Features எழுவாய் பயமிலை சமூகம்

சாக்கடையில் மதம்

Written by Administrator

நாட்டின் தேர்தல் திருவிழா நிறைவுபெற்றிருக்கிறது. மத உணர்வுகள் போல மக்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்துள்ள சில விடயங்கள் இருப்பதனை தேர்தல் எடுத்துக் காட்டியிருக்கிறது. இந்த வகையில் மதஸ்தலங்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட கதைகளை தேர்தல் கண்காணிப்பு முகவர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

பௌத்த வழிபாட்டுத் தலங்கள் அரசியல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற சந்தேகம் ஏனைய தரப்புக்களிடம் இருப்பது போலவே முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் ஊடாக ஜனாதிபதி கோதாபயவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக சிங்களவர் சந்தேகிக்கின்றனர். இந்தச் சந்தேகங்கள் வலுக்குமானால் மதஸ்தலங்களும் கூட அரசியல் சாக்கடையில் விழுவது தவிர்க்க முடியாமல் போய்விடும்.

பௌத்த விகாரைகளை வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்துவது தொடர்பில் பபரல் அமைப்பு மாற்றுக் கருத்துக்களை முன்வைத்துள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் பௌத்த விகாரைகள் வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிங்கள சமூகம் பன்சலைகளினூடாக இனரீதியாக ஒன்று சேர்க்கப்படுகின்றனர் என்ற கதைகள் பரவலாக அடிபடும் நிலையில் வாக்குச் சாவடிகளையும் அங்கு கொண்டு போய் அமைப்பது சந்தேகங்களை வலுக்கத் தான் செய்யும். தேர்தல் கடமைக்காகச் செல்லும் அதிகமான முஸ்லிம் பெண்கள் விகாரைகளில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் பெரும்பான்மைச் சமூகங்கள் மாத்திரமே தேர்தல் உத்தியோகத்தர்களாகக் கடமை புரியும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன.

நாட்டின் மொத்த அரசாங்க உத்தியோகத்தர் படையிலிருந்து தேர்தல் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். தேர்தல் கடமையில் ஈடுபடுபவர்கள் தங்களது வாக்குகளை தபால் மூல வாக்குகளாக ஏற்கனவே வாக்களித்துவிட்டே கடமைக்குச் செல்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வரும் போது தபால் மூல வாக்குகளில் பெரும்பாலானவை குறித்த ஒரு வேட்பாளருக்குப் போடப்பட்டுள்ளமை தெரியவருகிறது. தபால் வாக்குகளில் வெற்றி பெறுபவர் தான் தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற கருத்துக்களும் தேர்தல் மேடைகளில் சொல்லப்பட்டன. இந்த வகையில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களில் பெரும்பாலானவர்கள் குறித்ததொரு வேட்பாளருக்கு சார்பானவர்கள் என்ற நிலை தோன்றுகிறது. அந்த வேட்பாளரே தேர்தலில் வெற்றி பெறும் நிலையும் இருப்பதனால் மதஸ்தலங்கள் வாக்குச் சாவடிகளாகவும் பயன்படுத்தப்படும் போது தேர்தல் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து விடுகிறது.

இதனால் பபரல் அமைப்பு சுட்டிக் காட்டியது போல எதிர்காலங்களில் மதஸ்தலங்களை வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்துவது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.

அதேபோல மதஸ்தலங்களை தேர்தல் பிரச்சாரங்களுக்காகப் பயன்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டும். தேர்தல் சட்ட விதிகளின் கீழ் மதஸ்தலங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தப்படுவது தேர்தல் விதிகளை மீறும் செயற்பாடாகும். ஆனால் இஸ்லாம் வேறு, உலகம் வேறு, இஸ்லாம் வேறு, அரசியல் வேறு என்றெல்லாம் போதித்த சில பள்ளிவாசல்களுக்கு தேர்தல் என்று வரும் போது இஸ்லாத்தில் அரசியலும் இருப்பது ஞாபகத்துக்கு வருகிறது. எனவே சிலவேளைகளில் குத்பாக்கள் கூட அரசியல் பிரச்சாரமாக வெளி்ப்படுகிறது. தேர்தல் விதிகள் என்று வரும்போது இல்லை, நாங்கள் மார்க்கக் கடமையைத் தான் செய்தோம் என்று அரச அதிகாரிகளுக்குச் சொல்லத் தொடங்கினால் பின்னர் தேர்தல் காலங்களில் இந்த மார்க்கக் கடமை தேவையில்லை என்றதொரு தேர்தல் விதியைக் கொண்டு வருவதை அது சாத்தியமாக்கும்.

சம்மாந்துறைப் பள்ளிவாசல் இவ்வாறான தேர்தல் விதிகளை மீறும் வகையில் செயற்படுவதாக குற்றச் சாட்டுக்கள் கிடைத்திருப்பதாக கபே அமைப்பு தெரிவித்திருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்குமாக இருந்தால் ஏனைய பள்ளிவாசல்களும் இது போன்ற விடயங்களில் ஈடுபடுவதில் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பள்ளிவாசல்களில் விளம்பரங்கள் செய்வதைக் கூட பெரும்பாலான பள்ளிவாசல்கள் தவிர்த்தே வருகின்றன. பள்ளிவாசல் வளவினுள் துண்டுப் பிரசுரங்கள் வழங்குவதைக் கூட சில பள்ளிவாசல்கள் தடை செய்திருக்கின்றன. இந்த நிலையில் அரசியல் என்று வரும்போது இவை எல்லாவற்றையும் விட்டுக் கொடுப்பது என்பது பள்ளிவாசலின் முக்கியத்துவம் அரசியலாக இருப்பதைக் காட்டுகிறது.

சமூக செயற்பாடுகளில் பள்ளிவாசல்கள் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதே. சமூக நலனில் அக்கறையுள்ள விடயங்களில் பள்ளிவாசல்கள் நிச்சயம் அக்கறை காட்ட வேண்டும். பிரதேச மக்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக பள்ளிவாசல்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதேவேளை தமது நடவடிக்கைகளினால் மொத்த சமூகமும் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.

பள்ளிவாசல்கள் என்பது ஒவ்வொரு ஊரிலும் உள்ள மத வழிபாட்டுத் தலம் அல்ல. அது முழு சமூகத்தினதும் அடையாளம். பள்ளிவாசலில் வாள்கள் இருந்தன என்பதனூடாக குறித்த பள்ளிவாசல் மட்டும் அடையாளப்படுத்தப்படவில்லை. அதேபோல ஒவ்வொரு பள்ளிவாசலினதும் செயற்பாடுகள் மொத்த சமூகத்தையும் பிரபலிக்கிறது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

அரசியல் மதம் கொள்ளாமல் அவதானமாக இருப்பது காலத்தின் தேவை.

About the author

Administrator

Leave a Comment