கால்நூற்றாண்டு கால நடுநிலைப் பயணம்

6

மீள்பார்வை 25 ஆவது வருடத்தில் காலடி வைக்கிறது. 1995 டிசம்பர் மாதம் முதல் மீள்பார்வை என்ற பெயர் இலங்கையின் ஊடகத்துறைக்கு அறிமுகமாகத் தொடங்கி இன்று 25 ஆவது வருடமாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இலங்கையின் பத்திரிகைத் துறையில் அதிலும் முஸ்லிம் சமூகத்தின் பத்திரிகைத் துறையில் இது பெரும் சாதனைதான்.

இவ்வாறான பயணமொன்றைத் தொடர்ந்து செல்வதில் மீள்பார்வை எதிர்கொண்ட சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வாசிப்பு குறைவாகவுள்ளதொரு சமூகத்தில், அதிலும் பத்திரிகை வாசிக்கும் பழக்கம் அரிதாகவுள்ளதொரு சமூகத்தில் பத்திரிகையொன்றை விலை கொடுத்து வாங்கும் மகத்தான மனிதர்களைத் தேடி மீள்பார்வை தனது பயணத்தை இடைவிடாது தொடர்ந்திருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை அதற்கு ஆக்கமும் விற்பனையும் பெற்றுத் தந்த இந்த எல்லா மாமனிதர்களும் சேர்ந்து தான் மீள்பார்வையின் சாதனைக்குச் சொந்தமானவர்கள். கரடுமுரடான பாதைகளில் எல்லாம் மீள்பார்வையை ஏற்ற இறக்கங்களில் துவண்டு விடாமல் பாதுகாத்து வந்த அதன் முன்னோடிகள் அனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றியோடு நினைவுகூரத்தக்கவர்கள். மீள்பார்வை வாசகர்கள் அவர்களையும் அவர்களது தியாகங்களையும் அறிந்தவர்கள்.

கால்நூற்றாண்டு காலத்திலும் மீள்பார்வை இலாபத்தை இலக்காக வைத்துச் செயற்பட்டதில்லை. அது எட்டாக்கனி என்பதும் மீள்பார்வைக்குத் தெரியாததல்ல. ஆனால் மீள்பார்வை விற்பனையின் பணத்தை அவ்வப்போது முறையாகக் கொடுத்து வரும் முகவர்கள் அதிகமாக இருந்திருந்தால் அது தற்போதைய நிலையை விட சிறந்த நிலையில் இருந்திருக்கும் என்பதும் மறுப்பதற்கில்லை.

மீள்பார்வை ஒரு நடுநிலைப் பத்திரிகையாகவே தனது பயணத்தை ஆரம்பித்தது. தொடர்ந்தது. இனியும் தொடரும். மீள்பார்வையின் நடுநிலைத் தன்மையில் எந்தக் கீறலும் வராத வண்ணம் அது மிகவும் அவதானத்துடனேயே பயணிக்கிறது. நடுநிலைமை என்பது எந்தத் தீவிரத்துக்கும் உட்படாத நிலையாகும். மீள்பார்வை சில போது சில விமர்சனங்களை வெளியிடுகின்ற வேளையில் மீள்பார்வை நடுநிலை தவறிவிட்டது என சார்பு நிலையில் உள்ள சிலர் முறையிடுகின்றனர். தமது கருத்தையும் நிலைப்பாட்டையும் பற்றி மெத்தனமாக இருப்பதுவே நடுநிலைமை எனக் கருதும் சிலர், தாம் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு மாற்றமான கருத்து வெளியிடப்படும் பொழுது மீள்பார்வையின் நடுநிலைத் தன்மையின் மீது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.அநியாயம் நடக்கும் போது அநியாயத்தின் முன்னால் கைகட்டி நிற்பது நியாயத்தின் பக்கம் எப்போதுமே சார்ந்து நிற்கும் வாசகர்களைக் கொண்ட மீள்பார்வைக்குப் பொருத்தமானதல்ல என்பது மீள்பார்வைக்குத் தெரியும். அதனால் நியாயம் எந்தப் பக்கத்தில் இருந்தாலும் விமர்சனங்களுக்கு அப்பால் நின்று மீள்பார்வை அதற்காகத் தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.

சமூகத்தின் முக்கியமான விடயங்களிலும் தருணங்களிலும் மீள்பார்வை இவ்வாறு தான் குரல் கொடுத்து வந்திருக்கிறது. மாற்றுக் கருத்து வரும் போதெல்லாம் பத்திரிகை வாங்குவதை நிறுத்தி விடுவேன் என்று சிலரிடமிருந்து விடுக்கப்படும் அச்சுறுத்தலைத் தவிர வேறெந்த அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் மீள்பார்வைக்குக் கிடையாது. சுதந்திரமான அதன் போக்கில் சமூகத்தின் நன்மை நாடி தொடர்ந்து உறுதியுடன் உழைப்பது என்ற உறுதிப்பாடு, மீள்பார்வையை உருவாக்கியவர்கள் வளர்த்துவிட்ட உரம். அதற்கு வளம் சேர்க்கும் சிறந்ததொரு வாசகர் வட்டம் தொடர்ந்தும் இருக்கும் நிலையில் அது இன்னும் பல ஆண்டுகள் சமூகத்தின் குரலாக ஒலிக்கும்.

மீள்பார்வை தன்னை விமர்சிப்பவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில் ஒருபோதும் பின்நின்றதில்லை. காழ்ப்புணர்ச்சியுடன் மீள்பார்வையை விமர்சிப்பவர்களும் மிகவும் குறைவு. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் நிறையவே வாசித்தறிந்து கொள்ள வேண்டியிருக்கும் நிலையில் சமூகம் அச்சத்தின் காரணமாக வாசிப்பதைக் குறைத்துக் கொண்டது தோல்வி மனப்பாங்காகவே தெரிகிறது. இதிலிருந்து சமூகம் மீளெழுச்சி பெற வேண்டும்.  

எழுச்சிபெறுவதற்கான உணர்வுகள் மீண்டும் தளிராகி விருட்சமாய் வளர்வதற்கு வாசகர்களின் ஆதரவு என்றென்றும் கிட்டுவதாக.