Features அரசியல் சிறப்புக்கட்டுரைகள்

கொவிட் 19 இனால் இறந்தவர்களின் உடலை அகற்றுவது தொடர்பாக…

Written by Administrator

சட்டக் கலாநிதி நீதியரசர் ஸலீம் மர்சூப்

கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் விதம் தொர்பாக எடுக்கப்படும் முடிவுகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவைகளாக இருக்கலாம். பொருத்தமான மற்றும் நடைமுறைச்சாத்தியமான சுகாதார அவதானங்களுக்கு மேலதிகமாக சமூக-பொருளாதார மற்றும் மத-கலாச்சார விடயங்களையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட வேண்டியவைகளாக இருக்கலாம்.

இலங்கையில் கொரோனா வைரஸ் அல்லது கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டு இறந்த ஒருவரின் உடலை புதைப்பதா தகனம் செய்வதா என்ற முடிவு உறவினர்களால் எடுக்கப்பட வேண்டியதாக இருந்தாலும், இந்த முடிவில் பல சட்ட விதிமுறைகளும் தங்கி இருக்கின்றன. ஒருவரின் மதநம்பிக்கைகளையும் மதச்சடங்குகளையும் நடைமுறைப்படுத்தவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் உள்ள உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விதிகள் அரசியலமைப்பில் உள்ளன. அவை பொதுச் சுகாதாரத்தின் நலனுக்காகவும், அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்ட பிற காரணங்களுக்காகவும் இயற்றப்படும் சட்டங்களால் குறைக்கப்பட முடியும்.

இலங்கையில் இறந்தவர்களை அடக்கம் செய்வது ஒரு பொதுவான நடைமுறையாகும். இருந்தாலும், தகனங்களும் இறந்த உடல்களை அகற்றுவதற்கான மாற்று முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மதரீதியான காரணங்களால் முஸ்லிம்களும் கணிசமான சதவீத கிறிஸ்தவர்களும் பொதுவாக இறந்தவர்களை தகனம் செய்ய விரும்புவதில்லை. ஏனைய நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகளையுடையவர்களிலும், கடவுளையே ஏற்றுக் கொள்ளாதவர்களிலும் இதனை விரும்பாதவர்கள் இருக்கின்றார்கள். இப்பொழுது வேறுகாரணங்களுக்காகவும் எரிக்கப்படுவதை விரும்புவர்கள் இருக்கலாம்.

முஸ்லிம்கள் என்பவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள். இஸ்லாம் என்பது மதம் மட்டுமல்ல, அது ஒரு சம்பூரண வாழ்க்கைத் திட்டம். இலங்கையில் முஸ்லிம்கள் ஷாபி மத்ஹபின் (பிரிவின்) போதனைகளால் நிர்வகிக்கப்படுபவர்கள் என்று கருதப்படுகிறது. இந்த மத்ஹபின் உத்தியோகபூர்வ விளக்கம், ஆங்கிலத்தில் மின்ஹாஜுத் தாலிபீனில் இருக்கிறது. இதில் குறிப்பிட்ட சில இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து இறந்தவர்கள் கண்ணியமாக அடக்கம் செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் உடலைத் தகனம் செய்வதற்கு அனுமதிக்கவில்லை, அதனை சட்டபூர்வமானதாகக் கருதவுமில்லை.

இந்த நிலையில் கொவிட் 19 இனால் இறந்தவர்கள் அனைவரையும் தகனம் செய்ய வேண்டும் எனக் கோருவது, அதற்கான நியாயமான காரணங்கள் உருவாக்கப்படாத நிலையில், அறிவுபூர்வமானதல்ல. இவ்வாறானதொரு சூழலில் முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது முக்கியமானது என்றாலும், கொவிட் 19 என்பது அதன் பரவலினால் ஏற்படுகின்ற உலகளாவிய தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விதிவிலக்கானதும் அசாதாரணமானதுமான நவடிக்கைகளை வேண்டிநிற்கின்ற சீரியஸான பொதுச் சுகாதார அபாயம் என்ற வகையில் இதனுடன் தொடர்பான பல எதிர்க் காரணிகளும் இதனுடன் தொடர்புபடுகின்றன. இஸ்லாத்தின் உயிரியல் நியமங்களும் உயிர்களைப் பாதுகாப்பதற்காக தொற்றுப் பரவலைத் தடுப்பதை      பொதுநலன் (மஸ்லஹா முர்ஸலா) அடிப்படையில் அங்கீகரிக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்கள்

இந்தச் சூழலில் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களே தீர்க்கமானவையாகும். தற்பொழுது நடைமுறையில் உள்ளவை, கடுமையான சுவாச நோய்த் தொற்றுக்களைத் தடுப்பதற்கான 2014 ஆம் ஆண்டின் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கும், தொற்றுநோய் மற்றும் உலகளாவிய தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதற்குமான சுகாதார வழிகாட்டல்களாகும். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது

  • சுவாச நோயாளிகளின் இறந்த உடலை சவச்சாலைக்கோ, தகனம் செய்வதற்கோ அடக்கம் செய்வதற்கோ பொதியிட்டுக் கொண்டு செல்லுதல்
  • தனிமைப்படுத்தப்பட்ட அறையிலிருந்தோ பிரதேசத்திலிருந்தோ உடலை அப்புறப்படுத்தும் போதும், சவச்சாலையிலிருந்து அப்புறப்படுத்தும் போது உடலிலிருந்து திரவம் கசிவதைத் தவிர்ப்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் சடலப் பைகள் முழுமையாக முத்திரையிடப்பட்டிருப்பதை (Sealed) உறுதிசெய்தல்
  • இறந்த உடனேயே உடலை சவச்சாலைக்கு மாற்றுதல்
  • சடலப் பையில் முறையாக பொதி செய்யப்பட்டதன் பின்னர், பாதுகாப்பான முறையில் சவச்சாலைக்கோ, தகனசாலைக்கோ, அடக்கம் செய்வதற்கான சவப்பெட்டிகளுக்கோ அனுப்பி வைக்கப்பட முடியும்.
  • பிரேத பரிசோதனை அவசியப்படுமிடத்து, உடல் சவச்சாலையின் குளிரூட்டியில் வைக்கப்பட முடியும். பாதுகாப்பான சூழலில் மட்டுமே பிரேத பிரசோதனைகள் மேற்கொள்ளப்பட முடியும்.

2014 ஆம் ஆண்டின் இந்த வழிகாட்டுதல்கள், 2020 மார்ச் 24 ஆம் திகதிய தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான இடைக்கால வழிகாட்டுதல்களால் மேலும் இணைக்கப்பட்டுள்ளன. 2020 இல் இணைக்கப்பட்ட வழிகாட்டுதல்களில் குடும்ப உறுப்பினர்களால் அடக்கம் செய்வது தொடர்பிலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“சவச்சாலைச் சேவைகள் தரமானதாகவோ நம்பத்தகுந்ததாகவோ இல்லாத இடங்களில், அல்லது நோய்வாய்ப்பட்டவர்கள் வீட்டிலேயே இறப்பதை வழமையாகக் கொண்ட இடங்களில் குடும்ப அங்கத்தவர்களே அல்லது வீடுகளிலேயே அடக்கம் செய்யப்படும் சூழ்நிலைகளில், குடும்ப அங்கத்தவர்களுக்கும் மரணச் சடங்குகளில் கலந்து கொள்பவர்களுக்கும் தேவையான சாதனங்கள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதோடு அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்வதற்கு அறிவூட்டவும் வேண்டும். (WHO Guidelines 2020)”

உலக சுகாதார நிறுவனத்தின் 2020 இன் இடைக்கால வழிகாட்டுதல்கள், குடும்ப மற்றும் பாரம்பரிய அடக்கத்தின் போது அடக்கம் செய்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதன் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் என்னவென்றும் கூட விரிவாக அறிவுறுத்துகின்றன. இந்த வகையில் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலில் கொவிட் 19 இனால் இறந்தவர்களை தகனம் செய்வது தான் ஒரே வழி எனக் குறிப்பிடப்படவி்ல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்கு மேலதிகமாக, உலக சுகாதார நிறுவனத்தினால் 2020 ஏப்ரல் 07 ஆம் திகதி வெளியிடப்பட்ட கொவிட் 19 சூழலில் மதத்தலைவர்களுக்கும் நம்பிக்கை சார்ந்த சமூகங்களுக்குமான நடைமுறை அவதானங்களும் பரிந்துரைகளும் தொடர்பிலான இடைக்கால வழிகாட்டுதலொன்று வழங்கப்பட்டுள்ளது. இதில் கொவிட் 19 பரவுதலைக் கட்டுப்படுத்துவதிலும், கொவிட் 19 இனால் தமது அன்புக்குரியவர்களை இழந்து துயருற்றிருக்கின்ற குடும்பத்தினருடன், பாதுகாப்பான அடக்க நடைமுறைகளின் கீழ் உரிய மரியாதையுடன் பொருத்தமான முறையில் அடக்கம் செய்யப்படுவதில் பங்கு கொள்வதிலும் சமயத் தலைவர்களினதும் நம்பிக்கை சார்ந்த அமைப்புக்களினதும் முக்கியமான பாத்திரம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2014 இலும் 2020 இலும் உலக சுகாதார நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்கள் பெரும்பாலான நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை எங்கிலுமே தகனம் செய்வது கட்டாயமாக்கப்படவில்லை. ஸார்ஸ் மற்றும் எபோலா உள்ளிட்ட பிற பரவலான தொற்று நோய்களை எதிர்கொள்ளும் போது கூட உலக சுகாதார நிறுவனம் இத்தகைய தேவையொன்றை முன்வைக்கவில்லை.

இலங்கையின் வழிகாட்டுதல்களும் ஒழுங்குவிதிகளும்

கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் கொள்கையும் நடைமுறையும் சீரானதாகவும் தெளிவானதாகவும் இருந்த போதிலும், இலங்கையின் நிலைமை அவ்வளவு நிலையானதாகவோ தெளிவானதாகவோ இல்லை.

இறந்தவர்களைத் தகனம் செய்ய விரும்பாதவர்களுக்கு எந்த விதிவிலக்குகளும் விதிக்காமல் கொவிட் 19 இனால் இறந்தவர்கள் அனைவரும் கட்டாயமாக எரிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு ஆரம்பத்தில் வழிகாட்டல் வெளியிட்டது. பின்னர் சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவுடன் இலங்கை மருத்துவர்கள் கல்லூரியும் இணைந்து மார்ச் 27 ஆம் திகதி வெளியிட்ட சந்தேகத்துக்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் 19 நோயாளிகளின் தற்காலிக மருத்துவ நடைமுறை வழிகாட்டுதலின் மூன்றாம் பதிப்பு உலக சுகாதார நிறுவனத்தின் மார்ச் 20 ஆம் திகதிய வழிகாட்டலுடன் இயைந்ததாக வெளியிடப்பட்டிருந்தது. அந்த வழிகாட்டுதல்களில் கொவிட் 19 இறப்புகள் நான்கு பரந்த வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 1. கொவிட் 19 உறுதிப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட மரணம் 2. கொவிட் 19 சந்தேகத்தினால் ஏற்பட்ட மரணம் (ஆய்வுகூட அறிக்கையை வேண்டிநிற்பவை), 3. நோய் வரலாறு மற்றும் மருத்துவ ரீதியான கண்டறிதல்கள் மூலமாக கொவிட் 19 பாதிப்பு சாத்தியம் என உறுதிப்படுத்தப்பட்ட மரணம் 4. கொரோனா தொற்றுக்கு வாய்ப்பில்லாமல் நியுமோனியாவால் ஏற்படும் மரணம். முதல் மூன்று வகை மரணங்களின் உடல்களை அகற்றுதல் தொடர்பிலும், இந்த வழிகாட்டுதல்கள் பின்வரும் நிபந்தனைகளை உள்ளடக்கியுள்ளன.

  1. எந்தச் சூழ்நிலையிலும் உடலைக் கழுவக் கூடாது
  2. தகனமும் அடக்கமும் அனுமதிக்கப்படுகிறது. ஆனாலும் அடக்கம் செய்யப்படும் போது உடலைத் தொடுவதைத் தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைளும் உறுதி செய்யப்பட வேண்டும்
  3. உடலை காற்றுப் புகாத முத்திரையிடப்பட்ட சடலப்பையில் வைக்கப்பட்டு சவப் பெட்டி சீல் வைக்கப்பட வேண்டும்.
  4. புதைகுழி ஆறடி ஆழமாக (ஆழமான அடக்குதல்) இருக்க வேண்டும். அது நிலக்கீழ் நீருடன் கலக்கக் கூடாது
  5. புதைகுழி அடையாளம் காணக் கூடியதாகவும், கண்டுபிடிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
  6. உடல் அகற்றப்படுவதை சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் (MOH) மற்றும் (PHI)பொதுச் சுகாதார பரிசோதகர் கண்காணிக்க வேண்டும்.
  7. பொலிசாரும் ஏனைய அரச நிறுவனங்களும் சட்டவிவகாரங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களின் 28 ஆம் பக்கத்தில், பொதுச் சுகாதார பரிசோதகரும், சுகாதார மருத்துவ அதிகாரியும் கொவிட் 19 இனால் இறந்தவர்களின் உடலை அகற்றுவதில் அதிகாரம் வழங்கப்பட்ட தகுதி வாய்ந்த அதிகாரிகளாகச் செயல்படுவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சுகாதார அமைச்சினால் மார்ச் 31 இல் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் 4 ஆம் பதிப்பில் கொவிட் 19 ஆல் ஏற்படும் முதல் மூன்று வகை மரணங்களினதும் உடல்கள் கட்டாயமாக எரிக்கப்பட வேண்டும் என உள்ளடக்கப்பட்டிருந்த வலியுறுத்தல், நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உண்மையில் இது உலக சுகாதார நிறுவனத்தின் 2014, 2020 வழிகாட்டல்களுக்கு மாற்றமானது. நான்காம் பதி்ப்பின் 28 ஆம் பக்கத்தில், கொவிட் 19 இனால் மரணித்தவரின் உடலை அகற்றுவதற்குப் பொருத்தமான நிபந்தனைகளை பின்வருமாறு வேறுபடுத்த முயன்றது.

முதல் மூன்று வகை மரணங்கள் தொடர்பிலும்,

  1. எந்தச் சூழ்நிலையிலும் உடலைக் கழுவக் கூடாது
  2. உடல் சீல் வைக்கப்பட்ட சடலப் பையிலும் சவப் பெட்டியிலும் வைக்கப்பட வேண்டும்
  3. கட்டாயமாக எரிக்கப்பட வேண்டும்
  4. உடல் அகற்றப்படுவது பொலிஸ், எம்ஓஎச், பிஎச்ஐ ஆகியோரால் கண்காணிக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் இந்த 4 ஆம் பதிப்பு, எந்த வகையிலும் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காது என்றும் இறந்தவரின் உடலை அகற்றுவதற்கான ஒரே வழி தகனம் செய்வது மட்டுமே என்றும், அது கொவிட் 19 ஆல் இறந்ததாகச் சந்தேகம் இருந்தாலும் கூட என்றும் குறிப்பிடுகிறது. எம்ஓஎச்சுக்கும் பீஎச்ஐக்கும் மேலதிகமாக பொலிசாரையும் கண்காணிப்பில் இணைத்துள்ளது. சுகாதார அமைச்சின் மார்ச் 31 ஆம் திகதிய வழிகாட்டல்களுக்கு சட்டரீதியான விளைவைக் கொடுக்கும் வகையில், தனிமைப்படுத்தல் மற்றும் நோய்களைத் தடுப்பதற்கான கட்டளைச் சட்டத்தின் 2 மற்றும் 3 (1) (ஐ) பிரிவுகளை ஏப்ரல் 11 ஆம் திகதி சுகாதார அமைச்சர் வேண்டுமென்றே இதனுடன் இணைத்தார். அதன் பின்னர் கொரோனா வைரஸினால் இறந்த அல்லது இறந்ததாகச் சந்தேககிக்கப்பட்டவர்களின் உடல்கள் எரிக்கப்படும் எனப் பதிவாகியது.

ஏனைய நாடுகளின் நிலை

கலாச்சார மற்றும் மதக் காரணிகளால் வேறுபட்டாலும், ஏனைய நாடுகள் பின்பற்றும் முறையையும் ஆராய்வது பொருத்தமானது. சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் (NHC) சமீபத்தில் வெளியிட்ட புதிய விதிமுறைகளில், வைரஸினால் உயிரிழந்த அனைவருமே அருகிலுள்ள தகனசாலையில் எரிக்கப்பட வேண்டும். சடலம் தொடர்பிலான பிரியாவிடை நிகழ்வுகளோ இறுதிக் கிரியைகளோ நிகழ்த்தப்படக் கூடாது என விதித்தது. ஆயினும் தெற்காசியப் பிராந்தியத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் உடலை எரிக்க வேண்டும் என்ற எந்த விதிகளும் முன்வைக்கப்படவில்லை.

கொவிட் 19 ஐ அடுத்து சுகாதாரப் பாதுகாப்பின் முன்னேற்றமான முறைகளை நடைமுறைப்படுத்திய நாடாகப் புகழப்பட்ட சிங்கப்பூர், தகனம் செய்வதை வலியுறுத்தவில்லை. தேசிய சுற்றாடல் முகவரகம் (NEA) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில், தேசிய சுற்றாடல் முகவரகத்தின் வழிகாட்டுதல்களில் ஒருபகுதியாக கொவிட் 19 இனால் இறந்தவர்களின் உடல்கள் மருத்துவ மனைகளில் உள்ள வைத்தியர்களால் தகனம் செய்வதற்கு அல்லது அடக்குவதற்கு தயாராக வைக்கப்பட்டிருக்கும். இதற்கான நெறிமுறைகளில், உடல்கள் சீல் வைக்கப்பட்ட சவப் பெட்டிகளில் வைக்கப்படுவதற்கு முன்னர் அவற்றின் சடலப் பைகள் இரட்டிப்பாக்கப்பட்ட வேண்டும். இறுதிச் சடங்குகள் தொடர்பான கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மரணச்சடங்கு ஏற்பாட்டாளர்களுக்கும் பார்லர்களுக்கும் இந்த முகவரகம் அனுப்பி வைத்துள்ளது. இதில் மரணச் சடங்குகளில் பங்கு கொள்வோரின் எண்ணிக்கை 250 ஐ விட அதிகரிக்கக் கூடாது எனவும், சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் உள்ள வேறு நாடுகளும் தகனம் செய்வதை வற்புறுத்தவில்லை. இந்தோனேஷியாவில் அடக்கம் செய்வது பொதுவான விதிமுறையாகும். அங்கு கொவிட் 19 ஆல் இறந்தவர்களை அடக்கும் போது கூட்டமாகத் தொழுகை நடத்துவதிலும், அடக்கம் செய்வதிலும் உலமா சபை சில பத்வாக்களை வெளியிட்டது. மலேஷியாவில் பெர்லிஸ் இஸ்லாமிய சமய மற்றும் மலாய் மரபுக் கவுன்ஸில் (MAIPC) வெளியிட்டுள்ள வழிகாட்டலில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களை குளிப்பாட்டுவதும் கபனிடுவதும் வைத்தியசாலையில் அல்லது அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் வழிகாட்டலில் நடைபெற வேண்டும் எனவும், உடலைக் கையாள்பவர்களுக்கு எந்த உயிராபத்தும் ஏற்படாத வகையில் அதிகூடிய கவனத்துடன் அடக்கம் நடைபெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலுக்கிணங்க அடக்கம் செய்வதை அனுமதித்துள்ளது. ஆனால் உடலை கழுவுவதையும், முத்தமிடுவதையும் ஆறத்தழுவுவதையும் தடுத்துள்ளது. ஹொங்கொங்கும் அடக்கம் செய்வதை அனுமதித்துள்ளது. இங்கு முறையற்ற விதத்தில் உடல்களைக் கையாளுவதால் தொற்று நோய் பரவுதலைத் தடுப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகள் 2014 பெப்ரவரியில் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 இனால் இறந்தவர்களை அடக்குவதை வழமையாகக் கொண்ட தாய்லாந்தில், மார்ச் 24 ஆம் திகதியாகும் போது மூவர் மரணித்திருந்த நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக மருத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சோம்சக் அகசில்ப் சொன்ன வார்த்தைகள் பிரபலமானவை. “வைரஸ் அதனைக் காவியவர் இறக்கும் போது இறந்து விடுகிறது” என்றார் அவர். இதேபோல, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியுண்டு. தகனம் செய்வது வளியை மாசடையச் செய்யும் என்பதோடு எரிசக்தி அதிகமாக விரயமாகிறது எனவும் அங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கொவிட் 19 இனால் இறந்தவர்களின் உடலை அகற்றும் முறைகள் தகனத்துக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டுமா என்ற சர்ச்சை சமீபத்தில் எழுந்தபோது, இங்கிலாந்து பாராளுமன்றம் 2020 இன் கொரோனா சட்டத்தை மார்ச் 25 ஆம் திகதி நிறைவேற்றியது. அதே தினத்தில் இதற்கான அரச குடும்பத்தின் அனுமதியையும் பெற்றது. இறந்த உடல்களின் போக்குவரத்து, பாதுகாத்தல் மற்றும் அகற்றுதல் தொடர்பான விடயங்களை இயக்குவதற்கு தேசிய மற்றும் உள்ளுர் அதிகாரிகளுக்கு விரிவாகக் குறித்துரைக்கப்பட்ட அதிகாரங்கள் இந்தச் சட்டத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதன்படி, இந்தச் சட்டத்தைச் செயற்படுத்தும் எந்த தேசிய அல்லது உள்ளுர் அதிகார சபைகளும், இறந்த நபரது விருப்பத்துக்கும், அவரது மத அல்லது நம்பிக்கை (பற்றித் தெரிந்திருந்தால்) க்கு இணங்கவும் அவருடைய உடலை அகற்றுவதற்கான அவரது வேண்டுகோளை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. கொரோனா வைரஸென உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்டவர்களின் உடலைப் பராமரிப்பது தொடர்பில் பிரிட்டிஷ் அரசு முழுமையான வழிகாட்டலொன்றை மார்ச் 31 இல் வெளியிட்டிருந்தது. இதேபோல மரணித்தவர்களைக் குளிப்பாட்டுவது தொடர்பில் பிரித்தானிய இஸ்லாமிய மருத்துவர் சங்கமும் (BIMA) வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரை, ஸ்டொக்ஹோமிலுள்ள ஐரோப்பிய நோய் மற்றும் நோய்த்தடுப்பு கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள வழிகாட்டல்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

முடிவுரை

அன்புக்குரியவர்களின் இழப்பு என்பது இயல்பிலேயே மனஅழுத்தத்தைக் கொண்டுவரும் நிகழ்வாகும். அதுவே ஒரு பன்டமிக்கினால் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் நிகழ்ந்தால் பாதிக்கப்பட்டவர்கள் விரக்தி நிலைக்கே சென்றுவிடுவர். இறந்தவர் முக்கிய இஸ்லாமிய நடைமுறையின்படி அடக்கம் செய்யப்படாமல் எரிக்கப்பட்டார் என்பது இறந்தவரின் அன்புக்குரியவர்களுக்கு உணர்ச்சிகளையும் துயரத்தையும் கடுமையாக அதிகரிக்கச் செய்யும். பொதுச் சுகாதார கண்ணோட்டத்தில் இந்த மனஅழுத்த நிகழ்வுகளின் நீண்ட கால விளைவை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. தகனம் செய்யப்படுவது போலவே அடக்கம் செய்யப்படுவதுவும் கலாச்சாரத் தெரிவுகளையும் கிடைக்கின்ற வளங்களையும் பொறுத்த விடயம் என உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்டவர்களின் கலாச்சார மற்றும் மத விழுமியங்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் அது வலியுறுத்துகிறது. அதேபோல அதனது 2020 இன் இடைக்கால வழிகாட்டலில், இறந்தவர்களின் கௌரவம், அவர்களின் சமய,கலாச்சார மரபுகள், அவர்களது குடும்பங்கள் அனைத்தும் மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் பின்பற்றுகின்ற இஸ்லாத்தைப் பொறுத்தவரையில், மனிதர்கள் கடவுளின் பிரதிநிதிகள், மனிதன் தான் உலகின் அதி உயர்ந்த படைப்பு. அவர்களுக்கு தெரிவுச் சுதந்திரம் இருக்கிறது. ஏனைய படைப்புக்கள், சூழல், அவற்றின் ஆரோக்கியம் போன்றவற்றைப் பரிபாலிக்கும் பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது. தகனம் செய்வதை விட சூழல்நேயமான அடக்கம் செய்வதையே முஸ்லிம்கள் ஆரம்பம் முதல் பின்பற்றி வந்தாலும், முஸ்லிம்கள் உடல்நலம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் மிதமானவர்களாகவும் சமநிலை பேணுபவர்களாகவும் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாத்தின் உயிரியல் நெறிமுறைகள் (Bioethics) குர்ஆனின் பரந்த நெறிமுறை போதனைகளுடனும் நபிகள் நாயகத்தின் மரபுகளுடனும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தான் இஸ்லாமிய சட்டங்களுக்கான விளக்கங்களும் பெறப்பட்டிருக்கின்றன. ஆகவே முஸ்லிம் மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் குறித்து அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும். அதேநேரம் ஷரீஆவின் மிக அடிப்படைக் கொள்கைகளில் (மகாஸிதுஷ் ஷரீஆ) ஒன்றான உயிரைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் (ஹிப்ழ் அந்நாஸ்) முஸ்லிம் சமூகம் அறிந்து வைத்திருக்கிறது. எமது நாடுகளை விட பலமாக பல நாடுகளைத் தாக்கியுள்ள கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதை இஸ்லாம் சமூகத்தின் மீது மிக முக்கியமான கடமையாக விதிக்கிறது.

எவ்வாறாயினும், கொவிட் 19 இனால் இறந்தவர்களின் உடலை அடக்குவது தகனம் செய்வதை விட ஆபத்தானது என்பதற்கான அறிவியில் ரீதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்த நிலையில் 2020 மார்ச் 24 ஆம் திகதிய உலக சுகாதார நிறுவனத்தின் இடைக்கால வழிகாட்டுதல்கள் பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிடுகிறது.

“தொற்றுநோயால் இறந்தவர்கள் எரிக்கப்பட வேண்டும் என்பது வெறும் மாயையாகும். இதில் எந்த உண்மையும் இல்லை.”

உண்மையில் முஸ்லிம் சமூகம் இந்தக் கருத்துக்கு மதிப்பளித்து கட்டுப்பட்டது. புரிந்துணர்வுடன் விட்டுக் கொடுத்தது. இந்த எல்லாச் சூழ்நிலைகளிலும் பொதுச் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்தினை நாடி, ஜனாஸா ஒன்றுக்கான நான்கு கடமைகளில் குளிப்பாட்டுதல், கபனிடுதல், தொழுவித்தல் ஆகிய மூன்றையும் வலியுறுத்தாமல் விட்டதை அரசாங்கத்துடனான பல்வேறு பிரதிநிதித்துவங்கள் வாயிலாகவும் அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். உலக சுகாதார அமைப்பினால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இலங்கை அதிகாரிகளால் விதிக்கப்படக்கூடிய எல்லா முன்னெச்சரிக்கை நிபந்தனைகளுக்கும் உட்பட்டு இஸ்லாம் சொல்லுகின்ற விதமாக பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வதற்கு மட்டுமே அவர்கள் அனுமதி வேண்டுகின்றனர்.

தற்போதைய நிலையைத் திருத்தி அமைப்பதற்கான எந்தவொரு முடிவும், தற்போது அமுலிலுள்ள இலங்கைச் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களின் நான்காம் பதிப்பிலும், சுகாதார அமைச்சரினால் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளிலும் பிரதிபலிப்பது கட்டாயமாக உறுதி செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது, அடக்கம் செய்வதா, தகனம் செய்வதா என்பதை தீர்மானிக்கின்ற அதிகாரம், நிகழ்வுகளுக்கேற்றாற்போல் துரிதமாகவும் நடைமுறைச் சாத்தியமானதுமான முடிவுகளை எடுக்கக் கூடிய அதிகாரபீடமொன்றிடம் ஒப்படைக்கப்படுவது வலியுறுத்தப்பட வேண்டும். முஸ்லிம்கள் நாட்டின் பல பாகங்களிலும் பரந்து வாழ்கிறார்கள் என்ற உண்மையின் அடிப்படையில், ஒரு அதிகாரபீடத்திடம் முழுமையான அதிகாரத்தை வழங்குதல் என்பது, முடிவெடுப்பதில் இறந்தவரின் உறவினரின் விருப்பம் உட்பட அனைத்து தொடர்புடைய காரணிகளையும் கவனத்தில் கொள்ள இயலுமானதாக இருக்க வேண்டும். தொடர்புடைய காரணிகள் எனும் போது உதாரணமாக சில பிரதேசங்களில், கிழக்கு மாகாணத்தில் உள்ள தொலை தூர முஸ்லிம் கிராமங்களில், அடக்கம் செய்வதற்கான இடம் அருகில் கிடைக்காமல் இருக்கலாம், அந்த இடத்துக்கு எடுத்துச் செல்வது அபாயகரமானதாக இருக்கலாம்.

ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டதன்படி, ஏற்கனவே குறிப்பிடப்பட்ட உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களும், 2020 மார்ச் 27 இல் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட கொவிட் 19 குறித்த தற்காலிக மருத்துவ நடைமுறை வழிகாட்டல்களும் கொவிட் 19 இனால் இறந்த அல்லது இறந்ததாகச் சந்தேகிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டிய கடுமையான நிபந்தனைகளை எடுத்துக் கூறுகின்றன. இந்த நிபந்தனைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வது அதிகாரிகளின் முக்கிய பொறுப்பாகும்.  

About the author

Administrator

Leave a Comment