அரசியல் மயமாகும் மிம்பர்: முகவர் அரசியலும் முடியாத அரசியலும்

8

இப்கார் ஃபயூமி

பெப்ரவரி 20 இல் தேசிய பாதுகாப்புத் தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதப்புரைகள் அனைத்துமே முஸ்லிம் சமூகம் குறித்த சந்தேகங்களையும் பிற இனங்களுக்கு மத்தியில் அவர்கள் பற்றிய அச்சத்தையும் உருவாக்கக் கூடியவை.

முஸ்லிம் இன வீதாசாரத்திற்கு ஏற்ப பள்ளிவாயல்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட வேண்டும்; இன மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகள் நிறுத்தப்பட வேண்டும்; பள்ளிவாயல்களில் இடம்பெறும் அனைத்துப் பிரச்சாரங்களும் ஒலிப்பதிவு செய்யப்பட வேண்டும்; பொதுச் சட்டத்தின் கீழ் விவாகரத்துப் பெறக் கூடியவாறு சட்டத்தில் திருத்தம் வேண்டும்; 16 வயது பூர்த்தியானவர்களே மத்ரஸாக்களில் சேர்க்கப்பட வேண்டும் என்பன போன்ற பிரேரணைகளும் அவ்வறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளன.

முஸ்லிம் தனியார் சட்டம், பள்ளிவாயல் நிருவாகம், மத்ரஸா கல்வி முறைமை, முஸ்லிம் அரசியல் கட்சிகள் என்பவற்றில் தலையீடு செய்து அவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கம் அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தா துட்டகைமுனுவின் சிலைக்குப் பக்கத்தில் நின்று பதவியேற்றபோது, தான் பௌத்த வாக்குகளால் மாத்திரம் ஜனாதிபதியானதாகக் கூறியது முதல் 54 பேரைக் கொண்ட அவரது அமைச்சரவையில் எந்தவொரு முஸ்லிமையும் இணைத்துக் கொள்ளாமை வரையான அனைத்து நகர்வுகளும் சிறுபான்மை முஸ்லிம்களைத் திட்டமிட்டு ஒதுக்கி ஓரம் கட்டும் உள்நோக்கம் கொண்டவை என்பது தெட்டத் தெளிவானது.

நவம்பர் நடுப்பகுதியிலிருந்து இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையான காலப் பகுதிக்குள் முஸ்லிம்கள் நல்லெண்ணம் கொள்ளக் கூடிய ஏதேனும் ஒன்று நாட்டில் நடந்ததா என்பது கேள்விக்குறி. தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்ட கையோடு சில பள்ளிவாயல்கள் கல் வீச்சுக்கு உள்ளாகின. 100 வருடங்கள் பழைமை வாய்ந்த மஹர ஜும்ஆ பள்ளிக்குள் புத்தர் சிலை வைக்கப்பட்டு அதிகாரிகளின் ஓய்வறையாக மாற்றப்பட்டுள்ளது. ராகம போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாக இயங்கி வந்த ஜும்ஆ பள்ளிவாயல் மூடப்பட்டுள்ளது. சாய்ந்த மருது மக்கள் தேர்தலின்போது கோத்தாவை ஆதரித்த போதும் நகர சபை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் திடீரென ரத்துச் செய்யப்பட்டது. சிலாபத்தில் அம்பகந்தவில ஸியாரம் பௌத்த பிக்குகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிந்து சில வாரங்களில் வைத்தியர் ஷாபி விவகாரம் மீண்டும் தோண்டப்பட்டது. அவர் மீது புதிய வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அவரது தொழில் பறிக்கப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற சர்வதேச நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்தல் என்ற போர்வையில் பல முஸ்லிம் சமூக நிறுவனங்கள் பாரியளவிலான சமூக நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு மாவட்ட செயலாளர் ஊடாக தடைவிதிக்கப்பட்டு வருகின்றது.

அஹதிய்யா பாடசாலைகள் ஏற்கனவே முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள போதும் அவற்றை மீளவும் பிரதேச செயலகங்களில் கட்டாயம் பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சில அஹதிய்யாக்கள் செயலிழந்து போயுள்ளன.

நாட்டிலுள்ள பதிவுசெய்யப்பட்ட மத்ரஸாக்களை மீளவும் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சட்டமொன்று வெளிவரவுள்ளது எனவும் அவற்றைப் பதிவு செய்யும் பொறுப்புக்கள் இராணுவ உயர் அதிகாரிகளிடம் வழங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றில் கவலை வெளியிட்டுள்ளார்.

இப்படி முஸ்லிம்களுக்கு எதிரான நகர்வுகள், காய்நகர்த்தல்கள், மேற்பரப்பில் காட்டமாக வெளிப்படாதபோதும் உள்ளே கனகச்சிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இன்னொரு புறம் பௌத்த மதகுருக்களும் வலதுசாரி சிங்கள தேசியவாதிகளும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்களின் அரசியலை (Post-truth Politics) சந்தைப்படுத்தி வருகின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஸாகிர் நாயிக், பி. ஜைனுல் ஆப்தீன் ஆகிய இரு அடிப்படைவாதிகள் இலங்கை வந்து சென்றுள்ளனர் என தேசிய பாதுகாப்புக் குழுத் தலைவர் மலிக் ஜயதிலக்கவினால் கூறப்பட்ட கருத்து விஜய செய்திப் பத்திரிகை நிறுவனத்தின் சகோதரப் பத்திரிகைகளான லங்கா தீப, டெய்லி மிரர் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமாகின. இது மிக அப்பட்டமான பொய் என்பதை அனைவரும் அறிவர். ஆனால், நடுநிலையான இப்பத்திரிகைகள் கூட பொறுப்பற்ற வகையில் பொய்களை ஏன் வெளியிடுகின்றார்கள் என்பது இன்றைய இலங்கைச் சூழலில் ஆச்சரியத்திற்குரியதல்ல.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியமளித்த முன்னாள் நீதியமைச்சரும் இந்நாள் இனத் தேசியவாதியுமான விஜேதாச ராஜபக்ஷ, அ.இ.ஜ.உ. நாட்டை இஸ்லாமியமாக்குவதற்கு நான்கு மூலோபாயங்களை வைத்திருந்தனர். புர்கா, ஹலால், ஷரீஆ, பள்ளிவாயல்களை அதிகரித்தல். இவைதான் அந்த மூலோபாயங்கள் என்கிறார் விஜேதாச. எவ்வளவு கேவலமான பொய்கள் இவை.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஆதரவளித்தவர்களாக ஹிஸ்புல்லாஹ்வையும் ரிஷாதையும் முஜிபுர் ரஹ்மானையும் அவர் குற்றம் சாட்டுகின்றார். தேர்தல் நெருங்க நெருங்க இந்தப் பொய் மூட்டைகள் சிங்களத் தேசியவாதிகளால் அவிழ்க்கப்படுவது ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதல்ல. மோடியிடமிருந்து அவர்கள் கற்றுவிட்டார்கள். இந்த இலட்சணத்தில்தான் இன்றைய நாட்களில் நாட்டின் தேசிய அரசியல் நகர்கின்றது.

நிலமை இப்படியிருக்க, இரு வாரங்களுக்கு முன்னர் அ.இ.ஜ.உ.வின் தலைவர் கொள்ளுப்பிடிய ஜும்ஆ பள்ளியில் ஆற்றிய மிம்பர் உரையில் பின்வருமாறு திருவாய் மலர்ந்துள்ளார். “எமது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு அல்லாஹ் நல்லதொரு தலைவரை நாட்டுக்குத் தந்திருக்கின்றான். நாம் அனைவரும் ஒன்றுபட்டு, முஸ்லிம்கள் மட்டுமன்றி இந்த நாட்டில் வாழும் எல்லா மக்களும் ஒன்றுபட்டு இந்த ஜனாதிபதிக்காகப் பிரார்த்தித்தோம். அல்லாஹ்விடத்தில் மன்றாடினோம். குனூத்கள் ஓதினோம். யா அல்லாஹ் நல்லதொரு தலைவரைத் தா என்று கேட்டோம். அல்லாஹ் தந்திருக்கின்றான். அதற்கு நன்றியுடையவர்களாக துஆ பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்.”

பெப்ரவரி நான்காம் வார குத்பாக்களில் பெரும்பான்மையானவை தேசிய அரசியல் குறித்ததாகவே இருந்தது. அவை மறைமுகமாக தற்போது அதிகாரத்திலுள்ள கட்சிக்கு முஸ்லிம்கள் ஆதரவளிப்பதே முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது என்று மக்களைக் கோரின. நேரடியாக மௌலவிமார்கள் அரசியல் குறித்து கோரிக்கை விடுப்பது தவறாக விளங்கிக் கொள்ளப்படலாம் என்ற எச்சரிக்கை உணர்வுடன் இந்த அரசியல் கோரிக்கையை மிக சூட்சுமமாக அவர்கள் முன்வைத்தனர்.

கடந்த ஆட்சி மாற்றம் வரை அ.இ.ஜ.உ. கட்டுப்பாட்டிலுள்ள 95 வீதமான பள்ளிவாயல்களில் அரசியல் பேசுவதற்கான களமாக மிம்பர்களைப் பயன்படுத்தியதில்லை. இஸ்லாத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்பதே அவர்களது நிலைப்பாடு போல் தோன்றியது. சமூகப் பிரச்சினைகள், சர்வதேச விவகாரங்கள், நடப்பு விவகாரங்கள் குறித்து பள்ளிவாயல்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இவர்கள் பேசுவதுமில்லை. பேச விரும்பும் ஏனைய ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம்கொடுப்பதுமில்லை.

ஆனால் இன்று அதிரடியாக எல்லாம் மாறிவிட்டது. கொள்ளுப்பிடி பள்ளியில் அ.இ.ஜ.உ. தலைவர் ஆற்றிய உரை முழுவதும் அரசியல் குறித்தது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுமுள்ள ஜும்ஆ பள்ளிவாயல்களிலும் இதுபோன்ற உரைகள் (தற்போது அதிகாரத்திலுள்ளவர்களுக்கு வாக்களிப்பது பற்றி சிந்திக்க வேண்டும்) மிம்பர் மேடைகளில் ஆற்றப்படுகின்றன. இதற்கான வழிகாட்டல்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிராந்திய மட்டப் பள்ளிவாயல்களுக்கு வழங்கியுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

அ.இ.ஜ.உ. தலைவரின் உரையிலுள்ள இன்னொரு சுவாரஷ்யமான விடயம், ஒரு பெரும்பான்மைச் சமூகத்தோடு வாழும் பொழுது சில சில விடயங்களை நாம் விட்டுக் கொடுக்க வேண்டும். எதற்காக பெரியதொரு விடயத்தை அடைந்துகொள்வதற்காக என அவர் கூறியுள்ள கருத்து ஆழமான சிந்தனைக்குரியது.

இஸ்லாத்துடன் எந்த விதத்திலும் தொடர்புபடாத நிகாப் எனப்படும் முகத்திரையை விட்டுக் கொடுக்கத் தயாரில்லாத ஜம்இய்யதுல் உலமா வேறு எதனை விட்டுக் கொடுக்குமாறு மக்களைக் கோருகின்றது என்பது தெரியவில்லை.

இன்று இலங்கையில் பேரினவாதிகளால் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் காட்டமான குறியீடாக விமர்சிக்கப்படுகின்ற, விவாதிக்கப்படுகின்ற சர்ச்சைக்குரிய விடயமே நிகாப் எனும் முகத்திரையாகும். தேசிய பாதுகாப்புக் குழுவும் நிகாப் தடை செய்யப்பட வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்துள்ளது.

மூலாதாரங்களில் தெட்டத் தெளிவான சட்ட வசனங்களின் மூலம் கடமையாக்கப்படாத ஒன்றை இந்நாட்டில் வாழ்கின்ற பிற சமூகங்களால் வெறுக்கப்படும் நிலையிலும் முஸ்லிம் சமூகத்தின் மீது நாம் திணித்துக் கொண்டு விட்டுக் கொடுப்பது பற்றி பேச விளைவது எதனை எனக் கேட்கத் தோன்றுகின்றது.

முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் சில ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்டோர் எதிர்வரும் தேர்தலில் பொது ஜன பெரமுனவுக்கு வாக்களிக்குமாறு முஸ்லிம்களுக்குத் தூண்டுதலளிக்க வேண்டும் என்று ஜம்இய்யதுல் உலமா மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர். அதன் விளைவே ஜம்இய்யாவின் அதிரடி மாற்றம் என்பது வெள்ளிடை மலை.

ஆனால், நேரடியாக மிம்பர்களில் ஒரு கட்சிக்கு ஆதரவளிக்குமாறு தூண்டுவதும் கட்சி அரசியலில் இறங்குவதும் ஜம்இய்யதுல் உலமா போன்ற நிறுவனங்களுக்கு ஆரோக்கியமானதல்ல. நாட்டின் எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும். முஸ்லிம்கள் என்ன வகையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து உலமா சபை இந்நாட்டின் கல்விமான்கள், புத்திஜீவிகளோடு விரிவாகக் கலந்தாலோசிக்க வேண்டும்.

வெறுமனே ஆளும் தரப்புக்கு வாக்களித்து விட்டால் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமய, கலாச்சார, அரசியல் பிரச்சினைகள் அனைத்தும் முடிந்து விடுமா? அதற்கு அதிகார வர்க்கம் தரும் உத்தரவாதம் என்ன?

பள்ளிவாயல்கள் தாக்கப்படுவதும், மத்ரஸாக்கள் கண்காணிக்கப்படுவதும், முஸ்லிம் சனத்தொகைக்கேற்ப பள்ளிவாயல்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதும் முஸ்லிம் சமூகத்தின் மத, கலாசாரத்தில் தலையீடு செய்யும் எதேச்சதிகாரமாகும். திரட்சியான முஸ்லிம் வாக்குகள் ஆளும் தரப்புக்குக் கிடைத்தால் இவையெல்லாம் நிறுத்தப்படுமா?

சர்வதேச நெருக்கடிக் குழு ஜனவரி 29 இல் வெளியிட்டுள்ள அறிக்கை எமது மீள்சிந்திப்புக்குரியது. “கண்காணிப்புப் பட்டியல் 2020” எனும் தலைப்பில் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுக்களில் ஒன்றான சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) ஜனவரி 29 இல் வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியமானது.

“இலங்கையில் கடந்த 16 நவம்பர் 2019 இல் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இன உறவுகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான கொள்கைகளில் அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தொடர்பான கொள்கைகளை பலத்த சவாலுக்கு உட்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்க வேண்டியுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் பாகுபாடான வேலைத் திட்டங்களுக்கோ அல்லது தீவிரமயமாதலைக் குறைத்தல் அல்லது புனர்வாழ்வளித்தல் எனும் போர்வையிலான, மனித உரிமைகளைப் பேணாத முஸ்லிம்களை இலக்கு வைக்கும் திட்டமிட்ட வேலைத் திட்டங்களுக்கோ நிதியளிப்பதை ஐரோப்பிய ஒன்றியம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். 2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இலங்கை ஆழமாக துருவமயப்பட்டுள்ளதைக் காண்பிக்கின்றது. ராஜபக்ஷ அரசாங்கத்தின் 54 அமைச்சர்களில் இருவர் மாத்திரமே தமிழர்கள். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முஸ்லிம் ஒருவர் கூட இல்லாத அமைச்சரவை இதுவே ஆகும். கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் தீவிரப் போக்குடைய பௌத்தர்கள் பாகுபாடுகளின் அடிப்படையில் முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளனர்” என்று அந்த அறிக்கை நீண்டு செல்கின்றது.

இதேவேளை, ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர். ஆ.சு. மாரசிங்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நோக்கும்போது நாடு இராணுவ மயமாகும் ஆபத்து தோன்றியுள்ளது என எச்சரித்துள்ளார். 100 நாட்களிலேயே இந்நிலை என்றால் தேர்தலுக்குப் பின்னர் நாட்டின் ஜனநாயகம் கேள்விக்குறியாகும் என்கிறார் அவர்.

வடக்குக் கிழக்கில் தேசிய அரசியலிலிருந்து மக்களைத் துருவமயப்படுத்தும் முஸ்லிம் தனிக்கட்சி அரசியல் தீவிரமாகச் செயற்படத் தொடங்கியுள்ளது. ஹக்கீம் மற்றும் ரிஷாத் ஆகியோர் சஜித் தலைமையிலான கூட்டணியுடன் இணைந்துள்ளனர். இக்கட்சிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளனர். பஷீர், ஹஸன் அலி, மயோன் முஸ்தபா போன்றோர் அதில் உள்ளடங்குகின்றனர். நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இம்முறை தனித்துக் களமிறங்கவுள்ளது. தெற்கிலுள்ள முஸ்லிம்கள் யாரை ஆதரிப்பது என்ற திருசங்கு நிலையில் உள்ளனர். ஒருபுறம் மொட்டுக் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. இன்னொரு பக்கம் ஐ.தே.க.வை விட்டுக் கொடுக்க முடியாத நிலையில் சில முஸ்லிம்கள் கட்சி விசுவாசிகளாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.

இத்தகைய சங்கடமான ஒரு சூழலில், ஆளும் தரப்பிற்கு வாக்களிக்குமாறு மக்களை சூட்சுமமாகக் கோருவது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். ஐக்கிய அமெரிக்காவில் செயல்படும் அமெரிக்க இஸ்லாமிய நிறுவனத்தின் (CAIR) தலைவர் நிஹாத் இவழ் குறிப்பிடும் ஒரு கருத்தை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தம்.

“முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் அவர்களுக்கு முஸ்லிம் அல்லாத எவரும் எதிரிகள் அல்லர்.” முஸ்லிம்கள் அரசியல் தொடர்பாகப் பின்பற்ற வேண்டிய அடிப்படைத் தத்துவம் இதுதான் என்கிறார் கலாநிதி நிஹாத் இவழ்.

மத கலாசார சுதந்திரம், கல்வி வாய்ப்பு, சுதந்திரமான வணிக நடவடிக்கைகள் இவற்றுக்கு இடையூறு இல்லாத எந்தச் சிங்கள அரசாங்கமாயினும் அதற்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்கலாம். ஆனால், அதற்குத் தகுந்த உத்தரவாதம் பெறப்பட வேண்டும். உத்தரவாதத்திற்கான பொறிமுறை என்ன என்பதே இங்குள்ள கேள்வியாகும். குருட்டுத் தனமாக நாம் இங்கு யாரையும் ஆதரிக்கவோ நிராகரிக்கவோ வேண்டியதில்லை.