பொதுத் தேர்தல் தொடர்பிலான சுகாதார அமைச்சின் வழிகாட்டல்கள்

25

பொதுவானவை

அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தேர்தலுக்காக தமது சொந்த இடங்களுக்கு பயணிப்பதைக் குறைக்கும் வகையில் பெருமளவிலான தனியார் துறை ஊழியர்களுக்கும் தபால் வாக்களிப்புக்கு அல்லது முன்கூட்டியே வாக்களிப்பில் ஈடுபடுவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். கொவிட் 19க்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள எவரையும் தேர்தல் பணிகளில் இணைத்துக் கொள்ளாதவாறு ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பானவை

தேர்தல் பிரச்சாரங்கள்

  1. தேர்தல் பிரச்சாரங்களின் போது குறிப்பாக தொலைக்காட்சி உள்ளிட்ட இலத்திரனியல் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் பயன்படுத்தப்பட்டு மக்கள் ஒன்று கூடுவதற்கான சந்தர்ப்பங்களைக் குறைத்தல்
  2. தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டால் அதில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 100 க்குக் கீழ் மட்டுப்படுத்தல்
  3. ஊர்வலங்கள் வரவேற்கப்படவில்லை
  4. கூட்டத் திகதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அது தொடர்பில் பிரதேச சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவித்தல்
  5. கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்பதோடு குறைந்தபட்ச ஒரு மீட்டர் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும்
  6. கூட்டத்துக்காக சமூக இடைவெளியைப் பேணக் கூடியவாறான இடம் தெரிவு செய்யப்பட வேண்டும். அங்கு போதுமான காற்றோட்டம் நிலவ வேண்டும்.
  7. உரையாற்றுபவர்களும் தமக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளியைப் பேண வேண்டும்

வீடு வீடாகச் சென்று பிரச்சார சாதனங்களை விநியோகிப்பவர்களின் எண்ணிக்கை மூன்றை விட அதிகரிக்கலாகாது. சுவாச நோய் அறிகுறிகளுடனோ இல்லாமலோ காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருப்பவர்களை இதற்கென இணைத்துக் கொள்ளக் கூடாது. இந்தப் பிரச்சாரப் பணியில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதோடு ஒரு மீட்டர் இடைவெளியையும் பேண வேண்டும். ஒவ்வொரு முறை கையேடுகளை விநியோகிக்கும் போதும் கைகளை கிருமிநீக்கம் செய்து கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் தமது கட்சிக் காரியாலயங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்வதோடு அதிகளவிலானோர் காரியாலயத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் அது திறந்திருக்கும் நேரத்தையும் குறைக்க வேண்டும்.

தபால்மூல வாக்கெடுப்பு

தேர்தலின் போது கொவிட் 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் சுகாதார ஊழியர்களுக்கும், முடிந்தால் அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் தபால் மூல வாக்களிப்பினை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. நிறுவனத் தலைவர்கள் அல்லது குறித்துரைக்கப்பட்ட அலுவலர்கள் உள்ளேயுள்ளவர்களின் சமூக இடைவெளியைப் பேணும் வகையிலான இடவசதி கொண்ட இடமொன்றை வாக்களிப்புக்குத் தெரிவு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். கட்சிகளின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் இயன்ற அளவில் குறைக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொள்கிறது.

சுவாச நெருக்கடி அறிகுறிகளுடன் அல்லது இல்லாமல் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் வாக்களிப்பு தினத்தின் கடைசி நேரத்தில் வந்து வாக்களிக்குமாறு வாக்காளர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். சனம் திரள்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் குழுக்களாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அனைத்து அலுவலர்களும் வாக்காளர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

வாக்குச் சாவடிகள்

ஒருவழியால் நுழைந்து வேறுவழியால் வெளியேறும் வகையில் வாக்குச் சாவடிகள் அமையப்பெற வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளியைக் குறிக்கும் அடையாளங்கள் வாக்குச் சாவடியி்ன் உள்ளும் புறமும் குறிக்கப்பட வேண்டும். தேர்தல் கடமையிலிருக்கும் உத்தியோகத்தருக்கும் வாக்களிக்க வருபவருக்கும் இடையில் தெளிவாகத் தெரியக் கூடியவகையிலான பொலிதீன் போன்ற பாதுகாப்புத் திரை இடப்பட்டிருக்க வேண்டும். அதில் வாக்களிப்பு நடவடிக்கைகளைச் செய்யக் கூடியவாறான இடைவெளியும் இருக்க வேண்டும்.

வாக்களிப்பு நிலைய முகவர்களுக்கிடையில் ஒரு மீட்டர் இடைவெளி பேணப்படுவதோடு, வாக்களிப்பவர்களுக்கும் இவர்களுக்கும் இடையிலும் ஒரு மீட்டர் தூரம் பேணப்பட வேண்டும். வாக்களிப்பு நிலையத்தில் கைகழுவுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். வாக்காளர்கள் கைகளைக் கழுவிய பின்னரே வாக்களிக்க வேண்டும். வாக்குச் சாவடியில் உள்ள அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்தல் உத்தியோகத்தர்கள் வாக்காளர்களின் ஆளடையாள அட்டையையோ வாக்குச் சீட்டையோ கையிலெடுக்கக் கூடாது. மாறாக வாக்காளர்கள் அதனை தம்வசமிருந்து உத்தியோகத்தர்களுக்குக் காட்ட வேண்டும். வாக்குப் பெட்டியும் பாவிக்கப்படும் பேனாவும் மணித்தியாலத்துக்கொரு முறை கிருமிநீக்கம் செய்யப்பட வேண்டும். வாக்களிப்பு நிறைவுற்றதும் எம்ஓஎச்சினால் வாக்களிப்பு நிலையம் கிருமிநீக்கம் செய்யப்பட வேண்டும். தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகள் முழுமையான பாதுகாப்பு அங்கிகளை (PPE) அணிந்திருக்க வேண்டும்.

வாக்கெண்ணும் நிலையங்கள்

வாக்கெண்ணும் நிலையத்திலுள்ள அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதோடு, இங்கு நுழையும் அனைவரதும் உடல் உஷ்ணம் பரீட்சிக்கப்பட்டு 37 பாகை செல்சியஸ் அல்லது 98.4 பரனைட் உஷ்ண அளவுக்கு மேலுள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். வாக்கெண்ணும் அதிகாரிகள் மற்றும் வாக்கெண்ணும் முகவர்களுக்கிடையே ஒரு மீட்டர் இடைவெளி பேணப்பட இயலுமான வகையில் வாக்கெண்ணும் இடம் தெரிவு செய்யப்பட வேண்டும். காற்றோட்டம் குறைவாகக் காணப்படுமானால் எக்ஸோஸ்ட் விசிறிகள் பொருத்தப்பட்டு காற்றோட்டம் மேம்படுத்தப்பட வேண்டும். கைகழுவுவதற்கான திரவம் வைக்கப்பட்டிருப்பதோடு கழுவியபின் கை துடைப்பதற்கான டிஷ்யூக்களும் அதனை அகற்றுவதற்கான பொலிதீன் பைகளுடன் கூடிய குப்பைக் கூடைகளும் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விஷேட அறிவுறுத்தல்கள்

தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படும் பொலிசார் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதோடு, தேர்தல் நிலையங்களில் நுழையும் பொழுது கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் தனியான கிருமிநீக்கித் திரவம் (சனிடைசர்) வழங்கப்பட வேண்டும். யாரையும் தொடவேண்டி வந்தால் (உதாரணமாக ஆர்ப்பாட்டங்கள்) அதற்கு முன் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும்.

இந்த வழிகாட்டல்கள் அனைத்தையும் அனைத்துக் கட்சிகளுக்கும் வழங்குவதற்குத் தான் எதிர்பார்த்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளதோடு, தேர்தல் பிரச்சாரங்களில் மேலும் சில விதிமுறைகளையும் சேர்த்து இதனை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவை கேட்டுக் கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வழிகாட்டல்கள் அடங்கிய மாதிரித் தேர்தலொன்று இம்மாதம் 14, 15 ஆம் திகதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். இதன்போது வாக்காளர்களின் கைகளில் கிருமிநீக்கித் திரவங்களைத் தெளிப்பது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்படும். கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற மாதிரி தேர்தலில் வாக்காளர்களை கைகழுவச் செய்வதனால் வாக்குச் சீட்டுக்கள் ஈரமாவது அவதானிக்கப்பட்டுள்ளது. பசை போன்ற ஜெல்களைப் பாவிப்பதனாலும் வாக்குச் சீட்டுக்கள் கைகளில் ஒட்டிக் கொள்வது அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால் இம்முறைய மாதிரித் தேர்தலில் இலகுவில் காயக் கூடியவாறு 75 அல்லது 80 வீதம் அல்கஹோல் அடங்கிய திரவம் பரீட்சிக்கப்படவுள்ளது.