Features அரசியல்

மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய மக்கள் சக்தியாகும் கனவு

Written by Administrator

பொருளாதாரக் கொள்கைகளை வைத்து உலகம் ஆளப்பட்டு வந்த காலத்தில் தான் ஜேவிபி உருவாகியது. சோஷலிஸப் பொருளாதாரமே 77 வரை இலங்கையின் பொருளாதாரக் கொள்கையாக இருந்தது. 1972 இல் காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை பூரணமான சுதந்திரம் அடைந்தவுடன் இலங்கை தன்னை ஜனநாயக சோஷலிஸக் குடியரசாகப் பிரகடனம் செய்தது. குடியரசின் முதல் பிரதமரான ஸ்ரீமாவோ அம்மையார் பின்பற்றிய சமவுடமைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட சோஷலிஸப் பொருளாதாரம் இலங்கை மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கியது. இந்த வேளையில் தான் ஜேஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கை இலங்கை மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

1970 – 77 காலப்பகுதி இடது சாரி அரசியலின் பொற்காலமாக அமைந்திருந்தது. சோஷலிஸத்தை இலங்கையில் கட்டிக் காக்கும் இயக்கங்களாக அவை செயற்பட்டு வந்த வேளையிலேயே மக்களை பொருளாதாரப் பிடியிலிருந்து விடுதலை செய்யும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணி தோன்றியது. சிறப்பானதொரு மக்கள் மயப்பட்ட இயக்கமாக இது கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்புகளுடன் கட்டி வளர்க்கப்பட்டது. இந்த இயக்கத்தில் அங்கத்தவர்களாகச் சேர்ந்து கொள்வோருக்கு கொள்கை விளக்க வகுப்புக்கள் நடத்தப்பட்டன. காடுகளிலும் வனாந்தரங்களிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சியும் கொள்கைப் பற்றும் வழங்கிய உரத்தை வைத்து இவர்கள் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள்.

திறந்த பொருளாதாரக் கொள்கை எனப்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கை மக்களைச் சுரண்டுவதை எடுத்துக்காட்டி மக்களிடையே செல்வாக்குமிக்க இயக்கமாக இது வளரத் தொடங்கிய வேளையில் தான் திறந்த பொருளாதாரக் கொள்கையின் சிற்பியான ஜேஆர் ஜயவர்தன இவர்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை ஆரம்பித்தார். இதற்கெதிரான ஜேவிபியின் போராட்டம் இறுதியில் வன்முறை வடிவை எடுக்கத் தொடங்கியது. ஆர். பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த வேளையில் இது உச்சகட்டத்தை அடைந்தது. பிரேமதாச அரசாங்கம் இவர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று பொது இடங்களில் டயரில் இட்டு எரித்ததோடு, தலைவர் ரோஹன விஜேவீரவையும் சுட்டுக் கொன்று மக்கள் விடுதலை முன்னணியைத் தடை செய்து கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

ஜேவிபியின் இரண்டாவது எழுச்சி விடுதலைப் போராட்டத்தில் இருந்து அரசியல் பரிணாமம் எடுத்தது. ஆனாலும் முதற் பரம்பரையைப் போல புதிய பரம்பரை கொள்கைப் பற்றுள்ளவர்களாக வளர்க்கப்படவில்லை. இன்றுள்ள பலருக்கு ஜேவிபி என்பது மக்கள் விடுதலை முன்னணி என்பது கூடத் தெரியாது. அர்ப்பணிப்பும் கொள்கைப் பிடிப்பும் முன்னைய பரம்பரையின் அளவுக்கு இல்லாமையினால் காலப் போக்கில் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கவர்ச்சிக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் பலர் கட்சியை விட்டு நீங்கினர். 1999 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நந்தன குணதிலக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாறினார். கட்சியின் தலைவர்களாக இருந்த சோமவன்ச அமரவீர, விமல் வீரவன்ச உட்பட பலரும் பிரதான கட்சிகளுக்கு மாறினர். 1977 க்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எல்லாத் தலைவர்களும் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையையே பின்பற்றினர். ஜேவிபி முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான கட்சி என்பதனால் மாறி மாறி யார் வந்தாலும் அவர்களை விமர்சிப்பதனூடாக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தீங்கையே மக்களுக்கு எடுத்துக் காட்டி வந்தனர். இந்த வகையில் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையை முன்வைத்து ஆட்சிக்குப் போட்டியிடுகின்ற இருவருமே மோசமானவர்கள் என்பதைத் தான் அவர்களும் இவர்களும் ஒன்று என்ற கோஷத்தினூடாக ஜேவிபியினர் முன்வைக்கின்றனர். இந்த வகையில் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுள்ள இருசாராரையும் ஒரு தரப்பாக எடுத்தால் ஜேவிபியை இரண்டாம் தரப்பாக ஏற்றுக் கொள்ள முடியுமே தவிர மூன்றாவது சக்தியாக ஜேவிபியை தெரிவு செய்வதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமிருக்கி்ன்றது.

மூன்றாவது சக்தி என்பது ஜேவிபியின் அரசியல் பிரவேசம் போல ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடுவதில் இருந்து ஆரம்பிப்பதல்ல. மூன்றாவது சக்தி கருக்கொள்கின்ற இடமாக மக்களின் உள்ளங்கள் இருக்க வேண்டும். அங்கிருந்து தான் மூன்றாவது சக்தி பிறப்பெடுக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் நிற்கின்ற ஜேவிபி அபேட்சகர்களுக்குக் கிடைக்கின்ற வாக்கு சரிந்து செல்வது இதனைத் தான் காட்டுகிறது. 1982 ஜனாதிபதித் தேர்தலில் ரோஹன விஜேவீர 4.19 வீத வாக்குகளைப் பெற்றார். 17 வருடங்களின் பின்னர் 1999 இல் நந்தன குணத்திலக்க போட்டியிட்ட போது அவருக்கு 4.08 வீத வாக்குகள் கிடைத்தன. 20 வருடங்களின் பின்னர் தற்போது அநுர குமார திசாநாயக்க போட்டியிட்ட போது அது 3.16 ஆகக் குறைந்திருக்கிறது. இது ஜனாதிபதித் தேர்தல் என்ற பலப்பரீட்சைக்குச் செல்லு முன்னர் கீழ்மட்டத்தில் மக்களைத் தயார்படுத்தல் என்ற ஹோம் வேர்க்கை 20 வருடங்களில் ஜேவிபி வெற்றிகரமாகச் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது. இந்த வகையில் முதலாளித்துவத்துக்கு எதிரானதாகவே மக்கள் ஜேவிபியை கருதுகிறார்களே ஒழிய மாற்றத்துக்கான மூன்றாம் சக்தியாகக் கருதவில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது.

முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கை உருவாக்கிய தனிநபர் சொத்துக் குவிப்பு, ஊழல், மோசடி, பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல் என்பனவற்றுக்கு எதிராகப் பேசுவது மக்களின் இச்சையைத் தீர்த்துக் கொள்ளப் பயன்படுமே அன்றி ஆக்கபூர்வமான செயற்பாடொன்றை நோக்கிச் செல்வதற்கு இது போதுமானதல்ல. வேறு போத்தல்களில் மாறி மாறி வருகின்ற கள்ளுக்குப் பதிலாக கஞ்சியை மாற்றுவதை விட்டு விட்டு போத்தல்களை மட்டும் பிரதியீடு செய்ய முனைவதால் மாற்றம் வரப் போவதில்லை. ஊழல், மோசடி, தனிநபர் சொத்துக் குவிப்பு, ஆட்சியாளர்கள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல் என்பனவெல்லாம் தற்போது ஆட்சியின் அங்கங்களாக, அரசியல் கலாச்சாரமாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இவைகள் இன்றி அரசியல் செய்ய முடியாது என்று அரசியல்வாதிகள் ஊட்டி வைத்திருக்கின்ற கருத்தினை மக்கள் ஏற்றிருக்கிறார்கள். இவர்களிடம் போய் அவர் இவ்வளவு ஊழல் செய்தார், இவர் இவ்வளவு கொள்ளையடித்தார் என்று சொல்லுவதெல்லாம் எடுபடப் போவதில்லை. முதலில் ஊழல், மோசடி, கொள்ளையடித்தல் எல்லாம் மோசமானவை என்ற கருத்தினை மக்களின் மனதில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும். தற்போதைய அரசியலில் அவை புரையோடிப் போயிருக்கின்ற ஆழத்தைப் பார்த்தால் இன்னும் நீண்ட காலம் இதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கிறது.

தனது இலக்கை அடைந்து கொள்வதற்காக எதிர்த்தரப்பினைக் கொலை செய்வது என்பது இலங்கையின் அரசியல் கலாச்சாரமாக மாறியிருக்கிறது. நல்லாட்சி எனச் சொல்லப்பட்ட அரசாங்கம் வரும் வரையில் எல்லா அரசாங்கங்களுமே இந்தப் படு பாதகத்தைச் செய்தே வந்துள்ளன. இம்முறை தேசிய மக்கள் சக்தி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட ஜேவிபி கூட இதற்கு விதிவிலக்கல்ல. தேர்தல் பிரசாரங்களின் போது மக்கள் இதனை ஒரு குற்றமாகவே கருதவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்தக் கொலைக் கலாச்சாரத்தை மாற்றுவதற்கான தூய்மையான அரசியல் இயக்கமொன்றின் தேவை வெகுவாகவே இருக்கிறது. மூன்றாம் சக்தி அதனை நிரப்பக் கூடியதாக இருக்க வேண்டும்.

சொலமன் டயஸ் பண்டாரநாயக்கவின் காலம் தொடக்கம் ஆட்சியின் முக்கிய அம்சமாக இனவாதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று அதன் உச்சிக் கட்டத்தை அடைந்துள்ள இனவாதம் தான் ஆட்சியாளர்களை ஆளுகின்றது. ஆட்சியாளர்கள் தமது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உருவாக்கிய இனவாதம், இன்று அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்து நாட்டைக் குட்டிச் சுவராக்கி வருகிறது. ஜேவிபி கூட தனது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிட முடியாமல் இனவாத மேலாதிக்கம் அடக்கி வைக்கிறது, ஆட்சியைக் கைப்பற்றுவதனால் இனவாதத்தை அடக்க முடியாது என்பதனையே இது காட்டுகிறது. எனவே அடிமட்ட மக்கள் வரை சென்று இந்த இனவாதத்தை அழித்தொழிப்பதற்கான பாரிய முயற்சியொன்றை மூன்றாம் சக்தி செய்ய வேண்டும்.

இனத்தால் சிறுபான்மையினராகிய, மதத்தால் சிறுபான்மையினராகிய இலங்கைப் பிரஜைகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அராஜகங்கள் அளவுமீறிச் செல்கின்றன. சிறுபான்மையினருக்கான உரிமையை வழங்குவது பெரும்பான்மையைப் பலமிழக்கச் செய்யும் விடயமாக பெரும்பான்மை மக்கள் கருதுகிறார்கள். சிறுபான்மையினரது உரிமைகளை மதிப்பவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தில் சிறுபான்மையினராகவே இருக்கிறார்கள். இவர்களை இணைத்துக் கொண்டு நாட்டு மக்களை ஒன்றிணைக்க வேண்டிய பாரிய தேவை இன்று எழுந்திருக்கிறது. அதிகாரப் பகிர்வினூடாக இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதனை முன்வைப்பவர்கள் எல்லாம் பிரிவினைவாதிகளாக அடையாளப்படுத்தும் அளவுக்கு மேலாதிக்க சிந்தனைகள் வளர்க்கப்பட்டிருக்கின்றன. இதனை அடியோடு இல்லாமல் செய்யாமல் தேசத்தைக் கட்டியெழுப்ப முடியாது. இதற்காக உழைக்கின்ற பணியை மூன்றாவது சக்தி முன்னெடுக்க வேண்டும்.

மக்களின் இந்த சமஉரிமைகள் மாறி மாறி வரும் ஆட்சியாளர்களால் தமது இஷ்டத்துக்கு ஏற்ப மாற்றப்படாமல் இருப்பதற்காக அரசியல் அமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும். மக்கள் மைய யாப்பொன்றை வரைவதற்கான முன்னெடுப்பொன்றினை மூன்றாம் சக்தி முன்னெடுக்க வேண்டும். இதற்கான மக்கள் பேரியக்கமொன்றைக் கட்டியெழுப்பி மக்கள் எழுச்சியைத் தூண்டுவது மூன்றாம் சக்தியின் பணியாக அமைய வேண்டும்.

இப்படி அடிமட்டத்திலிருந்து உழைக்க வேண்டிய ஏராளமான விடயங்களை முன்னெடுக்கக் கூடிய மூன்றாம் சக்தியின் தேவையே நாட்டைக் கட்டியெழுப்புவதில் முக்கியமான தேவையாக இருக்கிறது. அது அரசியல் கட்சியாகவன்றி அரசியல் பேரியக்கமாக மலர வேண்டும். இந்த நோக்கத்துக்காக உழைக்கின்றவர்கள் எல்லாச் சமூகங்களிலும் இருக்கின்றார்கள். அடுத்து வரும் தசாப்தங்களில் மாற மாட்டாது என எதிர்பார்க்கப்படுகின்ற தற்போது பதவியேற்றுள்ள அரசாங்கத்தின் காலத்தை இதற்கான பொன்னான தருணமாகப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தப் பொருத்தமான வாய்ப்பாக அமையும்.

மாவட்டம் 1999 2019 வித்தி யாசம் 1999% 2019%  வித்தியாசம்
கம்பஹா 40,472          61,760               21,288 4.3            4.28                 (0.02)
கொழும்பு 44,009          53,803                 9,794 4.56            3.93                 (0.63)
குருநாகலை 27,354          36,178                 8,824 3.68            3.21                 (0.47)
அநுராதபுர 14,612          22,879                 8,267 4.18            3.94                 (0.24)
கண்டி 15,512          23,539                 8,027 2.53            2.52                 (0.01)
புத்தளம் 7,876          12,912                 5,036 2.86            2.84                 (0.02)
பொலன்னறுவை 8,020          12,284                 4,264 4.66            4.42                 (0.24)
களுத்தறை 23,770          27,681                 3,911 4.47            3.41                 (1.06)
திகாமடுல்ல 4,068            7,460                 3,392 1.51            1.81                   0.30
பதுள்ளை 12,025          14,806                 2,781 3.34            2.64                 (0.70)
இரத்தினபுரி 16,482          18,887                 2,405 3.43            2.53                 (0.90)
மட்டக்களப்பு 290            2,304                 2,014 0.17            0.76                   0.59
திருகோணமலை 2,307            3,730                 1,423 1.83            1.61                 (0.22)
மாத்தளை 7,924            8,890                     966 3.66            2.62                 (1.04)
யாழ்ப்பாணம் 413            1,375                     962 0.37            0.37                        –  
மொனராகல 10,456          11,235                     779 5.8            3.52                 (2.28)
வன்னி 482            1,156                     674 0.77            0.54                 (0.23)
கேகாலை 14,997          15,043                       46 3.66            2.61                 (1.05)
நுவரெலியா 5,879            5,891                       12 1.87            1.24                 (0.63)
காலி 27,257          27,006                  (251) 5.32            3.72                 (1.60)
மாத்தறை 26,229          23,439               (2,790) 6.93            4.21                 (2.72)
அம்பாந்தோட்டை 33,739          26,295               (7,444) 13.3            6.24                 (7.06)
344,173 418,553  74,380 4.08            3.16                 (0.92)

About the author

Administrator

Leave a Comment