லீசிங் மாபியா – விசாரிக்கச் சென்றவர் அடித்துக் கொலை

14

வாகனங்களைக் குத்தகைக்கு விடுவோர் பாதாள உலகத்தினரைக் கொண்டு குத்தகைக்கு எடுத்தவர்களை மிரட்டி, வாகனங்களையும் தூக்கிச் செல்லுகின்ற முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த லீசிங் மாபியாவிலிருந்து குத்தகை எடுத்தவர்களைப் பாதுகாக்க வேண்டும் என பேஸ்புக்கில் பதிவிட்டு ஓரிரு தினங்களில் அகில இலங்கை சுயமுயற்சியாளர் சங்கத்தின் தேசிய முச்சக்கரவண்டிச் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன (53) குத்தகைக்கு விடும் நிதி நிறுவனத்தில் வைத்தே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

தேசிய முச்சக்கரவண்டிச் சங்கத்தின் அங்கத்தவர் ஒருவருக்கு நியாயம் தேடி நுகேகொடை அம்புல்தெனிய சந்தியிலுள்ள நிதி நிறுவனத்துக்குச் சென்ற வேளையிலேயே அவர் அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி உரிமையாளர் ஒருவரது வாகனத்துக்குரிய தவணை செலுத்தப்படாமையை முன்வைத்து அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வாகன உரிமையாளர் சங்கத்தில் முன்வைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் நிதி நிறுவனத்திடம் விசாரிப்பதற்காகச் சென்றுள்ளார். கொரோனா காலப்பிரிவில் தவணை செலுத்துவதற்கு அரசாங்கம் ஆறு மாத காலம் அவகாசம் வழங்கியிருந்தாலும் மூன்று மாதம் தவணை செலுத்தாமைக்காக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் அவர் விசாரித்த வேளையிலேயே, இந்த கால அவகாசம் தொடர்பில் எமக்கு எந்தவித சம்பந்தமுமில்லை எனக் கூறி அவர் அங்கு வைத்து தாக்கப்பட்டு களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் அங்கு மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணை நடத்திய மிரிஹானை பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய 08 பேரை கைது செய்யப்பட்டு 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.