Features அரசியல் சிறப்புக்கட்டுரைகள்

கொவிட் 19 க்குப் பின்னரான உலகம்… எதிர்கால பன்டமிக்கை எதிர்கொள்வது எப்படி?

Written by Administrator

பில் கேட்ஸ்

நாங்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கொவிட் 19 உலகளாவிய தொற்றுநோயைப் பற்றி எழுதும் வராலாற்றாசிரியர்கள் முதல் முக்கால் பகுதியையே பெரும்பாலும் எழுதுவார்கள். ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்பது தான் மொத்தக் கதையுமே.

ஐரோப்பா, கிழக்காசியா, வட அமெரிக்க நாடுகள் இம்மாதம் இறுதிக்குள் பன்டமிக்கின் உச்ச எல்லையை கடந்து விடும். இன்னும் சில வாரங்களில் நிலைமை டிசம்பரில் இருந்தது போல் மீண்டு விடும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பு. துரதிர்ஷ்டவசமாக அப்படி நடக்காது.

மனிதகுலம் இந்தத் தொற்றுநோயை வெல்லும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அது மக்கட்தொகையில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி ஏற்றப்பட்டால் மட்டுமே. அதுவரை வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பாது. அரசாங்கங்கள் வீட்டிலிருப்பதற்கான உத்தரவை நீக்கி, வியாபார நிலையங்கள் தமது கதவுகளைத் திறந்தாலும், நோய் தொற்றிவிடுமோ என்ற அச்சம் மக்களை விட்டு நீங்கப் போவதில்லை. விமான நிலையங்களில் பெரிய கூட்டம் இருக்காது. விளையாட்டுக்கள் பார்வையாளரின்றி வெற்று அரங்குகளில் விளையாடப்படும். உலகப் பொருளாதாரம் மந்தமாகிவிடும். ஏனெனில் மக்களின் தேவை குறைவாக இருக்கும். மக்கள் மிகவும் பிற்போக்காகவே செலவழிப்பார்கள்.

வளர்ந்த நாடுகளில் குறைவடையும் தொற்று நோய் வளர்ந்து வரும் நாடுகளில் அதிகரிக்கும். இது மோசமான அனுபவத்தை வளர்ந்து வரும் நாடுகளில் ஏற்படுத்தும். தொலைவிலிருந்து தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புக்கள் குறைந்த வறிய நாடுகளில், சமூக இடைவெளியைப் பேணுவது சாத்தியமில்லாது போகும். அங்கு வைரஸ் வேகமாகப் பரவும். பாதிக்கப்பட்டவர்களைக் கையாள முடியாத அளவுக்கு சுகாதார நடவடிக்கைகள் வீழ்ச்சி அடையும். கொவிட் 19 நியூயோர்க் போன்ற நகரங்களையே மூழ்கடித்தது. ஒரு மன்ஹாட்டன் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்ற கட்டில்களின் எண்ணிக்கையாவது ஆபிரிக்க நாடுகளில் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மில்லியன் கணக்கில் மக்கள் இறந்து விடுவார்கள்.

முக்கியமான பொருட்களை அதிக விலைக்கு ஏலத்தில் எடுப்பதில்லை என்ற உறுதிமொழிகளை வழங்குதல் போன்றவை மூலம் பணக்கார நாடுகள் வேண்டுமென்றால் உதவி செய்யலாம். ஆனால் தடுப்பூசி என்ற சிறந்த மருத்துவத் தீர்வு இந்த வைரஸுக்கு கிடைத்தால் மட்டுமே பணக்காரர்கள் என்றாலும் ஏழைகள் என்றாலும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

அடுத்துவரும் ஆண்டுகளில் உலகின் முக்கியமான நபர்களில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இருப்பார்கள். அதிர்ஷ்டவசமாக இந்த பன்டமிக்கிற்கு முன்னரேயே அவர்கள் தடுப்பூசி விவகாரத்தில் பாரியதொரு பாய்ச்சலை மேற்கொண்டிருந்தனர். வழக்கமான தடுப்பூசிகள், வைரஸின் இறந்த அல்லது வீரியம் இழந்த வடிவத்தை உடலுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் உடலுக்கு நோய்க்கிருமியின் அடையாளத்தைக் கற்றுக் கொடுக்கின்றன. ஆனால் புதிய வகையான நோய்த்தடுப்பு முறைகளும் உள்ளன. இதற்கு அதிகளவிலான நோய்க்கிருமிகளை வளர்ப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் நேரத்தைச் செலவிட வேண்டியதில்லை. இந்த mRNA தடுப்பூசிகள் நோயெதிர்ப்புக்கான பிரதிவினையை எப்படி ஆற்றுவது என்பதனை மரபணு குறியீட்டைப் (Genetic Codes) பயன்படுத்தி உடம்பின் கலங்களுக்கு வழங்குகின்றன. வழமையான வக்சீன்களை விட இவை வேகமாக தயாரிக்கப்பட முடியும்.

2021 இன் இரண்டாம் இறுதிப் பாதியில் உலகிலுள்ள வசதி வாய்ப்புக்கள் எல்லாம் ஒரு தடுப்பூசியைத் தயாரிக்கும் என நான் நம்புகின்றேன். அப்படி நடந்தால் அது வரலாற்றைப் படைக்கும் சாதனையாக அமையும். அப்போது, புதிய நோயொன்றை ஏற்றுக் கொள்வதைவிட அதற்கெதிரான நோய்த்தடுப்பை நோக்கி மனிதகுலம் அதி வேகமாக முன்னே சென்றிருக்கும்.

தடுப்பூசிகளின் இந்த முன்னேற்றத்துக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு பெரிய மருத்துவ முன்னேற்றங்கள் இந்த பன்டமிக்கிலிருந்து வெளிப்படும். ஒன்று நோய்களைக் கண்டறியும் துறையில் இருக்கும். அடுத்த முறை ஒரு நவல் வைரஸ் வெளிப்படும் போது, கர்ப்பமாயிருப்பதைக் கண்டறிவது போல வீட்டிலிருந்தே மக்கள் அதைச் சோதித்தறிய முடியுமாகவிருக்கும். ஒரு ஸ்ட்ரிப்பில் சிறுநீர் கழித்து கண்டறிவதற்குப் பதிலாக அவர்கள் நாசியைத் துடைத்தே அறிந்து கொள்வார்கள். ஒரு புதிய நோயைக் கண்டறிந்த சில மாதங்களுக்குள்ளேயே ஆராய்ச்சியாளர்கள் அத்தகையதொரு பரிசோதனையை தயார்படுத்த முடியுமாக இருக்கும்.

அடுத்த திருப்புமுனை வைரஸ் தடுப்பு மருந்துகளில் இருக்கும். இவை அறிவியலின் முதலீடு செய்யப்படாத பகுதியாக இருந்து வந்தது. பக்டீரியாக்களுக்கு முகம் கொடுக்கத் தயாரான அளவுக்கு வைரஸுக்கு முகம் கொடுப்பதற்கு நாம் திறன் பெறவில்லை. ஆனால் இந்த நிலை மாறும். வகைவகையான அன்டிவைரல்களைக் கொண்ட பாரிய களஞ்சியங்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்குவார்கள். இவற்றினூடாக, நவல் வைரஸ்களை ஸ்கேன் செய்து அவற்றுக்கெதிரான பயனுள்ள சிகிச்சையை விரைவாகக் கண்டறிய முடியும்.

சம்பவங்களின் எண்ணிக்கை இன்னமும் குறைவாக இருக்கும் வேளையில், இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் ஆரம்பத்திலேயே தலையிட அனுமதிப்பதன் மூலம் அடுத்த தொற்றுக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள முடியும். தற்போதைய அடிப்படை ஆராய்ச்சிகள் தற்போதுள்ள தொற்றுநோய்களை எதிர்கொள்ள உதவும். அதேபோல புற்றுநோயை முன்கூட்டியே குணப்படுத்தவும் உதவும். (mRNA தடுப்பூசிகள் இறுதியில் புற்றுநோய் தடுப்பூசிக்கு வழிவகுக்கும் என்று நீண்டகாலமாகவே விஞ்ஞானிகள் கருதிவருகிறார்கள். இவற்றை கையடக்கமான விலையில் எவ்வாறு மொத்தமாக உற்பத்தி செய்யப்படலாம் என்ற ஆராய்ச்சிகள் கொவிட் 19 வரையில் பெருமளவில் நடந்ததில்லை).

அறிவியலில் மட்டுமேயே நமது முன்னேற்றம் இருக்காது. இந்த அறிவியலில் இருந்து அனைவரும் பயனடைவதை உறுதி செய்வதற்கான நமது திறனிலும் அது தங்கியிருக்கிறது. 2021 க்குப் பிந்தைய ஆண்டுகளில், 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகான ஆண்டுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்வோம் என்று நான் நினைக்கின்றேன். இரண்டாம் உலக யுத்தம் முடிந்தவுடன், மேலும் மோதல்களைத் தவிர்ப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவனங்களை உலகத் தலைவர்கள் நிறுவினர். கொவிட் 19 க்குப் பிறகு அடுத்த பன்டமிக்கை எதிர்கொள்வதற்கான சர்வதேச நிறுவனங்களை நிறுவுவதற்கு உலகத் தலைவர்கள் தயாராவார்கள்.

இவை தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய அமைப்புக்களின் கலவையாக இருக்கும். ஆயுதப் படைகள் போர் விளையாட்டுக்களில் (War Games) ஈடுபடுவது போல, இவர்கள் கிருமி விளையாட்டுக்களில் (Germ Games) ஈடுபடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அடுத்த முறை வௌவால்களில் இருந்தோ பறவைகளில் இருந்தோ நவல் வைரஸ் மனித உடம்பில் குதிக்கும் போது, இவை எங்களை தயார்படுத்தி வைத்திருக்கும். ஒரு மோசமான செயற்பாட்டாளன் தனது வீட்டில் உருவாக்கப்பட்ட ஆய்வகத்தில் ஒரு தொற்று நோயை உருவாக்கி அதை ஆயுதபாணியாக்குவதற்கு எடுக்கும் முயற்சியிலிருந்து இது எம்மைப் பாதுகாக்கும். ஒரு பன்டமிக்கை எதிர்கொள்வதனூடாக, ஒரு உயிரியல் பயங்கரவாதச் (Bioterrorism) செயற்பாட்டுக்கு எதிராக உலகம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்.

இந்த முன்னேற்பாடுகளில் செல்வந்த நாடுகள் வறிய நாடுகளை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். குறிப்பாக அவர்களின் அடிப்படைச் சுகாதார பராமரிப்பு முறைகளை உருவாக்குவதில் அதிக வெளிநாட்டு உதவிகள் அர்ப்பணிக்கப்பட வேண்டும். தன்னார்வமுள்ள நபர்களும் சுய அரசாங்கங்களும் கூட இப்போதே இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். வைரஸ்கள் எல்லைச் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாது என்பதையும், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நுண்ணிய கிருமிகளின் வலையமைப்பால் நாம் அனைவரும் உயிரியல் ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதையுமே இந்த நோய் நமக்குக் காட்டுகிறது. ஒரு வறிய நாட்டில் நவல் வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நாட்டின் மருத்துவர்களே அதனைக் கண்டுபிடித்து, அதனை விரைவில் கட்டுப்படுத்தும் நிலை வர வேண்டும்.

இவை எதுவுமே தவிர்க்க முடியாதவை. வரலாறு ஒரே போக்கைப் பின்பற்றிச் செல்லாது. எந்தத் திசையை எடுக்க வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அது தவறான திருப்பமாகவும் அமையலாம். 2021 க்குப் பிந்திய ஆண்டுகள், 1945 க்குப் பிந்தைய ஆண்டுகளை ஒத்திருக்கலாம். 1942 நவம்பர் 10 அதற்கான குறிப்பான ஒப்பீடாக இருக்கலாம். பிரித்தானியா போரின் முதலாவது நில வெற்றியை ஈட்டியது. அப்போது வின்ஸ்டன் சேர்ச்சில் கூறினார், இது முடிவு அல்ல, முடிவின் ஆரம்பம் கூட அல்ல. ஆனால் அது ஆரம்பத்தின் முடிவாக இருக்கலாம்.

“This is not the end. It is not even the beginning of the end. But it is, perhaps, the end of the beginning.”

  • The Economist

About the author

Administrator

Leave a Comment