பள்ளிக் கூடத்தின் பள்ளிப் பாடம்

34

இயான் மிஷ்அல்

இந்தியாவில் பாலியல் கல்வி தொடர்பான கதையாடல்கள் நடந்து கொண்டிருந்த போது வெளிவந்த தமிழ்த் திரைப்படமொன்றில் கமலஹாசனிடம் அவரது பள்ளிக் குழந்தை செக்ஸ் என்றால் என்ன அம்மா ? என்று வினவுகிறது. அதற்கு தந்தையும் தாயும் அடித்துப் பிடித்துக் கொண்டு திருமணம் ஆனது முதல் குழந்தை உருவாகும் வரையான எல்லா விடய்ங்களையும் அரை மணித்தியாலத்துக்கு மேலாக பிட்டுப் பிட்டு வைக்கிறார்கள். அத்தனையும் முடிந்த பின், பள்ளிக் கூடத்துல வழங்கிய போர்மிலே செக்ஸ் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு இத்தனை விடயங்களையும் எழுத வேண்டுமா என்று குழந்தை கேட்கிறது.

இந்தியாவில் பாலியல் கல்வி தொடர்பான கதையாடல்கள் நடந்து கொண்டிருந்த போது வெளிவந்த தமிழ்த் திரைப்படமொன்றில் கமலஹாசனிடம் அவரது பள்ளிக் குழந்தை செக்ஸ் என்றால் என்ன அம்மா ? என்று வினவுகிறது. அதற்கு தந்தையும் தாயும் அடித்துப் பிடித்துக் கொண்டு திருமணம் ஆனது முதல் குழந்தை உருவாகும் வரையான எல்லா விடய்ங்களையும் அரை மணித்தியாலத்துக்கு மேலாக பிட்டுப் பிட்டு வைக்கிறார்கள். அத்தனையும் முடிந்த பின், பள்ளிக் கூடத்துல வழங்கிய போர்மிலே செக்ஸ் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு இத்தனை விடயங்களையும் எழுத வேண்டுமா என்று குழந்தை கேட்கிறது.

பாலியல் கல்வி தொடர்பான நமது நிலைமை இப்படித்தான் இருக்கிறது. பாலியல் என்றவுடனேயே அது அதுதான் என்ற நினைப்புத் தான் பலருக்கும் வந்து விடுகிறது. அந்த வகையில் திருமண வாழ்க்கையையே வெறுத்தொதுக்கிய துறவிக்கு இந்த மாதிரியான நினைப்பு வருவது ஆச்சரியப்படக் கூடியதல்ல. இலங்கையில் இது தான் நடக்கிறது. ஒரு அதுரலியே ரதனஹிமி என்கின்ற துறவி விவாகச் சட்டம் பற்றிப் பேசும் பொழுது பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ ஹிமி எனும் துறவி பாலியல் கல்விப் பற்றிப் பேசும் வினோதம் யார் எதனைப் பேச வேண்டும் என்ற வரையறையைத் தாண்டிச் செல்கிறது. அதிலும் எடுத்ததையெல்லாம் அரசியலாக்கும் பிக்குக் கலாச்சாரம் பிக்குகளின் பாத்திரம் தொடர்பில் கேள்வியை எழுப்புகிறது.

கல்வி அமைச்சினால் 07 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கெனத் தயாரிக்கப்பட்ட ஹத்தே அபே பொத்த என்ற நூல் சர்ச்சைக்குரியதாக்க்கட்டிருப்பதை விளங்கிக் கொள்வதற்கு முதலில் பாலியல் கல்வி என்பதன் மூலம் நாடப்படுவது என்ன என்பது தொடர்பில் தெளிவு பெற வேண்டியிருக்கிறது. கலவியில் ஈடுபடுவதைச் சொல்லிக் கொடுப்பது தான் பாலியல் கல்வி என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொதுவான வழக்கில் சிறுவர் பாலியல் சுரண்டல் (Child Sex Exploitation – CSE) பற்றி சிறுவர்களுக்கு அறிவூட்டுவது தான் பாலியல் கல்வி எனப்படுகிறது. மேற்கு நாடுகள் தான் பெரும்பாலும் இந்தப் பகுதியினை தமது பாடசாலையின் பாடப்பரப்பில் உள்வாங்கியிருக்கின்றன. கிழக்கு நாடுகளில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தப் பட்டியலில் அடங்கினாலும் மலேஷியாவும் பங்களாதேஷும் மட்டுமே பாலியல் கல்வியை பாடத்திட்டத்தில் உள்வாங்கியிருக்கின்ற முஸ்லிம் நாடுகளாகக் காணப்படுகின்றன.

முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் இறுதிக் காலத்தில் இது வெளியிடப்பட்டது தான் பிக்குமாரின் எதிர்ப்புக்குக் காரணமாகியிருக்கிறது என்று தான் கருத வேண்டியிருக்கிறது. ஏனெனில் இலங்கையில் பாலியல் கல்வி தொடர்பில் மாணவர்களை அறிவூட்டுவது இது தான் முதல் சந்தர்ப்பமல்ல. பருவ வயதை அடைதல் தொடர்பான வழிகாட்டி நூலொன்று ஏற்கனவே 1990 களின் நடுப்பகுயில் உதாவூ யௌவனய (உதயமாகும் வாலிபப் பருவம்) என்ற பெயரில் 10 – 15 வயது வரையான மாணவர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. பருவ வயது மாற்றங்கள் தொடர்பில் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர பெண்கள் மற்றும் பாலினம் தொடர்பிலான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவினால் விரிவான பாலியல் கல்வி (Comperehensive Sexuality Education – CSE) தொடர்பிலான பாடத்திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஹத்தே அபே பொத்த, பருவ வயதை அடையும் போது ஏற்படும் உடல்ரீதியான, நடத்தை ரீதியான மாற்றங்களைப் பேசுகிறது. ஆண்களின் உடம்பில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிச் பேசுவது போல பெண்களின் உடம்பில் ஏற்படும் மாற்றங்களையும் அது பேசுகிறது. குறிப்பாக பெண்களின் மாதவிடாய் தொடர்பிலும், அதனைக் கையாளும் முறை தொடர்பிலும், குறித்த சந்தர்ப்பத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பிலும் இது தொடர்பான மூட நம்பிக்கைகள் பற்றியும் விளக்குகிறது. தூக்கத்தில் விந்து வெளியேறுதல், சுயஇன்பம் காணுதல் தொடர்பிலும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றுக்கு மேலாக இந்த வயதுக்கே உரித்தான குழூஉ உணர்வு, எதிர்ப்பால் கவர்ச்சி, தொற்றா நோய்களில் இருந்தும் அதிகமான உடற்பருமனில் இருந்தும் பாதுகாப்புப் பெறுவதற்கான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள், உடலுக்குத் தீங்கு தரும் புகைத்தல் உள்ளிட்ட போதைப் பொருட்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுதல், உடலைச் சுத்தமாக வைத்திருத்தல், பாலியல் சுரண்டலில் இருந்து பாதுகாப்புப் பெறுதல் போன்ற பல விடயங்கள் இந்த 27 பக்க நூலில் அடங்குகின்றன. கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடும்பச் சுகாதாரப் பணியகம், தேசிய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் ஆகியன இணைந்து இந்த நூலை தயாரித்திருக்கின்றன.

இலங்கையில் ஒவ்வொரு நான்கு மணித்தியாலங்களிலும் ஒரு கற்பழிப்புக் குற்றம் நடக்கிறது என முன்னாள் சப்ரகமுவ மாகாண ஆளுநர் ஜனாதிபதி சட்டத்தரணி மஹேஷ் பெரேரா 2017 இன் ஆடை மற்றும் வர்த்தக கண்காட்சி ஆரம்ப விழாவின் போது தெரிவித்திருந்தார். 2018 இல் 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட பெண்கள் மீதான 1196 கற்பழிப்பு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 248 முறைப்பாடுகள் பாதிக்கப்பட்டவரின் உடன்பாடின்றி நடந்தவைகளாகப் பதியப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் காரணம் பாலியல் தொடர்பிலான போதுமான அறிவின்மை என அரசாங்கம் கருதுகிறது. சிறுவர்கள் பாலியல் கல்வி பெற்றிருப்பதனூடாக பாதுகாப்பில்லாத பாலியல் செயற்பாடுகள், பதின்பருவ தாய்மை, தவறான பாலியல் செயற்பாடுகள் மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பில் அறிந்து கொள்ள முடிகிறது என முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிடுகிறார். எதிர்ப்பால் கவர்ச்சியும் காம உணர்வும் முறையாக வழிநடத்தப்படாவிட்டால் அது பாலியல் தொற்று நோய் (STD) வரை இந்த கட்டிளமைப் பருவத்தினரை இட்டுச் செல்கிறது என பாலியல் தொற்று நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரஸாஞ்சலி ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுக் காட்டுகிறார். சைல்ட் ப்ரொடக்ஷன் போஸ் ஸ்தாபகர் சட்டத்தரணி மிலானி சல்பிட்டிகோரல ஒருவாரத்தில் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களில் நான்கைந்து பேர் தமது பிள்ளைகளின் பிறப்பைப் பதிவு செய்வதற்காக வருகிறார்கள் என்று குறிப்பிட்டு, அவர்களில் பெரும்பாலானவர்கள் இது போன்ற செயற்பாடுகளினால் கர்ப்பமாவது தொடர்பில் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்கிறார்.

இந்த வகையில் சிறுவர் பாலியல் சுரண்டல் தொடர்பில் முன்னைவிட அதிகமாகவே தற்பொழுது அறிவூட்ட வேண்டியிருக்கிறது. முன்பைவிட இளவயதிலேயே பெண்கள் பூப்படைவதும், சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் வாயிலாகக் காணக்கிடைக்கின்ற மனதை விகாரப்படுத்தக் கூடிய காட்சிகள் இலகுவாகவும் அதிகமாகவும் கிடைப்பதாலும் பாடசாலைப் பருவத்திலேயே சிறார்களை விழிப்பூட்ட வேண்டியது அவசியமாகும் என கலாநிதி சுஜாதா கமகே தெரிவிப்பது நியாயமானது. இருந்தாலும் பாலியல் கல்வி என்ற பெயரில் பயிரை மேயும் வேலிகள் பற்றிய அச்சமும் சமூகத்தில் இல்லாமலில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டல் வழங்குவதாகக் கூறி தெரியத் தேவையில்லாத பல விடயங்களும் பிள்ளைகளுக்கு ஊட்டப்படுகின்றன. இவற்றையெல்லாம் தாண்டி பருவ மாற்றத்தினால் வரும் உள்ளக்கிளர்ச்சிகள் பற்றியும் உடல், உணர்வு மாற்றங்கள் பற்றியும் முக்கியத்துவம் கொடுத்து பாலியல் கல்வி போதிக்கப்படுவது பயனுள்ளதாக அமையும்.

இந்த நூலில் அடங்குகின்ற விடயமொன்று தொடர்பில் மேற்கோள் காட்டிய பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ ஹிமி, சில ஆண் மாணவர்கள் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள். இது சகஜமானது. ஆனால் இதற்கு அடிமையாகி மாணவர்கள் தமது படிப்பினை பாழாக்கிக் கொள்ளக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற விடயங்கள் எமது கலாச்சார விழுமியங்களுக்கு குந்தகம் விளைவிப்பவை. இந்தப் புத்தகம் கிடைத்த உடனேயே என்னுடைய பிக்கு மாணவர்களுக்கு இது கிடைக்கா வண்ணம் நான் பூட்டி வைத்திருக்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் இது பள்ளிக் கூடத்தில் தொழுகை அடவிலிருந்து சொல்லிக் கொடுக்கப்படும் பாடம். பல ஆரம்ப குர்ஆன் மத்ரஸாக்களிலும் சுத்தம் பற்றிய, தொழுகை பற்றிய பாடங்களில் இவைகள் எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. பாடசாலையின் இஸ்லாம் பாட நூல்களை வடிவமைத்தவர்களும் 07 ஆம் தர இஸ்லாம் பாடத்திலிருந்தே மதி,வதி, பெருந்தொடக்கு, சிறு தொடக்கு, ஜனாபத்து, முழுக்கு போன்றவை தொடர்பில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். மெதகொட அபயதிஸ்ஸ ஹிமி சுட்டிக் காட்டிய உரையாடலில் வரும் தூக்கத்தில் விந்து வெளியேறுதல் சம்பந்தமாக 09 ஆம் தரத்தில் மாணவர்களுக்கு ஜனாபத் என்ற பாடத்தின் மூலமாக விளக்கப்பட்டிருக்கிறது. ஸ்கலிதமாதல் என்ற சொல்லே மாணவர்களுக்கு சமய போதனைகளின் ஊடாக அறிமுகமாகிய ஒன்றுதான்.

இந்த வகையில் இந்த அறிவினை ஏனைய மாணவர்களும் பெற்றிருப்பது நல்லதாகவே அமைகிறது. ஆனாலும் பெண்கள் தொடர்பான விடயங்கள் இன்னும் கூடுதலாக அறிவூட்டப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அது ஹதே அபே பொத்தவில் உள்ளது போல இல்லாவிட்டாலும் மாதவிடாய் தொடர்பில் குழந்தை பெற்ற தாய்மாருக்கும் தெளிவில்லாத நிலையொன்று இருப்பதற்குக் காரணம் இது பற்றிய அறிவைப் பெறுவதற்கான இடம் கிடைப்பதில்லை என்பதாகும். புலமைப் பரீட்சைச் சுமைகளினால் மாணவர்கள் 08 அல்லது ஒன்பது வயதிலேயே குர்ஆன் பள்ளிகளில் இருந்து நின்று விடுகிறார்கள். ஆறாம் ஆண்டுக்குப் பின்னர் குறிப்பாக பெண்கள் மீண்டும் குர்ஆன் பள்ளிகளுக்குச் செல்வதில்லை. இதன் பின்னர் அவர்களுக்கு இவை தொடர்பிலான அறிவுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு. பாடசாலை பாடவிதானத்தில் உள்ளடக்குவதென்றால் கலவன் பாடசாலைகளில் இதனை எப்படிக் கற்பிப்பது என்ற பிரச்சினை. விஞ்ஞானப் பாடத்தில் வரும் இனப்பெருக்கத் தொகுதியையே கற்பிப்பதில் சங்கடங்களை எதிர்நோக்கும் ஆசிரியர்கள் இந்தப் பாடங்களைத் தவிர்க்கவே நினைப்பார்கள்.

ஆசியர்களில் பெரு்ம்பாலானவர்கள் பெண்களாகவே இருந்தாலும் அவர்களும் பாடப்புத்தகத்துக்கு மட்டும் தங்களை மட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். இஸ்லாம் பாடவிதானக் குழுவில் பெண்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து, இந்த விவகாரங்களை பாடநூல் மூலமாக எப்படி வழங்குவது என்று ஆராயலாம். பாடசாலை மாணவியர் தாயாக மாறும் சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்துக்குள்ளாலும் நடக்கின்றன. அந்த வகையில் நல்ல தொடுகை, மோசமான தொடுகை போன்ற விடயங்களும், மஹ்ரமியாக இருந்தாலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது தொடர்பிலான வழிகாட்டல்களும் பாடத்திட்டத்தினூடாக வழங்கப்பட முடியும். பெரும்பாலான பெற்றோர்களும் பாலியல் தொ்டர்பிலான விடயங்களை தமது பிள்ளைகளிடம் கலந்துரையாடுவதில் சங்கோஜப்படுவதுண்டு. குறிப்பாக தந்தையர். அவர்களுக்கும் இது போன்ற நூல்கள் ஆறுதலாக அமையும்.