Features ஷரீஆ

தேர்தலின் பின்னர் – சில சிந்தனைகள்

Written by Administrator

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பழீல்

முதற்கண் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். அவரது ஆட்சிக்காலம் இலங்கை மண்ணுக்கு நல்லதொரு சுபீட்சமான காலமாக அமைய வேண்டும் என்று வல்லவன் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன்.

இலங்கையின் வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக வருவதற்கான தமது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். 50%ற்கு மேல் வாக்குகளைப் பெறுபவர் ஜனாதிபதியாக தெரிவாகுவார் என்ற ஜனநாயக முறையை ஏற்றவர்கள் யாராக இருப்பினும் இத்தீர்ப்பை அங்கீகரிக்க வேண்டும்.

வாக்களிப்பு பின்வரும் உண்மைகளை உணர்த்துகிறது:-

சிங்களவர்களிற் பெரும்பாலானவர்கள் அவரை ஆதரித்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களில் பெரும்பான்மையினர் அவரது வருகையை விரும்பவில்லை. எனவே,  சஜித் பிரேமதாச அவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், சிறுபான்மையினரின் ஒரு கணிசமான தொகையினர் கோட்டா அவர்களது கொள்கைகளை ஆதரித்தது மட்டுமன்றி அவரது வெற்றிக்காக உழைத்துமிருக்கிறார்கள்.

வாக்களிப்பது என்பது அவரவர் உரிமை என்பதையும் அது அவரவரது மனப்பாங்குகள் மற்றும் எதிர்பார்க்கைகளோடு சம்பந்தப்பட்டது என்பதாலும் அதனை நாம் மதிப்பது அவசியமாகும்.

மேலும் இரண்டு முடிவுகளுக்கு வர முடியும்.

1. சிங்களவர்களிற் பெரும்பாலானவர்களிடம் முஸ்லிம்கள் பற்றிய பயம், கோபம், வெறுப்பு, அரசியல் அதிகாரத்தை அவர்கள் பெற்றுக் கொண்டால் அதனை பயன்படுத்தி உழைப்பார்கள், அதிகமான சலுகைகளை பெற்றுக் கொள்வார்கள், முஸ்லிம் தீவிரவாதம் வளரும் போன்ற கருத்துக்கள் நிலவுகின்றன. எனவே, முஸ்லிம்கள் எந்தக் கட்சியை அல்லது வேட்பாளரை ஆதரிக்கிறார்களோ அந்தக் கட்சியை அல்லது வேட்பாளரை நாம் வீழ்த்த வேண்டும், இல்லாவிட்டால் நாடு குட்டிச்சுவராகி விடும், சிங்கள இனமும் அழிந்துவிடும் என்று அவர்கள் பலமாக நம்பினார்கள். இப்படியான நிலை இருக்கையில் இந்தத் தடவை தமிழ் முஸ்லிம் கட்சிகள் சஜித் உடன் இணைந்தமை எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல் ஆகிவிட்டது.

2. பெரும்பாலான முஸ்லிம்களும் தமிழர்களும் சஜித்தை ஆதரிக்கக் காரணங்கள் இருந்தன. கடந்தகால அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போது நமது உரிமைகள் எதிர்காலத்தில் மேலும் பாதிக்கப்படலாம், சிங்கள இனவாதம் மேலும் வளரலாம், எனவேதான் இந்நிலையிலிருந்து நம்மை சஜித் மீட்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் ஊட்டப்பட்டது.

ஆனால்,  இப்படியாக இந்நாட்டின் எல்லா சமூகங்களும் போல் தமது தலைவரைத் தெரிவு செய்யும் போது இனரீதியாக சிந்திக்கின்ற நிலை பல்லினங்கள் வாழும் இந்த நாட்டுக்கு எப்படியுமே ஆரோக்கியமானதல்ல. உணர்வுபூர்வமான இத்தகைய சூழல் நாட்டுக்கு பேராபத்தைக் கொண்டு வரும்.

இப்படியான பதட்டமான நிலையில் தான் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இப்படியான மிகவும் முரண்பட்ட பகைமை நிலையில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்கள் இருந்தால் நாடு உருப்படுமா? ஆனால், நாடு அபிவிருத்தி காண வேண்டுமாயின் இனங்களுக்கிடையில் உறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும். எனவே, பலருக்கும் பொறுப்புகள் இருக்கின்றன.

1.  தமிழர்களிலும் முஸ்லிம்களிலும் கணிசமான தொகையினர் ஏன் அடுத்த பக்கத்துக்கு வாக்களித் தார்கள் என்பதை ஜனாதிபதி கோட்டாபய அவர்களும் அவருக்கு வாக்களித்தவர்களும் நன்கு புரிந்து அந்த சிறுபான்மையினரது மனதில் உள்ள அச்சத்தை, பயத்தை போக்கி அவர்களையும் அரவணைத்துக் கொண்டு போகவேண்டும். தமிழர்களையும் முஸ்லிம்களையும் பொருட்படுத்தாமல் அவர்களது சகவாசம் இன்றி அவர்களது ஒத்துழைப்பின்றி இந்த நாட்டை கொண்டு போக முடியாது, நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாது. அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு பயணத்தை மேற்கொள்ள முடியாது என்று அவரும் அவரைச் சார்ந்த வர்களும் நினைத்து அதற்கேற்ப தமது கொள்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். அவர்களது முதற் பணி சமாதான சகவாழ்வுக்கான வேலைத் திட்டங்களாக இருக்க வேண்டும்.

2. கோட்டாபய அவர்களை ஆதரித்த முஸ்லிம்களும் அவருக்கு  நெருக்கமானவர்களும்  இனங்களுக்கிடையிலான உறவுப் பாலமாக அமைய வேண்டும். அவர்களுக்கு பெரும் பொறுப்புள்ளது. அவர்கள் எப்படியாவது ஒரு சுமுகமான நிலையை உண்டுபண்ண அமானிதமாக முயற்சிக்க வேண்டும். இது அவர்களுடைய தலையாய கடமையாகும். அவர்களுக்கு அவரிடத்தில் இருக்கும் செல்வாக்கை இதற்காகப் பயன்படுத்துவது அமானிதமாகும்.

3. இந்நாட்டில் சமாதான சகவாழ்வு ஏற்பட வேண்டும் என்று விரும்பும் எல்லா சமூகங்களையும் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள் நாட்டில் இன ரீதியாக மத அடிப்படையில் சிந்திக்கும் தீவிரவாத குழுக்களுக்கு இந்த சூழல் தீனி போட்டு வளர்க்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எனவே, கல்வி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் கொள்கைகளை வகுக்கின்ற பொழுது சமாதானத்தை வளர்க்கும் வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். பண்டாவும் பெர்னான்டோவும் குமாரும் ஹம்சாவும் பழைய தவறுகளை மறந்து கைகோர்த்து பயணிக்கும் ஒத்திசைவான நிலை உருவாக வேண்டும்.

4. புதிய ஜனாதிபதி அவர்கள் முஸ்லிம் சமூகம் தொடர்பான முடிவுக்கு வருவதற்கு முன்னர் அதன் அரசியல் தலைவர்களது முடிவுகளை பார்த்து முடிவெடுக்காமல் சிவில் மற்றும் மார்க்கத் தலைமைகளது  அபிப்பிராயங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

5. முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புகள்

  • அல்லாஹ்வுடனான தொடர்பை வலுப்படுத்திக் கொள்வது,
  • உயர்ந்த பட்ச அறிவுச் சமூகமாக மாறுவது,
  • பண்பாடுகள் விடயத்தில் அதி கூடிய கரிசனை எடுப்பது,
  • தமது நலன்களை விட தேசத்தின் நலனுக்கு முன்னுரிமை கொடுப்பது,
  • கரைந்து போகாமல் கலந்து வாழுகின்ற அதே நேரத்தில் ஏனைய சமூகங்களுடைய உணர்வுகளையும் புரிந்து வாழ்வது,
  • ஏனைய சமூகங்களுக்கு முன்னால் தலை நிமிர்ந்து சுயகௌரவத்துடன் வாழ வேண்டும் என்பதனால்  இலங்கையின் உயர் பொறுப்புகளில் மார்க்கமும் அறிவும் பண்பாடும் சமூக உணர்வும் பரந்த மனப்பாங்கும் தேசப்பற்றும் கொண்டவர்களை அமர்த்தும் வகையில் நீண்ட திட்டமிடல்களை செய்வது.

மேலும், பயமுறுத்தும் வகையிலான, அதைரியத்தை ஏற்படுத்தும் வகையிலான, வென்றவர்களை தூற்றும் வகையிலான சமூக வலைத்தள பதிவுகளை முற்றாகத் தவிர்ப்போம்.

பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலர் முஸ்லிம்களை கடுப்பேற்றும் வகையில் சில பதவிகளை இட்டு வருகிறார்கள். அவற்றிற்கு கடுப்பான பதில் கொடுக்காதிருப்போம். இன்ஷா சுமுகமான சூழ்நிலை உருவாகும். அதற்காக ஒவ்வொருவரும் எம்மால் ஆனதைச் செய்வோம்.

எனவே, அல்லாஹ்வின் நாட்டத்தை ஏற்போம்! விரக்தியடையாமல் எமது தவறுகள் எனும் இடிபாடுகளுக்குள் இருந்து எழுந்து பயணிப்போம்.

அல்லாஹ்வின் அருளால் பயப்படத் தேவையில்லை. புதிய ஜனாதிபதி தேசத்துக்கு நல்லதைச் செய்வார் என நல்லெண்ணம் வைப்போம். எதனையும் நேர்மறையாகப் பார்ப்பது முஃமின்களது பண்பாகும்.

யஃகூப்(அலை) கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்:- ‘அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். நிச்சயமாக நிராகரிக்கும் சமூகத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்.’

இறுதியாக! உரிமைகளுக்கு முன்னர் கடமைகள் என்பதே எமது தாரக மந்திரமாக இருக்கட்டும்.

எமது தேசம், இந்நாட்டு மக்கள், முஸ்லிம் சமூகம் என்ற முக்கோண குறிக்கோள்களைப் பாதுகாப்பது என்பது எம் அனைவரதும் இலக்காக இருக்க வேண்டும்.

அல்லாஹ் எம் அனைவரையும் இந்த நாட்டையும் பாதுகாப்பானாக!

ஐக்கியப்பட்ட மூன்று இனங்களுக்கு மேலால் நின்ற வண்ணம் இன்ஷா அல்லாஹ் அந்த வண்ணாத்திப் பூச்சி சிறகடித்துப் பறப்பதைக் காண ஆசையாக இருக்கிறது.

About the author

Administrator

Leave a Comment