மாளிகாவத்தை சோகம் – இலங்கை நலன்புரி அரசிலிருந்து மாறிச் செல்வதற்கான அடையாளமா ?

12

மாஸ் எல் யூசுப்

பிறப்பில் வறுமையால் தண்டிக்கப்பட்டவர்கள் இறப்பில் விதியால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இது சனநெரிசலில் பலியான மூன்று பெண்களின் சிறுகதை மட்டுமல்ல, தொடர்கதையும் தான். ஒரு தனவந்தரின் தானத்தைப் பெறுவதற்காக அலையென எழும்பிய மக்கள் கூட்டத்தின் ஒருபகுதியே அது. அவர்கள் நாடி வந்தது தமது வசதி வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்ளுதலையோ, உல்லாசமாய்க் களித்தலையோ அல்ல, மாற்றமாக தம்மைப் பீடித்திருந்த மோசமான வறுமையிலிருந்து தற்காலிக நிவாரணம் பெறவே அவர்கள் அந்த இடத்தைத் தேடி வந்தார்கள். கொழும்பு மாவட்டத்தில் அதிக சனத்தொகை அடர்த்தியான மாளிகாவத்தை பிரதேசத்தில் மே 21 இல் நடந்த சம்பவத்தின் பின்னணி இது தான்.

இந்த உதவுதொகை வழங்கப்பட்ட காலமும் வழங்கிய விதமும் பற்றிய விடயங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியவை. இந்தப் பத்தி இதற்கான பின்னணிக் காரணங்களைக் கருத்தில் கொண்டே வரையப்படுகிறது. நெரிசலே இந்தச் சம்பவத்துக்கான நெருங்கிய காரணமாக அப்போது சொல்லப்பட்டது.

பலவந்தமான அடைத்து வைப்பு

அரசியல் தத்துவத்தில் சமூக ஒப்பந்தம் என்றொரு கருதுகோள் உள்ளது. ஒவ்வொரு தரப்பினரதும் உரிமைகளும் கடமைகளும் தொடர்பில் ஆட்சியாளருக்கும் மக்களுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது. இன்றைய வழக்கில் இது அரசாங்கத்துக்கும் குடிமக்களுக்கும் இடையிலான ஒப்பந்தமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி குடிமக்கள் தமது குறிப்பிட்டளவு சுதந்திரத்தையும் கீழ்ப்படிதலையும் கொடுத்து அதற்குப் பகரமாக அவர்கள் அரசிடமிருந்து தமக்கான பாதுகாப்பையும் பராமரிப்பையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

இந்த சமூக ஒப்பந்தங்களுக்கு நீதித்துறையின் அழுத்தங்கள் இருக்கின்றன. அவை அவற்றின் மீது சட்டரீதியாகப் பிரயோகிப்பதற்குப் பொருத்தமானதாகக் கருதப்படும் உரிமைகள் மற்றும் வரையறுகளுக்கான கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. தொடர்ச்சியான லொக்டவுனுக்கு ஆளாகியுள்ள நிலையில் இது தொடர்பில் ஒரு சுவாரஸ்யமான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட முடியும். மக்களின் விருப்பத்துக்கு மாற்றமாக அவர்கள் அடைத்து வைக்கப்படுவதன் விளைவாக மக்கள் சமூக, பொருளாதார, மனோநிலை ரீதியாகவும் பொதுநலனின் அடிப்படையிலும் சரிந்து விழுகிறார்கள். தொற்று நோயைத் துடைத்தெறிவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது முக்கியமானது என்பதை யாரும் மறுக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

அரசாங்கத்தின் தொடர்ச்சியான தோல்விகள்

லொக்டவுனின் கீழ் குறிப்பாக சுயதொழிலில் ஈடுபடுகின்றவர்கள் மற்றும் அன்றாடம் காய்ச்சிகள் உட்பட்ட மக்களின் நுண்ணிய பொருளாதார ஸ்திரப்பாடு தொடர்பில் மதிப்பீடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அதிகாரிகளின் செயல்திட்டங்கள் இவர்களதும் வறுமையின் விளிம்பில் இருப்பவர்களதும் பொருளாதாரப் பாதிப்புக்களை கருத்தில் எடுத்திருக்க வேண்டும். இந்தப் புதிய சூழ்நிலையை அவர்கள் எவ்வாறு உள்வாங்கப் போகிறார்கள், சமாளிக்கப் போகிறார்கள், சுயமாக ஒழுங்கமைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பவற்றுக்கான முறையான திட்டமொன்று வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஏனைய பல நாடுகளில் காணப்படுவது போல நமது நாட்டிலும் பொதுநலனை அடிப்படையாகக் கொண்ட அரச முறைமை ஒன்று உள்ளது. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் அது முறையான சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றோடு இவற்றுக்கு மேலாக மக்களது சமூக பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். கௌரவமான வாழ்வொன்றுக்காக குறைந்த பட்ச ஒழுங்குகளையும் தம்மால் செய்து கொள்ள முடியாத மக்களுக்கு விஷேட கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒரு நலன்புரி அரசின் அர்த்தமுள்ள செயற்பாட்டில் லொக்டவுனின் தாக்கம் தொடர்பிலான பகுப்பாய்வொன்றைச் செய்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாக இதனைப பயன்படுத்தியிருக்க வேண்டும்.

சமூகப் பாதுகாப்பு என்றால் என்ன ? ஒரு வரைவிலக்கணத்தின்படி, வருமானமி்ல்லாத அல்லது போதிய வருமானமில்லாத மக்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான அரசாங்கத்தின் எந்தவொரு முறைமையும் எனக் குறிப்பிடுகிறது. லொக்டவுன் காலப்பிரிவில் போதுமான நிதியுதவி வழங்கப்பட்டிருந்தால் மக்கள் நிதி நெருக்கடிகளுக்கு ஈடுகொடுத்திருப்பார்கள். அதுமட்டுமன்றி தானமாக வழங்கப்பட்ட சொச்சங்களுக்காக அவர்கள் அல்லல்பட்டிருக்க மாட்டார்கள்.

உணவு மானியங்கள், இலவச அரிசி, இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதார சேவைகள் மூலம் சுதந்திரத்துக்கு முன்பிலிருந்தே இலங்கை தன்னை நலன்புரி அரசாக வரித்துக் கொண்டது. திறமையின்மை மற்றும் தொடர்ச்சியான ஊழல் செயற்பாடுகள் காரணமாக ஒரு பயனுள்ள அமைப்பொன்று இங்கு வேரூன்ற முடியாமல் போய்விட்டது. இந்த முறைமையின் தோல்விக்கு இந்த அரசாங்கம் மட்டுமல்ல, ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

மாளிகாவத்தை வெளிப்படுத்தும் உண்மைகள்

மாளிகாவத்தை சம்பவத்தை சரியாகப் புரிந்து கொள்ள இந்தப் பின்புலத்தில் நோக்க வேண்டும். இந்தச் சம்பவத்தை இனத்துவக் கண்ணோட்டத்திலோ, ஊரடங்குச் சட்டத்தை மீறியதாகவோ அல்லது பெருந்தொற்றின் போதான பொறுப்பற்ற நடத்தையாகவோ பார்ப்பது, சத்தியத்தையும் நாட்டின் உளவுத் துறையையும் குறைத்து மதிப்பிடுவதாக அமையும். தமது நியாயமான வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகள் வழங்கப்படாத பிரச்சினை இந்தத் தோல்வியின் கதவை பலமாகத் தட்டுகிறது. பொறுப்புக் கூறப்பட வேண்டிய சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, உட்கட்டமைப்பு போன்ற விடயங்களை தற்போதைக்கு நாம் ஒருபுறம் வைத்தாலும், அரசாங்கத்தின் பொறுப்பு எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என மக்கள் கேட்பதில் நியாயமிருக்கிறது.

தார்மீக முரண்பாடு

எது உயர்ந்தது ? சட்டமா, தேவையா ? பசியினால் வயிறு எரிந்து கொண்டிருக்கும் ஒருவர், பசியினால் அழுது கொண்டிருக்கும் குழந்தை உண்ணக் கொடுக்க முடியாமல் சூப்பியை வாயில் திணிக்கும் அபலைத் தாய், இவர்கள் எதற்கு முன்னுரிமை கொடுப்பார்கள் ? அந்த உயர்ந்த சட்டத்தைத் தூக்கி எறியுங்கள் என்று சொல்ல மாட்டார்களா ? இந்தத் தார்மீக முரண்பாட்டில் ஒருவருடைய சமநிலை எங்கு போய்த் தாக்குகிறது ? லொக்டவுன் சூழலில் தமது வாழ்வைத் தொலைத்த மக்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமானப் பிரச்சினைகளைச் சற்றுக் கவனியுங்கள். தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் உணவூட்டுவதற்காக ஒரு பாண் துண்டைப் பெற்றுக் கொள்வதற்காவது அவர்களால் வெளியில் சென்று உழைக்க முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த நிலை தொடர்ந்தது.

நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என அவர்கள் கேட்கிறார்கள். குடும்பத்துடன் சேர்ந்து நாங்கள் வீட்டில் செத்து மடிவதா, அல்லது எங்களது பசியைத் தணித்துக் கொள்வதற்கான வேறு வழிகளைத் தேடுவதா என அவர்கள் கேட்கிறார்கள். உண்ண உணவில்லாததால் வற்றிப் போயிருக்கின்ற மார்பகங்களால் பசியால் அழும் குழந்தைகளுக்கு பாலூட்டுவது எப்படி ? தனக்கும் தனது குழந்தைகளுக்கும் உணவைப் பெற்றுக் கொள்வதற்கு வழிகண்டுபிடிப்பதைத் தவிர அவர்களிடமிருந்து வேறெதனை எதிர்பார்க்க முடியும் ? கொவிட் 19 ஒருவேளை கொல்லலாம். ஆனால் பசி நிச்சயமாகக் கொன்று விடும். இந்த இக்கட்டான நிலையில் இருப்பவர்கள் மீது சட்டம் என்ன அக்கறை செலுத்தியிருக்கிறது ? இவர்களுக்குப் போதுமான அளவில் வழங்காமல் இவர்கள் மீது சட்டத்தை இறுக்குவது எவ்வளவு நியாயமானது ? சமூக ஒப்பந்தமும் நலன்புரி அரசும் நாசமாகட்டும் என்று தானே அவர்கள் சொல்லப் போகிறார்கள்.

பொருளாதார அழுத்தம்

ஒரு மாதத்துக்கும் மேலாக பாக்கித் தொகை செலுத்தப்படாததால் மளிகைக் கடைக்காரர்கள் மளிகைச் சாமான்கள் வழங்குவதை நிறுத்தி விட்டார்கள். கடன் முதலைகள் நுகர்வுக்காகப் பெற்ற கடன் வட்டிக்காக வாயைப் பிளந்து நிற்கின்றன. வீட்டு வாடகை செலுத்தாதற்காக உரிமையாளர்கள் தூஷித்துக் கொண்டிருக்கிறார்கள். நோய்வாய்ப்பட்டவர்கள் தமது அத்தியாவசிய மருந்துக்காக சிரமப்படுகிறார்கள். திரண்டு வந்து மிரட்டப் போகின்ற மின்சாரம் மற்றும் நீர் பட்டியல்கள். இவர்களிடம் இருந்து எதனை எதிர்பார்க்க முடியும் ?

பொருளாதார ரீதியான மன அழுத்தம், கவலை, மனச்சோர்வு மற்றும் தலைவலி, இடுப்புவலி, குடற்புண், உயர் இரத்த அழுத்தம் போன்ற உடலியல் நோய்களை அதிகரிக்கச் செய்யும் என ஆய்வுகள் கூறுகின்றன. வறுமையால் மூச்சுத் திணறி, பொறுப்புக்களால் விழி பிதுங்கி, லொக்டவுனினால் வாழ்வாதாரத்தையும் தொலைத்து விட்ட ஒருவர், இவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அது எதுவாக இருந்தாலும் விரைந்து செல்வது நியாயமானது தானே ? இந்த நேரத்தில் கண்ணுக்குத் தெரியும் தீப்பொறியும் ஒளிவிளக்காகத் தானே அவர்களுக்குத் தோன்றும் ? லொக்டவுன் விவகாரத்தை முறையாகக் கையாளுவதற்குத் தவறிய அரசாங்கம் தானே இந்தப் பேரிடருக்குப் பொறுப்புக் கூற வேண்டும் என மக்கள் விரல் நீட்டுகிறார்கள். 

மன அழுத்தம்

அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்களின் மன நலம் கொரோனாவினால் பாதி்க்கபட்டுள்ளது என வொஷிங்டன் போஸ்ட் (ஏப்ரல் 02) செய்தி வெளியிட்டுள்ளது. கைஸர் குடும்ப அறக்கட்டளை மே மாதத்தில் மேற்கொண்ட கணிப்பீட்டில் 56 வீதமான மக்கள் தொற்று நோய் தமது மன ஆரோக்கியத்தைப் பாதித்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். சாப்பிடுவதிலும் தூங்குவதிலும் சிக்கல்கள், மது அருந்துவது, தலைவலி அல்லது வயிற்றுவலி, கோபப்படுவது போன்ற எதிர்மறை பாதிப்புக்கு இவர்கள் உள்ளாகியிருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

மக்களின் மனநிலை தொடர்பாக ஆய்வுகளை நடத்தக் கூடிய இதுபோன்ற நிறுவனங்கள் எம்மிடம் இல்லை. ஒப்பீட்டு ரீதியில் மாளிகாவத்தை மக்களை விட அமெரிக்கர்கள் கௌரவமான வாழ்க்கை வாழ்கின்றனர். மாளிகாவத்தை மக்கள் நெரிசலுக்குள் வாழ்கின்றனர். அடைபட்ட சிறியதொரு இடத்தில் பெரிய குடும்பங்கள் சீவிக்கின்றன. தண்ணீருக்கும் சுகாதாரத்துக்குமான சிறந்த வசதிகள் இவர்களுக்குக் கிட்டுவதில்லை. இவ்வாறான நிலையில் லொக்டவுனின் தாக்கமும் இணைந்தால் இவர்களது மனநிலை எப்படியிருக்கும் ?

மாநகர மாளிகாவத்தை

இது மாளிகாவத்தை முஸ்லிம்களின் பிரச்சினை மட்டுமல்ல. லொக்டவுனினால் வாழ்வை இழந்த அனைத்து மக்களதும் பிரச்சினை. சகவாழ்வையும் சகிப்புத் தன்மையையும் யாராவது நடைமுறையில் பார்க்க விரும்பினால் அதற்குரிய இடம் இது தான். இங்கு சிங்கள, முஸ்லிம், தமிழ், மலாய் மக்கள் ஒன்றாய்ப் பிணைந்து வாழ்கிறார்கள். அவ்வப்போது அயல்வீட்டுச் சண்டைகள் நடந்தாலும் பொதுவில் இவர்கள் சமரசமாகவே வாழ்கிறார்கள். மாளிகாவத்தை ஒரு மாநகரப் பகுதி. இவர்களிடம் சிறந்த பிரஜைகளுக்கான இயல்புகளை எதிர்பார்ப்பதற்கு முன்னர் இவர்கள் சிறந்த முறையில் வாழ்வதற்கான சூழலை உருவாக்குவது ரொம்ப முக்கியம்.