Features அரசியல் சிறப்புக்கட்டுரைகள்

உரிமைகளுக்காகப் போராடும் சட்டத்தரணிகளுக்காக சட்டத்தரணிகள் சங்கம் ஏன் போராடுவதில்லை?

Written by Administrator

ஜாவிட் யூசுப்

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் வழக்கு விசாரணைகள், அவரது விசாரணைகள் தொடர்பில் தலையிட வேண்டாம் எனக் கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு 213 சட்டத்தரணிகள் கையெழுத்திட்டு வழங்கியுள்ள வேண்டுகோளினால் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ஹிஸ்புல்லாஹ்வின் உரிமைகள் உறுதி செய்யப்படுவதையும், உரிய செயல்முறை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரி, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வைத் தடுத்து வைத்திருப்பதைச் சுற்றியுள்ள கடுமையான நிலைமைகளைச் சுட்டிக்காட்டி அனுப்பி வைக்கப்பட்ட ஏப்ரல் 24 ஆம் திகதிய கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில் ஏப்ரல் 29 ஆம் திகதி 213 சட்டத்தரணிகளால், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் தடுப்புக்காவல் தொடர்பான விசாரணைகளின் தகுதிகள் அல்லது விசாரணைகளின் உள்ளடக்கங்கள் தொடர்பில் தமது (24 ஆம் திகதிய) 7 பக்க கடிதத்தில் சட்டத்தரணிகள் எந்தக் கருத்தும் வெளியிட்டிருக்கவில்லை. உரிய நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய மட்டுமே அவர்கள் சட்டத்தரணிகள் சங்கத்தைக் கேட்டிருந்தனர். ஆயினும் ஏப்ரல் 29 ஆம் திகதிய 14 பக்கக் கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள், சட்டத்தரணிகள் சங்கத்தை பிரச்சினையிலிருந்து விலகியிருக்குமாறும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளை சுதந்திரமானதும் நியாயமானதுமான விசாரணை நடத்த அனுமதிக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

சட்டத்தரணிகள் சங்கத்தை தலையிட வேண்டாம் எனக் கோரிய 29 ஆம் திகதிய கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள், இதற்கு ஆதரவாக பல வாதங்களை முன்வைத்திருந்தாலும், தமது சகா ஒருவரின் விடயத்தில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றுவது என்பது, பொலிசாரால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணையையும் எவ்வாறு பாதிக்கும் என்பது தொடர்பில் எந்த வாதங்களையும் முன்வைக்கவில்லை.

29 ஆம் திகதிய கடிதத்தில் உள்ள பெரும்பாலான வாதங்கள் தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் விசாரணைகள் தொடர்பான பொலிசாரின் அறிக்கைகள் தொடர்பானவை. உண்மையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடக மாநாட்டில் வெளிப்படுத்திய விடயங்களே, தீவிரவாதம் அல்லது தீவிரவாதம் தொடர்பான செயற்பாடுகளில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் ஈடுபாடு சம்பந்தமான ஆதாரங்களாக பொது மக்கள் அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்பியுள்ளன. 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியது, விசாரணைகள் பற்றிய பொலிஸ் நிலைப்பாடு தொடர்பிலான வெறும் அறிக்கையொன்றே. இவை எப்போதும் நீதிமன்றங்களின் ஆய்வுக்கும் மீளாய்வுக்கும் உட்படுத்தப்பட வேண்டியவை. பொது அறிவின் அடிப்படையில் என்ற பொலிஸின் நிலைப்பாட்டுக்கு விளக்கம் கூறுவது என்பது ஹிஜாஸின் விடயத்தில் தெளிவாகவே நியாயமற்றது. 29 ஆம் திகதிய கடிதத்தில் “ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் எனும் ஒருவர்” எனக் குறிப்பிடப்பட்டிருப்பது, மிகவும் மோசமானது. ஹல்ஸ்டோப்பில் அனைத்து சட்டத்துறை சகோதரர்களாலும் நன்கு அறியப்பட்டவர் அவர்.

ஏப்ரல் 24 ஆம் திகதிய கடிதத்தில் கையொப்பமிட்ட சட்டத்தரணிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதையும், விசாரணைகளின் போது அவரது உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் மட்டுமே சட்டத்தரணிகள் சங்கத்திடம் வேண்டி நின்றனர். இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள உரிமைகள், எந்த நீதிமன்றத்திலும் எந்த வழக்கறிஞரும் தமது எந்த வாடிக்கையாளருக்காகவும் மன்றாடும் உரிமைகள் மட்டுமே. இது அவர் மீது குற்றஞ்சாட்டப்படுவதற்கோ தண்டனை வழங்கப்படுவதற்கோ எந்த வகையிலும் பாதிப்பாக அமையாது. தனிநபர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் நியாயமான முறையிலும் சுயாதீனமாகவும் விசாரணை செய்யப்படுவதை உறுதி செய்வதற்கும் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமைகளே இவை.

ஒவ்வொரு நபரினதும் உயிரையும், பாதுகாப்பையும்,சுதந்திரத்தையும் பாதுகாக்கும் போது அவரது அப்பாவித்தனம் தொடர்பில் கவனம் செலுத்துதல் போன்ற பாதுகாப்புக்கள், விசாரிக்கப்படும் விடயம் தொடர்பான உண்மையை உறுதி செய்கின்றன. இதனால் உண்மை மட்டுமன்றி வகை கூறவேண்டியவர்களின் பொறுப்புக்களும் வெளிப்படுத்தப்படுகின்றன.

சட்டத்தரணிகள் சங்கம் எந்த விடயத்திலும் தலையிட வேண்டுமா கூடாதா என்பது, ஒரு உறுப்பினருடன் தொடர்புடையதா இல்லையா என்பதைப் பொறுத்ததோ அல்லது 29 ஆம் திகதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டவாறோ அல்ல. சட்டத்தரணிகள் சங்கத்தின் சேவைகள் இதனையும் தாண்டி, சட்டவிதிகள், நீதி நிர்வாகம், ஜனநாயகம், நீதி எனப் பலவிடயங்களுடனும் தொடர்புடையவை.

ஒரு சட்டத்தரணியின் வாடிக்கையாளரின் உரிமைகள் அரசாங்கத்தினாலோ அல்லது வேறு முகவர்களினாலோ எந்தவொரு வடிவத்திலும் ஆக்கிரமிக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதே சட்டத்துறையின் இயல்பான செயற்பாடாகும். சட்டத்துறையின் ஒவ்வொரு அங்கத்தவரதும் வருமானம், தனது கட்சிக்காரரின் உரிமைக்காக ஆர்வத்துடன் போராடுவதன் மூலமே பெறப்படுகிறது.

சட்டத் தொழில்வாண்மையின் சுதந்திரமும் ஒருமைப்பாடும் நீதித்துறையின் சுயாதீனத்திலேயே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. சுதந்திரமான,அச்சமின்றிய, சுயாதீனமான சட்டத் தொழிற்துறை என்பது தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஜனநாயகத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று என 24 ஆம் திகதிய கடிதம் சுட்டிக் காட்டுவதற்கேற்ப, எந்த விதத் தடைகளோ, அச்சமோ, பக்கச்சார்போ இன்றி சட்டத்தரணிகள் செயற்படுவதற்கான வழிவகைகளை உச்சபட்சமாக செய்துகொடுப்பதுவே அதற்கான தொழில்வாண்மையின் தலைமை நிறுவனத்தின் கடமையாகும்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் சட்டத்தரணிகள் சங்கம் தலையிடுவது, அதிகாரபீடங்களில் அதற்குள்ள செல்வாக்கை அழித்துவிடும் என 29 ஆம் திகதிய கடிதம் வாதிடுகிறது. எவ்வாறாயினும் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்பாடுகள் அதிகார பீடங்களில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற விருப்பத்தினால் ஆளப்படக் கூடாது. மாறாக அது நீதி, சட்டவிதி, மற்றும் ஜனநாயகத்துக்கான குரல் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

About the author

Administrator

Leave a Comment