தகுதியானவர்களைப் பிரநிதிகளாக்குவோம்

11

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. தகுதியானவர்களைப் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் கேட்கத் தொடங்கிவிட்டன. கடந்த தேர்தல்களில் போலவே மக்களும் வாக்குச் சாவடிக்குப் போகும் போது இதனை மறந்து விட்டு மீண்டும் இந்தத் தேர்தலில் இது பற்றிப் பேசத் தலைப்படுகிறார்கள். மீண்டும் அடுத்த மாதம் வாக்குச் சாவடிக்குச் சென்றதும் இதை மறந்து ஒரே குட்டையிலேயே விடிவின்றிச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள். தத்தமது மாவட்டங்கள் சார்பில் அந்தப் பிரதேச மக்கள் தமது பிரதிநிதியாக சிலரைத் தெரிவு செய்து அவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரானதும் அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாகவே அங்கு தொழிற்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்ற பின் இந்த விடயத்தையே மறந்து விடுகிறார்கள். ஆனாலும் என்ன ? அடுத்த முறை போய் வாக்குக் கேட்கும் போது தூக்கித் தருவதற்குத் தான் தமது மக்கள் தயாராக இருக்கிறார்களே என்ற தைரியம் அவர்களுக்கு. இதனை மாற்ற வேண்டுமென்றால் இந்த நச்சு வளையத்திலிருந்து வெளியேறுவதற்கு மக்கள் தான் முயற்சிக்க வேண்டும்.

அண்மைக்காலங்களில் பாராளுமன்றம் தனது கண்ணியத்தை இழந்து வருகிறது என்றால் அதன் உறுப்பினர்கள் தரக்குறைவாக நடந்து கொள்வது தான் அதற்குக் காரணமாக முடியும். கடந்த அரசாங்கத்தின் போது பாராளுமன்றத்தை அகௌரவப்படுத்தும் வகையில் கதிரைகளைத் தூக்கி எறிந்தவர்களும் வேதநூல்களைத் தூக்கி வீசியவர்களும் மிளகாய்த்தூள் தெளித்தவர்களும் நாட்டின் பாதுகாப்புப் பிரிவுக்குக் கட்டுப்படாமல் சபாநாயகரை அவரது கடமையைச் செய்ய விடாமல் தடுத்தவர்களும் இப்போது அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலேயே பாராளுமன்றமும் கலைக்கப்பட்டிருக்கிறது.

இப்படியானவர்கள் மீண்டும் வந்து வாக்குக் கேட்கும் போது மக்கள் இந்த நச்சு வளையத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கத் துணியவில்லை என்றால் தமது தலைவிதியைத் தாமே எழுதிக் கொள்ள வேண்டியிருக்கும். இதை மாற்றுவதற்கான மகத்தானதொரு சந்தர்ப்பம் இப்பொழுது நாட்டு மக்களுக்கு வாய்த்திருக்கிறது. அதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

என்றுமில்லாதவாறு தேசியவாத சிந்தனைகள் இப்பொழுது மேலெழுந்திருக்கின்றன. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு மக்களே முயல வேண்டும். தகுதி வாய்ந்தவர்களைப் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதில் மக்கள் முன்னின்றாலும் கூட கட்சிகள் அதற்குத் தடையாக அமைய முடியும். கட்சிகள் தேர்தலில் நிறுத்துகின்றவர்களுக்கே வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மக்களுக்கு ஏற்பட்டு விட இடமுண்டு. இவ்வாறான நிர்ப்பந்தங்களை மக்கள் ஒன்று சேர்ந்தால் முறியடிக்க முடியும்.

தகுதியில்லாத ஒருவர் தாம் சார்ந்துள்ள கட்சி சார்பாக தேர்தலில் நிறுத்தப்பட்டிருந்தால் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து தமது மாவட்டத்தில் வேறு கட்சிகளில் யாராவது தகுதி வாய்ந்தவர்கள் முன்னிறுத்தப்பட்டிருந்தால் அவர்களைத் தேர்தலில் வெல்ல வைப்பதற்கு மக்களால் முடியும். இப்படி மக்களே தகுதியற்றவர்களைப் புறக்கணிக்கத் தொடங்கினால் அரசியல் கட்சிகள் தன்னால் திருந்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகும். இந்த மாற்றத்தை மக்கள் இந்தத் தேர்தலில் செய்து காட்ட வேண்டும்.

நாட்டை முன்னேற்றுவதற்கான சிந்தனை பரவலாக்கப்பட்டுள்ள இந்த நிலையில், இதற்காக அனைவரும் ஒன்றுபடத் தயாராக இருக்கும் இந்தச் சூழலில் மக்கள் சரியான தெரிவைச் செய்யவில்லை என்றால் அது நாட்டின் அபிவிருத்தியையே பாதிக்கும். எனவே நாட்டுக்காக என்று சிந்திப்பவர்கள் நிச்சயமாக கட்சி பேதங்களைத் தாண்டி தகுதியானவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப முன்வர வேண்டும்.