Features ஆசிரியர் கருத்து

அர்த்தமுள்ள எதிர்க்கட்சியின் தேவை

Written by Administrator

நாட்டில் ஜனநாயகபூர்வமான தேர்தலொன்று நிறைவுபெற்றிருக்கிறது. வன்முறைகள் அற்ற, மோசடிகள் அற்ற நியாயமான தேர்தலாக இம்முறை ஜனாதிபதித் தேர்தல் அமைந்திருந்தது. அரசியல் கட்சிகள் மட்டுமன்றி மக்களும் கூட பண்பட்டவர்களாக இந்தத் தேர்தலில் நடந்து கொண்டார்கள். நாடு என்ற ரீதியில் பெருமைப்பட வேண்டிய இந்தத் தேர்தலிலேயே ஜனநாயக ரீதியாக கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவானார்.

ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தில் ஜனநாயகம் நிலைப்பதற்கு உறுதியான எதிர்க்கட்சி அவசியமானது. நாடு அராஜகத்தை நோக்கித் தள்ளப்படுவதிலிருந்து பாதுகாக்கும் அரணாக எதிர்க்கட்சி அமைகிறது. தேர்தலில் தோல்வியடைந்த கட்சியினரினதும் வாக்காளர்களினதும் உரிமைகளைப் பேணுவதிலும் எதிர்க்கட்சியின் தேவை அத்தியாவசியமாகிறது.

இந்த வகையில் நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் வகையிலான எதிர்க்கட்சி ஒன்றினை மக்கள் தெரிவு செய்ய வேண்டியிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி இந்த இடத்தை நிரப்பலாம் என்று எதிர்பார்த்தாலும் அந்தக் கட்சியினுள் ஜனநாயகம் பேணப்படவில்லை என்பதை நாடு நன்கறிந்து வைத்துள்ளது. நீண்ட காலமாக கட்சியின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் கட்சியின் தலைவரால் எந்தவிதமான ஆக்கபூர்வமான பங்களிப்பையும் கட்சிக்கோ நாட்டுக்கோ வழங்க முடியவில்லை என்பதனை வரலாறு நெடுகிலும் கட்சித் தலைவரின் கீழ் ஈட்டப்பட்ட தோல்விகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்தத் தேர்தலும் கூட கட்சித் தலைவரின் தோல்விக்கு இன்னுமொரு எண்ணிக்கையையே சேர்த்திருக்கிறது.

எனவே நாட்டின் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகள் செய்யப்பட வேண்டும். பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்தச் சவாலை முன்னெடுக்கும் வகையில் தனது கட்சியில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும். அடுத்த தேர்தலில் நாட்டின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த இடத்தில் நிற்கும் என்பதை சொல்ல முடியாது. அதனால் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான எதிர்க்கட்சி ஸ்தானத்தைப் பெறும் வகையில் ஐதேக தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலின் போது பலமான நாடு ஒன்றுக்காக ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனம் புத்திஜீவிகள் பலரதும் பாராட்டைப் பெற்றிருந்தது. இத்தகைய சிந்தனை உடையவர்கள் எதிர்க்கட்சி தரப்பில் இருப்பதனால் நாட்டை அறிவார்ந்த முறையில் வழிநடத்துவது சாத்தியமாகிறது. இவ்வாறான சிந்தனைகளை வடிவமைத்தவர்கள், அதற்காக உழைத்தவர்கள் தேர்தலின் பி்ன்னர் ஓய்வெடுத்து ஒதுங்குவது நாட்டுக்கு நல்லதல்ல. அதனால் நாட்டின் நலனில் அக்கறையுடன் செயற்பட்டவர்கள் தொடர்ந்தும் நாட்டுக்காக உழைப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

இம்முறைய தேர்தல் இனங்களுக்கிடையிலான துருவமயப்படுதலை கூர்மையாக்கியிருக்கிறது. ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி தனக்கு சிறுபான்மை மக்கள் போதுமான அளவு வாக்களிக்கவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். எதிர்த்தரப்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவுக்கே சிறுபான்மை மக்கள் வாக்களித்திருக்கின்றனர். இது கட்சி என்ற நிலையையும் தாண்டி தனி நபரில் வைத்த நம்பிக்கையாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே தனக்கு வாக்களித்த சிறுபான்மையினரின் நலனுக்காக தொடர்ந்தும் அரசியலில் இருந்து உழைக்க வேண்டிய தேவை, யாரை நம்பி சிறுபான்மையினர் வாக்களித்தார்களோ அவர்களுக்கு இருக்கிறது.

எனவே, நாட்டில் ஜனநாயகத்தைப் பேணுவதற்காகவும், சிறுபான்மை மக்களின் நலன் விடயத்தில் அக்கறை செலுத்துவதற்காகவும் பலமான எதிர்க்கட்சியின் தேவை நன்கு உணரப்படுகிறது. இதனால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதோடு நில்லாமல் பலமான எதிர்க்கட்சியை உருவாக்குவதிலும் மக்கள் தமது பணியைச் செய்ய வேண்டும்.

About the author

Administrator

Leave a Comment