இலங்கை விவாகச் சட்டத்தின் பார்வையில் ஒரு நாடு ஒரு சட்டம்

178

கலாநிதி ஸலீம் மர்சூப்

அறிமுகம்

சில காலமாக பேசுபொருளாக மாறியிருந்த முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட சீர்திருத்த விவகாரங்கள், தற்போது இதே போன்று முக்கியமானதாகக் கருதப்படுகின்ற தனியார் சட்டங்களை நீக்குவது தொடர்பான கருத்தாடல்களாக பரிணமித்திருக்கின்றன. ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற இந்தக் கோஷம் நடைமுறைக்கு வந்தால் எம்.எம்.டி.ஏ (MMDA) மற்றும் இன்னும் சில தனிப்பட்ட சட்டங்கள் வழக்கற்றதாகிவிடும். ‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ என்ற கோஷம் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது.  இது சமூக ஊடகங்களில் ஆர்ப்பரிக்கின்ற அர்ப்பணமிக்க ஆதரவாளர்களினது மட்டுமன்றி சில பிரபலமான வழக்கறிஞர்களினதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.  இந்த மோகம், முன்னோக்கி நகர்த்துவதற்கான உண்மையான விருப்பத்தின் ஆழ அகலங்களை தீவிரமாக பரிசீலிக்க வைக்கிறது. இந்த கட்டுரையில், இலங்கை திருமணச் சட்டத்தின் பின்னணியில் இந்த கருத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.

இலங்கை சட்டத்தின் இயல்பு

இலங்கையின் சட்டப்பரப்பில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ (அல்லது ‘ஒரு தேசம், ஒரே சட்டம்’) என்ற கருத்தை பொருத்துவது சிரமங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. ஒருவகையில், அனைத்து இலங்கையர்களும் பெருமைப்பட வேண்டிய வளமான கலாச்சார மற்றும் சட்ட பாரம்பரியத்திலிருந்து விலக்கிச் செல்ல இந்த கருத்து முயல்கிறது. இன்னொரு வகையில் பார்த்தால், இலங்கை என்பது ஒரு “சட்ட அருங்காட்சியகம்” ஆகும்.  இது பல்வேறு சட்ட மரபுகளிலிருந்து வரும் சட்டங்களை அருகருகே காட்சிப்படுத்துகிறது. இலங்கையின் சிங்கள சட்டங்களும் பழக்கவழக்கங்களும் பண்டைய காலங்களில் நமது தீவு முழுவதும் நடைமுறையில் இருந்தன.  ஆனால் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்களால் இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டு கண்டி பிரதேசத்துக்கு நாட்டு மக்கள் மட்டுப்படுத்தப்பட்ட காலத்தில் அது கண்டியச் சட்டமாக நாட்டில் பெயர் பெற்றிருந்தது. ரோமன் – டச்சு சட்டம் என்ற பெயரில் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் விட்டுச் சென்ற சட்டத் தடயங்கள் இப்போது இலங்கையின் பொதுவான சட்டத்தின் அடித்தளமாகக் கருதப்படுகிறது. சில விஷேட தீர்ப்புகள் மற்றும் சட்ட முடிவுகள் மூலமாக ஆங்கிலச் சட்டமும் இலங்கையில் உள்வாங்கப்பட்டது.

இந்தவகையான ஐரோப்பியச் சட்டங்கள் இலங்கையில் அறிமுகமாவதற்கு முன்பே, இலங்கையின் வட மற்றும் கிழக்கு மாகாணங்களின் மலபார் திராவிட குடியேற்றவாசிகளின் வழக்கிலிருந்த சட்டமான தேசவழமை சட்டம், சோனக வர்த்தக சமூகத்தால் இந்தத் திருநாட்டுக்குக்  கொண்டு வரப்பட்ட முஸ்லிம் சட்டம் ஆகிய இரண்டு சட்ட மரபுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பினை இலங்கை பெற்றிருந்தது. இவைகள் எல்லாம் அடங்கிய எமது சட்டப் பாரம்பரியம் மிகவும் செழுமையானது. கமலாவதி எதிர் டி சில்வா வழக்கில், ஆங்கில சட்டத்தின் கோட்பாடுகளைப் பின்பற்றிய பொறுப்பெடுத்தல் தொடர்பான தகராறொன்றை இந்தச் சட்டச் செழுமை மூலமாக நீதியரசர் தம்பையாவினால் நியாயமாகத் தீர்க்க முடிந்தது. பொறுப்பெடுத்தலின் போது ஆங்கிலச் சட்டத்தின்படி குழந்தையின் நலனே முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆனால் ரோமன் – டச்சு சட்டத்தில் இந்த விவகாரத்தில் தந்தைக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. தனது தீர்ப்பின் போது  “இனம் போலவே சட்டமும் தூய்மையான இரத்தம் கொண்ட உயிரினம் அல்ல ” என்று அவர் வலியுறுத்தினார். அவரது இந்தத் தீர்ப்புக்கு நாட்டில் பல சட்டங்கள் நிலவியதால் உண்டான சட்டச் செழுமையே காரணமாக அமைந்தது.  ‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதை ஆதரிப்பவர்கள், நம்முடைய சொந்த சட்ட மரபுகளும் பெறுமானங்களும் மாற்றீடுகள் முன்வைக்க முடியாத அளவுக்கு  மிகவும் பெறுமதியானவை என்பதை மறந்து விடுகிறார்கள்.

யாப்பு ரீதியான கட்டமைப்பு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்து இடம் பெறவில்லை. அந்த யாப்பு பன்முகத்தன்மை பற்றியே பேசுகிறது. தனது மதம் அல்லது வழிபாடு, அனுஷ்டானங்கள், நடைமுறைகள் மற்றும் போதனைகளில் நம்பிக்கையை வெளிப்படுத்தவும், தனது சொந்த கலாச்சாரத்தை அனுபவித்து ஊக்குவிக்கவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள சுதந்திரத்தை யாப்பு உறுதிப்படுத்துகிறது. அத்தோடு, என்ன முரண்பாடுகள் இருந்தாலும், நடைமுறையில் உள்ள எழுதப்பட்ட, எழுதப்படாத சட்டங்கள் அனைத்தும் செல்லுபடியானதாக வழக்கிலிருக்கும் என்ற அடிப்படை உரிமையையும் அரசியலமைப்பு உறுதியளிக்கிறது. அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுடன் முரண்படுபவற்றை சவாலுக்குட்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 16 (1) அத்தியாயம், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் (எம்எம்டிஏ) போன்ற சட்டங்களைப் பாதுகாக்கிறது. ஜம்இய்யதுல் உலமாவின் கடுமையான தடங்கல்களுக்கு மத்தியிலும்  எம்.எம்.டி.ஏவின் சில பாரபட்சமான விதிகளை திருத்துவதற்காக பல்வேறு ஏமாற்றங்களுக்கு மத்தியில் போராடி வரும் சில முஸ்லிம் பெண் ஆர்வலர்கள், அரசியலமைப்பின் 16 (1) ஐ திருத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது ஏன் என்பதை இதன் மூலமாக விளங்க முடிகிறது.  உச்சநீதிமன்றத்தில் எம்.எம்.டி.ஏ-வின் கூறப்பட்ட விதிகளை சவாலுக்குட்படுத்துவதற்கோ அல்லது எம்எம்டிஏ என்பது முழுமையான இஸ்லாமியச் சட்டம் அல்ல என்று கோரி அந்தச் சட்டத்தின் ஆளுகையிலிருந்து எவரும் விலக்குப் பெறுவதற்கோ இது வழியமைக்கும்.

அரச கொள்கையினை வழிநடத்தும் கோட்பாடுகள் அடங்கிய அத்தியாயம் 27 உள்ளிட்ட அரசியலமைப்பின் எந்தப் பகுதியிலும்  ‘ ஒரு நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதற்கான எந்த அடிப்படையையும் காண முடியாது.

இதற்கு மாறாக, அண்மைக்காலமாக, ‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியா, அரசியலமைப்பை மீள வரையும் நிலைக்கு ஆளானது. இந்திய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டபோது, இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது: அரசியலமைப்பு சபையின் சில உறுப்பினர்கள் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் தத்தெடுப்புக்கான பொதுவான சட்டம் இருக்க வேண்டும் என வாதிட்டனர்.  மற்றவர்கள் இது கட்டம் கட்டமாக அடையப்பட வேண்டிய குறிக்கோள் என்று நம்பினர். இந்திய அரசியலமைப்பின் 44 ஆம் அத்தியாயத்தில் உள்ள வழிநடத்துதல் கோட்பாடு, “குடிமக்களுக்கு ஒரு சீரான சிவில் குறியீட்டைப் பாதுகாக்க அரசு முயற்சிக்க வேண்டும்” என்று இணங்கியிருந்தாலும் அதற்குரிய நேரம் தோதானதல்ல என்று கருதப்பட்டது. இன்று வரை அந்த உரிய தருணம் வாய்க்கவே இல்லை.

தீர்க்கப்பட விரும்பும் பிரச்சினை என்ன?

ஒருவர் ‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ தீர்வு பற்றிப் பேசும்போது, ​​அதனால் தீர்க்க விளையும்  பிரச்சினையைப் பார்ப்பது பயனுள்ளதாக அமையும். பெரும்பாலான பன்மைத்துவச் சமூகங்களில், கலாச்சாரங்கள் மற்றும் தனிப்பட்ட சட்டங்களின் மோதல்களை ஒருவர் காண முடியும். இது பெரும்பாலும் குழந்தைத் திருமணம் மற்றும் பலதார மணம் போன்ற சில நடைமுறைகளால் ஏற்கனவே இருக்கும் சனத்தொகைக் கட்டமைப்பு தீவிரமாகச் சிதைவடையக் கூடும் என்ற பெரும்பான்மையினரின் அச்சத்தின் வெளிப்பாடாகும். அதே சமயம், இந்த சமூகங்களிலுள்ள பெண்கள் தங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகத் தோன்றும் சட்டங்களில் மாற்றங்களைக் கோருகிறார்கள். அவர்கள் சட்ட சீர்திருத்தங்களுடன் முன்னேறத் தவறும்போது, ​ ‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ தீர்வைத் தழுவுகிறார்கள். இந்த சமூகங்களின் பன்முகத்தன்மையின் ஒரு பகுதியாக இருக்கும் தனியார் சட்டங்களுக்குப் பதிலாக, பன்மைச் சமூகங்களில் உள்ள பெரும்பான்மைச் சமூகங்களுடன் இணைந்து பெண் ஆர்வலர்களும் பொதுவான சட்டத்தை கோருவது விசித்திரமானது. இங்குள்ள பெண்கள் எதிர்கொள்ளும் இரண்டக நிலை என்னவென்றால், பாலின நீதியை அடைவதற்கான நோக்கத்திற்காக, அவர்கள் பன்முகத்தன்மையை இழக்கத் துணிவதாகும். குறைந்த பட்சம் அவர்கள் விரும்புகின்ற கலாச்சார மற்றும் சட்டப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியையாவது அவர்கள் இழக்க நேரிடும்.

பாலின நீதிச் சட்டங்களும் சட்டத் தொகுப்புகளும் சமகால ஜனநாயக நாடுகளுக்கு முன்னாலுள்ள முக்கியமான சோதனையாக மதிப்பிடப்படுகிறது. ஐரோப்பா கண்டத்தில் உள்ள மேற்கத்திய ஜனநாயக நாடுகள் தொடர்ச்சியான சட்டவாக்கங்களின் மூலம் பெண்களுக்கு சமத்துவத்தை உறுதி செய்வதில் நெருங்கி வந்துள்ளன.  ஆங்கில பொதுச் சட்டம் நிலவும் இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடாவில், வரலாற்று தீர்ப்புகள் மற்றும் சட்டங்கள் மூலம் பெண்களின் நிலை படிப்படியாக முன்னேறியுள்ளது. இந்த ஒவ்வொரு நாடுகளிலும், பாலின சமத்துவம் வெறுமனே சட்டத்தின் மூலமாக உணரப்படவில்லை. இந்த செயல்முறை படிப்படியாக பெண்ணிய போராட்டங்களால் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாகவே நடைமுறைக்கு வந்தது. உண்மையில், அமெரிக்காவில் ஒரு யுனிவர்சல் கமர்ஷியல் கோட் (யு.சி.சி) மட்டுமே உள்ளது. ஆனாலும் அதன் பல்வேறு மாநிலங்களிடையே அதன் தனியார் சட்டங்களில் பெரும் வேறுபாட்டைக் கொண்டுள்ளது. குறிப்பாக குழந்தை திருமணம் விடயத்தில் பல்வேறு மாநிலங்களிலும் வேறு வேறான சட்டங்கள் உள்ளன. விஷேட சட்டங்களால் ஆளப்படாதவர்களுக்கான திருமண பதிவு (பொது) கட்டளைச் சட்டத்தினதும் (“எம்.ஆர்.ஓ)”இலங்கை முஸ்லிம்களால் பிரயோகிக்கப்படும் எம்.எம்.டி.ஏ. இனதும் பின்னணியில் திருமணச் சட்டத்தை நோக்குவதனூடாக ‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தை விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.

எம்.எம்.டி., எம்.ஆர். மற்றும் ஒரு நாடுஒரு சட்டம்

ஒரு தேசத்திற்கு சட்டமொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஒரு ஆதரவான அரசியலமைப்பு கட்டமைப்பை மட்டும் கொண்டிருப்பது போதுமானதல்ல என்பதனை  ‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தை ஏற்றுக்கொள்பவர்களில் பெரும்பாலோர் உணர்வதில்லை. பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டங்கள் அல்லது பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டத்தின் புதிய குறியீடுகளை உருவாக்குதலும் இதற்கு அவசியமானது. உதாரணமாக, எம்.எம்.டி.ஏவை ரத்து செய்து, முஸ்லிம்களை திருமணப் பதிவு (பொது) கட்டளைச் சட்டத்தின் (எம்.ஆர்.ஓ) விதிகளால் நிர்வகிக்க வேண்டுமென்று கூறுவதாக இருந்தால், குழந்தைத் திருமணம் பற்றி பிந்தையவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேள்வி கேட்க வேண்டி வருகிறது.

முதலில் சட்டம் இயற்றப்பட்ட 1907 ஆம் ஆண்டின் ஆரம்ப காலங்களில், திருமண பதிவு கட்டளைச் சட்டத்தின் (எம்.ஆர்.ஓ) 15 வது பிரிவு, பதினாறு வயதை பூர்த்தி செய்யாத ஆண் அல்லது பன்னிரண்டு வயதைப் பூர்த்தி செய்யாத பெண்ணின் திருமணம் செல்லுபடியாகாது என்று குறித்துரைத்திருந்தது. கட்டளைச் சட்டத்தின் 22 வது பிரிவு “ இருபத்தொரு வயதிற்கு கீழ்ப்பட்ட ஒருவரின் தந்தையோ ”, அல்லது தந்தை கிடைக்கவில்லை அல்லது திறமையற்றவராக இருந்தால் தாயோ அல்லது இருவரும் கிடைக்கவில்லை என்றால் அல்லது தகுதியற்றவராக இருந்தால் முறையாக நியமிக்கப்பட்ட ஒரு பாதுகாவலரோ, “அத்தகைய கட்சியின் திருமணத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு அதிகாரம் உடையவராவார். மேலும் அந்தத் திருமணத்திற்கு அத்தகைய ஒப்புதல் அவசியமானதாகும்.”   என ஆரம்பத்தில் குறித்துரைத்திருந்தது. உண்மையில், பிரிவு 22 (2) பெற்றோர் இல்லாத இடத்தில் அல்லது பாதுகாவலர், அல்லது அத்தகைய பெற்றோர் அல்லது பாதுகாவலர் நியாயமற்ற முறையில் சம்மதத்தைத் தடுத்து நிறுத்துகிறார்கள் எனின், இருபத்தொருவருக்குக் குறைவான நபரின் திருமணம் மாவட்ட நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படலாம். 1907 ஆம் ஆண்டில், எம்.ஆர்.ஓ இயற்றப்பட்டபோது, மேஜராகும் வயது இருபத்தி ஒரு வயதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1989 என்ற மிக அண்மைக் காலத்திலேயே இது 18 ஆகக் குறைக்கப்பட்டது.

 ஆகவே, 1995 க்கு முன்னர், எம்.ஆர்.ஓ. சட்டத்தின்படி குறைந்தபட்ச திருமண வயது ஒரு ஆணுக்கு 16 ஆகவும், ஒரு பெண்ணுக்கு 12 ஆகவும் இருந்தது. அந்த குறைந்தபட்ச வயதிற்குட்பட்ட நபர்களின் திருமணங்கள் செல்லுபடியாகாது.  அந்த குறைந்தபட்ச வயதுக்கு மேல் ஆனால் மேஜராகும் வயதுக்கு கீழே (இது மேலே குறிப்பிட்டபடி 1989 இல் 21 முதல் 18 ஆகக் குறைக்கப்பட்டது) பெற்றோர், பாதுகாவலர் அல்லது மாவட்ட நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் மட்டுமே திருமண ஒப்பந்தம் செல்லுபடியாகும்.  திருமணத்தை ஒப்பந்தம் செய்யக்கூடும். 1989 ஆம் ஆண்டில் பெரும்பான்மை வயது பதினெட்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டிருந்தாலும், எம்.ஆர்.ஓ 1995 வரை திருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு திருத்தச் சட்டத்தின் மூலம், அந்தக் கட்டளைச் சட்டத்தின் 15 வது பிரிவு பின்வரும் விதிமுறைகளுடன் மாற்றப்பட்டது:

“இந்த பிரிவு நடைமுறைக்கு வந்தபின் ஒப்பந்தம் செய்யப்பட்ட எந்த திருமணமும் திருமணத்திற்கு இரு தரப்பினரும் பதினெட்டு வயதை பூர்த்தி செய்யாவிட்டால் செல்லுபடியாகாது.”

 எவ்வாறாயினும், செல்லுபடியாகும் திருமணத்திற்கு பெற்றோர், பாதுகாவலர் அல்லது மாவட்ட நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும் கட்டளைச் சட்டத்தின் 22 வது பிரிவு மாற்றப்படாமல் சட்டத்தை குழப்பமான நிலையிலேயே விட்டு வைத்தது. 18 வயதிற்கு கீழான எவரும் செல்லுபடியாகும் திருமணத்தை ஒப்பந்தத்தில் ஈடுபடுவதைத் தடைசெய்த பிரிவு 15 இன் திருத்தம், 18 வயதை நிறைவு செய்த ஒருவரை திருமண ஒப்பந்தமொன்றில் ஈடுபடுவதைச் செல்லுபடியாக்கும் வகையில் மறைமுகமாக அனுமதித்தது இந்தக் குழப்பநிலை தொடர்வதற்குக் காரணமாகியது.  பிரிவு 22 க்கு உட்பட்டு இது இயற்றப்பட்டது என்பதைக் குறிக்கும் சொற்கள் பிரிவு 15 இல் காணப்படவில்லை. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, பிரிவு 15 இல் குறிப்பிடப்பட்டுள்ள பதினெட்டு வயது மேஜராவதற்கான வயதிற்கு ஒத்ததாக இருப்பதால் குழப்பம் மேலும் அதிகரிக்கிறது. இந்தச் சூழலில், எம்.எம்.டி.ஏ கமிட்டி அளித்த பரிந்துரைகளின் வெளிச்சத்தில் எம்.எம்.டி.ஏ-க்கு திருத்தங்களை பரிசீலிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவின் முன்னணி உறுப்பினர் ஒருவர்  Roar ஊடகத்துக்கு வழங்கியதாகத் தெரிவிக்கப்படும் தகவலில்,

” பொதுத் திருமண கட்டளைச் சட்டத்தின் 22 வது பிரிவின்படி, 18 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணங்களை மாவட்ட நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் அனுமதிக்க முடியும் என்று ஒரு விதி உள்ளது என்பது ஜம்இய்யதுல் உலமாவின் அவதானங்களில் ஒன்று” என்று குறிப்பிட்டுள்ளார்.

 1995 ஆம் ஆண்டில் எம்.ஆர்.ஓவின் 15 வது பிரிவு திருத்தப்பட்ட பின்னர் ஒரு திருமணத்துக்கு அதன் எல்லைக்குட்பட்ட அனைத்து நபர்களிடமிருந்தும் ஒப்பந்தம் செய்யக்கூடிய குறைந்தபட்ச வயதை 18 ஆக மாற்றியது.  1997 ஆம் ஆண்டில் 22 ஆம் பிரிவில் உள்ள “இருபத்தி ஒன்று” என்ற வார்த்தை “பதினெட்டு”ஆக மாற்றப்பட்டது. அந்தத் திருத்தம், ஒரு குழந்தையின் திருமணத்தை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோர் அல்லது நீதிமன்றத்தின் சம்மதத்தைப் பெறும் முறையை பாராளுமன்றம் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் அமையப்பெற்றதாகக் கருதுவதற்கு இடமிருக்கிறது. இது சொந்தமாகத் திருமணம் செய்து கொள்ள இயலாத ஒருவரை, பெற்றோர், பாதுகாவலர் அல்லது மாவட்ட நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் குறைந்த பட்ச வயது வரம்பில்லாமல் (ஒரு குழந்தையை) திருமணம் செய்து கொடுக்க MRO அனுமதிக்கிறது என்ற ஜம்இய்யதுல் உலமாவின் கூற்றை நியாயப்படுத்துகிறது.

எம்.ஆர்.ஓ-வுக்கான 1995 மற்றும் 1997 திருத்தங்களை குணரட்னம் எதிர் பதிவாளர் நாயகம் வழக்கில் பரிசீலித்தது. 18 வயதை பூர்த்தி செய்யாத ஒரு இளைஞனுடன் தனது திருமணத்தை பதிவு செய்ய பதிவாளர் நாயகம் மறுத்ததை சவாலுக்குட்படுத்தி 14 வயதுடைய ஒரு பெண்ணின் தந்தையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  இரு தரப்பினரினதும் பெற்றோரின் சம்மதத்துடனேயே இந்தத் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது . திருமணத்திற்கு இரு தரப்பினரும் பதினெட்டு வயதை பூர்த்தி செய்யவில்லை என்ற வகையில் திருமண ஒப்பந்தம் செல்லுபடியாக முடியாது என்ற அடிப்படையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் பதிவாளர் நாயகத்தின் முடிவை ஆதரிப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒப்படைக்கும் போது, நீதியரசர் ஷிரானி திலகவர்தன எழுதிய தீர்ப்பில்,

 “பிரிவு 22 இன் படி, 18 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களின் விடயத்தில் திருமணத்துக்கு இரு தரப்பினதும் ஒப்புதல் தேவை. திருமண பதிவு கட்டளைச் சட்டத்தின் 22 வது பிரிவில் திருத்தங்களைக் கொண்டுவரும்போது, 1995 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க திருமண பதிவு (திருத்தம்) சட்டத்தின் உட்பொருளை சட்டத்தின் வடிவமைப்பாளர்கள் கருத்தில் கொள்ளவில்லை என்று தெரிகிறது“ என்று குறிப்பிட்டிருந்தார்.

 ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ என்ற கருத்துக்காக வாதாடுபவர்கள், சட்ட சீர்திருத்தத்திற்கான கொள்கையை ஆரம்பித்தவர்களின் பொதுவான இழுத்தடிப்பையும் அலட்சியத்தையும், நமது சட்டத்தை உருவாக்குபவர்களின் திறமையின்மையையும் மறந்துவிட்டதாகத் தெரிகிறது. எங்கள் சட்டத்தை உருவாக்குபவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர்களாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை எம்.ஆர்.ஓவின் 22 வது பிரிவு தொடர்ந்தும் நிலைத்திருப்பதனை வைத்துப் புரிந்து கொள்ள முடிகிறது. எம்.ஆர்.ஓவின் 1995 இன் 15 வது பிரிவுக்கான திருத்தத்தின்​​ நோக்கத்துடன் இது தெளிவாக முரண்படுகிறது.  

‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்கப்படும் ஒரு முஸ்லிம் எதிர்கொள்ளும் மற்றொரு காரணியாக எம்.ஆர்.ஓவில் உள்ள விவாகரத்துச் செய்வதற்கான ஏற்பாடுகள் அமைகின்றன. திருமணம் என்பது இணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.  கணவன்-மனைவியாக இருதரப்பும் தொடரத் தயாராக இருக்கும் வரை மட்டுமே நீடிக்க வேண்டும். எவ்வாறாயினும், எம்.ஆர்.ஓவின் 19 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படையில் பரஸ்பர ஒப்புதலால் விவாகரத்து இடம்பெற முடியாது. அல்லது விவாகரத்து வழங்குவதற்கான ஒரு களமாக திருமணத்தின் மீளமுடியாத முறிவை சட்டம் அங்கீகரிக்கவில்லை. மறுபுறத்தில்  எம்.எம்.டி.ஏ இன் கீழ் விவாகரத்து கிடைக்கிறது.  சட்டத்தின் பிரிவு 28 (2) இன் கீழ் பரஸ்பர ஒப்புதல் (முபாரத்) மற்றும் திருமண முறிவு (குலா) ஆகியவற்றின் அடிப்படையில் விவாகரத்துப் பெற முடிகிறது. உண்மையில், எம்.ஆர்.ஓ.வால் ஆளப்படுபவர்களின் நலனுக்காக இதேபோன்ற காரணங்களை அங்கீகரிப்பதற்கானதொரு முயற்சி 1956 – 1959 ஆம் ஆண்டுகளில் திரு. ஏ.ஆர்.எச்.கனகரத்ன கியூ.சி. தலைமையிலான விவாக விவாகரத்து ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட போதும், இந்த விடயங்களில் அவர்களால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.

 ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ கருத்தை முன்வைப்பவர்கள் முதலில் இரண்டு வகைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். (பல உள்ளன, ஆனால் நான் இரண்டை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளேன்) அவர்கள் ஒரு சட்டத்தைத் தெரிவு செய்ய முன்னர் தாம் பிறந்த காலத்திலிருந்து தனியார் சட்டங்களால் நிர்வகிக்கப்பட்டவர்களை ஒருமுறை கேட்க வேண்டும். தற்போதுள்ள பொதுச் சட்டங்கள் திருப்திகரமாக இல்லாவிட்டால், முதலில் அவை மதிப்பாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும்.  இதனால் ஏனைய சட்டங்களால் நிர்வகிக்கப்படுபவர்கள் கூட “ஒரு சட்டத்தால்” ஈர்க்கப்படலாம். எனது அவதானத்தின் படி அதுவே முன்னோக்கிச் செல்லும் பாதை. எனது கருத்துப்படி, ‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்து தேசிய ஒற்றுமை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமான ஸ்திரத்தன்மையையும் சமூக நல்லிணக்கத்தையும் அடைவதற்கான அடிப்படையை வழங்குகிறது. சமூக மற்றும் சட்டத் சீர்திருத்தங்கள் மூலம் இந்தக் கருத்து முன்னோக்கி கொண்டு செல்லப்படலாம், ஒரு பொதுவான சட்ட நெறிமுறையை உருவாக்கும்போது, ​​ஒவ்வொரு சட்டத்திலும் சிறந்ததை ஒருவர் தேர்ந்தெடுத்து அவற்றை ஒன்றாக இணைக்க முடியும்.

முடிவுரை

இன மற்றும் மத வேறுபாடுகளால் கடுமையாகப் பிரிக்கப்பட்டு, பன்முகத்தன்மைக்கு சாதகமாக ஒதுக்கப்படாத ஒரு நாடு அதன் மக்களிடையே கடுமையான மோதல்களைத் தவிர்க்கக்கூடிய ஒரு சிறந்த வழியாக ”ஒரே நாடு, ஒரே சட்டம்“ என்ற கருத்து இருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், ‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ கொள்கை தாக்கம் மிக்கதாக அமைய வேண்டுமானால், வசதியான அரசியலமைப்பு விதிகளை இயற்றுவதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம். அதேபோல சட்ட ஆராய்ச்சிகளும் வரைவுகளும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திறன்களும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

இந்த கட்டுரையில் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, வெற்றியை அடைவதற்கான ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ கொள்கை சிறுபான்மை சமூகங்களை ஒடுக்குவதற்கான வழிமுறையாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது.  மேலும் ஒரு சட்டத்தை ஒப்புக் கொள்ளுமாறு கேட்கப்படுபவர்களுக்கு எந்தவொரு கட்டாயமும் இல்லாமல் சுதந்திரமாக அவ்வாறு செய்வதற்கான தேர்வு வழங்கப்பட வேண்டும். சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி தேசத்தை ஊக்குவிக்கும் மக்களின் நல்வாழ்வும் ஒற்றுமையுமே இறுதி நோக்கமாக இருக்க வேண்டும். இலங்கை அதன் சட்டங்களில் பெரும் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது.  உண்மையில், பெரும்பாலான இலங்கையர்கள் தங்களது செழுமையான சட்டப் பாரம்பரியத்தைப் பற்றி பெருமைப்படுகிறார்கள். எனவே, அந்த பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும், பல்வேறு சட்டங்களிலும் அதன் நடைமுறைகளிலும் சகிப்புத்தன்மையின் அளவை அதிகரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுக்கப்பட வேண்டும். மாயா ஏஞ்சலோ கூறியது போல், “பன்முகத்தன்மையில் அழகு இருக்கிறது, வலிமை இருக்கிறது என்பதை பெற்றோர்கள் ஆரம்பத்தில் இளைஞர்களுக்கு கற்பிக்க வேண்டிய நேரம் இது.” பன்முகத்தன்மையை வளர்ப்பது ஒரு தலைமுறையைத் தாண்டிய  கடின உழைப்பை வேண்டி நிற்கும் என்பதை வலியுறுத்த வேண்டியது அவசியம். தேசத்தில் நிலவும் அமைதியையும் நட்பையும் அழிக்க முட்டாள்தனமான ஒரு கணம் போதுமானது. எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய ஒரு விறுவிறுப்பான எரிமலையின் மேல் தான் வாழ்கிறோம் என்பதை மனிதக் குடும்பம் உணரத் தொடங்கியுள்ளது.  இந்த பதற்றம் இலங்கையிலும், குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர் உணரப்படுகிறது. சமூக ஊடகங்கள் வெறுப்புப் பேச்சை பரப்புவதற்கும் தீவிரவாத மனநிலையை வளர்ப்பதற்கும் ஒரு வலுவான , ஆபத்தான தளமாக அமைகின்றன என்பதை உணர வேண்டிய நேரம் இது.

 எனவே வெறுப்புப் பேச்சு மற்றும் பயங்கரவாதத்தைக் கிளறுதல் மூலம் சமுதாயத்தை சீர்குலைப்பவர்களைக் கையாளக்கூடிய வகையில் பயனுள்ள சட்ட வழிமுறைகளை அமைப்பது முக்கியம். தெற்காசியாவில் மனித உரிமை மீறலில் ஈடுபடுவோரில் இலங்கை 52 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. பங்களாதேஷ் (45 புள்ளிகள்), பூட்டான் (43 புள்ளிகள்), பாகிஸ்தான் (41 புள்ளிகள்), மாலத்தீவு (23 புள்ளிகள்), நேபாளம் (24 புள்ளிகள்) மற்றும் இந்தியா (24 புள்ளிகள்) அடுத்தடுத்த நிலைகளில் இருக்கின்றன. இலங்கை சட்ட அமுலாக்க முகவர் நிறுவனங்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் போது, பாகுபாடின்றி சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் உறுதியாக இருப்பது அவசியமாகிறது. நல்ல நிர்வாகம், திறமையான கொள்கை நடைமுறைகள் மற்றும் சுயாதீன நீதி மனப்பான்மை ஆகியவற்றின் மூலம்தான், அமைதியான, துடிப்பான மற்றும் ஜனநாயக தேசமாக இலங்கை வளர முடியும்.  இதில் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் உள்ள மக்கள் பலவிதமான தனியார் சட்டங்களை அனுபவித்து ஒற்றுமையுடன் வாழ முடியும், அல்லது மாற்றீடாக அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டத்தை ஒரே நாட்டில் நடைமுறைப்படுத்த முடியும்!