Features சமூகம்

மிதமிஞ்சிய அழகு சாதனப் பொருட்களின் பாவனையால் வரும் ஆரோக்கிய சீர்கேடுகள்

Written by Administrator

கலாநிதி பரீனா ருஸைக்

இன்று இயற்கையான உணவு வகைகளுக்குப் பதிலாக இரசாயனம் கலந்த உணவுப் பொருட்களை உட்கொள்வதைப் போல நமது வெளிப்புறத் தோலுக்கு இரசாயனத்தை உணவாகக் கொடுத்து வருகின்றோம். நாம் பயன்படுத்தும் அனைத்து விதமான அழகு சாதனப் பொருட்களும் அலுமினியம், பாதரசம், காரீயம், ப்ளுரிட், சிலிகான், எதில் அல் கஹால் பாரபின், ப்ரோபிலின் கிளைக்கால் போன்ற நச்சுக்கிருமிகளின் கலவைகளால் தயாரிக்கப்படுகின்றன. இந்த நச்சுக்களால் இதயநோய், சிறுநீரகப் பாதிப்பு, மலட்டுத் தன்மை, ஆஸ்துமா, தோல் வியாதிகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அழகு சாதனப் பொருட்களின் பாவனையினால் அழகு இருக்குமோ இல்லையோ கட்டாயம் ஆபத்து; இருக்கிறது.

கடந்த 100 வருடங்களில் அழகுசாதனப் பொருட்கள் அதனுடைய விரைவான கண்டு பிடிப்பு, துரித அலங்கார மாற்றங்கள் (Fashion Changes) என்பவற்றினால் மறுமலர்ச்சி அடைந்துள்ளது. இன்றைய சந்தையில் 1000 இற்கும் மேற்பட்ட அழகு சாதனப் பொருட்கள் காணப்படுகின்றன. அதாவது இன்றைய அழகுசாதனப் பொருட்கள் சந்தைப்படுத்தலில் Skin Fairness Products முதன்மையான கேள்விக்குரிய பொருட்களாகக் காணப்படுகின்றன. புவியியல் சந்தைப்படுத்தல் அடிப்படையில் அழகுசாதனப் பொருட்களை விநியோகிக்கும் முதன்மை நாடுகளாக அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்றன காணப்படுகின்றன. 

உலகில் ஆசிய, ஆபிரிக்கா மத்திய கிழக்கு நாடுகளிலேயே அழகுசாதனப் பொருட்களுக்கான கேள்வி அதிகளவு காணப்படுகின்றது. உலக சந்தையில் Skin Fairness உற்பத்தியில் இந்தியா முதன்மையான நாடாகக் காணப்படுகின்றது.

அழகுசாதனப் பொருட்கள் மனிதனுடைய உடற் கட்டமைப்பின் தொழிற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இவை தோல், கண்களில் எரிச்சல் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான சில சுகாதாரப் பிரச்சினைகள் குறைந்த காலத்திலோ அல்லது நீண்ட காலத்திலோ ஏற்பட வாய்ப்புண்டு. குறைந்த காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் உடனடியாக வெளிப்பட்டு விடுவதால் அவற்றினை இனங்கண்டு குணப்படுத்த முடியும். சில வகையானவை நீண்ட காலத்திற்குப் பின்னரே வெளிப்படும்.

அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் உள்ளடக்கப் பொருட்களினாலேயே இவை ஏற்படுகின்றன. சில அழகுசாதனப் பொருட்களின் உள்ளடக்கங்கள் பரிசோதனை செய்யப்படாமல் தயாரிக்கப்படுவதால் நீண்ட கால, குறுகிய கால பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. பாவனைக்கு உட்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் அனைத்தும் உடலுக்குள் உறிஞ்சப்படுகின்றன. அனைத்து விதமான அழகுசாதனப் பொருட்களும் ஒரே விதமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

சில வகையான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமான நோய் அறிகுறிகள், குறிப்பாக தோல் புற்றுநோயின் அறிகுறி நீண்டகாலத்தின் பின்னரே வெளிப்படும். 10 அல்லது 20 வருடங்களின் பின்னரே அழகுசாதனப் பொருட்களின் தாக்கம் வெளிப்படும். எந்த அழகுசாதனப் பொருட்களால் புற்றுநோய் ஏற்படும் என்பதை எளிதில் அறிய முடியாது. ஏனெனில், அவற்றின் உள்ளீடுகள் அடிக்கடி மாற்றத்திற்கு உட்படுகின்றன. அதாவது 1 அல்லது 2 உள்ளீடுகளை அதிகளவு பயன்படுத்தும் போது அவை வெவ்வேறான வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் இரசாயன சேர்க்கை புற்றுநோயை ஏற்படுத்துகிறதா என்பதைக் கண்டறிய சில வகையான உள்ளீடுகள் மிருகங்கள் மீது பரீட்சிக்கப்படுகின்றன. அதன் விளைவு மிருகங்களில் பாதிப்பை ஏற்படுத்தாவிடினும் சில சந்தர்ப்பங்களில் அவை மனிதனில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அழகுசாதனப் பொருட்களும் ஆரோக்கியமும்

இந்தியா போன்ற நாடுகளில் அழகுசாதனப் பொருட்களின் தொழில் துறையானது ஒழுங்கு படுத்தப்பட்ட, ஒழுங்குபடுத்தப்படாத 3000 கோடி துறைகளில் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 220 கோடி அழகுசாதனப் பொருட்கள் விற்பனையாகின்றன. அழகுசாதனப் பொருள் விற்பனை ஆண்டுக்கு 15% வளர்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க மற்றும் ஜரோப்பிய சந்தைகளில் இந்தியாவினுடைய அழகுசாதனப் பொருட்கள் முன்னிலை வகிக்கின்றன.

அழகுசாதனப் பொருட்களால் ஏற்படக் கூடிய ஆரோக்கிய சீர்கேடுகள்

ஐ லைனர்: இது பெண்கள் மத்தியில் பிரபலமானது. இரசாயனம் கலந்த ஐ லைனரை பயன்படுத்துவதால் கண்ணில் எரிச்சல் ஏற்படுகிறது. அவை கண்ணீர் குழாய்களை அடைக்கும்.

முடிச்சாயம்: இதனால் ஏற்படும் அலர்ஜிகளுக்குக் காரணமாக இருப்பது பாரா இப்பேனிலென்டியமைன் எனப்படும் இரசாயனம் என நம்பப்படுகின்றது. இதனால் நிரந்தர முடி உதிர்தல் மற்றும் அரிய சூழ்நிலையில் இறப்பும் ஏற்படும்.

மஸ்காரா: இதனை ஒவ்வொரு முறை தடவும் போதும் பக்றீறியாக்கள் தோன்றும்.

லிப்ஸ்டிக்: புற்று நோயை உண்டாக்கும் 28 பக்றீறியாக்கள் லிப்ஸ்டிக்கில் உள்ளன. 50% க்கும் மேலான லிப்ஸ்டிக்களில் காரீயம் இருக்கின்றது.

தலைக்கு பூசும் அழகுசாதனப் பொருட்களான Hair Gels, Hair Serums, Hair Shampoos, Conditioners, Hairs Prays என்பனவற்றில் தீங்கு விளைவிக்கக் கூடிய அதிகளவு இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அதன் பாவனையினால் தலைமுடி பாதிப்படைகின்றது.

விரிவான இரசாயனம் கலந்த தலைமுடி அழகுசாதனப் பொருட்களின் பாவனை, பொடுகு, உச்சந் தலை சிவத்தல், கனமான முடி உதிர்தல், முடிகளை இழத்தல் போன்ற பாதிப்புக்களை விளைவிக்கும். மேலும் நீண்ட கால Hair Color பாவனை முடியில் நிற மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் முடிகள் நரைத்து வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.

முகப்பரு

இது அனைத்து விதமான சிகை அலங்கா ரத்தினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவு ஆகும். எமது உடம்பினுடைய முக்கிய புண்ணங்கம் தோல் ஆகும். தோலிற்கு மூச்சு விடும், வளரும் தன்மைகள் காணப்படுகின்றன. எனவே Makeup போடுவதன் மூலமாக தோலின் துவாரங்கள் மூடப்படுகின்றன. Makeup ஊடாக தோலில் முடி வளரும் அடைப்புக்கள் அடைக்கப்படுகின்றன. சில வகை Makeup Cream மற்றும் திரவங்கள் துளைகளை அடைக்கின்றன. Makeup செய்து அதிக நேரம் அல்லது ஒழுங்காக சுத்தப்படுத்தாத நிலையில் முகப்பருக்கள் ஏற்படுகின்றன.

தோல் புற்றுநோய்

நாம் பயன்படுத்தும் முக்கிய அழகு சாதனப் பொருட்கள் அனைத்திலும் Hydroquinone, Mercury, Steroids, Carcinogenic போன்ற இரசாயனப் பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும் போது அழகுசாதனப் பொருட்களின் பாவனையினால் தோலில் Braising, Exposed Capillaries, Stretch Marks போன்ற பாதிப்புக்கள் ஏற்படும்.

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்பு

Mercury இரசாயனம் கலந்த அழகுசாதனப் பொருட்களை நீண்டகாலப் பாவனைக்கு உட்படுத்தும் போது அவை எமது உடல் உறுப்புக்களில் பாதிப்பை ஏற்படுத்தும். உ-ம் (கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்படையும்)

தோல்களில் எரிச்சல்

நீண்ட நாட்களுக்கு அழகு சாதனப் பொருட்களைப் பாவிப்பதால் உடலில் Redness, Peeing of the Skin Rash, Dryness & Burning என்பன ஏற்படுவதுடன் எரிச்சலையும் ஏற்படுத்தும்.

நரம்பியல், கரு என்பன பாதிப்படைதல்

Mercury போன்ற இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படும் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் Fetal Brain இல் பாதிப்பு ஏற்படுகின்றது.

நிறமாற்றம்

நீண்ட நாட்களுக்கு Hydroquinone உள்ளடங்கிய பொருட்களைப் பயன்படுத்துவதால் கறுப்பாதல் மற்றும் நிறமாற்றம் என்பன ஏற்படும்.

Photo Sensitivity

Skin Lightening Creams அதிகளவு பாவனை செய்வதால் உடலினுள் தீங்கு விளைவிக்கும் UV கதிர்கள் உட்செல்கின்றன.

இளமை மூப்பு

அழகுசாதனப் பொருட்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் தோல் வரண்டதாகவும் சுருக்கம் விழுந்ததாகவும் மாறுகின்றது. இது வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். வெளிறல், நிறம் முதிர்ந்த வயதான தோற்றத்தை கொடுக்கும். பெரும்பாலான சிகை அலங்கார உற்பத்திகளில் Parabens  (Methyl Paraben,  Propyl Paraben & Ethyl Paraben) போன்றவை பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இவை தீங்கான பக்றீறியாக்களை வளர்ச்சியடையச் செய்யும். இவை தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் உடலில் எரிச்சல், அரிப்புக்கள், தடித்தல் (Irritation, Pruritus & Rashes) என்பன ஏற்படும்.

கண் எரிவு (Eye Irritation)

கண்களுக்கு அதிகளவாக பரவலாக அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. உடலில் கண் சார்ந்த பகுதி மென்மையானது. எனவே நாம் பயன்படுத்தும் அலங்காரப் பொருட்களில் காணப்படும் இரசாயனங்கள் கண்களில் எரிச்சல், இரத்த கட்டிகள், இரத்தம் அடங்கிய வீக்கம் போன்றவற்றையும் தலைக்குரிய நாளங்களில் பாதிப்புக்களையும் ஏற்படுத்துகின்றது.

அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அதனுடைய ஆரோக்கிய சீர்கேடுகள் தொடர்பாக அறிந்து கொள்ள இலங்கையில் குறிப்பிட்ட நிறுவனமொன்றின் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வு 15 – 35 வயதுக்குட்பட்டவர்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் அலங்காரங்களுக்காக அதிகளவில் 21-25 வயதிற்கு உட்பட்டவர்களே அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களாக அவதானிக்கப்பட்டுள்ளனர்.

எமது சமூகத்தில் அதிகளவு அழகுசாதனப் பொருட்களை விரும்புபவர்களாக பெண்களே காணப்படுகின்றனர். காரணம் அதிகளவான பெண்களிடம் தாம் வெள்ளையாக இருந்தால் மாத்திரமே சமூகத்தில் தம்மையும் மதிப்பார்கள் என்ற ஐதீகம் காணப்படுகின்றது.

இவ்ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலும் பெண்களே அதிகளவு அழகு சாதனப் பொருட்களை உபயோகிப்பவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாய்வில் 75% வீதமான பெண்கள் உயர்ந்தளவான அழகு சாதனப் பொருட்களை உபயோகிப்பவர்களாக இனங்காணப்பட்டுள்ள அதே நேரம் 25% ஆண்கள் மாத்திரமே அழகு சாதனப் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களாக காணப்படுகின்றனர். ஆனால் லண்டனில் நடாத்தப்பட்ட ஆய்வில் ஆண்களே அதிகளவு தம்மை அழகுபடுத்திக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆய்வு முடிவுகள் அடிப்படையில் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துபவர்களை இன ரீதியாக வகைப்படுத்தும் போது சிங்கள, தமிழ் இனத்தவர்களே அதிகளவு பயன்படுத்துபவர்களாகக் காணப்படுகின்றனர். அதே வேளை, இளம் வயதுடைய முஸ்லிம் இனத்தவர்களும் இவ்வாறான பொருட்களின் பாவனையில் காணப்படுகின்றார்கள். எனவே, பொதுவாக நோக்கும் போது அனைத்து இன மக்களும் அழகுசாதனப் பொருட்களில் நாட்டம் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.

மேலும் எம் சமூகத்தை எடுத்து நோக்கும் போது திருமணமான, திருமண மாகாத பெண்கள் இருவருமே அழகு சாதனப் பொருட்கள் மீது நாட்டம் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். திருமணமாகாதவர்கள் திருமணத் திற்கு தம்மைத் தயார்படுத்துவதற்காக அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். அதே நேரம் திருமண மானவர்கள் தம்மை இன்னும் அழகுபடுத்திக் கொள்வதற்காக உபயோகிக்கின்றனர்.

ஆண்கள் சமூகத்தின் மத்தியில் தமக்கு ஒரு அந்தஸ்து வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்துவதாகக் குறிப்பிடுகின்றனர். எனினும் அழகுசாதனப் பொருட்களின் மூலமே தம்மை அழகுபடுத்தி கொள்ள முடியும் என்பதனை திருமணமானவர்களே அதிகம் நம்புவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இவ்வாய்வில் பங்கு பற்றிய அழகு சாதனப் பொருட்களால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கால சந்ததியினருக்கு கூறிய விடயங்களும் இங்கு நோக்கத்தக்கதாகும்.

· நமது முன்னோர்களுக்கு அவ்வாறான அழகுசாதனப் பொருட்கள் தொடர் பான அறிவு காணப்படவில்லை. எனினும் அவர்கள் இயற்கையோடு ஒன்றி ணைந்து அழகாகவும் ஆரோக்கியமாக வும் இருந்தனர். எனவே நாமும் முடிந்த வரை இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி எமது அழகை மெருகூட்டிக் கொள்ள முடியும்.

  • வைத்திய ஆலோசனையின் அடிப்படையில் எமது சருமத்திற்கு பொருத்தமான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தல்.
  • எமது சருமத்திற்கு சிறந்த பொருட்களைத் தெரிவுசெய்து பயன்படுத்தல்.
  • அழகுசாதனப் பொருளின் மேல் காணப்படும் விவரணத் துண்டை நன்றாக வாசித்து Dermatologically பரிசோதனை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தல்.
  • விவரணத் துண்டில் எரிச்சலை வீக்கத்தை ஏற்படுத்தும் எனக் குறிப் பிட்டிருப்பின் பாவனையின் பின் அவ்வாறான மாற்றங்கள் ஏற்படின் உடனடியாக பாவனையை நிறுத்த வேண்டும்.
  • உள்ளீடுகள் தரச் சான்றிதழ் என்பவற்றை நன்றாக அவதானித்துப் பெறல்.

முன்னோர்களுக்கு இன்றைய காலத்தில் காணப்படும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் என்பன தொடர்பான எந்தவொரு அறிவும் அனுபவமும் கிடையாது. இருப்பினும் அவர்கள் இயற்கையான பொருட்களை கொண்டு ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருந்தார்கள். எனவே, இன்றைய நவீன மற்றும் கற்ற சமூகத்தினர் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும், இறைவன் எமக்கு இயற்கையாக கொடுத்துள்ள அழகு, கவர்ச்சி இவை நிரந்தரமானது, இவற்றை நாம் மாற்ற முற்படும் வேளையில் தோன்றும் எதிர்விளைவுகளுக்கும் நாமே முகம் கொடுக்க வேண்டும். நிரந்தரமானதே இயற்கை எழில். அதனை இயற்கையினூடாகப் பாதுகாப்போம்!

About the author

Administrator

Leave a Comment