சிந்திக்க வேண்டிய நேரம்

15

அப்துல்லாஹ் மர்லின்

இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்றாலும் கூட இந்நாட்டில்       நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கின்றனர். அதாவது இஸ்லாம் மார்க்கம் அருளப்பட முன்னரே அரபுக்கள் இங்கு வந்து சென்றுள்ளதாகவும் சிலர் தங்கி வாழ்ந்துள்ளதாகவும் வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. குறிப்பாக புராதன காலம் தொட்டே அரபுக்கள் இலங்கையுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாகவும் அதாவது இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் வரை கடல் பயண வாணிபத்தில் ஈடுபட்டபோது அவர்கள் இங்கு தரித்து சென்றுள்ளதாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன.

ஆன போதிலும் இந்நாட்டு முஸ்லிம்கள் ஆரம்ப காலம் தொட்டு பெரும்பான்மையின ஆட்சியாளர்களுடனும், மக்களுடனும் மிகவும் நெருக்கமாகவும் நட்புடனும் இணைந்து செயற்பட்டுள்ளனர். சக வாழ்வுடனும் புரிந்துணர்வுடனும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அதனால் இந்நாட்டு மக்களதும் மன்னர்களதும் அன்புக்கும் மரியாதைக்குரிய சமூகமாக முஸ்லிம்கள் விளங்கி வந்திருக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியில் தான் பராக் கிரமபாகு மன்னரது அமைச்சரவையில் கூட முஸ்லிம்கள் நால்வர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். அத்தோடு மன்னர்களது காலம் முதல் மன்னர்களது அமைச்சரவையில் அமைச்சர்களாக மாத்திரமல்லாமல், உயரதிகாரிகளாகவும் முஸ்லிம்கள் பதவிகள் வகித்துள்ளனர். குறிப்பாக 1258 இல் யாப்பகூவ இராச்சியத்தை ஆட்சி செய்த முதலாம் புவனேகுபாகு மன்னர் எகிப்து நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக அபூ உஸ்மான் என்பவரை அனுப்பி வைத்துள்ளார். அத்தோடு அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக யாப்பகூவ பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்திலும் முஸ்லிம்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

அத்தோடு நில்லாமல் இந்நாடு அந்நிய ஆக்கிரமிப்புக்களுக்கு உள்ளான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்நாட்டு முஸ்லிம்கள் பெரும்பான்மையின மக்களுடன் இணைந்து நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதற்காகப் போராடியுள்ளனர். அப்போராட்டங்களில் தம் இரத்தங்களை இந்நாட்டுக்காக சிந்தியுள்ளதோடு தம் உயிர்களையும் கூட தியாகம் செய்துள்ளனர்.

குறிப்பாக 1505 இல் இலங்கையை ஆக்கிரமித்த போர்த்துகேயருக்கு எதிராக உள்நாட்டு மக்கள் முன்னெடுத்த போராட்டங்களில் முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியுள்ளனர். அதிலும் மாயாதுன்ன மன்னர் முன்னெடுத்த போராட்டத்தில் இணைந்து போராடி சுமார் 4000 முஸ்லிம்கள் நாட்டுக்காக தம் உயிர்களை அர்ப்பணித்துள்ளனர்.

மேலும், கி.பி. 1505 இக்கு முன்னர் இந்நாட்டு முஸ்லிம்கள் கரையோரப் பிரதேங்களில்தான் பெரிதும் வாழ்ந்துள்ளனர். இந்நாட்டை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர் தங்களுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்த பெரும்பான்மை மக்களுடன் இணைந்து போராடிய தெற்கு மற்றும் மேற்கு முஸ்லிம்களின் வழிபாட்டு தளங்களையும் இருப்பிடங்களையும் எரித்து அவர்களை விரட்டியடித்தனர். இதனால் நிர்க்கதி நிலைக்குள்ளான முஸ்லிம்களை நாட்டின் உட்பிரதேசங்களில் குடியமர அன்றைய மன்னர்கள் வசதி செய்து கொடுத்தனர். குறிப்பாக செனரத் மன்னர் கிழக்குப் பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைக் குடியமர்த்தினார்.

ஒரு முறை போர்த்துகேயப் படையினர் ஸ்ரீ விக்கிரமசிங்க மன்னரை மஹியங்கனை பிரதேசத்தில் துரத்திச் சென்றபோது அவர் ஒடி ஒழிந்த இடத்தைக் காட்டிக் கொடுக்க முஸ்லிம் பெண்மணியொருவர் மறுத்தார். அவரை அவர்கள் படுகொலை செய்தனர். தம்மைத் துரத்தி வந்த போர்த்து கேயர் திரும்பிச் சென்றதும் வெளியே வந்த மன்னர் முஸ்லிம் பெண்மணி இரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்டு ‘மா ரெக்க கத்த லே’ என்று வாய்விட்டு அழுதுள்ளார். அதுவே பிற்காலத்தில் ‘மரக்கல’ என திரிபுபட்டு முஸ்லிம்கள் அழைக்கப்படக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு தம் மன்னரைக் காட்டிக் கொடுக்காது தம் உயிரைத் தியாகம் செய்த முஸ்லிம் பெண்மணியைக் கௌரவிக்கும் வகையில் மஹியங்கனை, பங்கரகம்மான பிரதேசம் முஸ்லிம்கள் குடியேறி வாழவென மன்னரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

1638 இல் கண்டி இராச்சியத்திற்கு எதிராக போர்த்துகேயர் போர் தொடுத்த போது முஸ்லிம் வீரர்கள் கண்டி இராச்சியத்தைப் பாதுகாப்பதற்காக கடுமையாக உழைத்தனர். முஸ்லிம்களது போர்த் திறனிலும் தியாக உணர்விலும் கவரப்பட்ட இராஜசிங்க மன்னர் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் முஸ்லிம்கள் அக்குரணையில் குடியேற ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார்.

1762 இல் கண்டி மன்னராக இருந்த கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனை சந்திக்க கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் தூதுவராக ஜோன் பைபஸ் திருகோணமலைக்கு வந்திருந்தார். அவரை மன்னரிடம் அழைத்து வருவதற்கான அரச பிரிதிநிதியாக உதுமான் லெப்பை என்ற பெயருடைய முஸ்லிம் நியமிக்கப்பட்டிருந்தார். அதேவேளை நாட்டைப் பாதுகாப்பதற்காக உழைத்த 3000 முஸ்லிம்கள் மாத்தறையில் ஒல்லாந்த ஆக்கிரமிப்பாளர்களால் கொல்லப்பட்டுள்ளனர். சீதாவக்க, கோட்டை, கண்டி இராச்சியங்களின் படைகளில் ‘ஹேவாபன்ன’ என்றொரு படைப் பிரிவு இருந்துள்ளது. அப்பிரிவு முற்றிலும் முஸ்லிம்களை உள்ளடக்கியதாக இருந்ததென லோனா தேவராஜா தமது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். 

இரண்டாம் இராஜசிங்க மன்னரது காலத்தில் இடம்பெற்ற வெள்ளவாயப் போராட்டத்திலும் முஸ்லிம்கள் மன்னருக்கு ஆதரவாகக் களம் இறங்கினர். அப்போராட்டத்தில் முஸ்லிம் வீரர்கள் வெளிப்படுத்திய வீர தீரத்தையிட்டு முஸ்லிம் படையணி ‘ஒட்டுபந்திய’ – ஒட்டகப்படை எனப் புகழப்பட்டதோடு ஹங்குரான் கெத்த தேவாலயத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட புடவையில் இந்த ஒட்டகப் படை பொறிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. 

கண்டி இராச்சியம் 1815 இல் பிரித்தானியரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. அதற்கு முன்னர் அரண்மனையைச் சுற்றி தினமும் 400 படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் 300 முஸ்லிம்களும் 100 சிங்களவர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அதேநேரம், 1796 இல் பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றிய போதிலும் கண்டியைப் பிடிக்க முடியவில்லை. கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றுவதற்கான பிரதான நடவடிக்கையைக் கிழக்கு மாகாணத்தின் ஊடாக பிரித்தானியர் முன்னெடுத்தனர். ஆனால், முஸ்லிம்கள் மட்டக்களப்பு, ஒந்தாச்சிமடம் என்ற பிரதேசத்தில் ஒன்று திரண்டு மேற்கொண்ட தொடர் எதிர்ப்பு போராட்டம் காரணமாக பிரித்தானியர் கண்டியைக் கைப்பற்றும் முயற்சி 1815 வரையும் தாமதமானது. அதனால் இப்போராட்டத்தில் முன்னின்ற பல முஸ்லிம் தலைவர்கள் தேசத் துரோகிகளாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டனர். அவ்வர்த்தமானி இன்றுமுள்ளது. 

இவை மாத்திரமல்லாமல், இலங்கை மீது போர் தொடுத்த அந்நிய சக்திகளுக்கு எதிராக தென்னிந்தியா சென்று கூட அந்நாட்டு படைகளின் உதவியை முஸ்லிம்கள் இந்நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

இவ்வாறு இந்நாட்டுக்கும் நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் ஆதராவாக நாட்டு மக்களோடு ஒன்றிணைந்து முஸ்லிம்கள் செயற்பட்ட சம்பவங்கள் நிறையவே காணப்படுகின்றன. இந்நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக முஸ்லிம்கள் அளித்துள்ள பங்களிப்புக்கள் மீது இந்நாட்டு மன்னர்கள் எவ்வளவு தூரம் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதும் இலங்கையைப் பாதுகாப்பதில் முஸ்லிம்கள் எவ்வளவு செல்வாக்குச் செலுத்தியுள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.

அத்தோடு நில்லாமல், 1945 இல் இல ங்கை சுதந்திர சட்டம் அரச பேரவைக்கு கொண்டு வரப்பட்ட போது அங்கு உரை யாற்றிய கலாநிதி டி.பி. ஜாயா ‘சுதந்திர விடயத்தில் முஸ்லிம்களாகிய நாம் எங்களது தனிப்பட்ட பிரச்சினைகளை மறந்து சிங்களவர்களோடு ஒன்றிணைந்து நிற் போம்’ என்றார்.

இதனையிட்டு சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ். சேன நாயக்கா, ‘முஸ்லிம் சகோதரர்கள் குறித்து கூறுவதாயின், அவர்களது நிதானப் போக்கைக் கண்டு அவர்களை நாம் அனைவரும் பாராட்டுகின்றோம். சிங்கள அடக்கு முறை என்ற கட்டுக் கதையை அவர்கள் கூறவில்லை. அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய நாம் முனைகின்றோம்’ என்றார்.

இதேவேளை முஸ்லிம்களை மெச்சிப் பாராட்டிய எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டார நாயக்க ‘சுதந்திரப் பிரச்சினையின் போது சுயநலமற்றவராய் சிங்கள மக்களோடு ஒன்றித்து நின்ற முஸ்லிம்களுக்கு இலங்கைச் சிங்களவர் என்னென்றும் கடமைப்பட்டவர்களாக இருப்பர்’ என்றார்.

இவ்வாறு இந்நாட்டு முஸ்லிம்கள் சுதந்திரத்திற்கு முன்னரும் அதன் பின்னரும் நாட்டுக்கும் மக்களுக்கும் நம்பிக்கைக்குரியவர்களாக விளங்கி வந்துள்ளாகள். அதன் பயனாக இந்நாட்டு முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்கள் அனுபவிக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் மாத்திரமல்லாமல் தங்களது சமய, கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட உரிமைகளையும் சலுகைகளையும் பெற்று அனுபவித்து வருகின்றனர். இன்று இந் நாட்டு முஸ்லிம்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் அபிலாஷைகளும் பெரும்பான்மை மக்களதும் அவர்களது தலைவர்களதும் முழுமையான அங்கீகாரத்துடன் முஸ்லிம்களுக்கு கிடைக்கப் பெற்றவையே. இவை எதுவும் தனிக்கட்சி அமைத்தோ போராட்டம் நடாத்தியோ பெற்றுக்கொண்டவை அல்ல. அவர்களது நம்பிக்கைகக்கும் விருப்பதற்கும் உரிய சமூகத்தினராக வாழ்ந்து வருவதன் பயனாக இவை கிடைக்கப்பெற்றுள்ளன.

இருந்தும் பெரும்பான்மையின மக்களினதும் ஆட்சியாளர்களதும் நம்பிக்கைக்கும் விருப்பத்துக்கும் உரியவர்களாக ஆரம்ப காலம் முதல் திகழ்ந்து வந்த முஸ்லிம் சமூகம் கடந்த 10, 15 வருடங்களாக சந்தேகப் பார்வைக்கு முகம் கொடுத்திருக்கின்றது. இது பெரும் கவலைக்குரிய நிலைமையாகும். குறிப்பாக பெரும்பான்மை மக்கள் மத்தியிலுள்ள சில தரப்பினரிடம் இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான காரணம் என்ன? அந்நிலைக்கு வித்திட்டவர்கள் யார்? இந்நிலைமை ஏன்? எவ்வாறு உருவானது? அதனை உருவாக்கியவர்கள் யார்? இது எந்தப் பின் புலத்தில் உருவாக்கப்பட்டன? இந்நிலை மையிலிருந்து எவ்வாறு மீட்சி பெறுவது? அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் யாவை? பெரும்பான்மை யினரின் நம்பிக்கையையும் விருப்பத்தையும் முஸ்லிம்கள் மீண்டும் எவ்வாறு கட்டியெழுப்பலாம்? இவை தொடர்பில் ஆழ அகலமாக சிந்திக்க வேண்டிய காலமும் நேரமும் இதுவாகும்.

பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள நோக்கும் பார்வையும் ஆரோக்கியமானதல்ல. அதனால் அதற்கு துணைபுரிந்திருக்கும் விடயங்களைத் தவிர்ந்து கொள்வதிலும் அவசரமாகக் கவனம் வேண்டும். அதற்கான திட்டங்களை தூரநோக்குடன் வகுத்துச் செயற்படுத்த வேண்டும். இது தொடர்பில் கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல்கள் மற்றும் சந்திப்புக்களை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்றாலும் தங்களுக்கென பொறுப்பும் கடமையும் இருப்பதை அவர்கள் ஒருபோதும் மறந்து விடலாகாது.