கொலைக்களமாக நாடு மாறக் கூடாது

10

நாட்டின் அன்றாட நிகழ்வுகள் மக்கள் மனதில் நெருடல்களை அதிகப்படுத்தி வருகிறது. நீதி நியாயம் தோற்றுப் போய் அராஜகம் கோலோச்சுமோ என்கின்ற பயம் அநீதிக்கு எதிரானவர்களிடம் அப்பிக் கிடக்கின்றது.

இனவெறிக்கெதிராக ஒரு சிலர் நடத்துவதற்கு முன்வந்த ஆர்ப்பாட்டம் ஆக்ரோஷமான முறையில் அடக்கப்பட்டிருக்கிறது. சட்டம் ஒழுங்குக்கு அப்பால் மனிதாபிமானமும் கூட நாட்டிலிருந்து மறைந்து விடுமோ என்கின்ற அச்சத்தை நாளாந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிசார் இரண்டாக மடித்து வாகனத்துக்குள் தூக்கி வீசிய விதம் நாட்டில் பெண்ணொருவருக்கு கொடுக்க வேண்டிய கௌரவத்தை கேள்விக் குறியாக்கி இருக்கிறது. பெண்களைப் பெண் பொலிசாரே கையாள வேண்டும் என்ற சட்டத்தையும் மீறி அராஜகம் நடத்திய பொலிசாரை, கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்காக வேண்டி தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்களேயன்றி அவர்கள் மீது எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அதேபோல அட்டுளுகம பிரதேசத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட அப்பாவிச் சிறுவன் ஒருவன் பொலிசாரின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறான். இதனை முறைப்பாடு செய்வதற்காக அவனது தந்தை பொலிஸ் நிலையத்துக்குச் சென்றபோது அவருடைய முறைப்பாட்டைப் பதிவு செய்வதற்கு பொலிசார் மறுத்தனர் என அவர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே சுய தொழில் முயற்சியாளர் சங்கத்தின் தேசிய முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். தனது சங்கத்திலுள்ள ஒருவருக்கு நிதி நிறுவனத்தினால் இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் விசாரிக்கச் சென்ற போதே அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இறுதியாக ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா எயார் பஸ் விவகாரம் தொடர்பில் தகவல்களை வெளியிட்டு வந்த சுதந்திர ஊடகவியலாளர் ரஜீவ ஜயவீரவின் மரணமும் நிகழ்ந்திருக்கிறது. இது தற்கொலை என வெகுவாக அறியப்பட்ட போதிலும் இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் பரவலாக நிலவுகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூட இது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இப்படி அநியாயத்துக்குத் துணை போவதும் அநியாயத்தைத் தட்டிக் கேட்பவர்கள் மீது அத்துமீறுவதும் அதிகரித்துச் செல்வது நாகரிகமான மக்கள் வாழும் நாடொன்றுக்குப் பொருத்தமானதல்ல.

நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமென்றிருந்தால் நாட்டில் நீதி கோலோச்சுவது இன்றியமையாததாகும். வேலிதான் பயிரை மேயுமென்றிருந்தால் பயிர்களே வேலியாக மாறுவது தான் பயிர்களுக்கு நன்மையானதாக அமையும்.