Features நேர்காணல்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இனங்களுக்கிடையிலான பிளவுகளையே கோடிட்டுக் காட்டுகின்றன

Written by Administrator

கலாநிதி ஜெஹான் பெரேரா – சிவில் சமூக செயற்பாட்டாளர் மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர்

  • தற்பொழுது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

இம்முறை தேர்தல் முடிவுகள் தெளிவாகவே இனங்களுக்கிடையிலான பிரிவினையே கோடிட் டுக் காட்டுகின்றது. வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் ஒரு பக்கத்திற்கும், தெற்கிலுள்ள மக்கள் இன்னுமொரு பக்கத்திற்கும் வாக்களித்தார்கள். வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகவே வாக்களித்தனர். அதுவல்லாமல் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கவில்லை. ஏனெனில் சஜித் பிரேமதாசவை அம்மக்களுக்கு அவ்வளவு அறிமுகம் போதாது. கோட்டாபய முன்வைத்த பிரதான கொள்கைத் திட்டத்தை எதிர்த்தே அம்மக்கள் வாக்களித்தார்கள். தேசியப் பாதுகாப்பு என்பதே அவரது பிரதான கொள்கைத் திட்டமாகக் காணப்பட்டது. இதுவே அவரது கொள்கைத் திட் டங்களில் முதன்மை விடயமாகக் காணப்பட்டது.

மறுபுறத்தில் சிங்களப் பெரும்பான்மை மக்கள் கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த கொள்கைத் திட்டத்திற்கு முதலிடம் கொடுத்து வாக்களித்துள்ளனர். இதில் தேசியப் பாதுகாப்பும் தேசிய அபிமானமுமே மிக முக்கிய விடயங்களாகும். எனவே தேசியப் பாதுகாப் புக்கும் தேசிய அபிமானத்திற்குமே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. தேசியப் பாதுகாப்பு என்னும் விடயம் தங்களுக்கு எதிரானது என்பதாகவே தமிழ் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் நோக்குகின்றனர். தங்களை நோக்கியே இந்த தேசியப் பாதுகாப்பு என்கின்ற விடயம் கொண்டுவரப்படுகின்றது என்பதே இவர்களது நிலைப்பாடாக உள்ளது. இம்மக்கள் மத்தியில் தேசியப் பாதுகாப்பு என்பதன் மூலம் மிகப்பெரும் சந்தேக நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிளவுபட்டுள்ள சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்களை ஒன்றிணைக்கும் மிகப்பெரும் பொறுப்பு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உள்ளது.

  • வடகிழக்கைச் சேர்ந்த மக்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்த்து வாக்களித்துள்ளனர். இந்நிலை எதிர்வரும் காலங்களில் எப்படியான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

இதுவே மிகப்பெரும் சவாலாகும். இதுபோன்ற தொரு சவாலான கட்டம் யுத்த வெற்றியைத் தொடர்ந்து 2010 இல் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஏற்பட்டது. நூற்றுக்கு நூறு வீத மக்களது தலைவராக மஹிந்த ராஜபக்ஷவினால் திகழ முடியவில்லை. சிங்களப் பெரும்பான்மையினத்தின் தலைவராகவே அவரால் செயற்பட முடிந்தது. ஒட்டுமொத்த மக்களினதும் விசுவாசத்தை வெல் லக் கூடிய தலைவராக இவர் திகழவில்லை. தற்பொழுது இது போன்றதொரு சவாலான கட்டத்திலேயே கோட்டாபய ராஜபக்ஷவும் உள்ளார். எல்லா மக்களினதும் உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கும் தலைவராக கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட வேண்டியுள்ளார்.

சகல இன மக்களுக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு இருக்க வேண்டும். இவ்வாட்சி முறையில் ஒரே மாதிரியான உரிமைகள் காணப்பட வேண்டும். மக்களது தேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அபிவிருத்தி  வசதிகளை கவனத்திற் கொள்ள வேண்டும். அவர்களது தேவைகளைச் செவிமடுக்க வேண்டும். இவையே புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முன்னால் காணப்படுகின்ற சவால்களாகும்.

  • தற்பொழுது நாட்டின் ஜனாதிபதியாக பொதுஜன பெரமுனவை சேர்ந்த கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஆனால் அரசாங்கம் இன்னும் ஐதேகாவை முதன்மையாகக் கொண்ட கூட்டணியிடம் உள்ளது. பொதுத் தேர்தல் நடைபெறும் வரையில் இந்நிலைமை எவ்வாறு காணப்படும்?

தற்பொழுது கூட பெரும்பாலான அமைச்சர்கள் பதவி விலகல் கடிதங்களை (17ஆம் திகதி) ஒப்படைத்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலும் நாளைய தினம் (18) அல்லது அதற்குப் பிந்திய தினத்தில் பிரதமரும் தனது இராஜினாமா கடி தத்தை ஒப்படைப்பார் என நான் நினைக்கின்றேன். அதன் பிறகு புதிய ஜனாதிபதிக்கு பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க வேண்டி யேற்படும். இது நிச்சயமற்றது. பிரதமர் தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைப்பார் என நான் நம்புகின்றேன். சிலவேளை அவர் பதவி வில காமலும் இருக்கக்கூடும்.

  • பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகாமல் கோட்டாபய ராஜபக்ஷவினுடைய பிரஜா உரிமை குறித்த சர்ச்சையை மேலெழுப்பி அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்தில் குதிக்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றதா?

நாம் அவ்வாறு நினைக்கவில்லை. இதுபோன்ற தெளிவானதொரு வெற்றி கிடைக்கும் போது நீதி மன்றம் கூட இதற்கு எதிராக செயற்படும் என  நான் கருதவில்லை. நீதிமன்றத்தினால் அவருடைய பிரஜாவுரிமை குறித்த பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று நான் கருதவில்லை. ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களது விருப்பத்துக்குக் கட்டுப்படுவதாகும். இதற்குத் தான் முதலிடம் வழங்கப்பட வேண்டும்.

  • புதிய ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்துக்கு கீழால் சிறுபான்மை மக்களாகிய நாம் எமக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளை எவ்வாறு வென்றெடுக்க வேண்டும்?

சிறுபான்மை மக்கள் தங்களது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். அம்மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் தலைவர்கள் இப்பொறுப்பை ஏற்க வேண்டும். எனினும் புதிதாகத் தெரிவுசெய் யப்பட்டுள்ள ஜனாதிபதியின் முக்கிய பொறுப்பாக தேசியப் பாதுகாப்பு காணப்படுகிறது.  அதனை அவர் உறுதிப்படுத்த முயற்சிப்பார். இதனால் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் அம்மக்களது உரிமைகளை வேண்டுகின்ற போது, அவ்வுரிமைகளை வென்றெடுக்க செயற்படுகின்ற போது இவை தேசியப் பாதுகாப்புக்கு பாதிப்பானதல்ல என்பதை காண்பிக்க வேண்டியேற்படும். இந்த நம்பிக்கையை புதிய ஜனாதிபதிக்கு சிறுபான்மைத் தலைவர்கள் காண்பிக்க வேண்டும். இது கட்டாய மான விடயம்.

  • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் சிறுபான்மை மக்களது பாதுகாப்பு மற்றும் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படும் என நீங்கள் கருதுகிறீர்களா?

இந்நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமெனில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை கோட்டாபய ராஜபக்ஷ நன்கு அறிந்திருப்பார். எனவே அவர் இதற்காக வேண்டி செயற்பட வேண்டும். பெரும்பாலும் அவரது கட்சி மற்றும் அவரது கடந்த கால செயற்பாடுகளை நோக்கும் போது அவர் பொருளாதார அபிவிருத்தியையே கட்டியெழுப்பார். பொருளாதார அபிவிருத்தியின் மூலம் சகல இன மக்களினதும் உரிமைகளையும் பாதுகாக்க முயற்சிப்பார் என்று நான் கருதுகின்றேன்.

அதிகாரப் பகிர்வு என்கின்ற விடயங்களைக் கையில் எடுக்காமல் பொருளாதார அபிவிருத்திற் கூடாக சிறுபான்மை மக்களது உரிமைகளை பாதுகாக் கவே முயற்சிப்பார்கள். இவ்விடயம் எல்லா மக்களுக்கும் சமமாகச் செல்ல வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. பிற்பட்ட காலத்தில் நம்பிக்கைகள் கட்டியெழுப்பப்படுகின்ற போது தமிழ் சமூகத்திற்கு விஷேட உரிமைகளை வழங்குவது குறித்தும் சிந்திக்க முடியும். ஆனாலும் நான் நினைக்கின்றேன் அதற்கு இன்னும் அதிக காலம் செலவாகும் என்று.

  • வடகிழக்கிலுள்ள சிறுபான்மை மக்கள் சஜித் பிரேமதாசவிற்கே அறுதிப் பெரும்பான்மையை கொடுத்துள்ளனர். அது போன்று தெற்கிலுள்ள சிங்களப் பெரும்பான்மை மக்களும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை வாக்குகளை அளித்துள்ளனர். இந்நிலையில் சிறுபான்மை மக்கள் தற்பொழுது தங்களது எதிர்காலம் குறித்த அச்ச நிலையில் உறைந்து போயுள்ளனர். இந்நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

இவ் அச்சநிலையை போக்குவதே புதிய ஜனாதிபதிக்குள்ள சவாலாகக் காணப்படுகின்றது. புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு வாக்களித்த 52 வீதமான மக்களுக்கு மாத்திரமல்லாமல் சகல இன மக்களுக்கும் அதாவது தனக்கு வாக்களிக்காத மக்களதும் உரிமைகள் மற்றும் சலுகைகளை பாதுகாத்துக் கொடுக்க வேண்டும். இந்த சவால் அவருக்கு உள்ளது. அதனை அவர் நிறைவேற்று வதாக தேர்தல்கள் ஆணையாளர் இறுதி முடிவை அறிவித்த சமயத்தில் கூறியிருந்தார்.

  • சிறுபான்மை மக்கள் மத்தியில் காணப்படுகின்ற சிவில் சமூக அமைப்புக்கள் இந்தத் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் நீண்ட கால சமாதானம் மற்றும் சகவாழ்வு உருவா வதற்கு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

இந்நாட்டில் பிரிவினை, பேதம் காணப்பட்டது என்பது எமக்குத் தெரியும். எனவே இப்பிரிவி னையை குணப்படுத்தும் பொறுப்பே எம்மிடம் முதன்மையாகக் காணப்பட வேண்டும். அத்துடன் சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டும். சகல இன மக்களையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி விட வேண்டும். ஒருவர் குறித்து மற்றவர் மத்தியில் காணப்படுகின்ற அச்சம், சந்தேக நிலைமைகளை போக்க வேண்டும். அவர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். சமுதாயத்தின் அடி மட்டத்திலிருந்து நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். இதுவே எமது மிகப்பெரும் கடப்பாடாகும்.

About the author

Administrator

Leave a Comment