நிகாப் விவகாரம்: சட்டத்தைக் கையிலெடுக்க அரசாங்கமே அனுமதிக்கிறதா?

0
2

மாஸ் எல் யூசுப்

முகத்தை முழுமையாக மறைக்காதது குறித்த சட்டத்தை இந்தப் பத்தி கேள்விக்குட்படுத்தவில்லை. இந்தச் சட்டத்தின் சூழ்நிலைகளையும் விளைவுகளையும் ஆராய்வதே இதன் நோக்கம்.

ஒரு ஆடை அல்லது ஹெல்மெட் அல்லது வேறு எந்த வகையிலும் முகத்தை மூடுவது ஒரு நபரின் அடையாளத்தை வெளிப்படுத்துவதில்  தடையாக அமையும் என்று கூறி ஆரம்பிக்கிறேன்.  எனவே, அது அகற்றப்பட வேண்டும். ஆரம்பத்தில் தேசிய பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதையும் குறிப்பிடுகிறேன். இந்தச் சூழலில், அடையாளம் காணும் நோக்கத்திற்காக ஒரு பெண் தனது முகத்தை வெளிப்படுத்த வேண்டியேற்பட்டால், அவ்வாறு அடையாளம் காணுவதற்கு அவர் ஒத்துழைப்பது அவசியமாகும்.

2009 ல் முடிவடைந்த கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த ஒரு போரை அனுபவித்த ஒரு நாடு எங்களுடையது. மிருகத்தனமான இந்தக் குழப்ப காலத்தில் வாழ்ந்தவர்கள் முழு நாடும் எவ்வாறு மரண பயத்தில் உறைந்திருந்தது என்பதை நினைவு கூர்வார்கள். துணிச்சலான எமது ஆயுதப்படைகள் அப்போது உலகின் கொடூரமான பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றை எதிர்த்துப் போராடின. அந்த நேரத்தில் தற்கொலை குண்டுதாரிகளும் இருந்தனர். யுத்த காலப்பகுதியில் அவர்கள் செய்த அட்டூழியங்கள் நாட்டின் உள்கட்டமைப்பை அழித்து அப்பாவி மனித உயிர்களையும் கொடூரமாக ஒழித்தன. ஒவ்வொரு தாக்குதலுடனும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அவர்களது தற்கொலை குண்டுதாரிகள் நடப்பு ஜனாதிபதியான மறைந்த ஆர். பிரேமதாசாவின் உயிரைக் கூட பறிக்கத் தயங்காத அளவுக்கு அவர்கள் மிகவும் பலம் பெற்றிருந்தனர்,

சிவப்பு வண்ண குறியீடு

நாடு முழுவதும் பாதுகாப்புத் தடைகளும் சோதனைச் சாவடிகளும் நிறுவப்பட்டிருந்தன. தனியார் வாகனங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் ஏனைய வர்த்தக வாகனங்கள்  சோதனையிடப்படுவது தினசரி நிகழ்வாக இருந்தது. தேடுதல் நடவடிக்கைகள் சகஜமாயின. நாடு பாதுகாப்பு நிலையின் உச்சத்தில் இருந்தது. இதுவே அமெரிக்காவாக இருந்திருந்தால், அவசரகால நிலை ‘கடுமையான ஆபத்து“ நிலை எனப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும். ஐந்து வர்ணங்களில் குறியிடப்பட்ட அச்சுறுத்தல் அளவுகளைக் கொண்ட அவர்களின் அச்சுறுத்தல் நிலை காட்டியில், ‘சிவப்பு” வர்ணக் குறியிடப்படுவது மிக உயர்ந்த அச்சுறுத்தல் நிலைக்காகும். இதுபோன்ற சோதனைக் காலங்களையும், கிட்டத்தட்ட ஒரு சிவப்பு எச்சரிக்கைச் சூழ்நிலையையும் அனுபவித்த இந்த நாடு சில முஸ்லிம் பெண்கள் அணிவது போல முகத்தை முழுமையாக மூடி அணிவதை ஒருபோதும் தடைசெய்யவில்லை.

ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த வெறுக்கத்தக்க தாக்குதலால் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2 (அத்தியாயம் 40) (திருத்தப்பட்டது) ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள தத்துவத்தின்படி, ஏப்ரல் 22, 2019 இன் 2120/3  ஆம் இலக்க வர்த்தமானி மூலம், பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பாகத்தின் விதிகள் செயல்பாட்டுக்கு வரும் என்று பிரகடனப்படுத்துகிறார். சாதாரண பாஷையில் நாட்டில் அவசரகால நிலை அமுலுக்கு வருகிறது.

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 5 வது பிரிவின் கீழ்  ஏப்ரல் 22, 2019 இன் 2120/5 ஆம் இலக்க வர்த்தமானி மூலம் அவர் மேலும் சில விதிமுறைகளை வெளியிட்டார். இந்த விதிமுறைகள் 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசரகால (நானாவித ஒழுங்குகள் மற்றும் அதிகாரங்கள்) ஒழுங்குமுறை என அழைக்கப்பட்டது.

முகத்தை முழுமையாக மறைப்பதற்கான தடை

2019 ஏப்ரல் 29 இன் 2121/1 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலைத் தொடர்ந்து 2019 ஏப்ரல் 22 இன் 2121/5 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானியில் சில திருத்தங்களை அவர் கொண்டு வந்தார். பின்வரும் ஒழுங்குவிதிகளை 32 ஆம் ஒழுங்குவிதிக்கு அடுத்ததாக உள்ளிணைத்து 32 A எனும் புதிய ஒழுங்குவிதியினூடாக அதனைத் திருத்தினார்.

32 A (1)

(அ) எந்தவொரு நபரும் எந்தவொரு பொது இடத்திலும் எந்தவொரு ஆடை, உடை அல்லது முழு முகத்தை மறைக்கும் அத்தகைய எதனையும் ஒரு நபரை அடையாளம் காண எந்த வகையிலும் தடையாக இருக்கும் வகையில் அணியக்கூடாது.

(ஆ) இந்தப் பந்தியின் தேவைக்காக –   “முழு முகம்” என்பது காதுகள் உட்பட ஒரு நபரின் முழு முகத்தையும் குறிக்கிறது.

சரி, ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் முழு முகங்களையும் மறைத்திருந்தார்களா? தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பல்வேறு வீடியோ காட்சிகளிலிருந்து இதுபோன்ற எந்த ஆதாரத்தையும் பெற முடியாது. இங்கே கேள்வி என்னவென்றால், முகத்தை மறைப்பது ஏன் தடை செய்யப்பட்டது? மேலும், இவ்வளவு விரைவாக தடைசெய்யப்படக் காரணம் என்ன ?.

பெண்களின் மிகவும் அற்பமான எண்ணிக்கையினரே முழுமையாக முகத்தை மறைக்கிறார்கள். தாக்குதல் நடத்தியவர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்களை அணிந்து பயணப் பொதிகளைச் சுமந்து வந்ததால் உண்மையில் இவை தான் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

அரசாங்கமும் ஊடகமும்

இந்த நாடு அதிகாரிகளின் பல அசட்டுத்தனங்களை அண்மைக் காலங்களில் சந்தித்துள்ளது. இதன் ஒரு அம்சம்தான், முகமூடி தடை குறித்து பொதுமக்களுக்கு அரசாங்கம் தெளிவாக விளக்கத் தவறியது. குறிப்பாக முஸ்லிம் பெண்களின் நடைமுறை தொடர்பாக.

‘புர்கா’, ‘நிகாப்’, ‘ஹிஜாப்’, முந்தானை – இந்த அனைத்து சொற்களின் அர்த்தமும் தெரியுமா என்று ஒரு சராசரி இலங்கை சிங்கள அல்லது தமிழ் நபரிடம் கேட்டுப் பார்க்க வேண்டும். இவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் அவர்களுக்குத் தெரியுமா? பதில் நிச்சயமாக வெறுமையாகத் தான் இருக்கும். காரணம், அதனைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. இனி, அவர்களின் அறியாமை நியாயமானது தானே.

பொதுமக்கள் இதை அறியாதபோது, சட்டங்களுக்கூடாக நாட வருவது என்ன என்பது பற்றி மக்களுக்கு விளங்க வைப்பது அரசாங்கத்தின் பொறுப்பல்லவா? இந்த நாட்டின் குடிமக்கள் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டாலும்,  தடையின் தன்மை பற்றிய விரிவான தகவல்களை அறிய பொதுமக்கள் வர்த்தமானி அறிவிப்பை அணுகவில்லை. திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ‘முழு முகம்’ என்பதன் பொருள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். எனவே, தடையின் தன்மை தொடர்பாக அவர்கள் அறியாமலேயே இருக்கிறார்கள்.

இது தொடர்பாக மக்களின் அறியாமையை நன்கு அறிந்து மக்களைத் தெளிவூட்டுவது ஊடகங்களின் கடமையில்லையா? இது போன்ற மிக முக்கியமான நேரத்தில், நிலைமையை மோசமாக்குவது, ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. ‘புர்கா’, ‘நிகாப்’, ‘ஹிஜாப்’, ‘ஹெட் ஸ்கார்ஃப்’ அல்லது முந்தானை ஆகியவற்றைக் குறிக்கும் விஷயங்களைப் பற்றி பொதுமக்களை அறிவூட்டுவதில் அவர்கள் அக்கறை காட்டவில்லை.

பயம், குழப்பம், பாரபட்சம்

இந்த விஷயம் ஒரு நுட்பமான மத-கலாச்சார நடைமுறையை கையாள்கிறது. ஒரு நபர் தனது சுய மரியாதை, கண்ணியம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்குத் தேர்ந்தெடுக்கும் வழிமுறையை இது பாதிக்கிறது. ஒருவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சி ஒரு சமூகத்தைப் பிரதிபலிப்பதல்ல. இது முற்றிலும் தனிப்பட்ட முடிவு.

மேலும், இது ஒரு சிறுபான்மை சமூகத்திற்குள் சிறுபான்மையினரின் நடைமுறையை பாதிக்கின்ற ஒன்று. இந்த அவசரகால திருத்தங்களால் பொதுமக்களின் மனதில் ஏற்பட்ட குழப்பம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. முகத்தை மறைக்காத முஸ்லிம் பெண்கள் இந்த நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதுமில்லாதவாறு துன்புறுத்தப்பட்டுள்ளனர். இந்த அப்பாவிப் பெண்கள் மீது அள்ளி வீசப்படும் மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், அவமானங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நம்மை நாகரிக மக்கள் என்று நாம் அழைத்தால் இந்த நிலைமை இந்த வழியில் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது.

முஸ்லிம் பெண்களை ஆண்கள் பல இடங்களில் உடல் ரீதியாக கையாண்டதாக பல தகவல்கள் வந்தன. முகம் காணக்கூடிய முஸ்லிம் பெண்களுக்கு சூப்பர் மார்க்கெட்டுகள், பொது நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் அனுமதி மறுக்கப்பட்டன. ​​அவர்கள் தாவணி அல்லது ஹிஜாப் அல்லது சில சந்தர்ப்பங்களில் சால்வையை தலையில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரினர். இது இந்த மக்களின் அடிப்படை உரிமைகளை முற்றிலும் மீறுவதாகும். அரசியலமைப்பு கூறுகிறது:

12 (3) எந்தவொரு நபரும், இனம், மதம், மொழி, சாதி, பாலினம் அல்லது அத்தகைய எந்தவொரு அடிப்படையிலும், கடைகள், பொது உணவகங்கள், ஹோட்டல்கள், பொது பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் அவரது சொந்த மதத்தின் பொது வழிபாட்டுத் தலங்கள் எவற்றையும் அணுகுவதில் எந்தவொரு கட்டுப்பாட்டுக்கும் அல்லது நிபந்தனைக்கும் உட்படுத்தப்படக்கூடாது.

அரசாங்கத்தின் இந்த பொறுப்பற்ற செயலும் ஊடகங்களின் மிகவும் பக்கச்சார்பான அணுகுமுறையும் முஸ்லிம் பெண்களின் மீது பாரபட்சம் காட்டுவதில் பங்களித்தன. மேலும், இவை இலங்கையில் இனங்களுக்கிடையிலான உறவுகளை விரைவாக மோசமடையச் செய்தன. முஸ்லிம்களை இந்த வழியில் ஓரங்கட்டுவது அவர்களை தீவிரவாதிகளின் அரவணைப்பிற்குள் தள்ளுவதாகவே அமையும். இந்த நாடு இந்தப் பயங்கரமான பாதையில் மீண்டும் செல்ல விரும்பும் என  நான் நினைக்கவில்லை.

சில முற்போக்குக் குழுக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துள்ளன. இது தற்செயலாக அல்ல, தெளிவான ஒழுங்கமைப்பின் பின்னணியிலேயே இது நடந்திருக்கிறது. தனது குடிமக்களின் உரிமைகளை மீறுபவர்களின் விடயத்தில் எதுவும் செய்யாமல் இருப்பதன் மூலம் அரசாங்கம் இதுபோன்ற செயல்களைத் தொடர அனுமதிக்கிறதா ? ஒரு பகுதியினர் இன்னொரு சாராருக்கு எதிராக தடையின்றிச் செயல்பட அரச இயந்திரங்கள் ஊக்குவிக்கின்றனவா? இந்த சூழ்நிலையில் சட்டத்திற்கான கண்ணியத்தை நிலைநாட்டவும், சட்டம் ஒழுங்கை சமத்துவத்துடன் பராமரிக்கவும் அரசாங்கம் எப்போது முன்வரும்?

“12. (1) சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள், சட்டத்தில் சகலருக்கும் சமமான பாதுகாப்பிற்கு உரிமை உண்டு. ” என அரசியலமைப்பு கூறுகிறது என்பதை அரசாங்கம் அறியவில்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here