மீண்டும் மஸ்ஜிதுகள் திறப்பும் மக்கள் மகிழ்ச்சியும்

15

கோவிட் – 19 கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குடிமக்களை பாதுகாக்கும் முகமாக குவைத் அரசு எடுத்த நடவடிக்கைகளில் ஒன்று தான் மார்ச் – 13 முதல் பள்ளிவாசல்கள் மூடப்பட்டு தொழுகைகள் நிறைவேற்றப்படுவது நிறுத்தப்பட்டமையாகும்.

அல்லாஹ்வின் அருளின் காரணமாக 11.06.2020 இன்று அதிகமான பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டதோடு, ஜமாஅத் தொழுகைகளும் நிறைவேற்றப்பட்டது. இறை இல்லங்கள் திறக்கப்படுவதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மக்கள் இன்று பெருநாள் கொண்டாடுவது போன்றதொரு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதையும் பள்ளிவாயல்களில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதையும் காணமுடிந்தது.

அத்துடன் குவைத்தின் பிரதான பள்ளிவாசலாகிய பெரிய பள்ளியில் (Grand Mosque) அதிகாலைத் தொழுகை நிறைவேற்றப்பட்ட பின்னர் குவைத்தில் இயங்கும் நலன்புரி அமைப்புக்கள் ஒன்றிணைந்து, அல்லாஹ்விற்கு நன்றிசெலுத்தும் வகையில் 100 ஆடுகளை அறுத்து ஏழைகளுக்கு பங்கீடு செய்தமையும் குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும்.

பள்ளிவாசலுக்கு தொழுகையை நிறைவேற்றச் செல்லக்கூடியவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை அவ்காப் அமைச்சு ஏலவே அறிவித்திருந்தோடு, தன்னார்வப் பணியாளர்கள் தொழுகை நிறைவேற்றக்கூடியவர்களுக்கு உதவும் வகையில் தொழுகை விரிப்புக்கள், முகமூடி என்பன வழங்கியதோடு, தமது கரங்களை சுத்தப்படுத்துவதற்கான செனிடைஸர் வழங்கிக் கொண்டிருந்தமையையும் காண முடிந்தது.