சவூதியில் சட்டபூர்வமாகக் கொண்டாடப்பட்ட காதலர் தினம்

15

கடந்த பெப்ரவரி 14 இல் சவூதி அறேபியாவில் காதலர் தினம் மிகப் பிரமாண்டமாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்பட்டது. கடந்த ஆண்டு வரை ஹராமாக்கப்பட்டிருந்த காதலர் தினக் கொண்டாட்டம் இம்முறை சட்டப்படி கொண்டாடப்பட்டுள்ளது. நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் மக்கா ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் முப்தி அஹ்மத் காஸிம் அல் ஜம்தி இது குறித்து வெளியிட்டுள்ள பத்வா இளைஞர்களையும் யுவதிகளையும் உற்சாகப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

“காதலர் தினத்தைக் கொண்டாடுவது இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணானதல்ல. அத்தகைய கொண்டாட்டம் ஓர் உலகளாவிய நிகழ்வாகும். அது அறபு முஸ்லிம் உலகிற்கு மட்டும் உரியதல்ல” என்று முப்தி அஹ்மத் காஸிம் பத்வா வெளியிட்டுள்ளார்.

இதுவரை காலமும் விஷேட தினங்களைக் கொண்டாடுதல், பிறந்த நாளைக் கொண்டாடுதல், காதலர் தினம் கொண்டாடுதல் என்பன மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை (ஹராமானவை) என்ற பத்வாவே அமுலில் இருந்தது. 2018 இல் முஹம்மத் பின் சல்மான் பதவிக்கு வந்ததை அடுத்து முன்னைய பத்வாக்கள் அனைத்தும் மாற்றப்பட்டு வருவதாகவும் நாட்டை நவீனமயமாக்கும் முஹம்மதின் திட்டத்தின் ஒரு பகுதியே இது என்றும் கூறப்படுகின்றது.