Features சமூகம்

அதிகாரப் பரவலாக்கம் ஊடாக வெற்றியடைந்த கொழும்பு வாழைத்தோட்டம் அல் மஸ்ஜிதுந் நஜ்ம்

Written by Administrator

ஹெட்டி ரம்ஸி

கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு மத்தி தொகுதியில் அமைந்துள்ள 20 தொகுதிகளுள் வாழைத்தோட்டம் மிக முக்கிய தொகுதியாக காணப்படுகிறது. இங்கு முஸ்லிம்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இப்பிரதேசத்தில் சுமார் 1250 முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமர் 15 கணக்காளர்களும், 3 வைத்தியர்களும் 30 ஆசிரியர்களும் பெருமளவான தொழிலதிபர்களும் உள்ளனர். இப்பிரதேசத்தில் தமிழ் சிங்கள மக்களும் கலந்து வாழ்கின்றனர்.

வாழைத்தோட்டம் பிரதேசத்திலுள்ள அல் மஸ்ஜிதுந் நஜ்மி பள்ளிவாசல் மிகவும் பிரபல்யமான பள்ளிவாசலாக காணப்படுகிறது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் தலைநகருக்கு வருகின்ற முஸ்லிம்கள் தொழுகைக்காக வேண்டி புறக்கோட்டையை அண்டியதாக உள்ள இப்பள்ளிக்கு வருகின்றனர். இப்பள்ளிவாசலினூடாக இப்பிரதேசத்தை சேர்ந்த சகல மக்களுக்கும் பொதுச் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பொதுச் சேவைக்காக வேண்டி இப்பள்ளி நிர்வாகம் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தியுள்ளது.

பள்ளிவாசலை தொழுகைக்காகவும் ஓரிரு அமல் இபாதத்களை மேற்கொள் வதற்காகவும் மாத்திரமல்லாமல் பள்ளியை மையமாக வைத்து மக்களுக்குத் தேவையான பொதுச் சேவைகளை முன்னெடுக்கும் தளமாக இப்பள்ளிவாசல் இயங்கி வருகின்றது. இப்பள்ளிவாசல் இதற்கென 15 அம்ச செயற்திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது.

கடந்த 26 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்தத் திட்டம் பல்வேறு வெற்றிகளை இப்பிரதேசத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளது. இப்பிரதேசத்தை சேர்ந்த முன்னோர்கள் இப்பள்ளிவாசலை 1922 ஆம் ஆண்டு புனர்நிர்மாணம் செய்துள்ளனர். இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்தும் நாட்டின் வெளிமாவட்டங்களிலிருந்தும் வரக்கூடிய முஸ்லிம்களது சமூக விவகாரங்கள் இப்பள்ளிவாசலினூடாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் மர்ஜாஉல் முஸ்லிமீன் என்பதாக இப்பள்ளிவாசல் இயங்கி, பல்வேறு சமூகப் பணிகளை செய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு இப்பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வக்ப் செய்யப்பட்ட மிக முக்கிய பள்ளிவாசலாக மாற்றப்பட்டது.

இப்பள்ளிவாசலின் முன்னைநாள் நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட நலன் விரும்பிகள் பள்ளியை நிர்மாணிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். தற்பொழுது இப்பள்ளிவாசல் 5 மாடிக் கட்டிடங்களை கொண்ட பள்ளிவாசலாக நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாகத்தினர் பள்ளிவாசலை மையமாகக் கொண்டு 15 அம்ச திட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இத்திட்டத்தின் மூலம் பல்வேறு வெற்றிகள் அடையப்பெற்றுள்ளன. இதில் குறிப்பாக பள்ளிவாசல் நிர்வாகம் பள்ளி நிர்வாகத்தின் செயற்பாடுகளை அதிகாரப் பரவலாக்கம் செய்துள்ளது. அதிகாரப் பரவலாக்கல் என்னும் நடைமுறையின் கீழ் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதிகாரம் ஓரிடத்தில் தங்கியிருக்கும் என்றால் முன்னேற்றங்களை அடைவது குறைவு. அதிகாரப் பரவலாக்கல் முறைக்கூடாக குழுக்கள் அமைத்து அதனூடாக செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போது பல வெற்றிகளை அடைய முடிகின்றது. இதனை இப்பள்ளி வாசல் முழு உலகிற்கும் முன்னுதாரணமாக வழங்கியுள்ளது. 

இதனடிப்படையில் 1996 ஆம் ஆண்டிலிருந்து பல குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் முதலாவது உள்நிர்வாகக் குழுவை குறிப்பிட முடியும்.

உள்நிர்வாகக் குழு

பள்ளிவாசலுக்குத் தேவையான உலமாக்களை நியமித்தல், முஅத்தின்களை நியமித்தல் வரையான சகல செயற்பாடுகளும் இக்குழுவினூடாக முன்னெடுக்கப்படுகிறது. பள்ளியினுடைய உலமாக்களுக்கு ஊதியங்களை வழங்குவது, ஊதியங்களுக்கான செயற்திட்டங்களை கொண்டு வருவது,  சந்தாக்களைப் பிரிப்பது, சந்தாக்கள் மூலமாக ஊதியங்களை வழங்குவது சம்பந்தப்பட்ட சகல விடயங்களிலும் உள் நிர்வாகக் குழுவே செயற்பட்டு வருகிறது. இதற்கொரு தலைவரையும் அதற்குட்பட்ட வகையில் ஆறேழு உறுப்பினர்களையும் கொண்டு இந்த உள்நிர்வாகக் குழு செயற்படுகிறது.

கல்விக் குழு

இப்பிரதேசத்தை சேர்ந்த மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கு பலவிதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு, பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள அல்ஹிக்மா முஸ்லிம் பாடசாலையுடன் இணைந்து பள்ளியும் பாடசாலையும் இணைவது எப்படி என்ற இணக்கப்பாட்டுடன் பாடசாலையின் எல்லா உதவிகளும் பள்ளிவாசல் மூலமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. கல்விக் குழுவின் மூலமாக பாடசாலைக்கு ஏற்படக்கூடிய குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய சில விடயங்களை பண உதவியாலும் ஆசிரியர் பற்றாக் குறைகளை நிவர்த்தி செய்வதிலும் மற்றுமுண்டான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு கல்விக் குழு மாணவர்களுக்கான கல்விப் பெறுபேறுகளை அடையக் கூடிய விடயங்களை கல்விக் குழு மேற்கொண்டு வருகிறது.

மத்ரசா குழு

இப்பிரதேசத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மார்க்க அறிவுப் போதனைகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது? அதற்கான மௌலவிமார்களை நியமிப்பது, அவர்களுக்கான சம்பளத் தொகையை வழங்குவது போன்ற செயற்பாடுகள் இக்குழுவின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதேநேரம் மாணவர்களின் பகுதி நேர வகுப்பறைகளையும், அல்குர்ஆன் ஹிப்ழ் மத்ரஸாக்களையும் அமைத்து முன்னெடுத்துச் செல்வதும் இதன் பணியாக உள்ளது. ஹிப்ழ் மத்ரஸா மூலம் 15 ஹாபிழ்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். இது பகுதி நேர மத்ரசாவாகவே இயங்கி வருகிறது. இன்றும் இம்மத்ரசாவில் கிட்டத்தட்ட 450 – 500 மாணவர்கள் மார்க்கக் கல்வியை கற்று வருகின்றனர். 

ஸக்காத் குழு

 இஸ்லாத்தினுடைய 4ஆவது கடமை ஸக்காத் என்பதை தெளிவுபடுத்தி அதன் மூலமாக கூட்டு ஸக்காத்தை நடைமுறைப்படுத்தி, ஸக்காத் பெறக்கூடிய பகுதிகளிலிருந்து ஸக்காத்தை பெறக்கூடிய மக்களை தெரிவுசெய்து அவர்களுக்கு ஸகாத் அடிப்படையிலான உதவிகள் இக்குழுவினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கட்டிடக் குழு

இப்பள்ளிவாசலின் புனர்நிர்மாண விடயங்களை மேற்கொள்ளக்கூடிய குழுவாக கட்டிடக் குழு காணப்படுகின்றது. பள்ளிக்குத் தேவையான புனர்நிர்மாண விடய ஏற்பாடுகளைச் செய்து, கட்டிடங்களை எப்படி நிர்மாணிப்பது? அதற்கான பண வசூலை செய்வது தொடர்பான விடயங்கள் கட்டிடக் குழு மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பைத்துல்மால் அமைப்பு

பைத்துல்மால் நலன்புரி என்ற அமைப்பும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக இப்பிரதேசத்தில் உள்ள வாலிபர்கள் ஒன்றிணைக்கப்பட்டு அவர்கள் மூலமாக பொதுச் சேவையை ஏற்படுத்தக் கூடிய குழுவாக அமைக்கப்பட்டு இதன் மூலமாக பல உதவிகள் சமூகத்துக்குச் செய்யப்பட்டு வருகின்றது. இப்பிரதேசத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் சுய தொழிலுக்காக வேண்டி, தொழில் ஊக்குவிப்புக்கான கடன் உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றது. கடன் உதவியின் மூலமாக வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. 50,000 ரூபா பணம் கடனாக கொடுக்கப்பட்டால் ஒரு வருட காலத்தில் அப்பணத்தொகை திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.

ஜனாஸா, நிக்காஹ் சம்பந்தப்பட்ட குழு

பொதுவாக பிரதேசத்தில் இடம்பெறுகின்ற ஜனாசாக்களுக்குரிய கபன் துணிகளை வழங்குவது, ஜனாசாவை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பது, அதேபோன்று ஜனாசாவுடன் சம்பந்தப்பட்ட சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வது போன்ற விடயங்கள் இதன் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேநேரம் இந்தக் குழுவுடன் இணைந்ததாக நிக்காஹ் குழுவும் காணப்படுகின்றது. இப்பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகள் நிக்காஹ் செய்கின்ற போது பள்ளிவாசலுடன் இணைந்ததாக பள்ளியுடன் ஈடுபடுத்தி நிக்காஹ்வுக்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது.

இளைஞர் விளையாட்டுக் குழு

விளையாட்டின் மூலம் பிரதேசத்திலுள்ள இளைஞர்கள் ஒன்றுசேர்க்கப்படுகின்றனர். 16 முதல் 32 வயதான இளைஞர்கள் ஒன்றுசேர்க்கப்பட்டு விளையாட்டுத் துறை, கல்வி சம்பந்தப்பட்ட விடயங்களில் உதவி செய்வதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

சகவாழ்வுக் குழு

பிரதேசத்திலுள்ள தமிழ், சிங்கள, கிறிஸ்தவ சகோதரர்களை ஒன்று சேர்த்து     சகவாழ்வுக்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீண்ட காலமாக இவர்களுடன் இணைந்து இப்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மகளிர் குழு

மஸ்ஜிதுந் நஜ்மி பள்ளிவாசலின் மகளிர் அணியில் சுமார் 110 பேர் அங்கத்தவர்களாக உள்ளனர். இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், உயர்தரம் மற்றும் சாதாரண தரம் கற்றவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இயங்கி வருகின்றனர். பள்ளிவாசலுக்குட்பட்ட பெண்களுக்கான பணிகள் இக்குழுவின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அநாதைகள், விதவைகள் குழு

கணவரை இழந்த விதவைகளுக்கு இத்தா இருக்கின்ற காலப்பகுதியில் மாதத்திற்கு 5000 ரூபா என்ற அடிப்படையில் பள்ளிவாசலினால் பணம் வழங்கப்படுகிறது. இத்தாவிலிருந்து வெளியே வரும் வரை 4 மாதங்களுக்கு 20,000 ரூபா பணம் கொடுக்கப்படும். அதே போன்று அநாதைப் பிள்ளைகளுக்கு மாதாந்தம் 1000 ரூபா பணமாக வழங்கப்படும். இவர்கள் வேண்டுகின்ற மேலதிக உதவிகளும் செய்துகொடுக்கப்படுகிறது.

ஸதகா, நலன்புரிக் குழு

ஸக்காத்தை குறிப்பிட்ட சிலருக்கே வழங்க முடியும். ஸதகா என்னும் போது அந்நிய மக்களையும் சேர்த்துக்கொண்டு அவர்களுடைய சில தேவைகளை செய்து கொடுக்க முடியும். அதாவது வீட்டு வேலைகளை செய்வதற்கு 10,000 ரூபா பணம் வரையில் இக்குழுவின் மூலம் வழங்கப்படுகின்றது.

வெளிவிவகாரக் குழு

வெளியிலுள்ள சகல இயக்கங்களையும், சகல தூதுவராலயங்களையும், இலங்கைக்கு அப்பாட்பட்ட தூதுவராலயங்களையும் தொடர்பு கொண்டு அவர்களுடனான உறவுகளை பேணிச் செல்வதற்கு இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சகல குழுக்களுக்கும் தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியை இன்னும் திறம்பட செய்ய வேண்டும் என்பதே இவர்களின் அவாவாக காணப்படுகின்றது. இலங்கையிலுள்ள மற்றைய பள்ளிவாசல்களிலும் இவ்வாறு குழுக்கள் அமைக்கப்பட்டு பிரதேசத்தினுடைய விவகாரங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கின்ற விடயத்தையே இவர்கள் வலியுறுத்துகின்றனர். பள்ளிவாசலை மையமாக வைத்து சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக காணப்படுகின்றது.

1250 குடும்பங்களை கொண்ட இப்பிரதேசத்திலுள்ள வீடுகள் ஒன்று அல்லது ஒன்றரை பேர்சஸ் அளவு கொண்ட வீடுகளாகவே காணப்படுகின்றன. இங்கு பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்களே வாழ்கின்றன. பொது மலசலகூடங்களே பயன்படுத்தப்படுகின்றன. இப்பின்னணியில் ஒரு வீட்டில் ஒரு ஜனாஸா நிகழ்ந்தால் அதை வைப்பதற்குக் கூட சரியான இடமில்லாத நிலை காணப்படுகின்றது. ஜனாஸாவுடைய கடமைகளை நிறைவேற்றுவதற்கு வீடுகளில் இடம் கிடையாது. இதனால் ஜனாஸா சம்பந்தமான விடயங்களை மேற்கொள்வதற்குப் பள்ளியுடன் இணைந்ததாக ஒரு கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

ஒரு ஜனாஸா நிகழ்ந்தால் அதனை குளிப்பாட்டி, கபனிட்டு, தொழுகை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இங்கு மேற்கொள்ள முடியுமான வகையில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்படுகின்றது. ஜனாசாவை வைப்பதற்கான கட்டிடத்திற்கு மேற்புறமாக ஒரு நூலகமும் அமைக்கப்பட்டு வருவதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவிக்கின்றது.

எனவே இக்கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்திசெய்வதற்கு தனவந்தர்கள், சமூக நலன்விரும்பிகளின் உதவிகளையும் இப்பள்ளி நிர்வாகம் நாடுகிறது. ஜனாசாவின் நான்கு கடமைகளை செய்யும் அதேவேளை நல்லடக்கம் செய்வதற்கு கப்ரிஸ்தானத்திற்கு ஜனாசாவை ஏற்றிச்செல்வதற்கு ஒரு வாகனம் தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கான உதவிகளை பள்ளிவாசல் எதிர்பார்க்கின்றது.

இப்பள்ளி நிர்வாகம் முன்னெடுக்கும் செயற்திட்டம் தொடர்பில் சில ஆலோசனைகள் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவிடமிருந்தும் பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மாவட்ட சம்மேளனத்தில் 12 சம்மேளனங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் வாழைத் தோட்டம் பள்ளிவாசலை உள்ளடக்கிய பெட்டா மஸ்ஜித் சம்மேளனம் ஆகும். இதில் கிட்டத்தட்ட 16 பள்ளிவாசல்கள் உள்ளன. 6 ஜும்ஆ பள்ளிவாசல்கள் உள்ளன. இந்த திட்டங்கள் இவர்களுக்கும் முன்வைப்பட்டு வருவதாக பள்ளிநிர்வாகம் தெரிவித்தது. ஒரு பிரதேசத்திலுள்ள பாடசாலையும் பள்ளிவாசலும் இணையும் போதே பிரதேச மட்டத்தில் வெற்றிகளைக் காண முடியும். பள்ளி வாசலும் பாடசாலையும் இணைய வேண்டும் என்ற கருத்தை நாம் நாட்டிற்கு வழங்கியிருப்பதாக நிர்வாகம் தெரிவிக்கின்றது.

சுய தொழிலில் ஈடுபடுபவர்களே இப்பிரதேசத்தில் அதிகமாகக் காணப்படுகின்றனர். இப்பிரதேசம் எதிர்கொள்கின்ற ஒரு சில பிரச்சினைகளும் இருப்பதாக பள்ளி நிர்வாகம் சுட்டிக்காட்டியது. போதைப் பொருளுக்கு அடிமைப்பட்ட ஒருசிலர் இங்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் பாவனையை இப்பிரதேசத்திலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பள்ளிநிர் வாகமும் பிரதேச மக்களும் ஈடுபட்டுள்ளனர். வறுமையை விட்டும் இப்பிரதேச மக்களை மீட்டெடுப்பதை தலையாய நோக்கமாக கொண்டு பல்வேறு திட்டங்களும் இங்கு முன்னெடுக்கப்பட்டு வருவதாக பள்ளி நிர்வாகம் தெரிவிக்கின்றது. வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கான சில உதவிகள் இப்பள்ளிவசாலுக்கு தேவைப்படுவதாகவும் நிர்வாகம் குறிப்பிடுகின்றது.

சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களை பள்ளிவாசலுக்கு அழைத்து சுய கற்றல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. பரீட்சைக்குத் தயாராகின்ற மாணவர்களுக்கு 3 மாத காலத்திற்கு இப்பள்ளியில் சுய கற்றல் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படுகிறது. ஹிப்ழ் மத்ரஸா விடயத்தில் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட போட்டியில் இப்பள்ளிவாசல் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் (MRCA) அகில இலங்கை ரீதியில் நடாத்திய போட்டியில் இரு முறை இப்பள்ளி வாசலுக்கு உட்பட்ட மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கொழும்பில் உள்ள 21 முஸ்லிம் பாடசாலைகளுள் பெறுபேறு மட்டத்திலும் இப்பள்ளிக்கு உட்பட்ட அல்ஹிதாயா பாடசாலை முதலிடத்தைப் பெற்றுள்ளது. அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட கல்வி, பொதுச் சேவை, அந்நிய மக்களுடனான உறவு போன்ற விடயங்களில் அகில இலங்கை மட்டத்தில் முன்னுதாரண பள்ளிவாசலாக 2018ஆம் ஆண்டு இப்பள்ளிவாசல் முத லிடத்தைப் பெற்றுள்ளது.

பள்ளிவாசலை மையமாக வைத்து பள்ளி நிர்வாகம் பொதுவிடயங்களில் ஈடுபட வேண்டும். பள்ளிவாசலை கொண்டு தான் ஊர் மக்கள் வழிநடாத்தப்பட வேண்டும். இப்படியான செயற்பாடுகளை செய்கின்ற போதே பள்ளிவாசலின் மகிமையும் கண்ணியமும் ஊர் மக்களால் மதிக்கப்பட்டு இதன் மூலமாகவே வெற்றியை அடைய முடியும் என்கின்ற செய்தியை அந்நஜ்ம் பள்ளிவாசல் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கியுள்ளது. அமல் இபாதத்களில் ஈடுபடுவது போன்று சமூகத்துக்குத் தேவையான விடயங்களிலும் ஈடுபட வேண்டும் என்கின்ற செய்தியையே இப்பள்ளி நிர்வாகம் முன்வைக்கின்றது.

About the author

Administrator

Leave a Comment