சிறுபான்மையினராக உள்ள நாம் அரசியலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

0
1

– ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி

நாம் பொதுத் தேர்தலொன்றை எதிர்நோக்கியுள்ளோம். தேர்தலில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி ஆராய்வது மிக முக்கியமானது. அமெரிக்கா, ஜேர்மன், ஜப்பான், இங்கிலாந்து போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஓரிரு கட்சிகளே செயற்பாட்டில் இருக்கும். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் உள்ளது.

இங்கிலாந்தில் தொழிற்கட்சி, தாராளவாதக் கட்சி, பழமைவாதக் கட்சி போன்றவை காணப்படுகின்றன. இக்கட்சிகள் பிரதானமாக கொள்கை அடிப்படையிலேயே இயங்குகின்றன. இங்கிலாந்தின் பழமைவாதக் கட்சியை நோக்கினால் தேசியவாதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். தொழிற் கட்சி சோசலிஸக் கொள்கையில் இருக்கும்.

இலங்கையை நோக்கினால் சுமார் 60 கட்சிகள் காணப்படுகின்றன. இவற்றுள் சில கட்சிகள் இன மைய அரசியல் கட்சிகளாகவும், இன்னும் சில இனவாத அடிப்படையிலான கட்சிகளாகவும் காணப்படுகின்றன. இந்தியாவிலும் அப்படித்தான் உள்ளது. எனவே இலங்கையில் 10 வீதமாக உள்ள நாம் எவ்வாறு அரசியலில் நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஆராய்வது மிக முக்கியமானது.

1947 காலப்பகுதியில் எல்லோரையும் ஒன்று சேர்க்கும் நோக்கிலேயே ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அது பிறிதொரு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சர்வதேச ரீதியான ஓர் அரசியல் போக்கு காணப்படும். 10 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் பல்கலாசார அரசியல் அலை காணப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. சில காலத்தில் இந்நிலைமை மாற்றமடைந்து தேசியவாத அலை உருப்பெற்றிருக்கிறது. இதனை அவர்கள் எல்லா சமூகத்தவர்களையும் ஒன்றிணைத்த தேசியவாத அலையாக அல்லாமல் இந்து தேசியவாதமாக மாற்றியிருக்கிறார்கள். அமெரிக்காவிலும் அப்படித்தான். இப்படி தேசியவாத அலையொன்று போய்க்கொண்டிருக்கிறது.

இலங்கையிலும் அப்படித்தான். புதிதாக ஒரு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து 5 வருடங்களுக்கு பதவியில் இருப்பார். பெரும்பாலும் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதி பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சியே வெற்றி பெறும் சூழல் காணப்படுகின்றது. இலங்கை வரலாற்றில் முன்பும் இப்படித்தான் நடந்திருக்கிறது. எனவே சிறுபான்மை மக்களாகிய நாம் அதிகாரத்திலுள்ள கட்சிகளோடு இணைந்து பயணிப்பதா? இல்லாவிட்டால் எப்போதும் போல் மறுபுறம் நின்று இதற்கு விரோதமாகப் போவதா? என்கின்ற இக்கட்டான நிலையில் நாம் உள்ளோம். இதனால் நாம் இவ்விடயம் தொடர்பில் நன்றாக சிந்தித்து ஆட்சியில் யார் உள்ளார்களோ அவர்களுடன் சேர்ந்து எமது உரிமைகளை வென்றெடுப்பதில் முன்நிற்க வேண்டும்.

நாம் எந்தப் பிரதேசத்தில் வாழ்கின்றோமோ அந்தப் பகுதியில் உள்ள அரசியல் அதிகாரத்துடன் சேர்ந்து நடந்துகொள்ள வேண்டும். எல்லா முட்டைகளையும் ஒரு பாத்திரத்தில் இட வேண்டாம் என டீ.பி. ஜாயா கூறியிருக்கின்றார். கடந்த முறை நாம் 90 வீதமான முட்டைகளை ஒரு பாத்திரத்தில் போட்டோம். அதற்கு எதிரான அலையே நாட்டில் உருவானது. தற்போது நாம் விட்ட தவறை சரி செய்துகொள்ள எமக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனால் எப்போதும் போன்று இன மைய அரசியலுக்குப் பின்னால் செல்லாமல் இம்முறை அதிகாரத்திலுள்ள கட்சியுடன் இணைந்து சென்றால் எமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு அவர்களது உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமாயிருக்கும்.

நாட்டில் இது மிக முக்கியமானதொரு கட்டமாகும். இலங்கையில் 60 வீதமான முஸ்லிம்கள் வடகிழக்கிற்கு வெளியே வாழ்கின்றார்கள். எனவே நாம் அந்தந்த பிரதேசங்களிலுள்ள தலைவர்களுடன் இணைந்து அவர்களது மனங்களை வென்று அவர்களது வெற்றியில் பங்காளர்களானால் எமது விடயங்களைச் செய்துகொள்ள துணையாக அமையும். 1947 தொடக்கம் தமிழர்கள் 73 வருடங்களாக அரசியல் மாற்றங்களுக்காக பேசிய வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்குக் கிடைத்தது ஒன்றுமில்லை. அவர்களது பிரதேசங்களும் அபிவிருத்தியடையவில்லை. ஆனால் முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸ் வருவதற்கு முன்பு ஐ.தே.க.வுடனும் சு.க.வுடனும் இணைந்து சிற்சில விடயங்களை சாதித்துக் கொண்டார்கள்.

இன்று மீண்டும் எம்மைப் பற்றி சிங்கள சமூகத்தவர்களுக்கு மத்தியில் பிழையான கருத்தொன்று உருப்பெற்றுள்ளது. இதை மீண்டும் சரிசெய்துகொள்வதற்கான வாய்ப்பே எமக்கு கிட்டியிருக்கிறது. அந்த வாய்ப்பின் மூலம் பிரயோசனம் பெறுவதா? என்பதுவே எம் முன்னால் உள்ள கேள்வியாகும்.

தற்போதைய நிலையில் பெரும்பான்மை மக்களுடன் இணைந்து செல்வதே பொருத்தம் என நான் நினைக்கின்றேன். அதிகாரத்திலுள்ள பிரதான கட்சிகளோடு இணைந்து செல்லும் போதே இன வாதத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தலாம். இந்த சமுதாயத்தில் உரிமையோடு வாழ்வதற்கான பின்னணியையும் உருவாக்கிக் கொள்ளலாம். இதனால் இம்முறை பொதுத் தேர்தலில் சமுதாயத்தை பற்றி சிறந்த முறையில் சிந்தித்து நல்லதொரு தீர்மானத்தை மேற்கொள்வோம் என்பதே எனது கருத்தாகும்.

தற்போது எமக்கு 21 முஸ்லிம் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உள்ளார்கள். முஸ்லிம் உறுப்பினர்களால் மாத்திரம் ஒன்றையும் செய்ய முடியாது. 21 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கின்ற போது 204 முஸ்லிமல்லாத உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.

பாராளுமன்றில் ஒரு விடயத்தை செய்துகொள்வதாக இருந்தால் அவர்களுடைய உள்ளத்தை வெல்ல வேண்டும். அவர்களது நம்பிக்கையை வெல்ல வேண்டும். அதற்கு முஸ்லிம் உறுப்பினர்கள் மாத்திரம் போட்டியிட்டால் சரிவராது. முஸ்லிம்களை மாத்திரம் தெரிவு செய்வதால் இதனை செய்துகொள்ள முடியாது. நாம் வசிக்கின்ற பிரதேசத்தில் அதிகாரத்திலுள்ளவர்களுடன் இணைந்து இதனை செய்ய வேண்டும். அப்போது தான் எமக்கான விடயங்களை செய்து கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here