சாய்ந்தமருது சொல்லும் செய்தி

10

கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதுக்கான புதிய நகர சபையை உருவாக்குவதற்கான சாய்ந்தமருது மக்களின் மூன்று தசாப்த கால முயற்சி வெற்றி அளித்திருக்கிறது. சாய்ந்தமருது மக்களின் கோரிக்கைகளின் பின்னாலுள்ள நியாயங்கள் தொடர்பிலும் அவர்கள் தமக்குக் கிடைத்த வெற்றியைக் கொண்டாடுவது தொடர்பிலும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது.

சாய்ந்தமருது புதிய நகர சபை உருவாக்கம் பல செய்திகளை தந்துள்ளது. முதலில் இது முஸ்லிம் தனிக்கட்சிக்கான கோட்பாட்டின் அடிப்படையையே சிதைத்து விடும் விடயமாகவும் நோக்கப்பட முடியும். ஹக்கீமையும் ரிஷாடையும் முஸ்லிம் சமூகத்திலிருந்து தூரமாக்குவதற்கான பல முயற்சிகள் பேரினவாத அரசுகளினால், குறிப்பாக ராஜபக்ஷ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஹக்கீமுக்கும் ரிஷாதுக்கும் தமது அரசாங்கத்தில் பங்கில்லை என ஜனாதிபதித் தேர்தலின் போதே சொல்லப்பட்டு வந்தது. அடிப்படைவாதிகளுக்கு தாம் இடம் கொடுக்கப் போவதில்லை என இவர்கள் இருவரையும் குறிப்பிட்டுப் பேசினாலும் அது முஸ்லிம் சமூகத்தை அடையாளப்படுத்திப் பேசியதாகவே முஸ்லிம் சமூகம் புரிந்து கொண்டது. இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்துக்கான அரசியல் தலைமையை இல்லாமலாக்குவதற்கான ஒரு காய் நகர்த்தலாகவும் சாய்ந்தமருது நகர சபையை நோக்க வேண்டியிருக்கிறது.

முஸ்லிம் அரசியல் தலைமைகள் எதுவும் செய்யவில்லை என்று சொல்வதில் நியாயங்கள் இருக்க முடியும். அதற்கு அவர்களிடமும் காரணங்கள் இருக்க முடியும். அதற்காக முஸ்லிம்களுக்கான அரசியல் தலைமைகளையே இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளுக்குத் துணை போவது முஸ்லிம் சமூகம் தன்னைத் தானே அரசியல் அநாதையாக்கிக் கொள்வதற்கான முன் முயற்சியாகவே அமையும். முஸ்லிம் தலைவர்களுக்கூடாக வந்தால் எதையும் செய்ய மாட்டோம், அவர்களை உதறித் தள்ளி விட்டு எங்களுடைய வழியில் வந்தால் உங்களுக்கு நாங்கள் எதனையும் தருவோம் என்கின்ற செய்தியையும் இது சொல்கிறது.

இப்படியாக ஒருபுறம் சாய்ந்தமருது நகர சபை இன்னொரு புறம் பேருவளை நகர சபை என ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் தத்தமது பிரச்சினைகளை முன்வைத்து அரசியல் செய்யத் தொடங்கினால் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தை வழிநடத்திச் செல்வது எப்படி என்ற கேள்வி தொடர்ந்து வரும். பிரதேசங்களைத் தாண்டி முஸ்லிம்களுக்கு வருகின்ற பொதுவான பிரச்சினைகளை யார் கையாளுவது என்பதற்கு விடை இல்லாமல் போகின்ற நிலை ஏற்படும். சின்னச் சின்னப் பிரச்சினைகளை முன்வைத்து வெற்றி பெற்றுவிட்டு முக்கியமான பெரிய பிரச்சினையில் கோட்டை விட்டு விட வேண்டிய நிலையும் வரும். நகர சபை, மாநகரசபைகள் எல்லாம் தனியாக இருந்து பெற்றுக் கொண்டாலும் இணைந்த மாகாண சபையா, தனியான மாகாண சபையா என்று வரும் போது, பேசுவதற்கு ஆளின்றி தருவதைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை தோன்ற முடியும்.

முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் இதில் செய்தி இருக்கிறது. மக்களின் தேவைகளை, தமக்கு வாக்களித்தவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாமல் இழுத்தடித்து காலத்தைக் கடத்தும் போது மக்கள் தமக்கான தீர்வுகளை தம்மை முன்னிலைப்படுத்திப் பெற்றுக் கொள்ளத் துணிவார்கள். அப்போது அவர்களை சமூக ரீதியாகச் சிந்திக்கவில்லை என்று பழி சுமத்த முடியாது. முஸ்லிம் சமூகத்திலிருந்து முஸ்லிம் அரசியல்வாதிகளை மீறிச் செயற்படக் கூடியவர்கள் உருவாகி விட்டார்கள் என்ற கடுமையான செய்தியை இது அரசியல்வாதிகளுக்குச் சொல்லுகிறது.

சிவில் சமூகத்துக்கும் இதில் ஒரு செய்தி இருக்கிறது. முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் பலமான சிவில் அமைப்பு கட்டியெழுப்பப்பட வேண்டும். அவை அரசியல் ரீதியாக காய்நகர்த்தக் கூடிய பலம் பெற்றிருக்க வேண்டும்.

சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனத்துக்குச் சொல்ல வேண்டிய செய்தி என்னவென்றால், இங்கு மக்களின் சமய உணர்வை அரசியல் மயப்படுத்தாமல் கவனிக்க வேண்டியது இங்குள்ள மார்க்க அறிஞர்களின் பொறுப்பாகும். வாக்குகளைத் தருவதாக வாக்குறுதியளி்த்து விட்டோம், இனி அதனை நிறைவேற்றுவது மார்க்கக் கடமை என்றில்லாமல் மக்கள் சுதந்திரமாக தமது வாக்குகளைப் பயன்படுத்துவதற்கு மக்களுக்குள்ள உரிமையில் கவனம் செலுத்த வேண்டும்.