Features அரசியல் சிறப்புக்கட்டுரைகள்

சர்வதேச அளவில் சரிந்து விழும் மதச் சுதந்திரத்துக்கு எதிரான இந்தியா

Written by Administrator

லதீப் பாரூக்

சர்வதேச அளவில் வளைகுடாவில் இருந்து ஆர்எஸ்எஸ்-பிஜேபி இந்துத்துவ முஸ்லிம் விரோத சக்திகளை வெளியேற்ற வேண்டும் என்று வளைகுடா முழுவதும் எழுந்த கடுமையான கோரிக்கையைத் தொடர்ந்து அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் (USCIRF) இந்தியாவை குறிப்பாக அவதானிக்கப்படும் நாடாக (Country of Particular Concern) அறிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஆவணப்படுத்தும் அதனது 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையின்படி, இந்தியா பாரிய சரிவைப் பதிவு செய்துள்ளது. இந்த வகையில் இந்தியாவை முரட்டுத்தனமான நாடுகளின் வரிசையில் சேர்க்குமாறு ஆணையாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திர ஆணையம் என்பது, இருகட்சிகளும் இணைந்த பெடரல் அரசாங்கத்தின் சுயாதீன நிறுவனமாகும். இது வெளிநாடுகளில் மதச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்களைக் கண்காணிக்கவும், பகுப்பாய்வு செய்யவும் அறிக்கையிடவும் அமெரிக்க காங்கிரஸினால் நிறுவப்பட்டது. மதத் துன்புறுத்தல்களைத் தடுக்கவும், மதம் மற்றும் நம்பிக்கைகளின் சுதந்திரத்தை மேம்படுத்தவுமான வெளியுறவுக் கொள்கைகளை இது ஜனாதிபதி, ராஜாங்கச் செயலாளர் மற்றும் காங்கிரஸுக்கு பரிந்துரைக்கிறது.

இந்த ஆணையம் அமெரிக்க அரசாங்கத்துக்கு பரிந்துரைத்துள்ளதன்படி,

  • சர்வதேச மதச் சுதந்திரச் சட்டம் (IRFA) குறித்துரைத்துள்ள மதச் சுதந்திரத்தை கடுமையாக மீறும் வகையில் தற்போது திட்டமிட்டு நடத்தப்படுகின்ற மத வன்முறைகளில் பங்குகொள்வதாலும் அதற்கு இடம் கொடுப்பதாலும் இந்தியாவை குறிப்பாக அவதானிக்கப்படும் நாடுகளில் (CPC) இணைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடுமையான மதச் சுதந்திர மீறல்களுக்காக இந்திய அரச முகவர்களினதும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளினதும் சொத்துக்களை முடக்குதல், மனித உரிமைகள் தொடர்பான நிதி மற்றும் விசா அதிகாரிகளின் கீழ் அமெரிக்காவில் நுழைவதைத் தடைசெய்தல் போன்ற தடைகளை குறித்த மதச் சுதந்திர மீறல்களுக்காக நிர்ணயித்தல்.
  • சமய சமூகங்கள், உள்ளுர் அதிகாரிகள் மற்றும் குறிப்பாக மத ரீதியான வன்முறைகளின் தாக்கங்களுக்கு உட்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பொலிசார் ஆகியோருடனான அமெரிக்க தூதரகத்தின் ஈடுபாட்டை அதிகரித்தல். மதச் சிறுபான்மையினர், அவர்களது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் புனிதஸ்தலங்களை பாதுகாக்கும் திறனை வளர்ப்பதற்கும், மத அடிப்படையிலான வெறுப்புக் குற்றங்களை எதிர்கொள்வதற்கும் இந்திய சட்ட அமுலாக்கல் பிரிவினருடன் அமெரிக்கா பங்குதாரராதல்.
  • வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறையைத் தூண்டுதல் போன்றவற்றை சவாலுக்குட்படுத்தும் வகையில், பொலிஸாருடன் கூட்டிணைந்து முன்னெச்சரிக்கைக்கும் கண்காணிப்புக்குமான முறையொன்றை உருவாக்குவதற்கு சிவில் சமூகத்துக்கு நிதியுதவி அளித்தல். இந்தியாவில் மத சுதந்திர நிலைமைகள் மற்றும் இந்தியா தொடர்பிலான அமெரிக்கக் கொள்கை பற்றி உசாவுவதற்கான அமர்வுகளை அமெரிக்க காங்கிரஸ் தொடர்ந்தும் நடத்த வேண்டும்.

சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான ஆணையத்தின் சுதந்திரமானதும் இருகட்சிகள் இணைந்ததுமான ஒழுங்கு, உலகெங்கிலும் நிலவும் மதச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்களை தடையின்றி இனம்காண உதவுகிறது.

இந்தியாவுடனான உறவு தொடர்பில் 2020 அறிக்கை மேலும் குறிப்பிடும்போது,

2019 இல் இந்தியாவில் மதச் சுதந்திர நிலைமைகள் கடுமையாக வீழ்ச்சியடையத் தொடங்கின. மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. மே மாதத்தில் பாஜக மீளவும் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய அரசாங்கம் அதன் பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி மதச் சுதந்திரத்தை மீறும் வகையிலான, குறிப்பாக முஸ்லிம்கள் மீது, தேசியக் கொள்கைகளை நிறுவியது. சிறுபான்மையினர் மீதும் அவர்களது மதத் தலங்கள் மீதும் வன்முறைகள் தொடரப்படுவதையும், வெறுப்புப் பேச்சுக்களும் வன்முறைகளும் தூண்டப்படுவதையும் தேசிய அரசாங்கம் மௌனமாக அங்கீகரித்தது.

குறிப்பாக பிஜேபி தலைமையிலான அரசாங்கம், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்து ஏற்கனவே இந்தியாவில் வசிக்கும் முஸ்லிமல்லாதவர்கள் இலகுவில் குடியுரிமை பெறுவதற்கு வழிவகுக்கும் குடியுரிமை (திருத்தம்) சட்டத்தை (CAA) நிறைவேற்றியது. பின்னர் நாடு தழுவிய ரீதியில் தேசிய பிரஜைகள் பதிவேட்டை (NRC) முன்னெடுக்கும் வகையில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான (NPR) அங்கீகாரத்தை வழங்கியது.

எல்லை மாநிலமான அஸ்ஸாமுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அடையாளம் காண்பதற்காக உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் மாநிலம் தழுவிய தேசிய பிரஜைகள் பதிவேட்டை நடைமுறைப்படுத்தியது. ஆகஸ்டில் மாநிலத்தின் என்ஆர்சி வெளியிடப்பட்டபோது, முஸ்லிம்களும் இந்துக்களுமாக 1.9 மில்லியன் மக்கள் குடியிருப்பாளர் பட்டியலில் இருந்து நீ்க்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பின்விளைவுகளுக்குப் பயந்து வாழ்கின்றனர். என்ஆர்சியிலிருந்து நீக்கப்படுவதனால் இவர்கள் நாடற்றவர்களாக, நாடுகடத்தப்படுபவர்களாக, நீண்டகாலம் தடுத்து வைக்கப்படுபவர்களாக மாறலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர்கள் மூவர் எச்சரித்திருக்கின்றார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே இவர்களை அழித்தொழிக்கப்பட வேண்டிய கிருமிகள் என வர்ணித்திருந்தார். என்ஆர்சியில் இருந்து இந்துக்கள் விலக்களிக்கப்பட்டுள்ளதால், அவரும் பிற பாஜக அதிகாரிகளும் குடியுரிமைச் சட்டத்தை இந்துக்களைப் பாதுகாப்பதற்கான சரியான நடவடிக்கையாக முன்மொழிகின்றனர்.

பட்டியலிடப்பட்ட முஸ்லிம் அல்லாத மதச் சமூகங்கள், தமது குடியுரிமையை தக்கவைத்துக்கொள்வதற்கும், தடுப்புக் காவலில் வைக்கப்படுதல் அல்லது நாடு கடத்தலைத் தவிர்ப்பதற்கும் குடியுரிமைச் சட்டம் வழியமைக்கிறது. இந்த வகையில் பாஜக அங்கத்தவர்கள் நாடுதழுவிய என்ஆர்சிக்கு ஆதரவளித்து வருகின்றனர். மில்லியன் கணக்கானவர்களின் குடியுரிமை கேள்விக்குள்ளாக்கப்பட நேரிட்டாலும், குடியுரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் முஸ்லிம்கள் மட்டுமே இந்த இடியைத் தாங்கி நாடற்றவர்களாக மாறப் போகிறார்கள்.

குடியுரிமைச்சட்டச் செயற்பாடுகள் டிசம்பரில் நாடு தழுவிய போராட்டமாக வெடித்தது. பொலிசாரும் அரசுடன் இணைந்த குழுக்களும் வன்முறைகளைச் சந்திக்க நேர்ந்தன. உத்தரபிரதேசத்தின் பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை பழிவாங்கப் போவதாக உறுதியளித்தார். அவர்களுக்கு பிரியாணி அல்ல தோட்டாக்களே தீனியாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களுமாக 25 பேர் உத்தர பிரதேசத்தில் மட்டும் டிசம்பர் மாதத்தில் கொல்லப்பட்டனர். இந்த வேளையில் பொலிசாரின் நடவடிக்கைகள் முஸ்லிம்களையே இலக்கு வைத்ததாக இருந்ததாக அறிக்கைகள் தெரிவித்தன.

2019 நெடுகிலும், குடியுரிமைச்சட்டம் உட்பட மாடறுப்புச் சட்டம், மத மாற்றத்தைத் தடை செய்யும் சட்டம், நவம்பரில் பாபரி மஸ்ஜித் தொடர்பிலான உயர்நீதிமன்றத் தீர்ப்பு என நீண்ட அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும், மதச்சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கும் வன்முறைகளுக்கும் அங்கீகாரம் வழங்குவதாக அமைந்தது.

ஆகஸ்டில் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு காஷ்மீரின் சுயாட்சியை அரசாங்கம் ரத்து செய்து மதச் சுதந்திரத்துக்கு எதிரான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. மாடறுப்பு அல்லது மாட்டிறைச்சி உண்ணுதலுடன் தொடர்புடையவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். இவ்வாறான தாக்குதல்களில் பெரும்பாலானவை பாஜக ஆட்சியிலுள்ள மாநிலங்களிலேயே நிகழ்கின்றன. தாக்குதலில் ஈடுபடும் கும்பல்கள் வெளிப்படையாகவே இந்துத் தேசியவாதத் தொனியையே பெரும்பாலும் வெளிப்படுத்துகின்றன.

ஜூன் மாதத்தில் ஜார்கண்டில் ஒரு கும்பல், ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்தை உச்சரிக்க பலவந்தப்படுத்தி தப்ரீஸ் அன்சாரி என்ற முஸ்லிமை அடித்துக் கொன்றது. குற்றவாளிகளைக் கைது செய்வதை விடவும், மாடறுப்பிலும் மதமாற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்களையே பொலிசார் கைது செய்கின்றனர். கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையும் அதிகரித்து வருகின்றது. பெரும்பாலும் பலவந்த மதமாற்றக் குற்றத்துக்காகவென்று 328 வன்முறைச் சம்பவங்கள் அவர்களுக்கு எதிராகப் பதிவாகியுள்ளன. இந்தத் தாக்குதல்கள் தேவாலயங்களை மூடச் செய்யும் வகையில் ஆராதனைகளையே இலக்கு வைத்து நடத்தப்பட்டன.

கண்மூடித்தனமாக தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு 2018 இல் உயர்நீதிமன்றம் மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தியது. 2019 ஜூலை மாதமாகும் போது தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசுக்கும் 10 மாநில அரசுகளுக்கும் உயர்நீதிமன்றம் மீளவும் இதுதொடர்பில் வலியுறுத்தியது. இதற்கு இணங்குவதற்குப் பதிலாக, உள்துறை அமைச்சர் ஷா, தற்போதுள்ள சட்டங்களே போதுமானதெனக் கூறி, கண்மூடித்தனமான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதையும் மறுத்தார். அதேவேளை, தேசிய குற்றப் பதிவுகள் பணியகத்தின் 2019 ஆம் ஆண்டின் தரவுகளில் இருந்து இவ்வகையான கண்மூடித்தனமான தாக்குதல்களை நீக்கிவிடுமாறும் உள்துறை அமைச்சு உத்தரவிட்டது.

2019 காலப்பகுதியில், பாரபட்சமான கொள்கைகள், தீ கக்கும் சொல்லாடல்கள், தேசிய, மாநில, உள்ளுர் மட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைச் சகித்துக் கொள்ள வேண்டிய நிலைமைகள் போன்றன இந்து அல்லாத சமூகங்களிடையே அச்சத்தின் சூழலை அதிகரித்தது. சர்வதேச மதச் சுதந்திர ஆணையத்தின் அறிக்கையிடல் காலத்துக்குப் பிந்திய காலங்களிலும் இந்தியா இந்த மோசமான பாதையைத் தொடர்ந்தது. 2020 பெப்ரவரியில் டெல்லியில் மூன்று நாட்கள் வன்முறை வெடித்தது. குண்டர்களால் முஸ்லிம் பிரதேசங்கள் தாக்கப்பட்டன. டெல்லி காவல் துறையினர் உள்துறை அமைச்சின் அதிகாரத்தின் கீழ் செயற்படுவதாகவும், தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகவும், வன்முறையில் நேரடியாகப் பங்கேற்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. குறைந்தது 50 பேர் இதன்போது கொல்லப்பட்டனர்.

About the author

Administrator

Leave a Comment