உலக செய்திகள்

கொரோனா – இந்தியா நான்காவது இடத்தில் – சிகிச்சைக்கு வழியின்றி பலர் உயிரிழப்பு

Written by Administrator

கடந்த 24 மணித்தியாலயத்தில் மட்டும் 10,956 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரேஸில், ரஷ்யா வுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 297,535 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு, 8,498 பேர் மரணித்துள்ளனர்.

மார்ச் மாதத்தில் இருந்து இரண்டரை மாதங்கள் முடங்கல் நிலையிலிருந்து விட்டு தளர்த்தப்பட்ட ஓரிரு வாரங்களிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது. மும்பாய், புதுடில்லி, சென்னை பிரதேசங்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிராமப் புறங்களில் இது மோசமாகப் பரவிவருவதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்ஸிலின் பணிப்பாளர் பால்ராம் பார்கவா தெரிவித்தார். தொழிலுக்காக வெளியிடங்களில் வேலைக்குச் சென்று கொரோனா சூழல் காரணமாக தொழிலை இழந்தவர்கள் முடங்கல் தளர்த்தப்பட்டதும் மீண்டும் தமது பிரதேசங்களுக்குத் திரும்பி வந்தமையே பரவலுக்குப் பிரதான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஓடிக் கொண்டிருக்கும் நேர வெடிகுண்டில் அமர்ந்திருக்கிறோம். அரசாங்கம் போதுமான அளவு சுகாதாரத் துறைக்குச் செலவு செய்யாவிடில் நிறையப் பேர் செத்து மடிவார்கள் என முற்போக்கு மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சங்கத் தலைவர் டொக்டர் ஹர்ஜித் சிங் பட்டி தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் கொரோனா சிகிச்சைக்கென விஷேடமாக ஒதுக்கப்பட்ட வைத்திய நிலையங்கள் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. நோயாளிக்கான கட்டில் கிடைக்காமையால் புதுடில்லி வைத்தியசாலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் இறந்துள்ளார். எட்டு தனியார் மற்றும் அரச மருத்துவமனைகளில் அனுமதிக்க முயற்சித்தும் இடம் கிடைக்காததால் ஒரு தம்பதியினர் மரணித்துள்ளனர். 53 வயதான கல்லீரல் புற்றுநோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்றியதால் அவர் புற்றுநோய் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மரணித்துள்ளார்.

முடங்கல் தளர்த்தப்பட்டதன் காரணமாக கடைகள், வர்த்தக நிலையங்கள், மதவழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் இந்தியா மீண்டும் முடக்கப்பட்டு வருகிறது.

About the author

Administrator

Leave a Comment