Features நேர்காணல்

“இலங்கைக்கான இஸ்லாம் புதிய இஜ்திஹாத் மூலம் சொல்லப்பட வேண்டும்.”

Written by Administrator

கலாநிதி எம்.எம். நயீம்

கலாநிதி எம்.எம். நயீம் அவர்கள் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை திரு/கிண்ணியா மத்திய கல்லூரியிலும் உயர் கல்வியை பேருவலை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்திலும் கற்றுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் இளமானிப் பட்டத்தையும் (B.A.) யெமன் பல்கலைக்கழகத்தில் ‘சிறுபான்மை முஸ்லிம்களுக்கான இஸ்லாமிய சட்டங்கள்’ பிரிவில் முதுமானிப் பட்டத்தையும் (M.A.) மலேஷிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் “இஸ்லாமிய சட்டத் துறையில்” கலாநிதிப் பட்டத்தையும் (Ph.D) பூர்த்தி செய்துள்ளார்.

மலேஷிய பெட்ரோனாஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மூத்த விரிவுரையாளராக செயற்பட்டு வரும் இவர் இஸ்லாமிய   சட்டத்துறை சார்ந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். சர்வதேச இஸ்லாமிய மாநாடுகளில் பலதரப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ள கலாநிதி நயீம் அவர்கள் இஸ்லாமிய சட்டத்துறையில் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவர் மீள்பார்வை பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

  • உங்களது ஆய்வு முயற்சிகள் நூலாக்கங்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

ஆரம்பத்தில் ‘இஸ்லாமிய ஷரீஆ சட்டத் துறையின் நடுநிலைத் தன்மை’ எனும் தலைப்பில் ஜாமியா நளீமிய்யா பட்டப் படிப்புக்கான ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தேன். ‘சிறுபான்மைக்கான இஸ்லாமிய சட்டங்கள்’ எனும் தலைப்பில் முதுமானிக் கற்கைக்கான ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளேன். இதில் குறிப்பாக நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களின் சட்டப் பிரச்சினைகளை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் புதியதொரு கண்ணோட்டத்தில் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை சொல்லக்கூடிய வகையிலான ஆய்வாக இது உள்ளது. இதனை தொடர்ந்து எனது கலாநிதிக் கற்கைக்கான ஆய்வாக ‘இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் உள்ள திருமணம், விவாகரத்துடன் தொடர்பான பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்’எனும் தலைப்பில் எழுதியுள்ளேன்.

இதில் குறிப்பாக இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு இக்காலப்பிரிவில் இஸ்லாமிய சட்டம் தொடர்பில் தமிழ் மொழியில் ஒரு சட்ட நூல் இல்லாத குறையை உணர்ந்து முழு இஸ்லாமிய சட்டத்தையும் ஆரம்பம் தொட்டு கடைசி வரையில் எழுதி முடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி தற்போது ‘சுத்தம்’ என்னும் பாடப் புத்தகத்தையும் இரண்டாவது பகுதியாக ‘தொழுகை’ என்னும் பாடப் புத்தகத்தையும் எழுதியுள்ளேன். சட்டப்பகுதியில் குறிப்பாக இலங்கையில் வாழக் கூடிய முஸ்லிம்களுடன் அவர்களுடைய சூழ்நிலைகளுடன் சம்பந்தப்படுத்தி இந்த நாட்டுக்கான ஒரு சட்ட மூலாதாரமாக அமைய வேண்டும் என்ற வகையில் அது எழுதப்பட்டு வருகின்றது. தொடர்ந்தும் இது நோன்பு, ஸக்காத், ஹஜ் இபாதத், வணக்க வழிபாடுகளுடன் சம்பந்தப்பட்டதும் முஆமலாத்தோடு சம்பந்தப்பட்டதுமான எல்லா சட்டங்களையும் எழுதி முடிக்க வேண்டும் என்ற திட்டத்தையும் முன்னெடுத்து வருகிறேன்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு சில ஆய்வுக் கட்டுரைகளும் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. சர்வதேச ரீதியில் நடைபெற்ற மாநாடுகளிலும் இவற்றைச் சமர்ப்பித்துள்ளேன். அவ்வாய்வுக் கட்டுரைகளில் சில சர்வதேச சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. கிட்டத்தட்ட 9 மாநாடுகளில் இவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் எமது நாட்டைப் பற்றி அடிப்படை அறிவு இல்லாததொரு நிலை காணப்படுகின்றது. அதை அடிப்படையாகக் கொண்டு அடிப்படை இஸ்லாத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற குறைபாட்டை நீக்கும் வகையில் இமாம் நவவியின் 40 நபிமொழிகள் என்றொரு நூலையும் தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

  • பிக்ஹுல் அகல்லியாத் (சிறுபான்மைக்கான சட்டங்கள்) இதனை இலங்கைச் சூழலில் அமுல்படுத்துவதில் காணப்படுகின்ற நடைமுறைச் சிக்கல்களை சற்று தெளிவுபடுத்த முடியுமா?

எமது நாட்டைப் பொறுத்தவரையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கான பிக்ஹு தொடர்பில் பேசப்படுகின்ற நேரத்தில் அது பிக்ஹின் மிக உயர்ந்த தரமாகும். புதியதொரு வளர்ச்சிக் கட்டமாகும். இதுவே அண்மைக்காலப் போக்காகும். இந்தப் பகுதியில் ஒருவர் பேசுவதாக இருந்தால் அவர் பிக்ஹுத் துறையை ஆழமாகப் படித்து அதில் தேர்ச்சி பெற்ற ஒருவராகக் காணப்பட வேண்டும். இதனை எமது நாட்டுக்கு பேசுவதாக இருந்தால் இது புதியதொரு இஜ்திஹாதாக அமையும். புதிய இஜ்திஹாதைச் செய்வதற்கான தகைமையில் ஒன்றாக அல்குர்ஆன் ஸுன்னா பற்றிய அறிவுடன் பிக்ஹு ஆற்றலும் ஒருவருக்குக் காணப்பட வேண்டும். இது எப்படி வருமென்றால் தொடர்ந்தேர்ச்சியாக ஒருவர் பிக்ஹு துறையில் ஈடுபட்டு ஹதீஸ்கள், ஆய்வுகள், மத்ஹபுகளின் கருத்துக்கள் போன்றவற்றுடனான பரிச்சயத்துடன் வருவதாகும்.

இந்த ஆற்றலுள்ள இஜ்திஹாத் செய்யத் தகைமையுடையவர்கள் எமது நாட்டில் மிகக் குறைவாக உள்ளனர். இது பிக்ஹுல் அகல்லியாத்தில் உள்ளதொரு முக்கியமான பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்றால் எமது நாட்டிற்கு இஜ்திஹாத் செய்யக்கூடிய பிக்ஹுத் துறையுடன் சம்பந்தப்பட்ட மிக ஆழமாகக் கற்றவர்கள் உருவாக்கப்பட வேண்டியுள்ளது. அதேபோன்று இஜ்திஹாத் சம்பந்தமாக பேசுபவர்கள் இதுவரைக்கும் சில நவீன கால அறிஞர்கள் எழுதிய சில புத்தகங்களை வாசித்து அதனை அடிப்படையாகக் கொண்டே பேசி வருகின்றனர். இவர்களின் புதிய ஆய்வு முயற்சியாக இஜ்திஹாதாகப் பேசப்படுவது எமது நாட்டில் மிகவும் குறைவு. பிக்ஹு கலையில் இது மிக உயர்ந்ததொரு தரம். இந்தத் தரத்தை பேசும் பலரிடம் சில அடிப்படையான அம்சங்களில் கூட அறிவுத்தரம் போதாமையான ஒரு நிலை காணப்படுகின்றது. எமது சமூகத்தில் இஸ்லாமிய அறிவுத் தரம் ஒரு சாதாரண மட்டத்திலேயே உள்ளது. எனவே இந்த அறிவுத்தரம் கொண்ட மக்களுடன் பேசுகின்ற போது அந்தத் தரத்திலேயே பேச வேண்டும். இந்த மாதிரியான ஒரு பிரச்சினை இங்கு உள்ளது.

  • பிக்ஹு சம்பந்தமான அறிவுக் குறைவு என்பது முஸ்லிமல்லாதவர்களுடன் இஸ்லாத்தை பேசுவதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. இந்த அறிவுத்தரம் குறைவின் காரணமாகவே நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது என்கின்ற கருத்தை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்.?

ஒவ்வொரு சமூகத்துக்கும் அந்த சமூகத்துக்கான மொழியில் அவர்களின் அறிவுத் தரத்திற்கு ஏற்ப பேச வேண்டியதொரு நிலை இருக்கிறது. எனவே இந்தக் காலத்திற்குரிய நிலைமையை எடுத்துப் பார்த்தால் முதலில் எது தேவையாக உள்ளது என்பதை அடையாளப்படுத்த வேண்டும்.

இந்தத் தேவையைத்தான் முதலில் நாம் அடையாளப்படுத்தி வழங்க வேண்டும். அதே போன்று முஸ்லிம்களுக்கு எத்தகைய உள்ளடக்கம் அத்தியாவசியப்படுகின்றது என்பதை நாம் அடையாளப்படுத்த வேண்டும். அதேபோன்று இஸ்லாமிய சட்டத்தில் எது முதன்மைப்படுத்தப்பட வேண்டும் எது பிற்படுத்தப்பட வேண்டும் என்கின்ற கருத்தியல் இஸ்லாமிய சட்டத்தில் இருப்பதால் அதுவும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

எனவேதான் இவ்விடயங்களை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தவறு எமது நாட்டு மக்களுக்கு இஸ்லாத்தை முன்வைப்பதில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. இதனால்தான் சிலர் சில விடயங்களில் கடுமையாக இருக்கின்றனர். ஆனால் இஸ்லாம் கடுமையானதல்ல. இன்னும் சிலதைப் பார்த்தால் அது மிகவும் கடுமையான விடயமாக இருக்கும். ஆனால் அதில் சாதாரணமாக நடந்து கொள்ளக்கூடிய சூழ்நிலையும் உருவாகியிருப்பதைக் காண முடிகிறது. இங்குதான் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு ஹதீஸ் நினைவுக்கு வருகிறது. “நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த சமூகத்துக்கு மார்க்கத்தைப் புதுப்பிக்கக் கூடியவர்களை அனுப்புகிறான்.”

எனவே இந்த மார்க்கத்தைப் புதுப்பித்தல் என்கின்ற போது ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றவாறு மார்க்கத்தைப் புதுப்பிக்க வேண்டும். மார்க்கத்தைப் புதுப்பித்தல் என்பது இந்தக் காலத்தில் அதனை எப்படி முன்வைப்பது என்பதே கருத்தாகும். எது முற்படுத்தப்பட வேண்டும் எது பிற்படுத்தப்பட வேண்டும். அதிகமான பிரச்சினைகள் வருகின்ற போது அவ்விடயத்தில் எந்த விடயம் ஷரீஅத்தின் அடிப்படையில் வைத்து பாரம் கூடியது எது? பாரம் குறைந்தது எது?  என்று இவற்றை சரியான முறையில் கணிப்பிடாமல் சமூகத்துக்கு இஸ்லாத்தை விளங்கப் படுத்தும் போது பிரச்சினைகள் உருவாகின்றன. இஸ்லாத்தில் நடுநிலைத் தன்மை கட்டாயம் பேணப்பட வேண்டும். தீவிரவாதம் இந்நாட்டிற்கு சரிவராது. அதேபோன்று மார்க்கத்தை ஒருவர் பயங்கரமாக விளங்கி முன்வைக்கின்ற போக்குகள் எமது நாட்டிற்குப் பொருத்தமில்லை.

இவை தவிர இந்நாட்டில் ஒற்றுமை என்பது கவனத்திற்கொள்ளப்பட வேண்டும். சமூகத்தைப் பிரிக்கின்ற வகையில் மார்க்கத்தை முன்வைக்கக் கூடாது. இப்படியான விடயங்கள் சிறுபான்மை நாட்டில் இஸ்லாத்தை முன்வைக்கின்ற போது மிகவும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும்.

  • இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கென தனியானதொரு தலைமைத்துவம் காணப்பட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா? தலைமைத்துவம் எவ்வாறு அமைய வேண்டும் என நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?

இலங்கையை பொறுத்தவரையில் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான பிரிந்த தலைமைத்துவங்கள் தான் உள்ளன. ஏனைய சமூகங்களில் உள்ளது போன்று சமூகத்துக்கு வழிகாட்டக் கூடிய தலைமைத்துவம் இல்லாததொரு குறைபாடு முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக மார்க்க தலைமைத்துவம், அரசியல் தலைமைத்துவம் சமூக தலைமைத்துவம் என்பதாக மூன்று பகுதிகளாகப் பிரிந்து தலைமைத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் ஜம்மிய்யதுல் உலமா மார்க்கத் தலைமைத்துவத்தை சமூகத்துக்கு வழங்கும் அதே நேரம் அரசியல் ரீதியான கட்சிகள் பிரிந்து நின்று அதுவும் முஸ்லிம் சமூகத்தில் பிரிந்து நிற்கும் ஒரு வடிவத்திலும் மஜ்லிஸ் அஸ்ஸூரா (தேசிய சூறா சபை) சமூக ரீதியான விவகாரங்களில் கூடுதலாக சமூகத்தை வழிநடாத்தும் ஒரு சபையாகவும் இருந்து வருகிறது.

இவ்வாறு ஒரு தலைமைத்துவம் இல்லாத குறைபாடு காணப்படுகின்றது. மூன்று வடிவங்களில் தலைமைத்துவம் வழங்கப்பட்டு வருகின்ற இந்நேரத்தில் இம்மூன்று வகையான தலைமைத்துவங்களுக்கிடையிலும் ஒரு கூட்டுப் பொறுப்பு, ஒற்றுமை இருந்து அந்த சமூகத்தை வழிநடாத்துவார்களாக இருந்தால் அதுவொரு சிறந்த தலைமைத்துவமாக மாற முடியும்.

ஒரு தலைவர் இல்லாமல் மூன்று பேரும் சேர்ந்திருந்தால் ஒரு பலமான தலைமையை எமது சமூகத்துக்கு வழங்க முடியும். இம்மூன்று தரப்பும் தங்களுக்கிடையில் உள்ள கடுமையான கொள்கைகளை கைக்கொள்ளாமல் விட்டுக் கொடுப்புகளுடன் ஒன்றாக இணைந்து புரிந்துணர்வுடனும் ஒற்றுமையுடனும் சமூகத்தை வழிநடாத்தக் கூடிய நிலைக்கு வர வேண்டும். அவர்களுக்கிடையில் கொள்கை ரீதியாக ஒரு போக்கை எடுக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. களநிலவரம் என்னவெனில், இவர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு காணப்படுகிறது.

கொள்கை ரீதியான ஒரு போக்கை எடுக்கும் நிலைமை காணப்படுகின்றது. ஜம்மிய்யதுல் உலமா ஒரு கொள்கைவாத அமைப்பாக தப்லீக் ஜமாஅத் சார்ந்த சகோதரர்கள் கூடுதலாக இருக்கும் வகையில் ஒரு தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டுள்ளார்கள். இந்த தலைமைத்துவத்திற்கு கருத்து ரீதியாக முரண்பட்ட பலர் வெளியில் இருக்கிறார்கள். எனவே எல்லோரையும் உள்ளடக்கும் வகையில் ஒரு பொதுத் தளத்துக்கு வந்து விட்டுக் கொடுப்புகளைச் செய்து எல்லோரையும் அனுசரிக்கும் வகையில் அவர்களது தலைமைத்துவத்தை வகிப்பதற்கு உலமா சபை முன்வர வேண்டும்.

அதேநேரம் சமூக ரீதியான தலைமைத்துவத்தை வழங்கி வருகின்ற தேசிய சூறா சபையுடன் ஒரு நல்லுறவைப் பேணி கூட்டாகக் கலந்துரையாடி தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். அதேநேரம் இவ்விரு தரப்பும் சேர்ந்து அரசியல் தலைவர்களையும் உள்வாங்கும் வகையில் சமூகத்திற்கு தலைமைத்துவம் வழங்க முடியும். எமது சமூகம் உண்மையில் தலைமைத்துவத்திற்கு ஏற்ற நல்லதொரு அமைப்பைக் கொண்டுள்ளது.

  • இலங்கை முஸ்லிம் சமூகம் தனது செயற்பாடுகளை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

முஸ்லிம்கள் இன்று பொதுத் தளத்தில் பேச வேண்டிய நிலையுள்ளது. உதாரணமாக கொரோனா வைரஸ் பரவல். இதை தடுப்பதற்கு இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் என்ன? சூழல் பாதுகாப்பு, இஸ்லாத்தில் சூழல் பாதுகாப்பு தொடர்பில் இஸ்லாம் கூறுவது என்ன? உதாரணமாக மரநடுகையைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்லியிருக்கிறது.

இஸ்லாம் பயங்கரமானதொரு மார்க்கமல்ல. சிறுபான்மை நாட்டில் ஜிஹாத் பற்றிச் சிந்திப்பதே இஸ்லாமிய சட்டத்தில் தடை. எனவே உதவி புரிவதால்தான் மக்களது உள்ளங்களை அன்பால் நெருங்க முடியும் என்ற கருத்தே சமூகத்தில் காணப்படுகின்றது. அஹ்லாக் தொடர்பிலும், நம்பிக்கை தொடர்பிலும், விஞ்ஞான அற்புதங்கள் தொடர்பிலும் முஸ்லிம் சமூகம் தமது இஸ்லாமிய மார்க்கத்தை முன்வைக்க வேண்டும்.

இலங்கைக்கென்று தனியானதொரு இஸ்லாம் இல்லை. சவூதி அரேபியாவுக்கு ஒரு இஸ்லாம் உள்ளது. இந்திய முஸ்லிம் களுக்கு ஒரு இஸ்லாம் உள்ளது. பாகிஸ்தானுக்கும் அப்படித்தான். இலங்கைக்கு இஸ்லாத்தை கொண்டு வந்தவர்கள் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் சிறுகச் சிறுக இறக்குமதி செய்த இஸ்லாமே இது. எமது நாட்டின் சூழல் சமூக கட்டமைப்புக்கு ஏற்றது எது என்பது அடையாளம் காணப்படவில்லை.

வெளிநாட்டில் எப்படி இருந்ததோ அதேபோன்று தான் இங்கும் பின்பற்றப் படுகிறது. குர்ஆன் ஸுன்னாவை அடிப்படையாகக் கொண்டு எமது நாட்டிற்கு என்ன மாதிரியான இஸ்லாம் பின்பற்றப்பட வேண்டும் என்பது ஆய்வு செய்யப்பட்டு சமூகத்திற்கு முன்வைக்கப்பட வேண்டியதொரு தேவை உள்ளது. இலங்கைக்கான இஸ்லாம் புதிய இஜ்திஹாத் மூலம் சொல்லப்பட வேண்டும்.

About the author

Administrator

Leave a Comment