Features நேர்காணல்

“இன ரீதியான கட்சி என்கின்ற வாதம் அடிப்படையிலேயே ஒரு பிழையான கருத்து”

Written by Administrator

ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் – பொதுச்செயலாளர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

  • ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான அரசியல் சூழ்நிலையை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரித்த வேட்பாளர் தோல்வியடைந்தார். நாம் யாருமே எதிர்பாராத மிகப்பெரிய பெரும்பான்மை பலத்துடன் தற்போதைய ஜனாதிபதி வெற்றிபெற்றிருக்கின்ற யதார்த்தத்தை நாம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். ஏனெனில், சிறுபான்மைகள் ஒட்டுமொத்தமாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்தனர். ‘நிச்சயமாக எமது வேட்பாளர் வெற்றி பெறுவார், அவர் வெற்றி பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும் கூட ஒரு மிகவும் குறைந்த இரண்டாவது முறை வாக்கெண்ணும் நிலவரத்துக்கு வரலாம்’ என்கின்ற பார்வையே எல்லோரிடத்திலும் இருந்தது.

இங்கு மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது வாக்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்குக் கிடைக்கலாம், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்குகள் குறையும் பட்சத்தில் அந்த வாக்குகளை ஹிஸ்புல்லாஹ் பெற்றுக் கொடுப்பார் என்கின்ற கற்பனையிலேயே எல்லோரும் இயங்கினார்கள்.

ஆனால் யாருமே எதிர்பாராத வண்ணம் பாரியதொரு அமைதிப் புரட்சி சிங்கள மக்களுக்கு மத்தியில் நிகழ்ந்தது. கடும்போக்கு சிங்களவாதிகளின் வழிகாட்டலில் ‘ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒட்டுமொத்தமாக இந்த நாட்டை சிங்கள பௌத்த மக்களிடமிருந்து அழித்து விடுவார், சிங்கள பௌத்த கலாசார பின்னணியை அழித்து விடுவார், சிறுபான்மைக்கு அடிபணிந்து விடுவார், முக்கியமாக ஈஸ்டர் தாக்குலுக்குப் பிற்பாடு இஸ்லாமிய பயங்கரவாதமொன்று உருவாக்கப்படுகின்ற சூழ்நிலையில் தங்களுடைய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் வரும், அதைத் தடுக்கக் கூடிய சக்தியுள்ள ஒரேயொரு மனிதர் கோட்டாபய ராஜபக்ஷதான், அவரை நாங்கள் அதிகாரத்திற்கு கொண்டு வந்தால் மாத்திரம்தான் தங்களுடையதும், தங்களுடைய பிள்ளைகளுடையதும், தங்களுடைய எதிர்கால சந்ததியினருடையதும் அடிப்படையான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்’ என்கின்றதொரு சிந்தனையில் இவர்கள் எழுந்திருந்த விடயத்தை நாங்கள்  யாருமே அறிந்துகொள்ளாமல் போய்விட்டோம்.

முக்கியமாக ஆளும் பிரதான கட்சியான ஐ.தே.க. இது சம்பந்தமான தெளிவான ஒரு பார்வையை கொண்டிருக்கவில்லை என்பது எமக்கு விளங்குகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். இதையே நாம் அடிப்படை விடயமாகக் காண்கிறோம்.

  • எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸூடன் சேர்ந்து போட்டியிடுவது சம்பந்தமான கருத்துக்கள் சமூக மட்டத்தில் நிலவி வருகிறது. இது சம்பந்தமாக உங்களுடைய நிலைப்பாடு என்ன?

இது சம்பந்தமாக நாம் எந்தவொரு இறுதி முடிவுக்கும் வரவில்லை. சில பிரதேசங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் கேட்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடும், சில பிரதேசங்களில் ‘அப்படிக் கேட்கக்கூடாது, அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குத் தான் சாதகமாக அமையும்’ என்றதொரு கருத்தும் ஒன்றுக் கொன்று முரணானவாறு இருக்கின்றது. ஆனால் ஒட்டுமொத்தமாக இங்கிருக்கும் சூழ்நிலையில்         சிறுபான்மைகள் முகம்கொடுக்கின்ற சவால்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் என்கின்றதொரு பாரிய கோஷம் இருந்து வருகிறது. அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்று மாத்திரமல்ல. ஒட்டுமொத்தமாக எல்லா முஸ்லிம்களும் முஸ்லிம்களுடைய தாய் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்று சேர்ந்து இந்தத் தேர்தலில் முகம்கொடுக்க வேண்டும் என்கின்ற கோஷமும் வலுத்து வருகின்றது.

விசேடமாக வடகிழக்கை பொறுத்தவரையில் தமிழ் பேசுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஒட்டுமொத்தமான சவால்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம். இது குறுகிய 2020, 2025 ஆண்டுகளுக்கு மாத்திரமானதல்ல. பத்து வருடங்களாகக் கூட  இந்த ராஜபக்ஷ ஆட்சி இருக்கலாம். அதற்கிடையில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளும், அவர்களது அடிப்படை அரசியல் உரிமைகளும் இல்லாமல் ஆக்கப்படலாம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்ளப்பட்டால் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அரசியல் ரீதியாக தங்களுடைய பிரதிநிதித்துவத்தை கூட பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படலாம் என் கின்றதொரு சவாலான சூழல் காணப்படுகின்றது.

ஆகவே நாங்கள் இயன்றவரை எல்லா சிறுபான்மை மக்களையும் ஒன்றிணைத்து அதுவும் தமிழ் பேசுகின்ற வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றாக இந்தப் பொதுத் தேர்தலில் முகம்கொடுக்க வேண்டும். வடகிழக்கிற்கு வெளியே உள்ள தமிழ் பேசுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களும் கூட முடிந்தளவு ஒரு சிங்கள சக்தியுடன் சேர்ந்து இந்தத் தேர்லில் முகம்கொடுத்து எங்களது பிரதிநிதித்துவத்தை கூட்டிக் கொள்ள வேண்டும் என்கின்றதொரு கோஷமும் உள்ளது.

  • ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது எதிர்கால அரசியல் திட்டங்களை எவ்வகையில் முன்னெடுக்கவுள்ளது?

என்னுடைய முன்னைய பதிலில் இது தொடர்பான கருத்துக்களைக் கூறியுள்ளேன். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் எமது உச்சபீடம் கூடி இது சம்பந்தமாக ஆராயும் என்றே கூற முடியும். எல்லா மாவட்டங்களிலும் உள்ள அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து தேவையேற்படும் பட்சத்தில் அந்தந்தப் பிரதேசங்களுக்குச் சென்று தலைமைத்துவமும் கட்சியும் அமைப்பாளர்களும் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி ஒரு முடிவெடுப்பது உகந்ததென்று நான் நினைக்கிறேன்.

  • இன ரீதியான கட்சிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றதொரு சூழலில் தேசிய நல்லிணக் கத்துக்காக வேண்டி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துள்ள மூலோபாயங்கள் என்ன?

தேசிய நல்லிணக்கம் என்பது எமது முழு மூச்சான பிரதான கொள்கையாகும். இன ரீதியான கட்சி என்கின்ற வாதம் அடிப்படையிலேயே ஒரு பிழையான கருத்து. ஏனென்றால், பெரும்பான்மை மக்கள் சிறுபான்மைகளை ஒடுக்குவதற்கான அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போது        சிறுபான்மைகள் தங்களது அரசியல், சமூக ரீதியான உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு தங்களுக்குள் ஒரு ஒற்றுமையைக் கொண்டு வந்து தேசிய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒன்றுபட்டு நிற்கின்ற போது,  அதில் வெறுமனே இவர்கள் இன ரீதியான அரசியல் பேசுகிறார்கள் என்று கூறுவது ஒரு நியாயமில்லாத கருத்தாகும்.

நாம் ஆரம்பத்திலிருந்து கூறி வருவது என்ன வெனில், எல்லா இனங்களுக்கும் சமத்துவம் கிடைக்கின்றதொரு சூழ்நிலை என்பது இலங்கையர் (ஸ்ரீ லங்கா) என்கின்ற அடையாளத்தை கொண்டு வருவதன் மூலமே சாத்தியப்படும். அதாவது இந்த நாட்டின் தேசிய அடையாளத்தை தூக்கி நிறுத்த வேண்டுமெனில், நாட்டினை அடிப்படையாகக் கொண்ட அடையாளத்தின் மூலமே முடிகிறதே ஒழிய நாட்டுக்குள் வாழ்கின்ற இனங்களைப் பொறுத்து வருகின்ற அடையாளங்களால் அல்ல.

மறைந்த முன்னாள் தலைவர் அஷ்ரப் அவர்கள் இக்கட்சியை உருவாக்கிய போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கின்ற வசனத்தை பாவித்ததும் கூட இந்நாட்டிற்குள் வாழ்கின்ற சகல இன மக்களும் ஸ்ரீ லங்கா என்றதொரு அடையாளத்தின் அடிப்படையில் ஒன்றாக வாழவேண்டுமென்ற அவாவின் பேரிலாகும். ஆகவே எங்களைப் பொறுத்தவரையில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை என்பது இந்த நாட்டுடன் சேர்ந்த அடையாளங்கள் மற்றும் எல்லா இனங்களுக்கும் சமமான அந்தஸ்து வழங்கும் அடையாளத்தில் தான் தங்கியிருக்கிறது என்பதாகும். 

  • ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அடுத்த கட்ட அரசியல் செயற்பாடுகளில் முஸ்லிம் அரசியல் தலைமைகள், சிவில் சமூக அமைப்புக்களுடனான கலந்துரையாடல்களை எவ்வகையில் முன்னெடுத்துச் செல்கின்றது?

நாம் பல்வேறு மட்டங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றோம். இன்றும் கூட (19.01.2010) எமது உச்சபீடம் கூடுகிறது. அதன் பின்னர் சிவில் சமூக அமைப்புக்கள், கிராம மட்டங்களில் உள்ள கட்சியின் அமைப்பாளர்கள், பள்ளிவாசல்கள், புத்திஜீவிகள், வெவ்வேறு துறைகளில் உள்ள மக்களுக்கு மத்தியில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் மூலம் நாம் எப்படி ஒற்றுமையாக இருந்து எமது பிரதிநிதித்துவத்தை முடிந்தளவு உயர்த்திக்கொள்வது என்பது பற்றி நிச்சயமாக சிந்திப்போம்.

  • எதிர்வரும் பொதுத் தேர்தலில் கடந்த தேர்தல்களை பார்க்கிலும் கூடுதலான ஆசனங்களை பெறக்கூடிய நிலைமைகள் காணப்படுகின்றதா?

ஆம். உண்மையாக கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை உள்ளது. ஏனெனில் வெளியில் சொல்லாவிட்டாலும் கூட சிறுபான்மைகள் மத்தியில் ஒரு பீதி ஏற்பட்டுள்ளது. அதாவது எங்களுடைய சமூக அடையாளத்தை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டு ஒரு வெறுமனே கலாசார ரீதியாக இன்னுமொரு இனமாக இருந்துவிட்டு போகுங்கள் என்றொரு கோஷமே இன்று பெரும்பான்மை அரசியல் வாதிகளிடம் காணப்படுகின்றது.

மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கும் போது அன்று நாட்டில் காணப்பட்ட அதே அரசியல் சூழ்நிலைதான் இன்றும் காணப்படுகின்றது. ஆகவே மக்கள் இதனைப் புரிந்துகொண்டுள்ளார்கள். ஆகவே நாம் ஒற்றுமையாக இந்தத் தேர்தலுக்கு முகம்கொடுத்து எங்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்ற அவா எல்லோரிடத்திலும் காணப்படுகிறது. அதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பங்களிப்பை நியாயமாகச் செய்யும் என்று நான் நம்புகின்றேன்.

  • இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் தீர்மானத்தில் உள்ளதா? இல்லாவிட்டால் தனித்துப் போட்டியிட்டு ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டுச் சேரும் முடிவில் உள்ளதா?

இது தொடர்பாக எவ்வித இறுதித் தீர்மானங்களும் எட்டப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற தலைமைத்துவப் பிரச்சினையை அவர்கள் கூட்டாகச் சேர்ந்து வெற்றிகரமாக அதை செய்துகொண்டால் எங்களுக்கு அது நன்றாக இருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாக எங்களை நேசிக்கின்ற சிறுபான்மையை சமமாகப் பார்க்கின்ற ஒரு பெரும்பான்மை அணியுடன் சேர்வது தான் சிறந்தது. ஆனால் எமது தேர்தல் வியூகம் அந்த நேரத்தில் இருக்கின்ற சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். இப்பொழுது அதைப் பற்றிச் சொல்வது கடினமாக இருக்கும்.

  • இலங்கை வரலாற்றில் அடிமைச்சரவையில் ஒரு முஸ்லிம் இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. இது பற்றி நீங்கள் குறிப்பிட விரும்புவது என்ன?

இது பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். தமிழ் மக்கள் கபினட் அந்தஸ்து இல்லாமலேயே அவர்கள் தங்களது விடயங்களைச் செய்திருக்கிறார்கள். நாட்டின் கபினட்டில் பெயரளவுக்குக் கூட எல்லா இனங்களையும் பிரதிபலிக்க முடியாத சூழலை ஏற்படுத்தியிருப்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவர்கள் தான். நாங்களல்ல. ஆகவே அவர்களுடைய இயலாமையையே இது காட்டுகின்றது.

  • இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு நீங் கள் கூற வரும் செய்திகள் என்ன?

முதலாவது விடயம், எதிர்கால தசாப்தம் என்பது மீண்டும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஒரு பாரிய சவாலாக அமையும். ஆகவே மக்களுக்கு நான் வழங்கும் முதலாவது கருத்துதான் நாங்கள் எவ்வளவுதான் எங்களுக்குள் கசப்பான அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் கூட அதை மறந்து விட்டு நாங்கள் ஒன்றாக இந்த அரசியல் சவால்களுக்கு முகம்கொடுக்கத் தயாராக வேண்டும். அரசியல் ரீதியில் சிறுபான்மை இனங்கள் ஒன்றுபட வேண்டும் என்ற விடயமும் முஸ்லிம்கள் முக்கியமாக ஒன்றுபட்டு இயங்க வேண்டும் என்ற விடயமும் மிக முக்கியமானது என்பதையே நான் கூற வருகின்றேன்.

About the author

Administrator

Leave a Comment