மிம்பர்களின் சுதந்திரம்

22

தாய்நாட்டின் 72 ஆவது சுதந்திர தினம் முஸ்லிம் பிரதேசங்களில் பரவலாக அனுஷ்டிக்கப்பட்டது. பல பள்ளிவாசல்களும் மரபுகளையெல்லாம் மீறியதொரு சுதந்திரத்துடன் கொண்டாட்டங்களை நிகழ்த்தின. பள்ளிவாசல்களில் உருவம் பொறிக்கப்பட்ட தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. பின்னணி இசையுடன் தேசிய கீதம் பள்ளிவாசலில் இசைக்கப்பட்டது. இப்படியாக சுதந்திரமாகச் சிந்திக்கும் நிலைக்கு பள்ளிவாசல்கள் மாறியிருந்தன.

பள்ளிவாசல் மிம்பர்களுக்கும் இந்தச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டியதை சுதந்திரத்துக்கு முந்திய வாரம் நிகழ்ந்ததொரு குத்பா எடுத்துக் காட்டியது. நாட்டு நடப்புக்கள் பற்றி எதுவுமே தெரியாத, மார்க்கத்தைப் பற்றிக் கூட முறையாகத் தெரியாத கதீப்மார்களிடமிருந்து மிம்பர்களுக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். ஆயிரம் வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மிம்பர்களின் ஆதிக்கம் களையப்பட்டு மிம்பர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். மிம்பருக்குக் கீழால் தலைகவிழ்த்து சொல்லுகின்ற பொய்களையெல்லாம் எந்த எதிர்ப்புமில்லாமல் ஏற்றுக் கொள்ளும் அடிமைகள் போல் இருக்கும் நல்லடியார்கள் தூக்கத்தைக் களைந்து ஊக்கம் பெற்றாலேயே இந்தச் சுதந்திரம் சாத்தியமாகும்.

சுதந்திரத்துக்கு முந்திய வாரத்திலே குத்பாப் பிரசங்கம் நிகழ்த்திய கதீப் ஒருவர் சுதந்திரத்துக்கான முஸ்லிம்களின் பங்களிப்பு தொடர்பில் குறிப்பிட முயற்சி செய்தார். உண்மையிலேயே இந்த முயற்சி பாராட்டத்தக்கதாகும். வாய்க்கு வந்ததையெல்லாம் பிரசங்கம் செய்து விட்டுச் செல்லும் கதீப்மார்களை விட சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமான குத்பாக்களை நிகழ்த்தும் திறமையும் உணர்வும் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அந்த வகையில் மௌலவி உலமாக்களின் இப்படியான முயற்சி வரவேற்கத்தக்கதே.

ஆனாலும் வரலாற்றுச் சம்பவங்களை மக்கள் முன் வைப்பது என்பது பெரியோர்கள் சொன்னதாகச் சொல்லப்படும் ஸஹாபாக்கள் சரிதையை வாசித்துக் காட்டுவதை விட மாறுபட்டது. அது துல்லியமாக அச்சொட்டாக மக்கள் முன் எடுத்து வைக்கப்பட வேண்டும். அல்லாத பட்சத்தில் மௌலவிமார்கள் பொய்யைத் தான் சொல்கிறார்கள் என்ற கருத்து சமூகத்தில் பதிந்து விடும்.

இதற்கு எடுத்துக் காட்டாக சுதந்திரத்துக்கான முஸ்லிம்களின் பங்களிப்பு தொடர்பில் உரையாற்றிய கதீப் ஒருவர், நாட்டுக்காக உயிர் கொடுத்த உத்தமியைப் பற்றிச் சொல்ல வரும் போது காப்பாற்றப்பட்ட மன்னன் இரண்டாம் இராஜசிங்கனை ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் எனவும், அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஊவா மாகாணத்திலுள்ள கிராமமான பங்கரகம்மனவை அநுராதபுரத்திலுள்ளதாகவும் நல்லடியார்களுக்குச் சித்திரித்துக் காட்டியுள்ளார். பெரும்பாலும் கேள்வி ஞானத்தினூடாகவே உபந்நியாசம் பண்ணப் பழகியவர்கள் பெரியோர்கள் சொன்னார்கள் என்பது போல வரலாறுகளையும் சொல்ல முனைவது தவறானதாகும். அவர்களின் இந்த அறியாத தனத்தை மக்களுக்கும் சொல்லித் திணிக்க முயல்வது அதைவிடவும் தவறாகும்.

இங்கு சுட்டிக் காட்ட விளைவது மௌலவிமார் பொய் சொல்லுகிறார்கள் என்பதனை விட அவர்களை பட்டம் பெற்ற மௌலவிகளாக உருவாக்கிய மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தையாகும். மத்ரஸாக்களின் பாடத்திட்டங்களில் அரபிலும் அரபுத் தமிழிலும் எழுதித் தந்தவைகளுக்கு அப்பால் சுதேசக் கல்வியையும் இணைத்துக் கொள்ளாததன் விளைவு மௌலவிமார்கள் சமூகத்தில் உறவாடும் போது தெளிவாக விளங்குகிறது. மத்ரஸா காலப்பிரிவில் இருந்தது போல அவர்கள் வெளிவந்த பின்னரும் வாசிப்பதை ஹராமானதாகவே கருதுவதால் அவர்களிடம் நாடு பற்றியும் நாட்டுப் பற்று பற்றியும் சுதந்திரம் பற்றியும் பேசுவதற்கு எதுவுமில்லை. தெரியாது என்பதை ஒப்புக் கொள்ளும் மனநிலையிலும், வெளிப்படுத்தும் நிலையிலும் கூட அவர்கள் இல்லை.

சமகாலச் சூழலும் சந்தர்ப்ப சூழ்நிலையும் மௌலவிமார்களை நடப்பு விவகாரங்கள் பற்றியெல்லாம் பேசுவதற்கு நிர்ப்பந்திக்கின்ற வேளைகளில் இந்த மௌலவிமார்கள் தாம் கற்ற கல்வியின் விளைவால் நட்டாற்றில் விடப்படுகிறார்கள். உலகக் கல்வியின் தேவை மத்ரஸாக்களை கொண்டு நடத்துவதில் அதிகமாக உணரப்பட்டதனால் பாடசாலைக் கல்வி சில மத்ரஸாக்களில் உள்வாங்கப்பட்டாலும் கூட அதிலும் முஸ்லிம், இஸ்லாம் தொடர்பான விடயங்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்ட ரெடிமேட் கல்வியையே புதிய தலைமுறையினரும் பெறுகிறார்கள். இந்த நிலையில் எதிர்காலத்திலும் இந்த வெறுமை தான் தொடரப் போகிறது என்பது கவலையான விடயமே.

இந்த நிலையிலிருந்து மௌலவி உலமாக்களை யார் மாற்றுவது ? இவர்களுக்கு யார் பொறுப்பு ? இவர்களை உருவாக்குகின்ற மத்ரஸாக்களின் பாடத்திட்டம் எங்காவது முறையாக வடிவமைக்கப்படுகிறதா ? எல்லா மௌலவிமார்களும் பாடத்திட்டத்தை முறையாக முடித்துத் தான் வெளியேறுகிறார்கள் என்று எங்காவது கண்காணிக்கப்படுகிறதா ? கால சூழ்நிலைகளுக்கேற்ப குத்பா பிரசங்கங்களுக்கான விடய தானங்கள் இவர்களுக்கு வழங்கப்படுவதற்கான பொறிமுறைகள் ஏதேனும் உண்டா ?

இவை எதுவுமே இல்லை என்றால் இவ்வாறான மௌலவிமார்களிடம் இருந்து மிம்பர்களுக்குச் சுதந்திரம் பெற்றுத் தர வேண்டிய வேலையொன்று பாக்கி இருக்கிறது. முஸ்லிம் சமூகம் இதில் கவனம் செலுத்தாவிட்டால் தனது சொந்த விடுதலைக்காக எதையுமே செய்து கொள்ள முடியாத கொத்தடிமைகளாக இந்த நாட்டில் வாழ்ந்து மடிவதை விட வேறொன்றும் ஆவதற்கில்லை.