உலக செய்திகள் சர்வதேசம்

பலஸ்தீனுக்கான முதல் குவைத் தூதுவர் நியமனம்

Written by Administrator

குவைத் அமீர் ஷேக் ஸபாஹ் அல் அஹ்மத் பலஸ்தீனத்துக்கான முதலாவது குவைத் தூதுவராக அஸீஸ் ரஹீம் அல் தைஹானியை நியமித்துள்ளார். பலஸ்தீன மக்களுக்கு குவைத்தின் ஆதரவை அதிகரிப்பதற்கே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனாமாவில் ஜூன் மாதம் இடம்பெற்ற பொருளாதார உச்சிமாநாட்டை குவைத் பகிஷ்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குவைத்தின் இந்த முடிவை பலஸ்தீன மக்கள் வரவேற்றுள்ளதோடு, குவைத் அரசாங்கத்திற்கு தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர். ஹமாஸின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ஹாஸிம் காஸிம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் பகுதிகளை ஒருங்கிணைக்கும் திட்டம் தோல்வியடைந்துள்ளது எனவும் இஸ்ரேலுடனான உறவை சுமுகமாக்கிக் கொண்ட அறபு நாடுகள் பலஸ்தீனர்களுக்கு துரோகமிழைத்து விட்டன எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்பின் மருமகன் ஜாரட் குஷ்னர் சில மாதங்களுக்கு முன்னர் நடத்திய வளமான எதிர்காலத்திற்கான அமைதி மாநாடு தோல்வியடைந்து விட்டது என்றும் ஹமாஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

குவைத்தின் வெளிவிவகார அமைச்சர் காலித் ஜாருல்லாஹ், பலஸ்தீனர்களுக்கு ஆதரவளிப்பது குவைத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார். அதேவேளை, இஸ்ரேலுடனான உறவை நாம் சுமுகமாக்க மாட்டோம் என்றும் வலியுறுத்தியுள்ளார். அசர்பைஜானின் தலைநகர் பாக்கூவில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் 18 ஆவது உச்சிமாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார்.

ஏற்கனவே குவைத் அரசாங்கம் பலஸ்தீனர்களுக்கு மில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றது. பாக்கூ மாநாட்டில் உரையாற்றிய அமீர் ஸபாஹ் பலஸ்தீனப் பிரச்சினை சர்வதேச சமூகம் நீதியான தீர்வினை கண்டடையாமல் இருப்பது பிராந்தியத்தின் அரசியல் ஸ்திரமின்மைக்குக் காரணமாகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

About the author

Administrator

Leave a Comment