Features அரசியல் சிறப்புக்கட்டுரைகள்

அரசியல் வைரசும் வைரஸ் அரசியலும்

Written by Administrator

இப்கார் ஃபயூமி

கொரோனா வைரஸ் இலங்கை உள்ளிட்டு 18 நாடுகளைத் தாக்கியுள்ள நிலையில் சீனாவின் வுஹான் நகரமெங்கும் மரண ஓலங்கள் காற்றில் கலந்து மறைகின்றன. 1987 இற்குப் பின்னர் மனித குலம் அறிந்திராத எத்தனையோ ஆட்கொல்லி வைரஸ், மனித இனத்திற்கு சவால் விடுக்கிறது. நுண்ணங்கிகளிலேயே மிகவும் ஆபத்தானது வைரஸ் தான். HIV, எபலோ, ஸிகா என்று ஒரு நீண்ட பட்டியலில் இன்று கொரோனா.

எப்படித் தோன்றியது, யார் உருவாக்கினார்கள், ஏன் தோன்றியது, தன்னியல் பாகத் தோன்றியதா, இல்லை, மனித நாசகாரர்களால் தோற்றுவிக்கப்பட்டதா, இவ்வளவு வேகமாகப் பரவி சீனர்களைக் கதிகலங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் குறித்து எத்தனையோ மர்மங்கள் மறைந்து கிடக்கின்றன. (இது பற்றி பின்னர் ஒரு தனிக்கட்டுரையில் பார்க்கலாம்.)

இலங்கையின் இன்றைய அரசியல் செல்நெறிகளும் சுமாராக ஒரு வைரஸ் தாக்குதல் போலவே நகர்கின்றன. இங்கே என்ன நடக்கிறது, அது ஏன் நடக்கிறது, பின்னால் இருப்பவர்கள் யார் என்ற கேள்விகள் மர்மங்கள் நிறைந்ததாகவே தொடர்கின்றன.

ரன்ஜன் வைரஸ், ரணில் வைரஸ், தயாசிறியின் இனவாத வைரஸ், மத்திய வங்கி பிணைமுறி குறித்த தடவியல் அறிக்கை வைரஸ் என இலங்கையைப் பீடித்துள்ள வைரஸ் புரியாத புதிராகவும் விடையற்ற கேள்விகளாகவுமே தொடர்கின்றன. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின்போது அனல் பறக்க விவாதிக்கப்பட்ட மத்திய வங்கி பிணைமுறி மோசடி தடயவியல் அறிக்கை இப்போது வெளிவந்துள்ளது.

இலங்கையின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத் துறை வீழ்ச்சிக்கும் காரணம் மத்திய வங்கி பிணைமுறி மேசாடிதான். அதில் ஈடுபட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியாளர்கள்தான் என்று சிங்கள மக்களை நம்பவைத்த மஹிந்தவும் அவரது பக்தர்களும் தடயவியல் அறிக்கைக்குப் பின்னர் அமைதியடைந்து விட்டனர்.

இந்த அறிக்கையின்படி 2015 இற்குப் பின்னரான பிணை மோசடி 689 மில்லியன் டொலர்கள் மட்டுமே. ஆனால்,  2005 – 2015 வரையான பத்தாண்டுகளில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியின் மொத்தப் பெறுமதி 10457 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். திருடர்களும் கொள்ளையர்களும் இரு பக்கத்திலும் உள்ளனர் என்பதை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாத் கப்ரால் மற்றும் தற்போதைய பிரதமரும் இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் அமரசேன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமை கவனிப்புக்குரியது.

ஆக, அர்ஜூன மஹேந்திரனை ஆளுனராக்கி 689 மில்லியன் பணத்தை மோசடி செய்த ரணில் எப்படி ஒரு குற்றவாளியாக நிறுத்தப்பட முடியுமோ 2015 இற்கு முன்னரான ஆட்சியாளர்களும் அவ்வாறே குற்றவாளிகளாய் நிறுத்தப்பட வேண்டும் என்கிறார் இந்துநில். தடயவியல் ஆய்வறிக்கை கட்சி சார்பற்றது, சுயாதீனமானது என்பதால் மஹிந்த பக்தர்களும் சற்று அதிர்ந்தே போயுள்ளனர். தேர்தலின்போது வைரஸ் போல் பரவிய பிணைமுறி மோசடி விவகாரம் தேர்தலின் பின் அப்படியே அடங்கிப் போனதன் மர்மம் துலங்கத் தொடங்கியுள்ளது.

ரன்ஜனைக் கைதுசெய்ய முடிந்த அரசாங்கத்தால் ரணிலை ஏன் கைதுசெய்ய முடியாமல் போனது என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைக்கிறது. கடந்த கால அரசாங்கமோ சட்டமா அதிபரோ குற்றவாளிகளுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யாமல் விஷயத்தை சொதப்பி வந்தனர். கோத்தா ஜனாதிபதி ஆனதும் கோப்பு மேலே வரும் என்ற மக்கள் எதிர்பார்ப்பும் தகர்ந்து போனது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் கோப் குழுவின் தலைவருமான டியூ குணசேகர “அர்ஜூன் மஹேந்திரனுடன் மேற்கொள்ளப்பட்ட குறுக்கு விசாரணையின்போது அவர் சாட்சியமளிக்கையில், “இந்த நடவடிக்கையை மத்திய வங்கியின் பொறுப்பாளராக இருந்த அமைச்சரான ரணிலின் ஆலோசனையின் பேரிலேயேதான் மேற்கொண்டதாகத் தெரிவித்திருந்தார்” என சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் குறிப்பிட்டிருந்தார். இது கோப் அறிக்கையில் பதிவாகியுள்ளது என்றும் கூறியிருந்தார். அவ்வாறெனில் ஏன் ரணிலும் ரவியும் இதுவரை கைதாகவில்லை, விசாரிக்கப்படவில்லை. ஆக பிணைமுறி மோசடி விவகாரம் இன்னும் கொரோனா வைரஸ் போல மர்மமாகவே நீடிக்கின்றது. இரண்டு அரசாங்கமும் குற்றவாளிகள். ஆனால், யாரும் குற்றவாளிகள் இல்லை என்பது போலவே தடயவியல் ஆய்வறிக்கை நீள்கிறது.

உண்மையான குற்றவாளிகள் ரவியும் ரணிலும் அர்ஜூன மஹேந்திரனும்தான் என்றால் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் முகவர்கள் ஏன் தயங்குகின்றனர், அச்சமடைகின்றனர்? உடனே அவர்களைக் கைதுசெய்து விசாரணைகளைத் தொடங்க வேண்டியதுதானே? அது இங்கே நடக்காது. இலங்கையர்களை முட்டாளாக்கும் அரசியல்வாதிகளிடம் உள்ள ஒரே பேராயுதம் இழுத்தடிப்பு. அதுதான் இங்கேயும் நடக்கிறது.

ரன்ஜன் வைரஸ்

தனது பாதுகாப்புத் துப்பாக்கியின் அனுமதிப் பத்திரத்தை உரிய காலத்தில் புதுப்பிக்கவில்லை என்ற குற்றச் சாட்டில் வன்ஷொட் (One shot) புகழ் ரன்ஜனைப் பொலிஸார் கைதுசெய்தனர். பின்னர் அவரிடம் காணப்பட்ட குரல் பதிவு இறுவட்டுக்கள் பல கைப்பற்றப்பட்டதாக பரபரப்பான தகவல் வெளியானது. அதில் நீத்துறை சார்ந்தோர் உள்ளிட்ட பல பிரபல்யங்களின் குரல்கள் – ரன்ஜனிடம் தொலைபேசியில் உரையாடும் குரல்கள் – பதிவாகியுள்ளதால் ஊடகங்களில் பெரும் கதையாடலைக் கட்டவிழ்த்தன. நீதிபதிகளின் குரல் பதிவுகள் பெரும் சர்ச்சையைக் கிளறின. இதனால் பிரதம நீதியரசரும் சட்டமா அதிபரும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் அறிவித்தார்.

வுஹானாவில் கொரோனா வைரஸ் பரவிய வேகத்தை விட இலங்கையில் ரன்ஜன் வைரஸ் பரவிய வேகம் அமோகம்! இப்போது அந்தப் புஷ்வாணம் அமைதியாகிவிட்டது. கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் நீதித்துறை செயற்பட்ட விதத்தைக் கேள்விக்குறியாக்குவதன் மூலம் பழைய திருடர்களையும் கொள்ளையர்களையும் குற்றங்களிலிருந்து விடுவித்துப் புனிதர்களாக்குவதே ரன்ஜன் நாடகத்தின் உள்நோக்கம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இதுவும் கொரோனா வைரஸ் போல இலகுவில் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.

நாட்டில் மரக்கறி உள்ளிட்டுப் பெற்றோலியத்தின் விலை உயர்வை மக்கள் மனத்திலிருந்து மறைப்பதற்கு அவ்வப்போது இத்தகைய வைரஸ்கள் கண்டு பிடிக்கப்படுகின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும். இன்னும் சில நாட்களில் ரன்ஜன் விடுவிக்கப்படுவார். அத்துடன் அந்த வைரஸ் மறைந்துபோய்விடும்.

ரணில் வைரஸ்

இந்நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியை மட்டுமன்றி முழு நாட்டையும் பீடித்துள்ள இன்னொரு கிழட்டு வைரஸ், ரணில் வைரஸ் என்று துணிந்து கூறலாம். கிழடு தட்டியும் இந்த வைரஸின் வீரியம் குறையவில்லை என்பது சஜித் விசுவாசிகளுக்குப் பெரும் தலையிடியாக மாறியுள்ளது. சமீபத்திய செயற் குழுக் கூட்டங்களும் ஊடகங்களில் பெரிதாகக் கவர் பண்ணப்படுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஏனெனில், முன்பை விட அவருக்கு எதிரிகள் ஜாஸ்தி என ஸஹ்ரான் குழுவுக்கு ஊதியம் வழங்கியதாகத் தொலைக்காட்சி விவாதத்தில் ஒப்புக்கொண்ட கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தமை கவனிப்புக்குரியது. அப்பாடா! ரணில் மீது மஹிந்த அணிக்கு எத்துணை அக்கறை! எவ்வளவு கரிசனை! இதுதான், இதற்குப் பெயர்தான் அரசியல் சந்தர்ப்பவாதம். பிணைமுறி மோசடியின் பிரதான குற்றவாளிக்கு மஹிந்த அரசு பாதுகாப்பா? ஏன்? ஏனெனில், ரணில் இப்போது மஹிந்த அணிக்குத் தேவையானவர்.

அவர் பதவியில் நீடிக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சி உருப்படாது. உருவழிந்து சிதையும். உடைந்து பிரியும். அதன் உடைவும் வீழ்ச்சியும் அடுத்த கட்டத் தேர்தலில் மஹிந்தவுக்கு மூன்றில் இரண்டைப் பெற்றுக்கொள்ளக் களமமைக்கும். அதனால், இப்போது ரணில் ஆளுங்கட்சியின் செல்லப் பிள்ளை.சாகும் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி அவருக்கே என்று அடித்துச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். சஜித் அணி பிரியவும் முடியாமல் சேரவும் முடியாமல் திண்டாடுகிறது. இலங்கையின் சமகால அரசியல் நெருக்கடிகள் பல ரணில் வைரஸிலிருந்தே பரவியது என்பதை சற்று ஆழ்ந்து நோக்கினால் புரிந்து கொள்ள முடியும்.

தயாசிறியின் இனவாத வைரஸ்

தயாசிறி குருனாகல் மாவட்ட மேடைப் பாடகர். அரசியல் நடிப்பில் வித்தகர். எப்படியோ மைத்திரியின் வாலைப் பிடித்து சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியைப் பறித்துக் கொண்டவர். 2019 முஸ்லிம்களுக்கெதிரான இனக்கலவரம் குருனாகல் பகுதியில் இடம்பெற்றபோது கலவரத்தில் ஈடுபட்ட வன்முறைக் கும்பலைத் தனது சொகுசு வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றிச் சென்று தப்பிக்கச் செய்தவர். ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்தே போட்டியிடும் என்று இறுதி வரை வாய்ச்சவால் விடுத்து விட்டு இறுதித் தருணத்தில் மஹிந்தவுக்குக் குடைபிடித்து இன்று இராஜாங்க அமைச்சர் பதவி பெற்றவர்.

அவர் சமீபத்தில் கிழக்கு மாகாணத்தில் கருத்துத் தெரிவித்த போது நல்ல நேரத்திற்கு அங்கு ஹக்கீம் ஆதரவாளர்கள் யாரும் இருக்கவில்லை. அவர் கல்லெறிபட்டிருப்பார். தப்பி விட்டார். “பொதுத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் அரசாங்கத்தில் ஹக்கீமோ மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாதோ இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் இனவாதத்துடன் செயற்படுவார்கள்”. ஹக்கீம், றிஷாத் ஆகிய பச்சத் தண்ணித் தலைவர்கள் குறித்து முஸ்லிம் சமூகத்தினுள்ளே காரசாரமான விமர்சனங்கள் உண்டு. அது வேறு விவகாரம். ஆனால், தயாசிறி இனவாதத்தைச் சாடும் ஒரு ஜனநாயக வாதியாகத் தன்னை நிலைநிறுத்துவது தான் பெரிய வேடிக்கை.

கடந்த தேர்தலில் நூறு வீதம் இன வாதத்தை மூலதனமாகக் கொண்டு அதிகாரத்தை வசமாக்கிக் கொண்டவர்களின் அணியில் முஸ்லிம் விரோதப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்த தயாசிறி போன்றவர்கள் இனவாதம் குறித்துக் கதைக்க என்ன அருகதையுள்ளவர்கள்? குளியாப்பிட்டியில் அப்பாவி முஸ்லிம்களைக் காடையர் கும்பல் தாக்கியபோது தனது இனத்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக காடையர்களைத் தனது சொகுசு வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பு வழங்கிய இனவாதி யார் என்பதை இந்த நாடே அறியும்.

சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த சிங்களத் தலைவர்கள் கடைப்பிடித்த பேரின வாதக் கொள்கைகளும் அணுகுமுறைகளுமே வடக்கு, கிழக்கில் இனரீதியான கட்சிகள் உருவாவதற்குக் காரணமாயின் என்ற வரலாற்றை தயாசிறி படித்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவர் ஒரு பாடகர். ஆனால், இன்று முஸ்லிம் விரோத, தமிழ் விரோத மனப்பாங்கைப் பெரும்பான்மை இனத்தவர்களிடையே கட்டியெழுப்பும் இனவாதிகளே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை அவர் அறியாமல் இருக்க எந்த வாய்ப்பும் இல்லை.

இன்றைய நாட்களில் முஸ்லிம் காங்கிரஸூம் மக்கள் காங்கிரஸூம் அவசியம்தானா என்ற விவாதம் இங்கு நீண்டு செல்கிறது. அது முஸ்லிம்கள் தீர்மானிக்க வேண்டிய விவகாரம். தயாசிறியோ கம்மன்பிலவோ வீரவன்ஸவோ இனவாதம் என்ற சொல்லைக் கையாளும் தகுதி மண்ணளவும் பெறாதவர்கள். இந்த நாட்டையே பீடித்துள்ள மிகப் பெரும் சாபக்கேட்டு வைரஸ் இனவாதம் தான் என்பதை இனிவரும் நாட்கள் இன்னும் தெளிவாகவே எமக்குச் சொல்லும்.

சீனா வைரஸ்

வுஹானில் பரவியுள்ள கொரோனா வைரஸ் அங்குள்ள இலங்கையர்களைப் பாதித்துவிடுமோ என்ற அச்சம் இலங்கையில் வைரலாகப் பரவி வந்தது. இலங்கைக்குள் ஊடுருவும் சீனர்களால் இலங்கைக்கு ஆபத்து வந்துவிடும் என்ற எச்சரிக்கை எல்லாத் தரப்பாலும் விடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் சீனர்களின் மீது பயணத் தடை விதித்தது. ஆனால், இன்று வரை இலங்கை அரசு சீனர்களின் மீது பயணத் தடை விதிக்கவில்லை. அவ்வாறு விதிப்பதற்கு அது தயாராகவுமில்லை. மறுதலையாக அத்தகைய பயணத்தடை மூலம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது என்று நியாயப்படுத்தல் வேறு.

யதார்த்தத்தில் சீனாவைப் பகைத்துக் கொள்ளும் எந்த முடிவையும் இலங்கைத் தலைவர்கள் எடுக்க மாட்டார்கள். ஏன் என்பது தெரிந்த விடைக்கான கேள்விதான். உலகில் ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது 80 சதவீதம் இறக் குமதியில் தங்கியுள்ளதென்றால் அது இலங்கையும் சீனாவாகவும் தான் இருக்க முடியும். ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், மத்தளை விமான நிலையம், கொழும்புத் துறைமுக நகரம், உள்நாட்டு 28 பாரிய திட்டங்களில் இலங்கையில் சீனா முதலீடு செய்துள்ளது. இதற்கென 7671 கோடியை கடனாக வழங்கிள்ளது.

இலங்கையின் கீழ்க்கட்டுமானப் பணிகளில் சீன ஊழியப்படை நேரடியாகவே களமிறங்கியுள்ளது. 99 ஆண்டுகளுக்கு ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் குத்தகைக்குப் பெற்றுள்ளது. இந்து சமுத்திர மஹா நீர்ப்பரப்பில் சீனா அமுல்படுத்திவரும் முத்துமாலை மூலோபாயத் திட்டத்திற்குள் (String of Pearl Strategy)  இலங்கை எப்போதோ இழுக்கப்பட்டு விட்டது. ஆக, கொரோனா வைரஸ் இலங்கையைத் தாக்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே சீன வைரஸ் இலங்கைக்குள் ஊடுருவி பெரும் விஷ்வரூபம் எடுத்து வருவதை 752 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த நாட்களிலேனும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்பாடி! எத்தனை வைரஸ்கள்!! எத்தனை மர்மங்கள்!! எத்தனை விசித் திரங்கள்!!! நமது அரசியல் வெளியில் எந்த வைரசுக்கும் இனிப் பஞ்சமில்லை.           

About the author

Administrator

Leave a Comment