக்கு அது இருந்தது. இருந்த போதிலும் முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்குச் செவிமடுப்பதில் ஐதேக தவறிழைத்து விட்டது. இதனால் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதின் இஸ்லாமிய சமூக முன்னணியுடன் (Islamic Socialist Front) இணைந்து பெருவாரியான முஸ்லிம்கள் 1960 களின் இறுதிக் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தனர். அதிலிருந்து முஸ்லிம் சமூகம் ஐதேக என்றும் ஸ்ரீலசுக என்றும் பிரிந்தது. சமூகத்துக்கும் நாட்டுக்கும் நாடகமாக முடிந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வரவு வரை இது தொடர்ந்தது. முஸ்லிம்கள் தனியாகக் கட்சி அமைப்பதனால் சிங்கள தமிழ் சமூகங்களுடனான உறவில் ஏற்படுத்தப் போகும் அபாயங்கள் பற்றி அறிவுள்ள அரசியல்வாதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இருந்தபோதிலும், இஸ்ரேலின் வருகையை எதிர்த்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை எடுத்தெறிந்து பேசிய ஜனாதிபதி ஜயவர்தனவின் கடுமையான போக்கு, இஸ்லாம், ஐக்கியம் என்ற கோஷங்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெறுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தது. இது சிங்கள சமூகத்தின் இனவாத உணர்வுகளைத் தூண்டி விட்டது. 

ஸ்ரீலமுகா பிறந்த 1980 களின் பிற்பகுதியில் அதன் தலைவர் கொழும்பிலுள்ள முன்னணி சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் அடைக்கலம் தேடி வர நிர்ப்பந்திக்கப்பட்ட போதே கட்சியிலிருந்து இஸ்லாம் மறைந்து போய் விட்டது. பதவிகளையும் சொகுசுகளையும் வேண்டி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அரை டஜன் குழுவினரால் ஒற்றுமை என்ற கோஷமும் காணாமல் போனது. காலப் போக்கில் சமூகத்தின் பல விவகாரங்களிலும் ஸ்ரீலமுகா சமூகத்துக்கு துரோகமிழைத்து விட்டது. இன்று ஸ்ரீலமுகா சமூகம் தூக்கிச் சுமந்தாக வேண்டிய சுமையாக மாறியிருக்கிறது.

முப்பது வருட கொடிய யுத்த காலத்தில் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு, சூறையாடல், சொத்துக்களும் வாழ்வாதாரங்களும் கொள்ளையடிக்கப்படல், படுகொலைகள், தமது சொந்த பூமியை இழத்தல் போன்ற சொல்லொணாத் துயரங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. எல்ரிரியினரின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவு தர மறுத்ததாலேயே முஸ்லிம்கள் இவை எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. நாடு பிளவுபடக் கூடாது என்பதற்காக அவர்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டனர். ஆனாலும் முஸ்லிம்களின் இந்த மகத்தான தியாகத்தை மறந்து இன்று சில இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

பாதுகாப்புத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன 2018 மார்ச் 11 ஆம் திகதி ஆற்றிய உரையொன்றில், வீரமான முஸ்லிம் இராணுவ வீரர்களின் காரணமாக நாங்கள் இன்று உயிர்வாழ்கிறோம் என்று கூறியிருந்தார். தெல்தெனிய, கண்டி, அம்பாறை பிரதேசங்களில் சிங்கள இனவாதிகள் முஸ்லிம் சமூகத்தின் மீது மேற்கொண்ட திட்டமிட்ட வன்முறைகள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட போது முஸ்லிம்களை இந்த நிலைக்குத் தள்ளக் கூடாது என அட்மிரல் விஜேகுணரத்ன கூறியிருந்தார். இந்த நாடு சிங்களவருக்கு மட்டுமே உரியது, முஸ்லிம்களும் தமிழர்களும் தங்களது மூட்டைகளைக் கட்டிக் கொண்டு நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று கொக்கரிக்கும் இனவாதக் கூலிப்படைகளுக்கு இதனை ஞாபகமூட்ட வேண்டும்.

2009இல் யுத்தம் முடிந்ததோடு தாம் நிம்மதியாக வாழ முடியும் என முஸ்லிம்கள் நினைத்தார்கள். எல்ரிரியினரின் இராணுவத் தோல்வி, கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் படிக்கவும், ஆழமாய் உறைந்து போன காயங்களைக் குணப்படுத்துவதற்காக விரைவான நல்லிணக்கத்தை உருவாக்கவும், சமூகங்களை ஒன்றிணைக்கவும், ஏனைய நாடுகளைப் போல எமது நாட்டையும் முன்னேற்றவும் வாய்ப்பை வழங்கியது. முப்பது வருட இரத்தக் களரியும் அழிவும் அனைத்து சமூகங்களும் பொதுவான ஓர் இலக்கில் ஒன்றுபடுத்தப்பட வேண்டும் என்பதை நாட்டுக்கு உணர்த்தியது. ஆனாலும் முஸ்லிம்களினதும் இஸ்லாத்தினதும் எதிரியான இஸ்ரேலுடன் கைகோர்த்துக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முஸ்லிம்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்தபோது முஸ்லிம் சமூகம் அதிர்ச்சியில் உறைந்து போனது.

தம்புள்ள பள்ளிவாசலைத் தாக்குவதில் ஆரம்பித்து, ஜெய்லானியில் சர்ச்சையை உருவாக்கியும், மஹியங்கன பள்ளிவாசலில் பன்றியைக் கொன்றும், பன்றியின் முகத்தில் அல்லாஹ்வின் பெயரை எழுதி ஊர்வலம் சென்றும், புனித ரமழானில் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது கிறீஸ் பூதங்களை ஏவியும் முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனங்கள் தொடர்ந்தன. அளுத்கம, தர்கா டவுன், பேருவல பிரதேசங்களில் முஸ்லிம் வீடுகள்,கடைகள், வாகனங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட உடைமைகள் மீது பாரிய அளவில் கட்டவிழ்த்து விடப்பட்ட சொத்தழிப்பு, தீக்கிரை, அல்குர்ஆன் எரிப்பு செயற்பாடுகள் வரை அது தொடர்ந்தது.

தனது சொந்த மக்களுக்கு எதிராக அரசாங்கமே கட்டவிழ்த்து விட்ட இந்த வன்முறைகளால் விரக்தி அடைந்த முஸ்லிம் சமூகத்தின் சுமார் 95 வீதமானவர்கள் ரணில்-மைத்திரி அரசு பதவிக்கு வருவதற்காக வாக்களித்தார்கள். ஆனாலும் குற்றவாளிகளைக் கைது செய்து தண்டிப்பதாகச் சொன்ன மைத்திரி – ரணில் அரசு குற்றவாளிகளைப் பாதுகாத்ததன் மூலம் சில மாதங்களிலேயே முஸ்லிம்களின் முதுகில் குத்தியது.

முஸ்லிம்களுக்கு எதிரான முதல் வன்முறையின் போதே பேராசிரியர் சரத் விஜேசூரியவையும்  உள்ளடக்கிய முஸ்லிம் பிரமுகர்கள் குழு ஜனாதிபதி சிரிசேனவைச் சந்தித்து முஸ்லிம்கள் மீது வன்முறையை அனுமதிக்க வேண்டாம் என வேண்டிக் கொண்ட போது, இது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான மஹிந்தவின் சதி என அவர் தெரிவித்தார். சில வாரங்களிலேயே கிந்தொட்டையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அரசாங்கப் படைகளே தாக்குதலில் முன்னின்றார்கள் என பாதிப்புக்குள்ளான மக்களே தெரிவித்திருந்தார்கள். தொடர்ந்து அம்பாறை, திகன, அகுரண பிரதேசங்களில் தாக்குதல்கள் தொடர்ந்தன. அப்போதும் இந்த வன்முறைக் கும்பல் சுதந்திரமாகவே விடப்பட்டது.

முஸ்லிம் சமூகத்துடன் சம்பந்தமே இல்லாத, முஸ்லிம் சமூகம் காட்டிக் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் உச்ச கட்டத்தை அடைந்தன. கருதினால் மல்கம் ரஞ்சித்தும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார். ஆனாலும் போலியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அரசினால் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது. ஜனாதிபதி சிரிசேன அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதில் இருந்து முஸ்லிம்கள் அனைவரையுமே பயங்கரவாதிகளாகக் காட்டும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஒழுங்கமைக்கப்பட்ட இனவாதக் கும்பல்கள் சுதந்திரமாகச் செயற்பட விடப்பட்டனர். ஊரடங்கு உத்தரவு நேரத்திலேயே முஸ்லிம்களின் வீடுகளும் வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. நோன்பிருந்த முஸ்லிம் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இன்னொருவர் தெருவழியே இழுத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலையில் காலமானார்.

குளியாபிட்டிய, ஹெட்டிபொல, அனுக்கன, கொட்டாம்பிட்டிய, நிகவரட்டிய, மினுவாங்கொட பிரதேசங்களில் நோன்பு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையால் முஸ்லிம்கள் வயல்வெளிகளிலும் காடுகளிலும் தஞ்சம் புகுந்தார்கள். இத்தனைக்கும் முஸ்லிம் பிரதேசங்களில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து தாக்குதல் நடத்தியவர்களைத் தடுப்பதற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தினால் எதுவும் செய்ய முடியவில்லை. முஸ்லிம்கள் பொலிசிலும் இராணுவத்திலும் அரசாங்கம் பாதுகாப்புத் தரும் என்ற நம்பிக்கையிலும் நம்பிக்கை இழந்து போனார்கள். இரும்புப் பொல்லுகளையும் வாள்களையும் ஏந்திய 500 க்கும் மேற்பட்ட குண்டர்கள் எந்தத் தடைகளும் இன்றி 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட இடங்களைத் தாக்கியழித்தார்கள். ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் சிறுவர்களும் எங்குமே சந்தேகத்துடனும் வெறுப்புடனும் கசப்புடனுமே நடத்தப்பட்டார்கள். பயத்தில் உறைந்து போயிருந்த முஸ்லிம்களுக்கு, அவசரகால நிலையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்கள் கடும் சோதனைாயகவே அமைந்தன. வைத்தியசாலைகளில் மட்டுமன்றி கடைகளிலும் சுப்பர் மார்க்கட்களிலும் முஸ்லிம் பெண்கள் தமது முந்தானையைக் களையுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

பத்தியாளர் ஒருவர் சுட்டிக் காட்டியது போல, அன்றாட வாழ்க்கை முஸ்லிம்களுக்கு கெட்ட கனவாகிப் போயிருக்கிறது. அவர்களின் வாழ்க்கைப் போக்கையே மாற்றியிருக்கிறது. துன்புறுத்தல்களும் பாகுபாடுகளும் நன்கு வடிவமைக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரங்களும் பொது மக்கள் மத்தியில் முஸ்லிம்களை எதிரிகளாகச் சித்திரித்து அவர்களை முற்றுகை மனப்பான்மைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இனவாதம் இலங்கையில் புதிய அர்த்தம் பெற்றிருக்கிது. எல்லாவற்றிலுமே முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள். பொது இடங்களிலும் பொதுப் போக்குவரத்துகளிலும் வேலைத்தளங்களிலும் அவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள்.

இவ்வாறானதொரு பதற்றமான சூழ்நிலையில் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் முஸ்லிம்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றும் முஸ்லிம் கடைகளில் வாங்குவதையும் உண்பதையும் நிறுத்த வேண்டும் என்றும் சிங்கள பௌத்தர்களைக் கேட்டிருந்தார். இந்த வேளையிலும் வெட்கமில்லாத முஸ்லிம் அரசியல்வாதிகளும் முல்லாக்களும் ஜனாதிபதி சிரிசேனவுடனும் பிரதமர் ரணிலுடனும் ஒண்டியிருப்பதையே விரும்பினர்.     

இவ்வாறான அண்மைய நிகழ்வுகள் எல்லாம் ஆழமாக மனதில் பதிந்துள்ள நிலையில் சுய புத்தியுள்ள எந்த முஸ்லிமும் ஐதேகவுக்கோ ஸ்ரீலசுகவுக்கோ வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. நாத்திகர்களாகவும் இனவாதிகளாகவும் ஒரு காலத்தில் கருதிய ஜேவிபியினரை தற்போது நீதி, நேர்மை, ஒருமைப்பாடு, பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் ஊழலுக்கும் குடும்ப ஆட்சிக்கும் எதிராக எழுப்பும் குரல்கள், சமூக நல்லிணக்கத்துக்கான அவர்களது கொள்கைகளுக்காக முஸ்லிம்கள் விரும்பத் தொடங்கியுள்ளனர்.         

About the author

Administrator

Leave a Comment