மிம்பர் மேடை

26

பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு என்னவோ தலைப்பிறை கண்டதாக அறிவித்தது போன்றதொரு உணர்வைக் கிளப்பியிருக்கிறது. எங்கும் இது தான் பேச்சு. எந்த இடத்தில் பார்த்தாலும் தேர்தலுக்கான ஆயத்தங்கள்.

உலமா சபை அரசியலில் ஈடுபட ஆரம்பித்தது தான் இதற்குக் காரணமோ என்னவோ. தலைப்பிறையை உலமா சபை அறிவித்தால் வருகின்ற குதூகலம் இப்பொழுது அரசாங்கம் அறிவிக்கும் தகவல்களுக்கெல்லாம் குதூகலிக்கச் செய்கிறது. யார் அறிவித்தாலும் ஒன்று தானே என்ற உணர்வு தான் மக்களின் இந்த மாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் இது இன்னும் மிம்பர் மூலமாக அறிவிக்கப்படவி்ல்லையே என்பது தான் இப்போதுள்ள மனக்குறை.

நேர்ந்து தவமிருந்து பெற்ற ஜனாதிபதியுடன் சேர்ந்து உழைப்பதன் சிறப்பு சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ஆற்றிய குத்பா உரைக்குப் பின்னர் அதற்கு முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் ஆற்றிய எதிர்வினை உலமா சபை கட்சி அரசியலுக்குள் மூக்கை நுழைத்து விட்டதை நாட்டுக்கு வெளி்ப்படுத்தியது.

ஜனாதிபதியுடன் கைகோர்த்துச் செயற்படுங்கள் என்பது தலைமைத்துவங்கள் வழங்குகின்ற வழிகாட்டலாக இருக்கலாம். அது மக்கள் கட்டாயம் எடுத்து நடக்க வேண்டும் என்ற உத்தரவாக எடுக்கப்பட முடியாததாக இருக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் மிம்பரை மேடையாகப் பாவிக்கத் தொடங்கினால் அது எஞ்சியிருக்கும் இஸ்லாம் மதத்தையும் அரசியல் மயப்படுத்தியதாகவே அமையும். நாட்டில் மதகுருக்களும் மதத் தலைவர்களும் அரசியல் பேசியதனால் தான் ஏனைய மதங்கள் எல்லாம் அரசியல்மயப்பட்டுப் போயின. இஸ்லாத்தையும் அரசியலுக்கு இழுத்து விடுவது தான் பாக்கி. இனி இஸ்லாமிய மதத் தலைவர்களையும் அரசியல் பேச வைத்தால் ஒட்டு மொத்த மதங்களையும் அரசியலால் தூக்கி விளையாட முடியுமான நிலை தோன்றிவிடும். அதனை நோக்கித் தானா முஸ்லிம் மதத் தலைவர்கள் செல்கிறார்கள் ?

பள்ளிவாசல்களின் மிம்பர்களை இப்படி நேரடி அரசியல் மேடைகளாகப் பயன்படுத்துவதை விட அநியாயத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மேடைகளாக ஏன் பயன்படுத்த முடியாது ? தனது சகோதரன் அநியாயம் செய்தாலும் அவனைச் சார்ந்திரு என்பது ஜாஹிலிய்யச் சமூகத்தின் கோட்பாடு. தனது சகோதரன் அநியாயம் செய்தாலும் அவனைச் சார்ந்திரு, அவனை அநியாயத்தில் இருந்து மீட்பதற்காக என்பது ஜாஹிலியத்தை ஒழித்த இஸ்லாத்தின் கோஷம். ஆகவே ஆட்சியாளர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் அநியாயத்தின் பக்கம் இருக்கும் போது அந்த அநியாயத்துக்கு எதிராக (ஆட்சியாளனுக்கு எதிராக அல்ல) குரல் கொடுப்பதற்கும் முடியாமல் போவதென்றால் அது ஜாஹிலிய்யத்தைத் தெரிவு செய்ததாகவே அமையும்

அரசியலில் யாரைச் சார்ந்து நிற்பது என்பதற்கு முன்னர் முஸ்லிம்கள் நீதியைச் சார்ந்து நிற்பதற்கே மார்க்கத் தலைமைகள் வழிகாட்ட வேண்டும் ஊழல், வீண் விரயம், இலஞ்சம், மோசடி, துஷ்பிரயோகம், பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடித்தல் போன்ற விவகாரங்கள் பிழை, குற்றம் என்பதையும் இதற்கெதிராக பொதுமக்கள் நிற்க வேண்டும் என்பதையும் இந்த நிலைமைகளை மாற்றி அமைப்பதற்கு நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என்பதையும் அறைகூவல் விடுக்கும் இடமாக மதத் தலைவர்கள் மிம்பர்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

எடுத்த எடுப்பில் யாரைச் சார்ந்து நிற்பது என்பது தான் உணர்ச்சி மேலிட்ட பொதுமக்கள் கேட்கின்ற கேள்வியாக இருக்கும் அதற்குப் பதிலளிக்கும தலைமைகள் உணர்ச்சி வசப்படக் கூடாது. மக்களை நபர்களுடன் தொடர்புபடுத்த முயற்சிக்காமல் நலவின் பால் வழிப்படுத்துவதற்கே தலைமைகள் முயல வேண்டும்.

முஸ்லிம் சமூகத்திலிருந்தும் தேர்தலுக்குக்கான தயாரிப்புகள் நடந்து வருகின்றன. முஸ்லிம்களின் வாக்குகளைச் சிதறடிக்கச் செய்ய வேண்டும் என்று சில பிரதான கட்சிகள் களத்தில் இறங்கியிருக்கின்றன. தேர்தலுக்கான செலவினைப் பெற்றுக் கொள்வதற்காக பணத்தை வாரியிறைக்கக் கூடிய சில முஸ்லிம் வர்த்தகர்களை சில பிரதான கட்சிகள் தெரிவு செய்திருக்கின்றன. இன்னும் சில இடங்களில் பிரதேசத்தில் பிரபல்யமான ஆனால் பாராளுமன்றம் செல்லும் தகுதி இல்லாத முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக நிறுத்தி ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களுக்கு போதுமான வாக்குகள் கிடைக்காத அளவுக்கு முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன.

முஸ்லிம் சமூகத்துக்கு தனது கழுத்தை தானே அறுத்துக் கொள்கின்ற நிலையே இப்பொழுது உருவாகியிருக்கிறது. இதற்குள் அடுத்தவனது கழுத்தை அறுப்பதற்குக் குறிபார்த்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் கழுத்தறுப்புச் செய்வதற்கும் சிலர் தயாராகி வருவதென்றால் முஸ்லிம் சமூகத்தை அழிப்பதற்கு வேறு யாரும் தேவை இல்லை.

யார் எந்தக் கட்சியில் பிரிந்து நின்று வாக்களித்தாலும் அவர்கள் தாம் வாக்களித்து வெற்றி பெறச் செய்தவர்களை வைத்து சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும். சாய்ந்தமருது விவகாரம் இனவாதிகளை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற செய்தியை முஸ்லிம் சமூகத்துக்குச் சொல்லியிருக்கிறது. இந்த வேளையில் துஆக் கேட்டுப் பெற்ற ஜனாதிபதியால் கூட எதனையும் செய்ய முடியவில்லை. மிம்பரில் இருந்து குத்பா நடத்திய பள்ளிவாசலில் சிலை வைக்கப்பட்டதைக் கூட இணைந்து பணிபுரிபவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றால் இதற்கு இணைந்து பணி புரிபவர்கள் பதில் சொல்ல வேண்டும்.