Features நேர்காணல்

“யாருடைய கையால் மென்மையாக அடிவாங்கலாம் என்பதை வைத்தே நாம் முடிவெடுக்க வேண்டும்”

Written by Administrator

கலாநிதி எம்.எஸ்.எம் அஸீஸ்

கலாநிதி அஸீஸ் அவர்கள் வவுனியா மாவட்டத்திலுள்ள பாவக்குளம் என்னுமிடத்தைப் பிறப் பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை வவு/பாவக்குளம் அல் அமீன் முஸ்லிம் வித்தியாலயத்திலும், இரண்டாம் நிலைக் கல்வியை வவுனியா முஸ்லிம் தேசிய பாடசாலையிலும், உயர்நிலைக் கல்வியை குரு/பானகமுவ அந்நூர் முஸ்லிம் தேசிய பாடசாலையிலும் கற்றுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமானிப் பட்டத்தையும் (B.A) ஜப்பான், நகோயா (Nagoya) தேசிய பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் (International Politics) துறையில் முதுமானிப் பட்டத்தையும் (M.A) ஜப்பான், கியோடோ (Kyoto) டோசிஷா (Doshisha) பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் (Global Studies)  துறையில் கலாநிதிப் பட்டத்தையும் (Phd) பூர்த்தி செய்துள்ளார்.

ஆரம்பத்தில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறை விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர், தற்போது அதே பல்கலைக்கழகத்தில் உள்ள பட்டப் பின்படிப்பு கற்கைகள் பீடத்தில் (Faculty of Graduate Studies) சிரேஷ்ட விரிவுரை யாளராகவும் பண்டாரநாயக்க சர்வதேச கற்கை நெறிகள் மத்திய நிலையத்தில் (Bandaranayake Centre for International Studies – BCIS) பட்டப் பின் படிப்பு கற்கைகள் பீடத்தில் சர்வதேச உறவுகள் துறை விரிவுரையாளராகவும் கட்டார் தோஹா பல்கலைக்கழகத்தில் வருகை தரு விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

முஸ்லிம் சமூக அரசியல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொன்டுள்ள விரிவுரையாளர் கலாநிதி அஸீஸ் அவர்கள் Daily Ft, Colombo Telegraph போன்ற இணையப் பத்திரிகைகளின் பத்தி எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

  • இலங்கையில் புவிசார் அரசியலின் (Geo Politics) தாக்கம் எவ்வாறான அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது?

சர்வதேச அரசியலில் புவிசார் அரசியல் என்பது மிக முக்கியமான பகுதியாகும். 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இடம்பெற்ற 1ஆம் உலக மகா யுத்தமும் (1914 -1919) 2 ஆம் உலக மகா யுத்தமும் (1939 – 1945) உலக அரசியலில் மிகவும் கடினமான தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளாகும். இவ்விரண்டு யுத்தங்களும் முடிவடைந்ததன் பின்னர் உலக அரசியல் மாற்றமடைய ஆரம்பித்தது.

அதாவது 1ஆம் மற்றும் 2ஆம் உலகப் போருக்கு முன்பு காணப்பட்ட காலனித்துவவாதம் அல்லது ஏகாதிபத்தியவாதம் என்னும் கருத்தியல் மாற்றம் பெற்று இரு துருவ அரசியல் (Bipolar politics) தோற்றம் பெற்றது. இரு துருவ அரசியல் என்னும் போது முதலாவது அமெரிக்க சார்ந்த நேச நாடுகள். மற்றையது சோவியத் யூனியன் சார்ந்த டச்சு நாடுகள். ஒரு புறம் அமெரிக்காவும் அதனுடைய நேச நாடுகளும் திறந்த பொருளாதாரக் கொள்கையையும் சோவியத் நாடுகள் சமவுடமைப் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாகவும் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கின. இதன் விளைவு 1945 – 1990 வரையில் சுமார் 45 வருடங்களாகக் காணப்பட்டது. இது பனிப்போர் (Cold War) காலம் என அழைக்கப்படுகிறது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்விரு வல்லரசுகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில்லை. மாறாக தங்களது அரசியல், பொருளாதார, இராணுவ, ஆகாய, விண்வெளி, இரசாயனத் தளங்களை அல்லது பலத்தை நிரூபிப்பதற்காக மூன்றாம் நாடொன்றில் யுத்தமொன்றை உருவாக்கும் கொள்கையைப் பின்பற்றியது. உதாரணமாக, வட கொரியாவையும் தென்கொரியாவையும் பிரித்து வைத்தது, வட வியட்நாமையும் தென் வியட்நாமையும் பிரித்து வைத்தது, கியூபாவில் புரட்சியை ஏற்படுத்த வழிவகுத்தது போன்றவை அனைத்தும் பனிப்போர் காலப்பகுதியில் தங்களது அணிகளை பலப்படுத்துவதற்காகச் செய்த நடவடிக்கைகளாகும்.

2ஆம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் சோவியத் யூனியன் பாரிய வீழ்ச்சியை அடைந்தது. 2ஆம் உலக மகா யுத்தத்தில் ஏற்பட்ட தோல்வியை ஈடுசெய்வதற்காக சோவியத் யூனியன் நாடுகளை ஆக்கிரமிக்கத் துவங்கியது. புவிசார் அரசியல் எப்போது தோற்றம் பெற்றது? அதனுடைய முக்கியத்துவம் என்ன என்பதை 1945ஆம் ஆண்டு தெளிவாக எமக்குக் காட்டியது. 1945 வரையில் உலக அரசியலில் அத்திலாந்திக் மற்றும் பசுபிக் சமுத்திரங்கள் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இவ்விரு சமுத்திரங்களிலுமே அதிகமான யுத்தங்கள் இடம்பெற்றன.

1945 இற்குப் பின்னரான காலப்பகுதியில் இந்து சமுத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக புவிசார் அரசியலில் தோற்றம் பெறுகின்றது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்து சமுத்திரத்தின் எல்லை அவுஸ்திரேலியாவில் தொடங்கி தென்ஆபிரிக்கா வரையில் நீள்கிறது. மூன்று பக்கம் கண்டங்களாலும் ஒரு பகுதி நீர்ப் பகுதியாலும் சூழப்பட்ட பகுதியே இந்து சமுத்திரமாகும். சுமார் 39 நாடுகள் இந்து சமுத்திரத்தை எல்லைகளாகக் கொண்டுள்ளன. ஏனைய சமுத்திரங்களினுடைய கடல் வெப்பநிலையை ஒப்பிடுகின்ற போது இந்து சமுத்திரத்தினுடைய வெப்பநிலை அதிகமாகும். கிழக்கையும் மேற்கையும் இணைப்பதற்கு முக்கியமான ஒரு கேந்திர நிலையமாக இருப்பது இந்து சமுத்திரமாகும். சீனாவினுடைய கடல் மார்க்கப் பிரயாணங்களில் சுமார் 90 வீதமான பிரயாணங்கள் இந்து சமுத்திரத்தினூடாகவே நடைபெறுகின்றது. இந்தியாவினுடைய 85 வீதமான பயணங்கள் இந்து சமூத்திரனூடாகவே நடைபெறுகின்றன. அதேபோன்று அநேகமான நாடுகளின் கடல்சார் பயணங்கள் இந்து சமுத்திரத்திற்கூடாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவை தவிர இந்து சமுத்திரம் இயற்கை வளங்கள் நிரம்பியதொரு பிரதேசமாகவும் காணப்படு கின்றது. உலகில் 90 வீதமான டயமண்ட் இந்து சமுத்திரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. 80 வீதமான தங்கமும், 60 வீதமான எண்ணெய் வளமும் 55 வீதமான இரும்பு வளமும் இந்து சமுத்திரத்திலேயே காணப்படுகின்றது. அத்துடன் இரண்டு நிலப்பரப்பை ஊடறுத்துச் செல்கின்ற நீர்ச்சுனையைக் கொண்டிருப்பதும் இந்து சமுத்திரமாகும். உதாரணமாக மலாக்கா நீரிணை, ஓமோஸ் நீரிணை போன்றவற்றை குறிப்பிடலாம்.

இவையே கடல்சார் போக்குவரத்துக்கு உதவி புரிகின்ற நீரிணைகளாகும். இதன் காரணமாக புவி சார் அரசியல் அந்திலாந்திக் சமுத்திரத்தையும் பசுபிக் சமுத்திரத்தையும் தாண்டி இந்து சமுத்திரத்தில் தன்னுடைய ஆழமான பங்களிப்பை வகிக்கத் தொடங்கியது. இதிலும் குறிப்பாக இலங்கையை எடுத்துக் கொண்டால் இலங்கை சிறியதொரு தீவாகக் காணப்பட்டாலும் எமது நிலத் தோற்றத்தை விட 7 மடங்கு நீர்வளம் காணப்படுகின்றது. எமது கடற்பரப்பில் பல விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றது. சர்வதேச கப்பல் போக்குவரத்தை எடுத்துப் பார்த்தால் வருடமொன்றுக்கு சுமார் 35,000 சரக்குக் கப்பல்கள் இப்பிரதேசத்தை ஊடறுத்துச் செல்கின்றன. ஐயாயிரம் எண்ணெய் தாங்கிகள் எமது கடற்பரப்பை ஊடறுத்துச் செல்கின்றன. இதனாலேயே இலங்கையின் அமைவிடம் சர்வதேச அரசியலில் குறிப்பாக புவிசார் அரசியலில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது.

  • இலங்கையின் பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் கூடுதல் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. இது பல்வேறு அரசியல் சமூக பொருளாதாரப் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இவற்றிலிருந்து இலங்கை வெளிவர வேண்டுமா? இலங்கையின் பொருளாதாரம் எதைச் சார்ந்திருக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

இலங்கையின் பொருளாதாரம் காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து வருகிறது. ஆரம்பத்தில் இலங்கை விவசாய நாடாகக் காணப்பட்டது. விவசாயத்தில் தன்னிறைவடைந்த நாடாகக் கூட இலங்கை காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெருந்தோட்டக் கைத்தொழில் துறையை முதன்மைப்படுத்திய பொருளாதாரம் காணப்பட்டது. ஏற்றுமதிப் பொருட்களின் மூலம் சுத்த இலாபங்களை அடைய முடியாமல் போனபோது விவசாயத் துறையை விடுத்து கைத்தொழில் துறைக்குக் கூடுதலாக அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக தைத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இலங்கை அமெரிக்காவை விட சீனாவுடனேயே அதிக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆய்வுகளின் படி சுமார் 600 இற்கும் மேற்பட்ட பொருட்களை இலங்கை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கின்றது. அதே நேரம் இலங்கையிலிருந்து சீனாவுக்கு வெறும் 17 பொருட்களே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அனேகமான பொருட்கள் இறக்குமதி செய்கின்ற பொருட்களாகவே காணப்படுகின்றன. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. நாம் ஏன் சீனாவுடன் மிக நெருங்கிய பொருளாதார உறவுகளைப் பேணியுள்ளோம்?

சீனாவின் அபிவிருத்தியைப் பார்த்தால் சீனா கிட்டத்தட்ட 10,000 வருட கால எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும் கடைசிப் பத்து வருட காலகட்டமே சீனாவின் அரசியல் பொருளாதாரத்தில் பொற்காலமாகும். அரசியலில் சீனா இன்னும் கம்யூனிசக் கட்சியைச் சார்ந்த போக்கை கடைப்பிடித்திருப்பதால் யாரும் அதில் தலையிட முடியாதுள்ளது. பொருளாதாரத்தை அவர்கள் முற்று முழுவதாக திறந்த பொருளாதாரமாக மாற்றிவிட்டார்கள்.

சீனா ஆரம்பத்தில் வரையறுக்கப்பட்ட மூடப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. அதன் விளைவாக சீனாவில் மிகை உற்பத்தி ஏற்பட்டு ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. 2006 ஆம் ஆண்டிலிருந்து ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்கள். சீனாவின் பொருளாதாரம் சந்தையை அடிப்படை யாகக் கொண்ட பொருளாதாரமாகும்.

பல நாடுகளுக்கு தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் மேலும் தங்களது சந்தையை விரிவு படுத்துவதற்காக வேண்டி 2013ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள சீ ஜிங் பிங் பட்டுப்பாதை திட்டத்தைக் கொண்டு வந்தார். கிழக்கிலிருந்து குறிப்பாக பிலிப்பைன்ஸ் மற்றும் மியன்மார் பாகிஸ்தான் ஊடான பாதையை இதனூடாக சீனா சாதிக்க நினைத்தது.

ஒன்று கடலூடாக நாடுகளை இணைப்பது. அடுத்தது தரைத்தோற்றத்தினூடாக நாடுகளை இணைப்பது. இதனடிப்படையில் சுமார் 79 நாடுகளுடன் சீனா தரைத்தோற்றத்துடன் பாதைகளையும் ரயில்வே வீதிகளையும் நீராலும் இணைக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதில் 90 வீதம் வெற்றியையும் பெற்றுவிட்டது. அதில் இலங்கையும் ஒன்று. இலங்கையையும் அவர்கள் இணைத்துவிட்டார்கள். இவ்வாறு 79 நாடுகளை தங்களது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. இந்நாடுகளை தங்களது நேரடிச் சந்தைகளாகக் கருதுகின்றது.

சீனா இன்று உலகில் பொருளாதாரத்தில் 2ஆவது பெரிய வல்லரசாக உள்ளது. இன்னும் 5 வருடத்தில் உலகில் முதலாவது பொருளாதார வல்லரசாக வர வேண்டும். இவ்வாறு நினைப்பதன் மூலம் இந்நாடுகளும் பயன்பெற முடியும். ஆனால் இந்த நாடுகள் அதைச் சரியான முறையில் பயன்படுத்தினால் பாரியதொரு வெற்றியை அடைய முடியும். இது நாடுகளைப் பொருத்தே காணப்படுகின்றது.

  • இலங்கையின் அரசியலை நோக்கும் போது முஸ்லிம்கள் காலாகாலமாக ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கும் போக்கினை கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் 90 வீதத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஐ.தே.க.வை தலைமையாக கொண்ட முன்னணிக்கே வாக்களித்தனர். எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் இந்நிலை தொடர வேண்டுமா? முஸ்லிம்களது அரசியல் எவ்வகையில் பயணிக்க வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் நிலைமையைப் பார்க்கின்ற போது மிகவும் கவலைக் குரியதாகக் காணப்படுகின்றது. காரணம், முஸ்லிம் அரசியல் கட்சிகளினுடைய தலைமைகளை நம்புவதா? அல்லது இரண்டு பிரதான கட்சிகளில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளை நம்புவதா? அல்லது சர்வதேசத்தின் இஸ்லாமியத் தலைவர்களது செயற்பாடுகளை நம்புவதா? என்கின்ற இக்கட்டான நிலைமைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

பிரதான காரணம், முஸ்லிம் கட்சிகளில் உள்ள தலைமைத்துவங்கள் முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை சரியான முறையில் -இதுவரையில் சில கட்சித் தலைவர்கள் அடையாளப்படுத்தினாலும்- முற்று முழுதாக அவை அடையாளப்படுத்தப்படவில்லை. ஆகவே முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கை சற்று குறைவடைந்துள்ளது.

அதேநேரம் இரண்டு பிரதான கட்சிகளையும் பார்ப்பீர்களாக இருந்தால், இரண்டு கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்களை ஏமாற்றுகின்ற கட்சிகளாகத்தான் காணப்படுகின்றன. ஆகவே ஒன்று முஸ்லிம் கட்சிகளைப் பலப்படுத்துவதா? அல்லது ஏமாற்றுகின்ற இரண்டு கட்சிகளில் எது குறைவாக எம்மை ஏமாற்றுகின்றது என்று பார்ப்பதா? பொதுவாக இரண்டு கட்சிகளுமே எங்களை ஏமாற்றுகின்றன. ஐ.தே.க.வும் அடிக்கிறது. மஹிந்தவின் கட்சியும் எமக்கு அடிக்கிறது. யாருடைய கையால் மென்மையாக அடிவாங்கலாம் என்பதை வைத்தே நாம் முடிவெடுக்க வேண்டும்.

இவையெல்லாவற்றையும் தாண்டுவ தற்கு முஸ்லிம்கள் கல்வி ரீதியாக முன்னேற வேண்டும். கல்வி அறிவு இல்லாதது முஸ்லிம்களது இந்த அரசியல் நடவடிக்கைகளில் தெளிவாகவே புலப்படுகின்றது. இதுவரை காலமும் பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தி வந்த சமூகம் தொடர்ந்தும் பொருளாதாரத்தில் தங்கியிருக்க முடியாத ஒரு நிலை. மரபுவழிப் பொருளா தாரம் வீழ்ச்சியடைந்து விட்டதென்றே நான் கருதுகிறேன். ஆகவே பொருளாதாரத்தை சரியாக இலக்குவைத்து எங்களை தாக்குகின்றார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் நாம் அரசியலில் எழுச்சி பெற வேண்டுமாக இருந்தால் கல்வி கற்ற ஒரு சமூகம் உருவாக்கப்பட வேண்டும். முஸ்லிம்களுடைய கல்வி வளர்ச்சி மிக மிகப் பின்தங்கிய நிலையில் காணப்படுவதன் காரணமாக இந்த சமூகத்தை முன்னுக்குக் கொண்டு வருவதில், அரசியல்வாதிகளாக இருக்கலாம், கல்விமான்களாக இருக்கலாம் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

பல்கலைக்கழகக் கல்வியை எடுத்துக் கொண்டால் வெறும் 4.9 வீதமான முஸ்லிம் மாணவர்களே பல்கலைக்குத் தெரிவுசெய்யப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக கலைத் துறையில் 3 வீதம். சட்டத்துறையில் 2 வீதம். மருத்துவத் துறையில் 1.7 வீதம். பொறியியல் துறையில் 1.2 வீதம். இதுதான் எங்களுடைய பங்களிப்பு. இதை வைத்துக் கொண்டு எவ்வாறு இந்த சமூகத்தை முன்னகர்த்துவது? ஆகவே முஸ்லிம்கள் அரசியல் செய்வது தேவைதான். ஆனால் அரசியலில் காட்டுகின்ற ஆர்வத்தை சற்றுக் குறைத்து கல்வியில் ஆர்வம் செலுத்துவார்களாக இருந்தால் எதிர்காலத்தில் பாரிய மாற்றங்களை இந்நாட்டில் கண்டுகொள்ள முடியும்.

  • இலங்கையில் முஸ்லிம் சமூகம் இது வரை காலமும் எதிர்கொண்டு வந்த இன்னல்களை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்? முஸ்லிம்கள் மத்தியில் எப்படியான மாற்றங்கள் நிகழ வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் ஒரு நன் மதிப்பைப் பெற்ற சமூகமாகவே இதுகால வரையும் இருந்து வந்தது. முஸ்லிம்களால் ஏனைய சமூகத்தவர்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் கொடுக்கப்படவில்லை. 2500 வருட கால வரலாற்றைக் கொண்ட இந்நாட்டில் சுமார் 1200 வருட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்கள் இருக்கின்றனர். மொரோக்கோவிலிருந்தே எமது மூதாதையர்கள் இலங்கைக்கு வந்தார்கள். தங்களது வியாபார நடவடிக்கைகளை சிறுகச் சிறுக கரையோரப் பகுதிகளில் மேற்கொண்டு வந்த காலத்திலேயே போர்த்துக்கேயர்கள் இலங்கைக்கு வந்தார்கள். அவர்களுடைய பிரதான நோக்கம் ஒன்று வியாபாரம், மற்றையது மதம். அவர்கள் இலங்கைக்கு வந்தபோது முஸ்லிம்கள் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த காலமாக இருந்தது.

முஸ்லிம்களது வியாபார நடவடிக்கைகளை தம்வசப்படுத்த வேண்டுமெனில் அவர்களை அப்பிரதேசத்திலிருந்து அடித்து விரட்ட வேண்டியிருந்தது. ஆகவே முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் கரையோரப் பிரதேசங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள். தொடர்ந்து முஸ்லிம்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டினுடைய உட்பகுதிக்கு வந்து கண்டி போன்ற மத்திய மாகாணங்களில் குடியேறத் தொடங்கினார்கள்.

அதன் பின்னர் ஒல்லாந்தர்கள் வந்தார்கள். அவர்களுடைய காலகட்டத்திலும் முஸ்லிம்கள் பழிவாங்கப்பட்டடார்கள். அதன் பின்னர் ஆங்கிலேயர்கள் வந்தார்கள். அப்போது மத்திய மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் கிழக்குப் பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள்.  

இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்கள் இந்நாட்டு மன்னர்களுக்கு அல்லது பெரும்பான் மைக்கு எதிராக ஆயுதம் தூக்கிய வரலாறுகளோ அவர்களுக்கு எதிராகப் போராடிய வரலாறுகளோ இல்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய எழுச்சி, ஜேவிபி கிளர்ச்சி போன்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டிற்கு எதிராக ஆயுதம் தூக்கிய வரலாறுகள் இல்லை. ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கையில் ஏற்பட்ட மதம் சார்ந்த நடவடிக்கைகளின் பின்னணியில் முஸ்லிம்கள் என்று அழைக்கப்பட்ட ஒரு சில குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு 22 லட்சம் முஸ்லிம்களையும் இக்கட்டான நிலைக்கு தள்ளி விட்டது மிகவும் மனவேதனையளிக்கின்றது. இதில் சில அரசியல் நடவடிக்கைகள் இருப்பதாக சில கருத்துக்கள் வந்தாலும் இந்நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கிகள். ஆகவே ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார்கள்.

இதிலிருந்து விடுபட வேண்டுமானால் பல நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். ஒன்று முஸ்லிம் மக்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும். அது அரசியல் உள்ளிட்ட சகல விடயங்களிலும் இடம்பெற வேண்டும். கல்வி கற்ற ஒரு சமூகம் உருவாக வேண்டும். அதனூடாகத்தான் அநேகமான பிரச்சினைகளை அடையாளப்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரம் எதிர்காலத்தில் சமூகத்தில் விட்டுக் கொடுக்கக் கூடிய சில விடயங்களில விட்டுக் கொடுப்புக்களை செய்ய வேண்டியிருக்கிறது.

பல்லின சமூகத்தைக் கொண்ட நாட்டில் வாழும் போது பெரும்பான்மை சமூகத்தின் விழுமியங்களையும் அனுசரிக்க வேண்டும். கரைந்து விடாமல் கலந்து  வாழ வேண்டும். குறிப்பாக முஸ்லிம்களுடைய நல்ல பண்புகளைக் காட்ட வேண்டும். இதுவரை காலமும் நாங்கள் அதைக் காட்டவில்லை. ஆகவே எங்களது முன்மாதிரிகளைச் சரியாக இந்த சமூகத்திற்குக் காட்ட வேண்டும். எம்மிடத்தில் நல்ல பண்புகள் வருவதற்கு சமூகம் படிக்க வேண்டும். சிறையிலுள்ள 28 வீதமான கைதிகள் முஸ்லிம்கள். 10 வீத சனத்தொகையில் 28 வீதம் சிறைக்கைதிகள். எமது சமூகம் எங்கே உள்ளது? சமூகத்தை வழிநடாத்தும் மிகப் பாரிய பொறுப் பொன்றுள்ளது.  

About the author

Administrator

Leave a Comment