Features நேர்காணல்

சிங்கள தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக நேசித்தால் மாத்திரமே அவர்களது விருப்பத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்

Written by Administrator

சிரேஷ்ட சட்டத்தரணி தட்சனாமூர்த்தி சிவநாதன் தலைவர், கிழக்குத் தமிழர் ஒன்றியம்

 • கிழக்குத் தமிழர் ஒன்றியம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கங்கள் என்ன?

கிழக்கு மாகாணத்திற்கென்று உண்மையாகவே ஒரு தலைமைத்துவம் இல்லை. வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், கொழும்பிலிருந்தும் வருகின்ற கட்டளைகளுக்குப் பின்னாலேயே இங்குள்ள சாதாரண அரசியல்வாதிகள் எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள். பொதுவாக கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டது போன்றே உள்ளது. இந்த நிலையில் இதற்கானதொரு வலுவானதும், சரி யானதுமான அமைப்பு தேவை என்ற கருத்து புத்திஜீவிகள் மத்தியில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தது. அதன் நிமித்தமே சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், நலன்விரும்பிகள் ஒன்றிணைந்து கிழக்குத் தமிழர் ஒன்றியத்தைத் தாபித்துக்கொண்டனர்.

சமூக ஒற்றுமையே இதன் உண்மையான குறிக்கோளாகும். அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்துப் பயணிக்க வேண்டிய ஒரு தேவைப்பாடு உள்ளது. தமிழர்களும் முஸ்லிம்களும் மதத்தால் மாத்திரமே வேறுபட்டுள்ளார்களே ஒழிய மற்றைய விடயங்களில் ஒன்றாகத்தான் உள்ளனர். அதற்கப்பால் மனிதன் என்பதும் ஒன்றுதான். யாரை வெட்டினாலும் இரத்தம் ஒன்றுதான். ‘அவனும் மனிதன்’ என் கின்ற கருத்து வந்தால் இந்தப் பிரிவினையெல்லாம் இயல்பாகவே நீங்கி விடும்.

அந்த உயர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். சுயநல அரசியல்வாதிகளை ஓரங்கட்டி சமூக ரீதியாக நாம் மக்களை பக்குவப்படுத்தினால் எக்காலத்திலும் இனங்களுக்கிடையில் விரிசல் ஏற்படுவதற்கான சாத்தியங்களே இல்லை. இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் எல்லோரையும் ஒன்றிணைப்பதே முக்கியமான நோக்கமாகும்.

 • கிழக்குத் தமிழர் ஒன்றியத்தில் தற்போது எத்தனை கட்சிகள், அமைப்புகள் கூட்டுச் சேர்ந்துள்ளன?

இவ்வொன்றியத்தில் எல்லோரையும் ஒன்று சேர்ப்பதற்காகவே நாம் சிந்திக்கின்றோம். எல்லோரும் வந்து இணைந்துகொள்வதாகவே இறுதி வரை பேச்சுவார்த்தை நடந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் சரியான, உறுதியான முடிவைக் கூறவில்லை. தேர்தல் சமயம் என்ற படியால் ஒரு விடயமும் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

 • கிழக்குத் தமிழர் ஒன்றியம் இம்முறை தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தில் உள்ளதா?

கிழக்குத் தமிழர் ஒன்றியம் தனித்துத் தேர்தலில் போட்டியிடாது. தேர்தல் நோக்கம் எம்மிடம் இல்லை. ஒன்றியத்தில் உள்ள ஒருவரும் தேர்தலில் போட்டியிட மாட்டோம். சமூகத் தில் ஒற்றுமையை ஏற்படுத்திவிடுவதே எமது நோக்கமாகும்.

 • கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் முஸ்லிம் தரப்பை ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெற்று வருகின்றது?

இதுவரையில் அப்படி ஒருவரும் வரவில்லை. முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் தனியாகப் போட்டியிடுவார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அல்லது இதர முஸ்லிம் கட்சிகளில் போட்டியிடுவார்கள். தமிழர்களும் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட இதர கட்சிகளில் போட்டியிடுவார்கள். தேசிய கட்சியாக இருந்தால் இரு தரப்பும் ஒன்றிணைந்து போட்டியிடுவார்கள். ஆனால் பயணிக்கும் போது ஒற்றுமையாகப் பயணிப்பார்கள். தேசிய வேலைத் திட்டங்களைச் செய்வார்கள். தேர்தல் என்னும் போது அந்தந்த சமூகங்கள் தனித் தனியாகப் போட்டியிடுவதே பொருத்தமாக இருக்கும். அப்போதுதான் மக்களுக்கு வாக்களிக்கவும் வசதியாக இருக்கும்.

 • கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் கிழக்கை மாத்திரம் மையப்படுத்தியதா? அல்லது கிழக்கிற்கு வெளியாலும் இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா?

நாம் பரந்துபட்ட வகையில் இயங்க நினைக்கவில்லை. அதற்காக வேண்டி நாம் யாருக்கும் எதிரானவர்களும் அல்ல. உதாரணமாக வடக்கிற்கோ அல்லது வடக்கிற்கு அப்பாற்பட்டோ அல்லது முஸ்லிம்களுக்கோ அல்லது யாருக்கும் எதிரான அமைப்பு அல்ல. எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் தீர்மானமே எம்மிடம் உள்ளது. வடக்கு கிழக்கு இணைந்து செயற்படுகின்ற நிலைமை வந்தால் அதில் எமக்கான (கிழக்கு மாகாணத்துக்கான) தனித்துவம் பேணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. சேர்ந்து இயங்கலாம். சேர்ந்து பயணிக்கலாம். அதில் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை.

 • ஒன்றியத்தோடு இணைந்து பயணிப்பதற்கு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா?

நாம் அனைத்துக் கட்சிகளுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறோம். அனைத்து சமூகங்களும் ஒன்றாய் பயணிக்க வேண்டும் என்கின்ற அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளோம். தமிழ் தரப்புக்கு மாத்திரமல்ல, முஸ்லிம்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். முஸ்லிம் சமூகமும் தங்களது சமூகத்தைப் பலப்படுத்துவதற்கு அந்தந்த சமூகங்களுடன் ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். ஒற்றுமை என்பது எல்லா சமூகங்களுக்கிடையிலும் பேணப்பட வேண்டும். இது முக்கியம்.

 • தற்போது கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவு எவ்வகையில் உள்ளதென குறிப்பிட முடியுமா?

கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவில் எவ்வித விரிசல்களும் இல்லை. தமிழர்களும் முஸ்லிம்களும் எப்போதும் ஒற்றுமையாகவே இருந்து வருகின்றனர். இரு சமூகத்தவர்களும் மனதளவில் நல்ல புரிந்துணர்வுடனும் விசுவாசத்துடனும் உள்ளனர். அதில் எவ்வித கோளாறுகளும் இல்லை. அரசியல்வாதிகள் தங்களது சுய அரசியலுக்காக முஸ்லிம் மக்களை தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு ஏதாவது சுயலாபம் தேடுவது போன்ற செயற்பாடுகள்தான் சில கசப்புணர்வுகளை ஏற்படுத்தியிருக்குமே ஒழிய தமிழ் முஸ்லிம் மக்கள் எப்போதும் உண்மையான விசுவாசத்துடனும் அன்புடனுமே இருக்கின்றார்கள். உண்மையில் மக்கள் கீழ்ப்படிவானவர்கள். அரசியல்வாதிகள் விட்ட பிழைகளே இவையெல்லாவற்றுக்கும் காரணம். சுய அரசியலுக்காக யாரும் இனவாதத்தையோ மத வாதத்தையோ கிளரக்கூடாது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.

 • கிழக்கில் சிறுபான்மை மக்கள் பொதுவாக எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளை குறிப்பிட முடியுமா?

என்னைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையினம் சிறுபான்மையினத்தை எப்படியும் அடக்கியாளவே யோசிக்கும். வரலாற்றில் அப்படித்தான் இடம்பெற்றுள்ளது. வல்லரச நாடுகளிலும் அப்படியான போக்கே காணப்படுகின்றது. அந்த அடிப்படையில் இதற்குள் நாம் எதிர்நீச்சல் போடுவதே எமது கெட்டித்தனமாகும்.

சாணக்கியமான முறையில் எப்படி அவர்களுடன் பயணிப்பது என்பது எமது திறமையைப் பொருத்தே உள்ளது. குறிப்பாகச் சொன்னால் அந்தந்த சமூகத்தினுடைய அரசியல்வாதிகளின் கரங்களிலேயே அது உள்ளது. நாம் தொடர்ந்தும் முரண்பாடுகளை ஏற்படுத்தாமல் முரண்பாட்டிற்குள் எப்படி உடன்பாடு காணலாம் என்பதுவே எமது சாணக்கியமாகும். இவ்வாறு எமது அரசியல்வாதிகள் காய்நகர்த்தினால் சிறுபான்மை சமூகம் ஒரு பிரச்சினையுமின்றி பயணிக்கலாம் என்று நான் நினைக்கின்றேன்.

 • கிழக்கில் பெருமளவிலான காணிகள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் உண்மைத் தன்மை என்ன?

எந்த சமூகத்துக்கு சொந்தமான காணியாக இருந்தாலும் அதனை இராணுவம் பிடித்திருந்தால் அது கட்டாயம் விடுவிக்கப்பட வேண்டும். தனிநபரின் காணியை அரசாங்கம் அல்லது இராணுவம் பிடித்திருந்தால் அது கட்டாயம் விடுவிக்கப்பட வேண்டும். அதற்குரிய முயற்சிகளை அரசியல்வாதிகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். கிழக்கில் தற்போது அநேகமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் விடுவிக்கப்பட்டு வருகின்றன. விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளும் தொடர்ந்து விடுவிக்கப்பட வேண்டியுள்ளது.

 • கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களும் ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில்…

தற்போது நான் நினைக்கின்றேன் சிங்களக் குடியேற்றங்கள் மிகவும் குறை வென்று. முன்பு போல் தற்போது இல்லை. அண்மைக் காலமாக சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக நாம் கேள்விப்படவில்லை. குறிப்பாக இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பிறகு அது தொடர்பான விடயங்களை காணமுடியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மஹாவலி வலயம் என்கின்ற திட்டத்தை கொண்டு வந்து மிக சூசகமான முறையில் சிங்களக் குடியேற்றங்களை கொண்டு வந்தது. மஹாவலி வலயம் உள்ளிட்ட திட்டங்களுக்கூடாகவே அவர்கள் சிங்களக் குடியேற்றத்தை யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் கொண்டு வந்தார்கள். எமது அரசியல் வாதிகளுக்கு இது விளங்கவில்லை. ஐ.தே.க. அரசாங்கம் மீது கொண்ட அவர்களின் பற்றானது இப்பிரச்சினையை அவர்களுக்கு விளங்க விடாமல் செய்துவிட்டது.

இத்திட்டத்தின் மூலம் அவர்கள் அதிகமான குடியேற்றங்களையும் அதிக காணிகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள். யாழ்ப்பாணம், கூடங்குளத்தீவு போன்ற பகுதிகளில் இது அரங்கேறியிருக்கிறது என நினைக் கிறேன். கிழக்கில் பெரிதாக இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை. பௌத்த பிக்குகளின் சிற்சில பிரச்சினைகள் உள்ளன. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அப்படியொரு பிரச்சினை இன்னும் வரவில்லை. கடந்த காலங்களில் இருந்தது. ஆனால் தற்போதில்லை.

 • கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து மேற்கொண்ட தீர்மானமானது எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் தொடர வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா? அல்லது அவர்களுடைய தீர்மானங்கள் எப்படிக் காணப்பட வேண்டும்?

சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் எங்களுக்கென பெரும்பான்மைக் கட்சிகளில் எதற்கும் நாம் முதன்மை கொடுக்கக் கூடாது. ஏனென்றால் சிறுபான்மைச் சமூகத்தைப் பொறுத்தவரையில் எமக்குள்ள பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதாவது அப்பிரச்சினைகள் உள்நாட்டில் தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் ஒரு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்றால் நிச்சயமாக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். அதாவது ‘எமது சிறுபான்மைச் சமூகத்துக்கு நாங்கள்   சில விட்டுக் கொடுப்புக்களை செய்ய வேண்டும். அவர்கள் உரிமைகளுடன் வாழும் சமூகம். அவர்களுக்கு உள்ள உரிமைகளை நாம் பறிக்கக்கூடாது. விட்டுக்கொடுக்க வேண்டும்’ என்ற மனநிலையை தோற்றுவிக்க வேண்டும்.

இங்குள்ள சிங்கள தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக நேசித்தால் மாத்திரமே அவர்களது விருப்பத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதுவல்லாமல் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் கோரிக்கைகளை முன்வைத்து மஹிந்த அரசாங்கம் கூடாது என்று சொல்லி விமர்சித்தால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியாது. இரு தரப்பும் ஒன்றாக வந்தால் தான் எமக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். அதேபோன்று நாம் மஹிந்த தரப்பினரை உயர்த்துவதற்காக ரணில் தரப்பையும் தாக்கக்கூடாது. சாணக்கியமான அரசியல் என்பது இதுதான். ரணிலை உயர்த்த வேண்டும் என்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ அரசை விமர்சிக்கத் தொடங்கியதே தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறாகக் காணப்படுகின்றது. உண்மையில் அவர்களுக்கு சிறந்த உறவை இவ்வரசாங்கத்துடன் பேணிக் கொள்ள முடியாமல் இருப்பதற்கும் இதுவே காரணமாகும். அப்படியிருக்கக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு.

About the author

Administrator

Leave a Comment