Features நேர்காணல்

ஹஜ்ஜுக்கான செலவை 6 லட்சத்தை விட குறைக்க முடியாது

Written by Administrator

அல்ஹாஜ் அஸ்செய்யத் அஹமத் நகீப் மௌலானா – ஹஜ் குழு உறுப்பினர்

அல்ஹாஜ் அஸ்ஸெய்யத் அஹமத் நகீப் மௌலானா அவர்கள் கொழும்பு மாவட்டத்திலுள்ள தெஹிவளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை கொ/சாஹிரா கல்லூரியிலும் இரண்டாம் நிலை மற்றும் உயர்நிலைக் கல்வியை கொ/அலெக்சாண்டர் கல்லூரியிலும் கற்றுள்ளார். இஸ்லாமியக் கற்கைத்துறை மற்றும் பௌதீகவியல் துறையில் உயர் கல்வியை மேற்கொண்டுள்ள அல்ஹாஜ் அஹமத் நகீப் மௌலானா அவர்கள் தந்தையாரின் அரசியல் பாசறையில் கற்று இது வரை காலமும் இலைமறைகாயாக சமூகத்திற்கு பல்வேறு சேவைகளை ஆற்றி வந்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டிற்கான ஹஜ் குழுவில் மூத்த உறுப்பினர் ஒருவராகச் செயற்பட்டு வரும் இவர், முஸ்லிம் சமூக, அரசியல் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் அரைநூற்றாண்டு கால அனுபவங்களைக் கொண்டுள்ளார். ஹஜ் விவகாரம் உள்ளிட்ட முஸ்லிம் சமூக அரசியல் தொடர்பில் மீள்பார்வை பத்திரிகைக்கு அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

 • பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டிற்கான ஹஜ் குழுவின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுங்கள்.

இலங்கை ஹஜ் யாத்ரீகளுக்கான நியாயமான ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு சவூதி அரேபிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துதல் மற்றும் ஒவ்வொரு யாத்ரீகருக்கும் முழு சேவையும் வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்காக தொடர்புடைய அனைத்து அதிகாரிகளுடனும் தொடர்புகொள்ளல், குறிப்பாக சரியான நேரத்தில் போக்குவரத்து வசதிகளையும் மினா, அரபா தங்குமிடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் போன்ற விடயங்களை முக்கிய அம்சங்களாகக் கொண்டு ஹஜ் குழு செயற்பட்டு வருகிறது.

ஹஜ்ஜுடைய விடயங்கள் சவூதி அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பிரதமரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது விடயம் தொடர்பில் பிரதமர் அவர்களுக்கு சரியான முறையில் ஆலோசனை வழங்கும் பொறுப்பு ஹஜ் குழுவைச் சார்கிறது.

 • சவூதி அரசாங்கம் இம்முறை இலங்கைக்கு எத்தனை ஹஜ் கோட்டாக்களைத் தருவதாக வாக்குறுதியளித்திருக்கிறது?

சவூதி அரேபிய அரசாங்கம் இதுவரை இலங்கைக்கு 2850 ஹஜ் கோட்டாக்களையே வழங்கி வந்தது. இம்முறை சுமார் 5000 ஹஜ் கோட்டாக்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதில் 3500 கோட்டாக்களை சவூதி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வழங்கும். அதனைத் தொடர்ந்து எமது அரசாங்கம் மேன்முறையீட்டை (Appeal) வழங்கியதும் 1500 கோட்டாக்களை வழங்கும் என நினைக்கிறேன்.

 • சவூதி அரேபிய அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்ற ஹஜ் கோட்டாக்கள் பகிர்ந்தளிக்கப்படும் முறை பற்றிக் குறிப்பிட முடியுமா?

முஸ்லிம் சமய விவகார அமைச்சு பிரதமரின் கீழ் உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைய சமய விவகார அமைச்சிடமிருந்து கோட்டாக்கள் பெறப்பட்டு பதிவுசெய்யப்பட்டுள்ள முகவர் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இலங்கையில் 93 முகவர் நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அம்முகவர் நிறுவனங்களில் எத்தனை யாத்ரிகர்கள் பதிவு செய்கின்றார்களோ அவ்வெண்ணிக்கைக்கு அமைய கோட்டாக்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். உதாரணமாக ஒரு குழுவில் 75 பேர் பதிவுசெய்துள்ளார்கள் எனில், 75 வீசாக்கள் வழங்கப்பட வேண்டும்.

 • இம்முறை ஹஜ் விடயத்தை எவ்வாறு செய்துகொள்வது என்கின்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதா?

தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஹஜ் கமிட்டி பிரதமரிடம் அனுமதி பெற்றதன் பின்னர் ஹஜ் இயக்குநர்களையும் முகவர்களையும் அழைத்துச் சென்று பிரதமரைச் சந்திக்கும் தீர்மானத்தில் உள்ளது. பெரும்பாலும் இச்சந்திப்பு எதிர்வரும் வாரங்களில் இடம்பெறலாம். அப்போது ஹஜ் இயக்குநர்களும் முகவர்களும் ஹஜ் விடயத்தை மேற்கொள்வதில் உள்ள பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டுவார்கள். அப்போது ஹஜ் விடயத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளைப் பிரதமர் ஓரளவுக்கு விளங்கிக் கொள்வார். அதன் பிறகே இம்முறை ஹஜ் விடயங்களை எப்படி செய்துகொள்வதென்கின்ற முடிவுகள் எட்டப்படும்.

 • ஹஜ்ஜுக்கான கட்டணம் கூடிக் குறைவதற்கான காரணங்களைத் தெளிவுபடுத்த முடியுமா?

ஹஜ்ஜுடைய விடயம் நிறைவாகவும் குறைந்த கட்டணத்திலும் செய்துகொடுக்கப்பட வேண்டும் என்பதே பிரதமரின் கருத்தாக உள்ளது. ஆனால் ஹஜ்ஜுக்கான கட்டணத்தை அதிகளவில் குறைப்பதென்பதும் கடினம்தான். ஏனெனில், அங்கு முஅல்லிம் கட்டணம், டிக்கட் கட்டணம், ஹஜ் வரிக் கட்டணம் என்றெல்லாம் உள்ளன. இம் மூன்று கட்டணங்களுமே கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபா வருகிறது. இதுதவிர ஒரு மாத காலத்திற்கான உணவு, தங்குமிட வசதிகள், ஹோட்டல் கட்டணங்கள் எல்லாம் செலுத்தப்பட வேண்டும். இவையனைத்துக் கட்டணங்களையும் கூட்டிப் பார்க்கின்ற போது 6 லட்சத்தை விட குறைவாக ஹஜ்ஜுக்கான செலவை குறைத்துவிட முடியாது என்றே நினைக்கிறேன்.

இதுவல்லாமல் வசதிபடைத்தவர்கள் மக்கா, மதீனா நகரங்களில் சிறந்த ஹோட்டல்களைப் பதிவுசெய்து ஹஜ் கடமையைச் செய்வார்கள் என்றால் கட்டணம் இன்னும் அதிகமாகும். எனவே ஹஜ் கடமையை எப்படிச் செய்யத் திட்டமிடுகிறோமோ அதற்கமைய கட்டணங்களும் கூடிக் குறையும். குறைவான கட்டணத்தில் ஹஜ் கடமையை மேற்கொள்வதாயின் மக்கா பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்திலிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களை நாட வேண்டும். மக்கா பள்ளிவாசலுக்கு அருகாமையில் ஹோட்டல்களைப் பதிவதாக இருந்தால் கட்டணங்கள் இன்னும் அதிகமாகும். ஹஜ் செய்பவர்கள் தான் இவற்றைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய முடிவுகளுக்கமையவே கட்டணங்களும் அமையும்.

 • அரசாங்கம் இம்முறை ஹஜ் கட்டணங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நீங்கள் கருதுகிறீர்களா?

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் கட்டணத்தைக் குறைத்தால் ஹாஜிகளுக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்க முடியும் என்பது பிரதமரின் எதிர்பார்ப்பு.  சாதாரணமாக மக்கா பயணிப்பதற்கு ஒன்றரை லட்சம் போல் செலவாகும். ஹஜ் காலத்தில் அக்கட்டணம் இன்னும் 70 வீதத்தால் அதிகரிக்கும். எனவே அரசாங்கம் இக்கட்டணத்தைக் குறைப்பதாயின் சிறியதொரு தொகையை மாத்திரமே குறைக்க முடியும்.

ஒருவர் மக்காவிலுள்ள ஹில்டன், தல்லா அஜ்யாத் போன்ற சொகுசு ஹோட்டல்களில் தங்கி நின்று ஹஜ் கடமைகளை மேற்கொள்ள விரும்பினால் அவருக்கு அதிக பணத்தொகை செலவாகும். மற்றுமொருவரிடம் அதற்கான வசதிகள் இல்லாவிட்டால் அவரது வசதிக்கேற்ற தங்குமிடங்களுக்கான கட்டணங்களே அறிவிடப்படும். யாத்ரிகர்களின் தேவைகளுக்கேற்ப விடயங்களை செய்துகொடுக்கவே முகவர்கள் உள்ளனரே ஒழிய முகவர்கள் சொல்வது போன்று ஹஜ் செய்ய வேண்டுமென்பது அவசியமில்லை. இங்கு ஒழுங்கான முறையில் ஹோட்டல் அறைகளை பதிவுசெய்துகொள்ளாமல் அங்கு சென்று சரியாக ஒன்றும் தரப்படவில்லை என்று கூறுவதில் அர்த்தமில்லை.

 • கடந்த காலங்களில் சில முகவர் நிலையங்கள் ஹஜ் யாத்ரிகர்களை சரியான முறையில் கவனிக்கவில்லை என்கின்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இம்முறை இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுமா?

திணைக்களம் என்ற வகையில் அதன் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் இது விடயத்தில் கவனம் செலுத்துவார்கள் என நான் நினைக்கின்றேன். ஹஜ் யாத்ரிகர்களுக்கு அப்படி அநியாயம் செய்யப்படுமாக இருந்தால் முகவர் நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் இடுவதற்கான உரிமை அமைச்சுக்கு உள்ளது. ஹாஜிகள் உரிய முறையில் கவனிக்கப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டு மக்காவில் வைத்து முறைப்பாடு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட முகவர்களை அவர்கள் பிடித்து வைப்பார்கள். அரசாங்கம் என்ற வகையிலும் கோட்டாக்கள் வழங்கப்படுகின்ற முகவர் நிறுவனங்களை கண்காணிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்கிறது.

 • 2020ஆம் ஆண்டிற்கான ஹஜ் குழுவில் நீங்கள் மூத்த உறுப்பினர் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கின்றீர்கள். உங்களது அனுபவத்தின் படி இதுவரை காலமும் ஹஜ்ஜுடைய விடயத்தில் இடம்பெற்று வந்துள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட முடியுமா?

சிலர் ஹஜ்ஜுக்காக வேண்டி பணத்தை பெற்றுக் கொண்டு அனுப்பாமல் விட்டதாகவும், ஹஜ்ஜுக்கு அனுப்பிய ஹாஜிகளுக்கு வசதிகள், வழி காட்டல்கள் செய்துகொடுக்கப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றை நாம் முற்றாக நிறுத்திவிட வேண்டும். இதனை திணைக்களத்திற்கு செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். இம்முறை ஹஜ் விவகாரத்தை முறையாகச் செயற்படுத்துவதில் பல்வேறு திட்டங்களையும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

 • ஹஜ்ஜுடைய விவகாரத்திற்கு அப்பால் இலங்கை முஸ்லிம் சமூகம் பற்றிய உங்களது அவதானங்களை சற்று தெளிவுபடுத்த முடியுமா?

இற்றைக்கு 25,30 வருடங்களுக்கு முன்னர் பள்ளிவாசல்களில் கந்தூரி கொடுக்கப்பட்டது. மீலாத் தினத்தையொட்டி பெரும்பாலான பள்ளி வாசல்களில் கந்தூரி வழங்கப்பட்டது. ரபீஉல் அவ்வல் மாதம் முழுவதும் வெலிகமையில் 60 இற்கும் மேற்பட்ட கந்தூரி நிகழ்வுகள் நடைபெறும். கந்தூரி வைபவங்களில் சிங்கள மக்களும் பங்குபற்றி அதற்கான உதவிகளை செய்தார்கள். இன்று சிலர் அந்நிகழ்வை ஷிர்க், பித்அத் என்று கூறி நிறுத்திவிட்டார்கள். இதனால் எமக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் நிலையேற்பட்டிருக்கிறது. முன்னர் வெலிகமையில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒன்றாகத்தான் பொதுவேலைகளைச் செய்து வந்தார்கள். ஆனால் இன்று அத்தகைய நிலைமைகள் இல்லை. மேலும் முஸ்லிம் சமூகத்தில் இன ரீதியான கட்சிகள் உருப்பெற்றதும் எமக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவுகள் தூரமாவதற்கு காரணமாய் அமைந்துள்ளது.

நாம் சிறியவர்களாக இருந்தபோது சுதந்திரக் கட்சியில் Islamic Socialist Front (ISF) இயங்கி வந்தது. ஐதேகவிலும் முஸ்லிம் லீக் செயற்பட்டு வந்தது. இவையிரண்டு அமைப்புக்களும் பிரதான இரு கட்சிகளுக்குள்ளாலேயே உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான கட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதுவரை காலமும் சிங்கள மக்களுக்கு தனித்துவமான கட்சிகள் இருக்கவில்லை. முஸ்லிம்கள் தனித்துவமான கட்சிகளை உருவாக்கியிருப்பதைப் பார்த்தே அவர்களும் தமக்கென தனித்துவக் கட்சிகளை உருவாக்கினர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கிழக்கு மாகாணம் போன்ற பிரதேசங்களுக்கு தனித்துவக் கட்சிகள் பொருத்தமெனினும் கண்டி, நீர்கொழும்பு, குருநாகல் போன்ற இதர பகுதிகளுக்கு இக்கட்சிகள் பொருத்தமில்லை. ஏனெனில் பெரும்பான்மைச் சமூகத்தோடு ஒட்டி வாழும் முஸ்லிம் மக்கள் இக்கட்சிகளை ஆதரிப்பது அவர்களுக்கே பிரச்சினையாக அமைந்துவிடும். இனவாதக் கட்சிகள் இனவிரிசலுக்கு வலிகோலிவிடும் என்பதே யதார்த்தம்.

1977ஆம் ஆண்டு பலாங்கொடை தொகுதியில் அபூ சாலிஹ் பெரும்பான்மை சிங்கள மக்களது வாக்குகளை பெற்று வெற்றியீட்டவில்லையா? பேருவலை தொகுதியில் ஐ.ஏ காதர் வெற்றிபெற வில்லையா? கொழும்பில் ஏ.எச்.எம். பௌசி வெற்றிபெறவில்லையா? இவர்கள் அனைவரும் சிங்கள மக்களது வாக்குகளையும் பெற்றதனா லேயே வெற்றியீட்டினர். இன்று ஒரு சிங்களவர் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க முடியாத ஒரு நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. அடிப்படையில் சிங்கள மக்கள் எம்முடன் கோப மில்லை. நாம் தான் அவர்களை தூரமாக்கி வைத்திருக்கிறோம். எமது சில நடவடிக்கைகளின் காரணமாகவே அவர்கள் எம்மை விட்டு தூரமாகியிருக் கிறார்கள். நான் யாரையும் குறைகூற வில்லை. ஆனால் யதார்த்தம் இதுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

முஸ்லிம் சமூகத்திற்கு நல்ல விடயங்களைச் செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. முஸ்லிம் சமூகம் நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டும். இதுவே முக்கியம். அண்மையில் இடம்பெற்ற 21/4 தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு முஸ்லிம் சமூகம் மிகப்பெரும் சோதனைகளுக்கு உட்பட்டது. வீட்டுப் பாவனைக்குக் கூட ஒரு கத்தியை வைத்துக்கொள்ள முடியாத நிலையேற்பட்டது. மையவாடிகளை துப்புரவு செய்வதற்கு பள்ளிவாசல்களில் வைக்கப்பட்டிருந்த வீச்சு அருவாக்களையும் கைப்பற்றிச் சென்றார்கள். சமுதாயம் அந்தளவக்கு முஸ்லிம்களை கீழ்த் தரமாக நோக்கியது. அப்போது தேர்தல் நெருங்கிய காலப்பகுதியாக இருந்தமையால் ஓரளவுக்கு எம்மைப் பற்றிக் கவனித்தார்கள். தேர்தல் என்றொரு விடயம் இடம்பெற்றிருக்காவிட்டால் எமது நிலைமை படுமோசமானதாக இருந்திருக்கும்.

 • இலங்கை முஸ்லிம் சமூகம் இவ்வாட்சி குறித்து எப்படியான நம்பிக்கைகளை வைத்திருக்க வேண்டும் என நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்?

முஸ்லிம்கள் இவ்வாட்சி தொடர்பில் எவ்வகையிலும் அச்சப்படத் தேவையில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் முஸ்லிம்களது விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். ஹஜ்ஜுடைய விடயத்தில் பிரதமர் அவர்கள் மேற்கொண்டிருக்கும் திட்டங்களை நோக்குகின்றபோது இதனை எமக்குப் புரிந்துகொள்ள முடியும். எனவே நாம் தொடர்ந்தும் ஐ.தே.க.வை மார்க்கமாகக் கொண்டு பின்பற்றிக்கொண்டிருக்காமல் நாட்டு நலனைக் கருத்திற் கொண்டும் சமூகத்தின் விடிவுக்காக வேண்டியும் எதிர்வரும் பொதுத் தேர்தலிலாவது ஆளும் தரப்புக்கு ஆதரவை நல்க வேண்டும்.

கடந்த 21/4 தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகம் எவ்வளவோ கஷ்டங்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டது. எம்மை நோக்கித் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் எம்மால் தனித்து நின்று பதிலளிக்க முடியாத நிலையேற்பட்டது. எனவே நாம் இணைந்து பயணிக்க வேண்டிய கட்டாய கடப்பாட்டில் உள்ளோம். இவ்வளவு காலமும் ஐ.தே.க.வை ஆதரித்ததால் சமூகத்திற்கு என்ன பெரிய இலாபம் கிடைத்துவிட்டது. எனவே எமது சமூகம் சிந்தித்து செயற்படும் பட்சத்தில் எமக்கு இந்நாட்டில் கண்ணியமாகவும் மற்ற சமூகத்துக்கு மத்தியில் கௌரவமாகவும் வாழ முடியும் என்பதே எனது கருத்து. 

 • இலங்கைச் சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாம் இந்நாட்டில் எப்படி மற்ற சமூகத்தவர்களோடு நடந்துகொள்ள வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

 ‘First Knowledge Best Knowledge’ என் பதாக எனது தாயார் அடிக்கடி சொல்வார். முதலில் என்னைப் பற்றி நான் அறிந்து கொள்ள வேண்டும். என்னால் 100 கிலோ சுமையை தூக்க முடியும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? இல்லை. ஏனெனில் என்னால் 10 கிலோவையேனும்  தூக்க முடியாது. அதுவே யதார்த்தம். எனவே எங்களைப் பற்றி அறிய வேண்டும். இந்நாட்டில் நாம் அரசியல் ரீதியாக சிறுபான்மை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் சிறுபான்மையாக இருந்து கொண்டு பெரும்பான்மையிடம் பங்கு கேட்டால் என்ன நடக்கும்? நாட்டில் எமக்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிவாசல்களை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதே. அதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். பல்வேறு கொலைக் குற்றச்சாட்டுக்களையும் ஊழல் குற்றங்களையும் சுமத்தினார்கள். ஆனால் கடந்த அரசாங்கக் காலப்பகுதியில் ஒருவரும் கைதுசெய்யப்படவில்லையே ஏன்? இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களை எல்லாம் ராஜபக்ஷ குடும்பத்தின் மீது சுமத்தினார்கள். ஆனால் அதன் விளைவை இன்று இவர்களே அனுபவிக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.

About the author

Administrator

Leave a Comment