Features அரசியல் சிறப்புக்கட்டுரைகள்

அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் மூலோபாயமும் இலங்கை அரசியலும்

Written by Administrator

இப்கார் ஃபயூமி

20ஆம் நூற்றாண்டு உலக அரசியலில் நிகழ்ந்த மிக முக்கிய திருப்பம் காலனித்துவத்திலிருந்து மூன்றாம் மண்டல நாடுகள் விடுதலை பெற்றமையே. ஆசிய, ஆபிரிக்க அரசியல்வரலாற்றைப் பொறுத்தவரை அமெரிக்க விடுதலைப் போரா, ரஷ்யப் புரட்சியோ, பிரான்சியப் புரட்சியோ அவற்றுக்கு முக்கியமானதல்ல. காலனித்துவம், அடக்குமுறையிலிருந்து தம்மை தழைநீக்கம் (Emancipation) செய்தமையே அதற்கு முக்கியமானது. எவ்வாறாயினும் இன்றைய நாட்களில் காலனித்துவத்தை, அதன் விகாரமான விளைவுகளை வாதித்து வரும் பின்-காலனித்துவ ஆய்வாளர்களின்படி, “காலனித்துவம் இன்னும் முடிந்த ஒன்றல்ல. Aania Loomba  எனப்படும் பின் காலனித்துவ எழுத்தாளர் Post-Colonialism  என்ற காலனிய பயன்படுத்துவது நூறு வீதம் பொருத்தமானதல்ல. ஏனெனில் காலனித்துவம் இன்னும் முழுமையாக முடிவுக்கு விரவில்லை. எவ்வாறாயினும் காலனித்துவம் குறித்த பின்னைய அறிவியல் ஆய்வுகளைத் துல்லியமாக இனங்காண வேண்டும் என்ற ஒரு பரிமாற்ற வசதிக்காகவே காலனித்துவத்திற்குப் பிந்தைய (Post-Colonialism) என்ற பதத்தை நாம் கையாள வேண்டியுள்ளது என்கிறார். இதுதான் உண்மை.

பொதுவாக ஐரோப்பிய காலனித்துவத்திலிருந்து எமது நாடு அரசியல் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்தும் இன்னும் நம் தேசத்தின் மீது இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று சக்திகளும் கண்ணாங் கொத்திப் பாம்புகள் போன்று கண்வைத்துக் கொண்டே இருக்கின்றன. பிராந்திய புவி அரசியலின் ஆடுகளமாக இலங்கையை மாற்றுவதில் இவை மூன்றும் நீண்டகாலமாக குறியாய்ச் செயற்படுகின்றன.

சீனா-இந்தியா என்பன தமது பங்கிற்குப் போட்டி போட்டுக் கொண்டு இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த முயல்கின்றன. குறிப்பாக இலங்கையின் கேந்திரஸ்தானம் மற்றும் பொருளியல் வளங்கள் மீது செல்வாக்குச் செலுத்தும் நோக்கில் அவை முன்டியடித்துக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. உலகம் முழுக்கவுள்ள பொருளாதார வளங்களைக் குறிவைத்துச் சூறையாடும் அமெரிக்க வல்லாதிக்கப் போர் இன்னும் உலகில் பல்வேறு பாகங்களிலும் எரிந்துகொண்டே இருக்கின்றது. அதில் முக்கியமானது; இலங்கை மீதான அமெரிக்கக் குறி.

வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறு 2020 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவை உயர்த்தியது அமெரிக்கா. அமெரிக்கா தனது படைப் பலத்தை வலுப்படுத்தும் நோக்கில் மட்டுமன்றி தனது ஆதரவு நாடுகளின் படைப் பலத்தைப் பெருக்கவும் அதன் மூலம் குறிப்பிட்ட பிராந்திய புவி அரசியல் நலன்களை அடைவதையும் நோக்காகக் கொண்டது.

இந்து சமுத்திரம் அனைத்து உலக நாடுகளுக்கும் இன்றியமையாத ஒரு கேந்திரஸ்தானம். அதேபோன்று அதனையொட்டியுள்ள நாடுகளும் அமெரிக்காவின் நலன்களைக் காப்பதற்கு அவசியமானவை. தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளில் இலங்கையும் இந்தியாவும் பூகோள பிராந்திய நலன்களைப் பொறுத்தவரை வொஷிங்டனுக்குத் தேவையானவை. 2009 முதல் 2014 வரையான இலங்கை தொடர்பாக அமெரிக்கா கடைப்பிடித்த கொள்கை இறுக்கமானது. மஹிந்த ஆட்சியில் இலங்கையில் சீனாவின் மேலாதிக்கம் எல்லை மீறிச் சென்றமையே இதற்கான காரணம்.

ராஜபக்ஷவின் முதல் யுகத்தில் அமெரிக்கா குறித்துக் கைக்கொள்ளப்பட்ட அணுகுமுறையால் இரு நாடுகளின் உறவில் பெரு விரிசல்ளும் உராய்வுகளும் ஏற்பட்டன. 2009 இற்குப் பின்னர் 2015 வரை இலங்கைக்கு நேரடி நிதியாதரவளிப்பதை அமெரிக்கா நிறுத்தி வைத்தது. இலங்கை இராணுவத்திற்கு உதவியளிப்பதோடு வொஷிங்டன் உதவி குறுக்கப்பட்டது.

2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கை-அமெரிக்க உறவு மீளவும் வளரத் தொடங்கியது. இலங்கையில் படிப்படியாக அமெரிக்கச் செல்வாக்கு அதிகரித்தது. அமெரிக்க-இலங்கை கடற்படை கூட்டுப் பயிற்சி அதன் ஆரம்பமாக அமைந்தது.

2018 இல் இலங்கை கடற்படை வீரர்கள் 62 பேர் திருகோணமலைக் கடற்பரப்பில் ‘பலன்ஸ்டைல்-2018’ எனும் திட்டத்தின் கீழ் அமெரிக்க கடற்படை உயர் அதிகாரிகள் வழங்கிய பயற்சியில் கலந்து கொண்டனர்.

போருக்குப் பிந்திய இலங்கை அமெரிக்கர்களுக்கு இரண்டு வகையில் முக்கியமாகின்றது. நேரடியாக இலங்கையின் இராணுவ, அரசியல், பொருளாதாரத் துறைகளில் வொஷிங்டன் அகலக் கால்பதிக்க விரும்புகின்றது. அதேபோன்று இந்தோ-பசுபிக் கடல் பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் சீனாவின் கடல் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.

2019 இன் பாதுகாப்புத் துறை நிதியொதுக்கீடு இரண்டாவது குறிக்கோளைப் பெரிதும் இலக்கு வைத்துள்ளது. இந்து சமுத்திரத்தில் குறிப்பாக இந்தோ-பசுபிக் கடற் பிராந்தியத்தில் சீனாவுக்குச் சவாலாகவும் எதிராகவும் ட்ரம்ப் அரசு பின்பற்றும் கொள்கை இந்தோ-பசுபிக் மூலோபாயம் (Indo-Pacific Strategy) எனப்படுகின்றது. இந்தோ-பசுபிக் கடல் வலயத்தை அண்டியுள்ள அனைத்து நாடுகளுக்கும் இராணுவ, பொருளாதாரத் துறை சார்ந்து நிதியாதரவு வழங்குவதன் மூலம் அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப வளைத்துப் போடும் தந்திரோபாயமே. இந்தோ-பசுபிக் திட்டமாகும். இது ட்ரம்பின் வெளிநாட்டுக் கொள்கையின் ஒரு பகுதியாகும். சீனாவின் செல்வாக்கைக் கவிழ்ப்பதற்கான வொஷிங்டன் எதிர்ப்புத் திட்டமாகும்.

வொஷிங்டன் முன்னெடுத்துள்ள Indo-Pacific Strategy  4.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடாகக் கொண்டுள்ளது. இலங்கை, சிங்கப்பூர், நேபால், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளை அமெரிக்காவின் பக்கம் வளைத்துப் போடும் திட்டமே இது. ஏற்கனவே பங்களாதேஷின் ஷெய்க் ஹஸீனா அரசாங்கத்திற்கு 319 மில்லியன் டொலர்களும் நேபாளத்திற்கு 17 மில்லியனும் இலங்கைக்கு 40 மில்லியன் டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மோடியின் அரசாங்கத்திற்கு 450 மில்லியன் டொலர்கள் ஒதுக்குவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாகிஸ்தான், மியன்மார் ஆகியன கவனத்திற் கொள்ளப்படவில்லை. காரணம் அவை முழுக்க முழுக்க சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றைத் தம் பக்கம் இழுப்பது வொஷிங்டனுக்கு தற்போதைய சூழலில் பெரும் சவாலாகும்.

கடந்த ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளின் கடற்படை அதிகாரிகளுக்கான உச்சிமாநாட்டில் 4.1 மில்லியனுக்கு மேலதிகமாக 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் எனவும் வொஷிங்டன் உறுதியளித்துள்ளது. மேலே கூறப்பட்ட நாடுகளுக்கு அப்பால் இந்தேனேசியா, மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், பசுபிக் தீவுகள் என்பனவும் இந்தோ-பசுபிக் தந்திரோபாயத் திட்டத்தில் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

இந்நாடுகளோடு இரு தரப்பு மற்றும் பல்தரப்பு இராணுவ மற்றும் இராஜ தந்திரப் பேச்சுவார்த்தைகளை வொஷிங்டன் நடாத்தி வருகின்றது. 2018 ஆகஸ்ட் 17 இலிருந்து அமெரிக்க ராஜாங்கப் பேச்சாளர் ஈத்தர் நோட் இத்தகைய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றார். இதில் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கப் போவதாக வொஷிங்டன் அறிவித்துள்ளது. கடல்கள் கண்காணிப்புக்கே இவ்வுதவி வழங்கப்படுவதாக பொதுவாக அறிவிக்கப்பட்டாலும், அதில் கடல்சார் கண்காணிப்பு, மனிதாபிமான உதவிகள், அனர்த்த முகாமை, எல்லை கடந்த குற்றச் செயல்களைத் தடுத்தல், அமைதிப் படையை நிறுத்தும் ஆற்றலை வளர்த்தல் என்பனவும் அடங்கும்.

எவ்வாறாயினும், இலங்கையின் கடற்படையை நவீன போர்ப் பயற்சி கொண்டதும் படைக்கலன்கள் கொண்டதுமான அலகாகப் பயிற்றுவிப்பதே ஒதுக்கப்படும் நிதியின் முக்கிய நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது.

வங்காள விரிகுடாவில் அமெரிக்கா சார்பாக இலங்கைக் கடற்படையை நிறுத்துவது குறித்து ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளது. இதேவேளை, அமெரிக்கா தனது கடலோரக் காவற் படையிலிருந்து நீக்கப்பட்ட போர்க் கப்பலொன்றையும் இலங்கைக்கு வழங்கியுள்ளது. USCE Sermon  எனப்படும் இக்கப்பல் 378 அடி நீளமானது. 1967 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. வியட்நாம் போரின்போது எதிரிகளின் கப்பல்களை மூழ்கடிக்கப் பயன்படுத்தப்பட்டது. நடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்கக் கடற்படையினரால் பயன்படுத்தப்பட்ட இக்கப்பல் இலங்கை  கடற் படைக்கு 2018 இல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏலவே, வொஷிங்டன் 2004 இல் கடற்படைக்கு வழங்கிய கப்பல் இப்போதும் SLNS  எனும் பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சீனாவின் செல்வாக்கை உடைத்து, ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கிலேயே அமெரிக்கா இத்தகைய இராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகின்றது. வெளிநாடுகள் தருவதையெல்லாம் வாங்கிக் கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு திடமானதும் தெளிவானதுமான ஒரு நெளிநாட்டுக் கொள்கை இல்லாமையால் அது எல்லாப் பக்கமும் சாய்ந்து கொண்டிருக்கின்றது.

இந்தியப் பெருங்கடலைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா-இந்தியா ஒரு பக்கம், சீனா இன்னொரு பக்கம் என நடாத்தும் கடல் ஆதிக்கப் போட்டியில் இலங்கை இழுபட்டுச் செல்கிறது. இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் படைக் கலன்களை விற்பதற்கு மறுப்புத் தெரிவித்து வந்த நாடுகள் தற்போது அவற்றை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளன. அமெரிக்காவின் பூகோள பொருளாதார, அரசியல் நலன்களை முன்னிறுத்தியே இவை அனைத்தும் நிகழ்ந்து வருகின்றன.

MCC உடன்படிக்கை

மிலேனியம் சவால் ஒத்துழைப்பு (MCC) 2018 செப்டம்பரில் இலங்கைப் பிரதமர் ரணிலுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டது. 05 வருட அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இலங்கை அரசாங்கத்திற்கு 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவித் தொகையாக வழங்க வொஷிங்டன் முன்வந்தது. இது இலங்கை பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும் என ரணிலும் அவரது ஸஹாக்களும் வாதிட்டு வந்தபோதும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த மஹிந்தவும் அவரது பக்தர்களும் MCC ஐக் கடுமையாகச் சாடியதோடு அது அமெரிக்காவின் தலையீடு என்றும் இலங்கையின் இறைமைக்கு விடுக்கப்படும் ஒரு பாரிய அச்சுறுத்தல் எனவும் கூக்குரலிட்டனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு சற்று முன்னர் MCC ஐ ரணில் அரசு வாபஸ் வாங்க வேண்டும் என ஒரு மதகுருவை களமிறக்கி உண்ணாவிரதத்தில் ஈடுபடுத்தினர். அதன் மூலம் பெரும் தொகை வாக்குகளை அவர்களால் கையகப்படுத்தவும் முடிந்தது. இப்போது அதைத் திருத்தம் செய்து கைச்சாத்திடப் போவதாக சில ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றனர்.

USAID போல வறுமை ஒழிப்புக்கான ஒரு சுதந்திரமான பொறிமுறையே MCC என வாதிக்கப்படுகின்றது. அது ஒரு பூகோள மிஷன் எனவும் கூறப்படுகின்றது. 2004 ஆம் ஆண்டிலிருந்து 30 நாடுகளுக்கு 13 பில்லியன் டொலர்களை MCC வழங்கியுள்ளது. இந்தத் தொடரிலேயே இலங்கை அரசாங்க்திற்கும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், பிற நாடுகளின் முன்னேற்றத்தில் அமெரிக்காவுக்கு ஒருபோதும் தன்னலமற்ற  அக்கறை இருந்ததே கிடையாது.

இந்நிலையில் பிறநாடுகள் மீது தனது பிடியை இறுக்கவும் அந்நாடுகளின் வளங்களைத் தனது நலன்களுக்கேற்ப கையாளவுமே பொருளாதார உதவி என்ற தோரணையில் வொஷிங்டன் தலையீடு செய்கின்றது. இந்த உண்மையை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளப் போவதில்லை.

SOFA  ஒப்பந்தம்

Status of Forces Agreement (SOFA) எனப்படும் இலங்கை அரசாங்கத்திற்கும் வொஷிங்டனுக்கும் இடையில் உத்தேசிக்கப்பட்டுள்ள மற்றொரு ஒப்பந்தமும் பெரும் சர்ச்சையைக் கிளறியுள்ளது. அமெரிக்க துருப்பினர் அவர்களது இராணுவச் சீருடையுடன் தமது விமானங்களில் இலங்கைக்கு தாம் விரும்பும் நேரத்தில் வந்திறங்கலாம் எனக் கூறும் இவ்வொப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் இதுவரை கைச்சாத்திடவில்லை. இலங்கையின் இறைமை மற்றும் குற்றவியல் நியாயாதிக்க எல்லையை மீறும் வகையிலான ஒரு ஒப்பந்தமாகவே SOFA பார்க்கப்படுகின்றது.

1995 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் இடம்பெற்ற ஒப்பந்தமொன்றை இற்றைப்படுத்தவே தற்போது வொஷிங்டன் முயற்சிப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். 1995 ஆம் ஆண்டிலிருந்தே SOFA விற்கான அடித்தளம் இடப்பட்டு வருகின்றது.

அமெரிக்கப் பிரஜைகளுக்கு, குறிப்பாக இராணுவத் துறை அதிகாரிகளுக்கு ராஜதந்திர சலுகைகளை (Diplomatic Privilege) இவ்வொப்பந்தம் பரிந்துரைப்பதால் நிச்சயம் இலங்கையின் இறைமைக்குப் பெரும் ஆபத்தாக முடியும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவின் இராணுவ உதவிகளுக்கோ, நிதி உதவிகளுக்கோ ஏமாந்து நாட்டின் இறைமையைக் கேள்விக்குள்ளாக்கும் எந்த ஒப்பந்தத்திலும் அரசாங்கம் ஈடுபடத் தேவையில்லை.

ACSA உடன்படிக்கை

The Acquisition and Cross Services Agreemnet (ACSA) 2007 இல் முதலில் கைச்சாத்திடப்பட்டது. 2017 இல் புதுப்பிக்கப்பட்டது. மார்ச் 05 2007 இல் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ரொபட் ஓ பிளக் மற்றும் இன்றைய ஜனாதிபதியும் அன்றைய பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ஆகியோரிடையே இவ்வொப்பந்தம் கைசாத்தாகியது. 2017 மார்ச் 06 இல் இவ்வொப்பந்தத்தின் காலம் முடிவுற்றது. இரு நாடுகளுக்கிடையில் இராணுவக் கூட்டுறவை அடிப்படையாகக் கொண்டே ACSA உருவாக்கப்பட்டது.

படைக்கலன் சேவை, உளவுத் தகவல், விமான நிலையங்களைப் பயன்படுத்தல், அமெரிக்க இராணுவத்தினர் வருகை தரல், போர்க் கப்பல்களை இலங்கைத் துறைமுகங்களில் நிறுத்தி வைத்தல் என்பவற்றுக்கு அவ்வொப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் உடன்பட்டிருந்தது. இதன் புதிய முகமே SOFA என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கையை மென்மேலும் இராணுவமயமாக்கும் செயற்பாடுகளில் வொஷிங்டன் இறங்கியிருப்பது ஒன்றும் இலங்கையின் நலன்களுக்கல்ல. 2009 இற்குப் பிந்திய ஒவ்வொரு ஆண்டிலும் சர்வதேச அல்லது தெற்காசியப் பிராந்திய பாதுகாப்பு மாநாடு ஒன்றிற்கு இலங்கை அனுசரணை வழங்கி வருகிறது. 2018 இல் நடைபெற்ற கொழும்பு மாநாட்டில் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர். இந்து சமுத்திர கடல் வலயத்தில் அமெரிக்கா அகலக் கால் பதிப்பதற்கு நடைமுறைப்படுத்தி வரும் இந்தோ-பசுபிக் மூலோபாயத்தின் ஒரு பகுதியே வொஷிங்டன் இலங்கைக்கு வழங்கி வரும் இராணுவ மற்றும் படைக்கலன் சார்ந்த உதவியாகும். அதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.

சீனாவுக்கு எதிரான அம்மூலோபாயத் திட்டத்தின் முக்கிய கூறுகளே SOFA, ACSA  மற்றும் MCC ஒப்பந்தங்களாகும். இன்னொரு புறம் இலங்கை துறைமுகங்களில் அவ்வப்போது தரித்து நிற்கும் சர்வதேச நாடுகளின் போர்க் கப்பல்கள் சொல்லும் செய்தியும் நமக்கு சாதகமானதல்ல.

பல்வேறு நாடுகளின் போர்க் கப்பல்கள் அவ்வவ்போது இலங்கைத் துறைமுகங்களில் தரித்து நிற்பது எமது இறைமைக்கும் சுயாதீனத்திற்கும் விடுக்கப்படும் பேரச்சுறுத்தல் ஆகும். திட்டமிட்ட வகையில் இலங்கையை சர்வதேச சக்திகள் இராணுவப் பொறியொன்றிற்குள் சிக்கவைக்க முயல்கிறதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இந்தியாவின் 82 போர்க் கப்பல்களும் பாகிஸ்தானின் 24 போர்க் கப்பல்களும் ஜப்பானின் 67 போர்க் கப்பல்களும் பங்களாதேஷின் 23 போர்க் கப்பல்களும் அமெரிக்காவின் 18 போர்க் கப்பல்களும் சீனாவின் 31 போர்க் கப்பல்களும் ரஷ்யாவின் 26 போர்க் கப்பல்களும் இலங்கைத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.

ஆய்வாளர் கொலிப்கே குறிப்பிடுவது போன்று சர்வதேச சக்திகளின் இராணுவமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை அகப்பட்டு விட்டதோ என்ற அச்சத்தையே இந்நிலமைகள் உருவாக்கி வருகின்றன. உண்மையான தேசப்பற்றுள்ள எந்த அரசாங்கமும் எமது தேசத்தின் இறைமைக்கும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு ராஜதந்திர நகர்வுகளிலும் ஈடுபடக் கூடாது. பொருளாதார உதவிக்கு ஏமாந்து பிற நாடுகள் இலங்கை மீது செல்வாக்குச் செலுத்தும் நிலைமைக்கு நம்மை நாம் ஆக்கிக் கொள்ளக் கூடாது. இதுவே இலங்கையர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

About the author

Administrator

Leave a Comment