அரசியல் சிந்தனையாளர்கள்

21/4 என்பது எல்லா வகையிலும் இலங்கைக்கான 9/11

Written by Administrator

லத்தீப் பாரூக்

தேவாலயங்களில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்கள் மீது ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் தாக்குதல், அதன் பின்னர் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் மற்றும் படுகொலைகளின் பின்னால் இருந்தவர்கள் யார்?

திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட இந்தப் படுகொலைக்கு இன்றுடன் ஒருவருடம் ஆகியும் இதற்கான விடை இன்னும் கிடைத்ததாக இல்லை. 21/4 என்பது எல்லா வகையிலும் இலங்கைக்கான 9/11 ஆகும். இஸ்லாமும் முஸ்லிம்களும் தான் ஒரே இலக்கு. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் மீதான அமெரிக்க-ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய போர்களை நியாயப்படுத்துவதற்கு அமெரிக்க உளவுத்துறையும் இஸ்ரேலிய மொசாட்டும் செய்த உள்வேலையே 9/11 தாக்குதல் என சுயாதீன அறிக்கைகள் பலவும் தெரிவித்தன.

இலங்கையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்கள் மீதான குண்டுவெடிப்புக்கள், நியூயோர்க்கில் உலக வர்த்தக மையத்தில் நடந்த 9/11 குண்டுவெடிப்புக்களில் இஸ்ரேலிய மொசாட்டின் ஈடுபாட்டின் அனைத்து ஒற்றுமையையும் கொண்டிருந்தன. இதற்குப் பின்னர் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்கள், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் அனுசரணையில் டெல்லியில் நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல்கள் உள்ளிட்ட இந்திய முஸ்லிம்கள் மீதான் இந்துத்துவ ஆர்எஸ்எஸ் இன் எரிப்புக்களையும் உடைப்புக்களையும் ஒத்திருந்தன.

ஈஸ்டர் தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது பழி சுமத்துவதற்கும், அவர்களை காட்டுமிராண்டிகளாகச் சித்திரிப்பதற்கும், அவர்கள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்குமான சதி என்பதை நிரூபித்தது. இனவாத அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், தொழில்வாண்மையாளர்கள், ஊடகங்கள், மதகுருமார்கள், வெளிநாட்டுச் சக்திகள் எனப் பலதரப்பினரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டின. பொய்களை விற்று திட்டமிட்ட பிரச்சாரமொன்றை கடுமையாக முன்னெடுத்த ஊடகங்கள் இந்தக் குற்றத்துடன் எந்தச் சம்பந்தமும் இல்லாத முழு முஸ்லிம் சமூகத்தையும் குற்றஞ்சாட்டின.

ஏப்ரல் 4 ஆம் திகதி, தாக்குதலுக்கு 17 நாட்களுக்கு முன்னரே இந்திய உளவுத் துறை தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதனை அறிந்திருந்தனர். ஜனாதிபதி சிரிசேன, பிரதமர் விக்கிரமசிங்க, உளவுத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருமே இந்தத் தாக்குதலைத் தடுக்கவும் அப்பாவி உயிர்களைப் பாதுகாக்கவும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இன்றுமுள்ள கேள்வியாகும்.

இந்தக் கேள்விக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். மாறாக மைத்திரி திருப்பதி வெங்கடேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றார். இலங்கையிலுள்ள கடவுள் அவரது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கவில்லையோ, என்னவோ. அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். ரணில் கடற்கரை விடுதியில் உல்லாசமாய்க் களித்துக் கொண்டிருந்தார். இது இந்தப் படுகொலை நடப்பதற்கு அவர்கள் இடமளித்ததை தெளிவாகக் காட்டியது. ஒருவேளை இது முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச சக்திகளின் சதியினை நடைமுறைப்படுத்துவதாக இருக்கலாம். இது முஸ்லிம்களுக்கு எதிராக கிறிஸ்தவர்களை தூண்டிவிடுவதற்கான சதித்திட்டமாக இருக்கலாம் எனச் சிலர் ஊகிக்கின்றனர். இருந்தபோதிலும் கருதினால் மல்கம் ரஞ்சித் உரிய தருணத்தில் தலையிட்டதனால் பேரழிவொன்று தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் பலதடவைகள் கூறினார். இதனால் பெரியதொரு சதி முயற்சி தோற்கடிக்கப்பட்டது.

அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய, இஸ்ரேலிய யுத்த வியாபாரிகளுக்கு இஸ்லாமோபோபியாவை இலங்கைக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்கிய வகையில் மைத்திரியும் ரணிலுமே இந்தப் படுகொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மைத்திரியும் ரணிலும் தமது பொறுப்பை ஏற்றுக் கொண்டு தமது பதவிகளில் இருந்து இராஜினாமாச் செய்யலாம் என்று யாரும் எதிர்பார்க்க முடியும். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களின் மரபுவழிவந்த இத்தகைய தார்மீக விழுமியங்கள், துரதிர்ஷ்டவசமாக வளர்ந்து வரும் இனவெறி அரசியலின் கீழ் வெகுகாலத்துக்கு முன்னே தொலைந்து போயின. இங்கு மைத்திரி தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருந்தார். ரணில் பிரதமராகவே இருந்தார். இது மிகவும் நகைப்புக்கிடமானது.

சரியாகச் சொல்வதென்றால் மைத்திரி – ரணில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே அதன் நம்பகத்தன்மையை இழந்து விட்டது. ஆட்சிக்குத் தெரிவு செய்யப்பட்டால், குற்றம், ஊழல் என்பவற்றில் ஈடுபட்டு நாட்டைக் குட்டிச் சுவராக்கி பொருளாதாரத்தைப் பாழ்படுத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாக இருவரும் நாட்டுக்கு வாக்குறுதியளித்தபோது மக்கள் அதனை நம்பி இவர்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் அதற்கு மாற்றமாக மீண்டும் அவர்களே ஆட்சிக்கு வருவதற்கான சூழலை இவர்கள் உருவாக்கிக் கொடுத்தார்கள்.

துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராக இனி வன்முறைகள் இருக்காது என்று அவர்கள் வாக்குறுதியளித்த போது அவர்களது உத்தரவாதங்களை நம்பி முஸ்லிம் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் கிந்தோட்டையில் தொடங்கி, திகன, அகுரண மற்றும் கண்டியைச் சூழ உள்ள பிரதேசங்களிலும், ஈஸ்டர் தாக்குதலை அடுத்து இனவெறியர்களால் நாட்டின் பல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்ட இனவெறித் தாக்குதல்களின் போது அவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக இவர்கள் பாராமுகமாக இருந்தார்கள்.

அமைதி எனும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தத் தொடர்புமில்லாத முஸ்லிம் சமூகத்தை அழிப்பதற்கான இந்தச் சதித்திட்டத்தில் ஸஹ்ரானும் அவனது வெறியர்களது குழுவும், சர்வதேச சக்திகளின் வேலை என்று பல அமைச்சர்கள் கூறிய பணிக்கு கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சம்பளமும் கொடுத்து வேலை ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் இந்தச் சர்வதேச சக்திகள் யார் என்பதை எடுத்துச் சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை.

ஸஹ்ரானும் அவரது பாசிஸ்ட் குழுவினரும், மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் அதிகாரிகளால் போஷிக்கப்பட்டவர்கள். இலங்கையின் ஈஸ்டர் சோகம் – ஆழ்நிலை அரசு அதன் ஆழத்திலிருந்து வெளியேறிய வேளை “Sri Lanka’s Easter Tragedy; WHEN THE DEEP STATE GETS OUT OF ITS DEPTH என்ற நூலில் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) அமைப்பின் ஸ்தாபக அங்கத்தவர் ரத்னஜீவன் ஹூல், கலாநிதி ராஜினி திரானகம, கலாநிதி கே. ஸ்ரீதரன் ஆகியோர் இதனை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர.

ஸஹ்ரானும் குழுவினரும் ஒப்பந்தக் கொலையாளிகள் எனச் சிலர் குறிப்பிடுகின்றனர். அவருக்கு ஒப்பந்தத்தை ஒப்படைத்தது யார் என்ற கேள்விக்கு பலருக்கு விடை தெரிந்தாலும் எவருமே அதனை வெளிப்படுத்துவதில்லை. குண்டு வெடிப்பு மற்றும் படுகொலைகள் தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணியும் இன்னும் முடியவில்லை.

முஸ்லிம்களுக்கு நடந்த அட்டூழியங்கள், அவர்களின் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் சொத்துக்களை எரித்தல், கொள்ளையிடல், நோன்பு நோற்றிருந்த ஒரு முஸ்லிமை தனது இளவயது புதல்வனின் முன்னால் கொலை செய்தல், மற்றுமொரு முஸ்லிமை அடித்துக் கொலை செய்தல் போன்ற காட்டு மிராண்டித் தனங்களெல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2009 இல் இன முரண்பாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதிலிருந்து குண்டர்கள் அனுபவித்து வரும் சுதந்திரம் வெறுப்புக்குரியதாகவிருக்கிறது. எடுத்துக்காட்டாக, ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் முடுக்கிவிடப்பட்ட வன்முறைகளில் ஈடுபட்ட குண்டர்கள் எவருமே கைது செய்யப்படவில்லை.

கொலை, கொள்ளை, எரிப்பு, தாக்குதல் எல்லாவற்றையும் முடிப்பதற்கு குண்டர்களுக்கு போதுமான அவகாசம் வழங்கிய பின்பே பாதுகாப்புத் தரப்பினர் ஸ்தலத்துக்கு வந்து சேர்ந்தனர். குண்டர் தாக்குதல்கள் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என இராணுவத் தளபதி மஹேஷ் சேனாரத்ன வெட்கமின்றிக் கூறுகிறார். 2009 இல் எல்ரிரிஈ தோற்கடிக்கப்பட்டதில் இருந்து சிங்கள பௌத்த தீவிரவாதிகளின் துன்புறுத்தல், துஷ்பிரயோகம், அவமானம் போன்றவற்றுக்கு முஸ்லிம்கள் ஆளாகி வருகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல்களை அடுத்து படையினர் பூட்ஸ் கால்களுடனும் நாய்களுடனும் பள்ளிவாசல்களில் நுழைந்ததை முஸ்லிம் சமூகம் கடுமையாக எதிர்த்தது. பள்ளிவாசல்கள் பெரும்பாலும் தொழுவதற்கான பரந்த பகுதியுடன் ஒன்றிரண்டு அறைகளைக் கொண்டே அமைந்திருக்கும். இங்கு படையினர் பூட்ஸ் கால்களுடன் நாய்களையெல்லாம் கொண்டு வந்து சோதிக்க வேண்டிய அவசியமில்லை.

சலுகைகளுக்காகவும் பதவிகளுக்காகவும் விலைபோயுள்ள அரசியல்வாதிகளுக்கும், அரசியல்மயப்பட்டு முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையையும் மரியாதையையும் இழந்து போய் சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஜம்இய்யதுல் உலமாவுக்கும் இடையில் சிக்கி முஸ்லிம் சமூகம் காயப்பட்டு துவண்டு போயிருக்கிறது.

சிங்களப் பயங்கரவாதம் வன்முறைக்கூடாக வளர்ந்திருக்கிறது என கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க குறிப்பிட்டதை விடச் சுருக்கமாக, முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள வன்முறையைக் குறிப்பிடுவதற்கு வேறென்ன வார்த்தை இருக்க முடியும் என பத்தியெழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். 2018 இல் சட்டம் ஒழுங்கு அமைச்சையும் வரிந்து கட்டிக் கொண்டு, பாதுகாப்புப் படையின் தலைவராகவும் கடமையாற்றிய ஜனாதிபதி சிரிசேன இரண்டு விடயங்களிலுமே திறமையை வெளிக்காட்டவில்லை என்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. குருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களால் நடத்தப்பட்ட வன்முறையில் ஈடுபட்டவர்களில் நால்வரை அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மக்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் பிணையில் எடுத்த போதே அவரின் சட்டம், ஒழுங்கு அமைச்சின் வண்டவாளம் தெளிவாகத் தெரிந்தது. வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களுக்கு சட்டத்தின் நிழலில் சட்டம், ஒழுங்கையும் மீறி தஞ்சம் கொடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வருவது ஒரு நாட்டுக்கு எவ்வளவு கேவலமானது ?

தற்போது ஈஸ்டர் படுகொலையில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காக ஈஸ்டர் படுகொலையின் ஓராண்டு நிறைவில் முஸ்லிம்களை காட்டுமிராண்டிகளாகச் சித்திரிப்பதற்கான ஊடகப் பிரச்சாரமொன்றை இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் முன்னெடுக்கிறார்கள்.  இப்பொழுதுள்ள கேள்வி என்னவென்றால், இந்தக் குண்டு வெடிப்புகள், கொலைகள் மற்றும் வன்முறைகளுக்குப் பின்னாலுள்ள சூத்திரதாரிகளை இந்த நாடு அறிந்து கொள்ளாமலே போய் விடுமா என்பது தான்.

முஸ்லிம்களுக்கு எதிராக துப்பாக்கி முனையை நீட்டுகின்ற இந்தக் குற்றவாளிகள், நாட்டைத் துவம்சம் செய்த 30 வருட கால இனப் போரிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லையா?

About the author

Administrator

Leave a Comment