Features அரசியல் சிறப்புக்கட்டுரைகள்

மரணித்தவர்களை பலவந்தமாக எரிக்கும் உலகின் ஒரே நாடு இலங்கை

Written by Administrator

லதீப் பாரூக்

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்யலாம் அல்லது அடக்கம் செய்யலாம் என்ற இரு வழிமுறைகளையும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்த போதிலும் அதற்கு மாறாகவே இலங்கை முஸ்லிம்களின் மரணங்களுக்கு நிகழ்ந்தது. தமது ஆயிரம் வருடங்களுக்கு மேலான வரலாற்றில் அளப்பரிய பங்களிப்பைச் செய்து வருகின்ற, 30 வருட கால யுத்தத்திலும் நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக பாரிய தியாகங்களைச் செய்த நாட்டின் மூன்றாவது சமூகமாகிய முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை இலகுவாகப் புறந்தள்ளுவது பல முனைகளாலும் எண்ணிலடங்காப் பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்ற ஒரு நாட்டுக்கு நல்ல சகுனமாக இல்லை. நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்புக்களை எல்லாம் அலட்சியம் செய்துவிட்டு, கொரோனா வைரஸினால் இறந்தவர்கள் எரிக்கப்படுவதை இலங்கை கட்டாயப்படுத்தியது. எரிப்பதை விட அடக்கம் செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும் என்றும், நாட்டின் நிலக்கீழ் நீர்மட்டம் உயர்வாக இருப்பதனால் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் இலங்கை அதிகாரிகள் இதனை நியாயப்படுத்தினர்.

அரசாங்கத்தின் இந்த முடிவு, தமது இறுதிச் சடங்குகள் மீதான கடுமையான புறக்கணிப்பு என இஸ்லாமிய அமைப்புக்கள் விபரித்தன. கொவிட் 19 இனால் இறந்த முஸ்லிம்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலையும் பொருட்படுத்தாமல் அரசாங்கம் பலவந்தமாக எரிப்பதாக உரிமைகளுக்காகப் போராடும் குழுக்களும் செயற்பாட்டாளர்களும் அரசாங்கத்தைக் குற்றம் சுமத்தினார்கள். இலங்கையில் கொவிட் 19 இனால் இறந்த முஸ்லிம்களை பலவந்தமாக எரிப்பது சிறுபான்மைச் சமூகத்தினரிடையே அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது. இதுவரை கொவிட் 19 இனால் மரணி்த்த நான்கு முஸ்லிம்களின் உடல்கள் உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி எரிக்கப்பட்டுள்ளன. இறுதியாக மே 05 ஆம் திகதி 52 வயதான முஸ்லிம் பெண்மணியுடன் உடல் எரிக்கப்பட்டது.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, முழு ஐரோப்பா, மத்திய கிழக்கு, தூர கிழக்கு என உலகம் முழுவதும், கொவிட் 19 இனால் மரணித்தவ கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள் அனைவரும் அடக்கமே செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இலங்கையில் மட்டும் அரசாங்கம் தொடர்ந்தும் தகனமே செய்கிறது. இந்த முடிவை எதிர்த்து வட்ஸ்அப் குழுமமொன்றில் கருத்து வெளியிட்டிருந்த ஸுல்பிகார் அபூபக்கர் என்பவர், கொவிட் 19 இனால் மரணித்தவர்களை எரிப்பதற்கு இலங்கைக்கு தனியானதொரு மருத்துவ காரணம் இருக்கிறது. முழு உலகிலும் டொக்.அனில் ஜாசிங்கவுக்கு மாத்திரமே அந்தக் காரணம் தெரியும். அதற்கான காப்புரிமையை அவர் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. உலகில் எந்த விஞ்ஞானிக்கும், உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகளுக்குக் கூட அந்த மருத்துவ காரணம் என்னவென்று தெரியாது எனக் குறிப்பிடுகின்றார்.

இந்த நெருக்கடியான நேரத்தில் அதிகாரிகள் சமூகங்களை ஒன்றிணைக்க வேண்டும். அவர்களுக்கிடையில் பிளவுகளை ஆழப்படுத்தக் கூடாது. கொவிட் 19 தொற்றினாலான இழப்பினால் கவலையடைந்துள்ள உறவினர்கள், தமது அன்புக்குரியவர்களுக்கு அவர்கள் விரும்பும் வழியில் விடை கொடுப்பதற்கு இடமளிக்கப்பட வேண்டும். குறிப்பாக சர்வதேச வழிகாட்டல்களிலும் இது அனுமதிக்கப்பட்டிருக்கிறது என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தெற்காசியப் பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் குறிப்பிடுகின்றார்.

கொவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை எரிப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை அனைத்து தரப்பிலிருந்தும் பல முன்னணி அரசியல்வாதிகள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், தமது அன்புக்குரியவர்களை இழத்தல் என்பது எவருக்குமே சோகம் தாளாத தருணம். துக்கமும் சோகமும் நிறைந்த இந்த நேரத்தில் அவர்களது இறுதிச் சடங்குகளை பாகுபாடற்ற, பாரபட்சமற்ற முறையில் மேற்கொள்ள அனுமதிப்பது நம் அனைவரதும் பொறுப்பாகும். ஒவ்வொரு மனிதனும் சமமாக மதிக்கப்பட வேண்டும். ஒரு மனித சமூகத்துக்கு இருக்க வேண்டிய இத்தகைய தார்மீக் மற்றும் ஒழுக்க விழுமியங்களை எம்மால் நிலைநிறுத்த முடியாவிட்டால் நாங்கள் தோல்வியுற்ற நிலைக்குத் தள்ளப்படுவோம். இனவாதத்தின் மூலவேர் நமது தாய்நாட்டின் சமூகங்களுக்கிடையே இன,மத, சமூகப் பிளவுகளை அதிகரிக்கச் செய்தது. இது நமது நாட்டின் தேசிய நலனுக்கு எதிரானது, தீங்கானது. இது மனித நேயத்துக்கும் மனிதாபிமானக் கொள்கைகளுக்கும் முரணானது. நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக பரவலாக மேற்கொள்ளப்படும் வெறுக்கத்தக்க இனவெறிச் செயல்களுக்கு எதிராக நாமனைவரும் போராட வேண்டும். இத்தகைய கொடூரமான செயற்பாடுகள் புத்தரின் புனிதமான போதனைகளுக்கு முரணானவை. ஆசீர்வதிக்கப்பட்ட இந்தக் கொள்கைகளை தவறாக விளக்குவதற்கான எந்த முயற்சியும் துரோகமானதும் தேசப்பற்றற்றதுமாகும்.

ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடும் போது, ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்களே, இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு பாதுகாப்பையும் கண்ணியமான வாழ்க்கையையும் உத்தரவாதப்படுத்த உங்களால் முடியாதென்றால், தயவு செய்து அவர்களுக்கு கண்ணியமான இறுதிச் சடங்குக்காவது உத்தரவாதம் வழங்குங்கள். முஸ்லிம்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ள இந்தப் பாகுபாடு பௌத்த போதனைக்கு எதிரானது. இதனை நிறுத்துங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 21 மில்லியன் சனத்தொகையில் முஸ்லிம்கள் 10 வீதமே இருக்கிறார்கள். 2009 இல் சிவில் யுத்தம் முடிவடைந்ததில் இருந்து பௌத்த தீவிரவாத குழுக்களினால் முஸ்லிம்களின் வியாபாரத் தலங்கள் மீதும் வணக்கத்தலங்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பெரும்பான்மைச் சிங்களவர்களுடனான அவர்களது உறவு மோசமடைந்தது என இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவிக்கையில், கொவிட் 19, இனவாதம் இரண்டுமே உயிர் கொல்லும் தொற்றுநோய்கள். இவை யாரைப் பீடித்தாலும் அவர்கள் நோய்வாய்ப்படுவார்கள். முரண்நகையாக நாங்கள் ஒன்றை முடக்கி மூடுகின்றோம். இன்னொன்றின் வான்கதவைத் திறந்து விடுகின்றோம். எங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரே வழி, தனிநபர்களாகவும் தேசமாகவும் இவற்றுக்கான நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்டுவதாகும். இதிலிருந்து மீள்வதற்கு மீடியாவும் பொறுப்புடன் உதவ வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2019 ஏப்ரலில் 250 பேருக்கும் மேல் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் சிங்களப் பெரும்பான்மையிடமிருந்து பெருவாரியான விரோதப் போக்கை எதிர்கொண்டுள்ளனர். அரசாங்கப் படைகளுக்கும் தமிழ் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான சிவில் யுத்தத்துக்குப் பின்னர் நாட்டில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு மிகவும் சொற்பமாகவே அறியப்பட்ட முஸ்லிம் அமைப்பொன்று குற்றஞ்சாட்டப்பட்டது என அல்ஜஸீராவின் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுகள்

இறந்தவரின் உடலை அகற்றுவதற்கான முறை நாட்டில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஒரு சில ஊடகங்கள் முஸ்லிம்கள் தான் வைரஸைப் பரப்புவதாக முஸ்லிம் விரோத ஹிஸ்டீரியாவை முன்னெடுத்துச் செல்வதாக குற்றஞ்சாட்டப்படுகின்றன. கொவிட் 19 தொற்றுக்கு மத்தியில் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளும் முஸ்லிம் விரோத வெறுப்புப் பேச்சுக்களும்  இலங்கையில் மீ்ண்டும் தமது அழுகிய தலையை உயர்த்துவது மனதைக் குடைவதாகவும் வருத்தமாகவும் இருப்பதாக ஊடக ஆய்வாளர் நாலக குணவர்தன குறிப்பிட்டுள்ளார். இது அனைத்து மனிதர்களும் பகிர்ந்து கொள்ளும் தேசிய மற்றும் உலகளாவிய அவசரநிலை. நமது கலாச்சார வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தும் நேரமல்ல. கொரோனா வைரஸ் எமது இன, மத வேறுபாடுகளில் அக்கறை கொள்வதில்லை. நாங்கள் வைரஸுக்கு பயப்பட வேண்டும், சக மனிதர்களுக்கல்ல. இதனைக் கட்டுப்படுத்துவதிலும் அதற்கெதிராகப் போராடுவதிலும் நாம் ஒன்றிணைய வேண்டும் என அவர் அல்ஜஸீராவிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தாத அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனும் அமைப்பு, ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவை திருப்திப்படுத்துவதற்கோ என்னவோ, கொவிட் 19 இனால் மரணித்தவர்களின் உடலை அகற்றுவதற்கான முறையை மறுபரிசீலனை செய்வதில் ஏப்ரல் 01 ஆம் திகதியன்றைய தனது அறிக்கையில் அதிருப்தியை வெளியிட்டிருந்தது. மேலும் அந்த அறிக்கையில், நடைமுறையில் உள்ள நிர்ப்பந்த சூழ்நிலை (தரூரா) காரணமாக, ஒரு ஜனாஸா பலவந்தமாக எரிக்கப்பட்டால் அது முஸ்லிம் சமூகத்தின் மீது பாவமாகக் கருதப்பட மாட்டாது. இந்தச் சோதனைக் காலத்தில் முஸ்லிம்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும், ஜனாஸாவுக்கு உயர்ந்த கூலி கிடைப்பதற்குப் பிரார்த்திக்க வேண்டும் என்றும் நாம் முஸ்லிம் சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம். கொடிய தொற்று நோய் பரவாமல் தடுக்க இலங்கை அரசாங்கம் சாத்தியமான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த செயற்பாடுகளில் நாம் எமது அடுத்த சகோதரர்களுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்குவது நமது கடமையாகும். இதற்கான அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளையும் ஆதரித்து, அனைத்து ஒழுங்குகளையும் உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவுறுத்தி வருகிறது என்பதை மீண்டும் ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.

கொவிட் 19 இனால் மரணித்த முஸ்லிம்களை எரிப்பதனை நியாயப்படுத்தும் இந்த அறிக்கை முஸ்லிம் வட்டாரங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது. அடக்கம் செய்வதற்கான வழி அமைக்கப்பட்டுள்ள போதும், தகனம் செய்வதை நியாயப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பதை பலரும் சுட்டிக் காட்டினர். இந்தக் கருத்தை கடுமையாக எதிர்த்து பலரும் அறிக்கை வெளியிட்டனர். தற்போதைய சூழ்நிலையில் தகனம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர்கள் வாதிட்டனர். கொவிட் 19 இனால் மரணித்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல் இருக்கும் போது அது ஏன் தகனம் செய்யப்பட வேண்டும் ? இதன் விளைவாக முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் மட்டுமன்றி அரசியல்மயமாக்கப்பட்டும் வணிகமயமாக்கப்பட்டும் உள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மீதும் கோபத்தை வெளிப்படுத்தினர். சமூகத்தின் நலனுக்கு மாற்றமாக அது அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினர்.

இன்று இலங்கை பல விடயங்களிலும் உலகின் ஒரே நாடு என்ற நிலைக்கு  வந்திருக்கிறது.

  1. கொரோனா வைரஸால் இறந்த முஸ்லிம்களை அடக்கம் செய்தால் அவை உயிரியல் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படலாம்
  2. கொவிட் 19 இனால் இறந்தவர்களை அடக்கம் செய்வதனை ஆதரிப்பவர்களை தேசத்துரோகிகளாகக் கருதப்படுகிறார்கள்
  3. ஊடகங்கள் வாயிலாக நோயாளிகளின் அடையாளத்தையும் மதத்தையும் வேறுபடுத்திக் காட்டும் மந்திரவாதியாக கொவிட் 19 ஐ சித்திரிக்கப்பட்டது
  4. கொவிட் 19 இனால் இறந்தவர்களை அவர்களின் மத, கலாச்சார உரிமைகளுக்கு எதிராக பலவந்தமாகத் தகனம் செய்கிறது.

About the author

Administrator

Leave a Comment