Features சமூகம்

எந்த முகக் கவசம் பாதுகாப்பானது ? உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்

Written by Administrator

இயான் மிஷல்

கொவிட் 19 அபாயத்திலிருந்து உலகம் அண்மைக் காலத்தில் மீண்டு வருவதற்கில்லை. அந்த வகையில் பொதுச் சுகாதார விதிகளில் முக்கியமான மூன்று விதிகளை தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. குறைந்தபட்சம் ஒரு மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுதல், அடிக்கடி கைகளைக் கழுவுவதோடு கைகளால் முகத்தையும் முகக்கவசத்தையும் தொடுவதைத் தவிர்த்துக் கொள்ளல், முகக் கவசத்தை அணிந்து கொள்ளல் ஆகிய மூன்று சுகாதார விதிகளும் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் என அறிவுறுத்தும் உலக சுகாதார நிறுவனம் முகக் கவசம் தொடர்பிலான தெளிவூட்டல்களையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்கும் அதிலிருந்து உயிர்களைப் பாதுகாப்பதற்குமான விரிவானதொரு வியூகத்தின் ஒரு பகுதியாக முகக் கவசம் பயன்படுத்தப்பட வேண்டும். பொதுவாக மருத்துவ முகக் கவசங்களும் (Medical Mask/Surgical Mask) துணியினாலான முகக்கவசங்களும் (Non medical mask/Fabric Mask) மக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

மருத்துவ முகக்கவசம் (Medical Mask)  இவை மூன்று அடுக்குகளைக் கொண்ட செயற்கையான நெய்யப்படாத மூலப்பொருட்களைக் (Synthetic Nonwoven Materials) கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இதன் மத்தியில் வடிகட்டுதலுக்கான அடுக்குகள் காணப்படும். இந்த முகக்கவசங்கள் பல கனஅளவுகளிலும் உள்ளதோடு பல்வேறு மட்டங்களிலான திரவ எதிர்ப்பினையும்  இரண்டு மட்டங்களிலான வடிகட்டுதலையும் கொண்டிருக்கின்றன. சுத்தமான முகக்கவசமொன்றை அணிய முன்னரும் களைந்த பின்னரும் கைகளை அல்கஹோல் அடங்கிய சுத்திகரிப்புத் திரவங்கள் அல்லது சவர்க்காரம் போன்றவற்றால் கழுவிக் கொள்ள வேண்டும். முகக்கவசம் இறுக்கமாக அணியப்பட வேண்டும். அணிந்த பின் அதனைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். ஈரமாகிவிட்டால் உடனே அப்புறப்படுத்த வேண்டும். அணிவதற்கு முன்னர் துளைகள் போன்ற சேதங்கள் உள்ளதா என்பதை அவதானிக்க வேண்டும். வாய், மூக்கு, கன்னங்கள் மறைக்கப்பட வேண்டும். வெள்ளை நிறப்பகுதி (பொதுவாக) உள்நோக்கி அணியப்பட வேண்டும். எந்த நிலையிலும் அணிந்த முகக்கவசத்தின் முன்பகுதியை தொடக் கூடாது. தொட்டால் உடனே கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். முகத்துக்கும் முகக்கவசத்துக்கும் இடையில் இடைவெளி இருக்கக் கூடாது. மெடிகல் மாஸ்க் ஒருமுறை மட்டுமே அணியப்படுவதாகும். இதனை அணிபவர்களை இது வைரஸ் தொற்றுவதிலிருந்து பாதுகாக்கும். அதேபோல நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் அணிவதன் மூலம் அவர்களிடமிருந்து நோய் பரவுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கும். சுகாதார ஊழியர்கள், இலேசான அறிகுறிகள் உள்ளவர்கள் உட்பட கொவிட் 19 ஐக் குறிக்கும் அறிகுறிகள் உள்ளவர்கள் எவரும், சுகாதார வசதிகளுக்கு அப்பால் கொவிட் 19 எனச் சந்தேகிக்கப்படும் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட விவகாரங்களைக் கையாளுபவர்கள் எவரும்  மருத்துவ முகக்கவசங்களைப் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. அத்தோடு கொவிட் 19 பரவலாகியுள்ள இடங்களில் இருக்கும் வேளையில் 1 மீட்டர் சமூக இடைவெளியைப் பேண முடியாமல் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், தேகாரோக்கியம் குன்றியவர்கள் போன்ற ஆபத்தான நிலையிலிருப்பவர்களுக்கும் இந்த முகக் கவசம் பரிந்துரைக்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக சுகாதாரத் துறை அதிகாரிகளுகு FFP எனப்படும் சுவாசக் கருவிகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. இவை FFP 2, FFP3, N95, N99 எனப் பல்வேறு செயற்பாட்டு அளவுகளின் உள்ளன. 

துணியாலான முகக்கவசங்கள் (Fabric Mask) –  இவை மக்களால் பொது இடங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கடைகளில் வாங்கப்படுவதாகவும் தாமே செய்து கொள்ளக் கூடியதாகவும் இவை உள்ளன. மெடிக்கல் மாஸ்க்குக்கு உள்ளது போன்ற தரநியமங்கள் இவற்றுக்கு இல்லை. இதனுடைய செயற்திறன் குறித்து போதுமான சான்றுகள் இல்லை. கொவிட் 19 ஐக் கட்டுப்படுத்துவதற்கான சாதனமாக இது பரவலாகப் பயன்படுத்தப்படுவதனை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கவில்லை. ஆனாலும் புதிய ஆய்வு முடிவுகள் வெளியிட்டுள்ளதன்படி இவ்வாறான முகக்கவசங்கள் அதனுடைய உட்புற அடுக்கு பருத்தி (கொட்டன்) போன்ற உறிஞ்சக் கூடிய துணியாலும், நடுவிலுள்ள அடுக்கு நெய்யப்படாத (Nonwoven) துணியாலும், வெளிப்புற அடுக்கு பொலிஸ்டர் போன்ற உறிஞ்சிக் கொள்ளாத துணியாலும் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். நடக்கும் போதும் பேசும் போதும் அது சுவாசிப்பதற்குத் தடையாக அமையக் கூடாது. கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது கஷ்டமாக உள்ள தொற்றுப் பரவல் பரவலாக உள்ள இடங்களில், குறிப்பாக பொதுப் போக்குவரத்து, கடைகள் மற்றும் சனங்கள் அதிகமாகக் கூடக் கூடிய குறைந்தபட்ச ஒரு மீட்டர் இடைவெளியையும் பேணமுடியாத நெரிசலான இடங்களில் துணியாலான முகக் கவசத்தையேனும் பயன்படுத்துவதற்கு மக்களை ஊக்குவிக்குமாறு உலக சுகாதார நிறுவனம் அரசாங்கங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. எந்தச் சந்தர்ப்பத்தில் எந்தவகையான முகக் கவசங்களை அணிவது என்பது தொடர்பில் அந்தந்தப் பிரதேசங்களுக்கான பரிந்துரைகள் தொடர்பில் உள்ளுர் அதிகாரிகளை மக்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என உ.சு.நிறுவனம் பணி்த்துள்ளது. எங்கு எப்போது எந்த வகையான முகக் கவசங்களைப் பயன்படுத்துவது என்பது தொடர்பில் ஒவ்வொரு நாட்டினதும் தீர்மானமெடுப்போரே முடிவெடுக்க வேண்டும். இதன்போது முகக்கவசம் அணிவது தொற்றுப் பரவலில் இருந்து அணிபவரைப் பாதுகாப்பதற்கா அல்லது தொற்றிய ஒருவரிடமிருந்து தொற்றுப் பரவாமலிருப்பதற்கா என்பது தொடர்பில் தெளிவான நிலைப்பாடு எட்டப்பட வேண்டும்.

துணியாலான முகக்கவசங்களை அணியும் போதும் களையும் போதும் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். துளைகள் போன்ற சேதங்கள் உள்ளதா என்பதை அவதானிக்க வேண்டும். இரு புறங்களிலும் இடைவெளிகள் வராத வண்ணம் மூக்கு, வாய், கன்னங்கள் மறையும் விதமாக அணியப்பட வேண்டும். முகக்கவசம் அழுக்கடைந்தாலோ சேதமடைந்தாலோ ஈரமானாலோ மாற்றி விட வேண்டும். அணிந்தபின் முகக்கவசத்தை தொடக் கூடாது. அழுக்கடையாத, ஈரமாகாத  துணியினாலான முகக்கவசங்களை மீளவும் பாவிப்பதாக இருந்தால் அதனை பிளாஸ்டிக் பையில் கவனமாக போட்டு வைக்க வேண்டும். மீளவும் பாவி்ப்பதற்காக எடுக்கும் போது காதுக் கொளுக்கியூடாக எடுத்து அணிய வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் பாவித்த முகக்கவசத்தை சவர்க்காரமிட்டு சுடுநீரில் கழுவ வேண்டும். ஒவ்வொருவரும் சொந்தமாக ஒரு முகக்கவசம் பயன்படுத்த வேண்டும். 

தனிநபர்களுக்கும் பொதுஜனங்களுக்கும் கொவிட் 19 வெளிப்படுத்தும் ஆபத்து

சனத்தொகை மட்ட வெளிப்பாடு கொவிட் 19 சமூகத்தில் சுழலும் அளவைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. அதாவது அறியப்பட்ட அல்லது சந்தேகிக்கப்பட்ட சமூகப் பரவல் அவதானிக்கப்படும் போது. தனிநபர் மட்ட வெளிப்பாடு ஒவ்வொருவரதும் தொழிற்பாட்டு நிலையில் தங்கியிருக்கிறது. உதாரணமாக பொதுச் சுகாதார சேவையாளர்கள், காசாளர்கள் போன்ற பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுகின்ற தனிநபர்கள்.

முகக்கவசம் அணிபவர் ஃ மக்களின் மீதான பாதிப்புக்கள்

நாட்பட்ட சுவாச நோய்கள், இருதய நோய், புற்றுநோய், நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள், எந்த வயதையுமுடைய நீரிழிவு நோயாளிகள், நோயெதிர்ப்புச் சக்தி குறைவானவர்கள் , 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் போன்ற நோய் ஏற்கனவே அறியப்பட்டவர்கள், போதுமான அளவு இருக்குமானால் மெடிக்கல் மாஸ்க்கையே பயன்படுத்த வேண்டும்.

முகக்கவசங்களின் பயன்பாடு தொடர்பிலான எந்தவொரு முடிவெடுக்கும் செயற்பாட்டிலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய சாத்தியமான அபாயங்களும் தீமைகளும் இருக்கின்றன.

துணியினாலான முகக்கவசங்கள் பாவிப்பவர்கள் அவர்களின் அழுக்கடைந்த கைகளினாலோ அல்லது பலமுறை தொடுவதனாலோ அழுக்கடைந்த முகக்கவசங்களைப் பயன்படுத்துவதும், தாம் பயன்படுத்துகின்ற அவ்வாறான முகக்கவசங்களை முகத்தின் ஏனைய பகுதிகளிலோ தலையிலோ வைத்துவிட்டு மீண்டும் வாயையும் மூக்கையும் மூடுவதற்குப் பயன்படுத்துவதும் கொவிட் 19 தொற்றுவற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

துணியினாலான முகக்கவசங்களின் வகையினைப் பொறுத்து சுவாசச் செயற்பாடுகளில் சங்கடங்கள் ஏற்பட முடியும். முகத் தோல் சிதைவுக்கு வழிவகுக்கும். தொடர்பாடலில் சிக்கலை உண்டாக்கும். அணிவதில் கஷ்டங்களை ஏற்படுத்தும். முகக்கவசங்களின் பாவனையினால் உண்டாகும் நன்மைகள் தொடர்பில் தெளிவில்லாமல் அணிபவர்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்க்க முனைவார்கள். இதனூடாக இவர்களிடம் ஏனைய பொதுச் சுகாதார விதிகளும் பெறுமானமற்றுப் போகும்.

கைகளை சவர்க்காரமிட்டு அல்லது அல்கஹோல் கொண்ட திரவங்களையிட்டுக் கழுவுதல், ஒரு மீட்டர் அளவிலாவது சமூக இடைவெளியைப் பேணுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தாமல் முகக்கவசம் அது மெடிக்கலோ, பப்ரிக்கோ அணிவதால் மட்டும் கொவிட் 19 பரவலைத் தடுப்பதில் எந்த விளைவும் ஏற்பட்டு விடப் போவதில்லை. ஆகவே முகக்கவசம் போலவே ஏனைய சுகாதாரச் செயற்பாடுகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டில் கொவிட் 19 பரவலுக்கான அபாயம் நீங்கிவிடவில்லை எனும் சூழலில் முகக் கவசம் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.   

About the author

Administrator

Leave a Comment