Features அரசியல்

அநாதையாகிய மார்க்கம்

Written by Administrator
  • பியாஸ் முஹம்மத்

உலகின் நான்கு பெரும் மதங்களின் கலவையில் தான் இலங்கை சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. இலங்கைக்கே உரித்தான அடம்ஸ் பீக் எனப்படும் மலையைக் கூட தத்தமது மதத்துக்குரியது என நான்கு மதத்தினரும் நம்புகிறார்கள். பௌத்தர்கள் அதனை புத்தரின் காலடிபட்ட ஸ்ரீபாதவாகவும் இந்துக்கள் சிவனடி தழுவிய சிவனொளி பாத மலையாகவும் ஒரே இறை கொள்கையை உடைய முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஆதி பிதா ஆதமுடைய பாதம் பதிந்த பாவாதம் மலையாகவும் அடம்ஸ்பீக்காகவும் இதனைக் கருதுகின்றனர். நான்கு மதங்களும் இதற்கு உரிமை கோரினாலும் இன்று வரை அது பொதுமைப்பட்டதாகவே இருப்பது இலங்கையின் மத சகிப்புத் தன்மைக்கும் விட்டுக் கொடுப்புக்கும் இன நல்லிணக்கத்துக்கும் சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது.

2009 இல் இலங்கையில் தமிழினத்தின் மீதான யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் முஸ்லிம்கள் மீது திருப்பப்பட்ட இனவாத அலைகள் மதத்தை முதன்மையாகக் கொண்டவையாக அமைந்தன. தமது இனத்தைப் பெருக்குவதையும் அடுத்த இனத்தை அழிப்பதையும் வைத்து முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்ட போதும் அதனுடன் மதம் தொடர்புபடுத்திப் பேசப்பட்டது. முஸ்லிம்களை மோசமானவர்களாகச் சித்திரித்து அவர்கள் இப்படி மாறிப் போவதற்கு இஸ்லாம் மதம்தான் காரணம் என்ற இந்திய இறக்குமதிக் காரணிகள் இங்கும் முன்வைக்கப்பட்டன.

அல்லாஹ்வின் தூதரைப் பாதுகாப்பதற்கு இங்கு பல அமைப்புக்கள் இருந்தாலும் அல்லாஹ்வும் அவனது மார்க்கமும் சொல்ல முடியாத அளவுக்கு நிந்திக்கப்பட்டதற்கு எதிராகச் செயற்பட யாரும் இருக்கவில்லை. இந்த இடத்தில்தான் இலங்கையின் நான்கு பெரும் மதங்களில் ஒன்று அநாதையாகத் தவித்தது.

உலகில் இரண்டாவது பெரிய மதமாக வளர்ந்து வரும் உலகளாவிய இஸ்லாம் மார்க்கத்தின் போதனைகள் பற்றி அறிந்து கொள்ள நாட்டிலுள்ள 90 வீதமான மக்கள் ஆர்வம் கொண்டிருந்த போதிலும் யார் எந்த இஸ்லாத்தை எப்படி முன்வைப்பது என்பது தெரியாமல் முஸ்லிம்களே இன்று வரை திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்புக்களும் முஸ்லிமல்லாதவர்களுக்கு மத்தியில் இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்புக்களும் இருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தின் அதியுயர் பீடமாக அண்மைக் காலம் வரை விளங்கிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவால் 1924 ஆம் ஆண்டிலேயே முஸ்லிம் சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அஹ்மதியாக்கள் எனும் காதியானிகளை முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகவே இந்த நாடு கருதுகிறது.

அதேபோல முஸ்லிம்களுக்கு மத்தியில் தாமே 73 இல் முதன்மையானவர்கள் என்று மார்தட்டும் ஏராளமான அமைப்புக்கள் உள்ளன. தற்போது இருக்கின்ற அமைப்புக்களின் வரிசைக் கிரமப்படி தரீக்காக்கள், ஜமாஅத்துக்கள், இயக்கங்கள் என அவற்றை வகைப்படுத்த முடியும். தரீக்காக்களில்   33 பிரிவுகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜமாஅத்துக்களில் தௌஹீத், தப்லீக் என இரு வகைகள் இருந்தாலும் அவற்றுக்குள்ளால் மேலும் பல பிரிவுகள் உள்ளன. இயக்கங்களில் இரண்டு வகைகள் உள்ளன.

தரீக்காக்களில் உள்ள பிரிவுகளில் சில தரீக்காக்கள் இணைக்கப்பட்டு சுப்ரீம் கவுன்ஸில் ஒப் சூபி தரீக்கா எனும் அமைப்பின் கீழ் இயங்குகின்றன. தௌஹீத் ஜமாஅத்துக்களில் சில ஒன்றிணைந்து ஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தை உருவாக்கியிருக்கின்றது. இயக்கங்களும் தப்லீக் ஜமாஅத்தும் தனித் தனியாக இயங்குகின்றன. இவை அனைத்தும்தான் பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இவை எல்லாவற்றுக்குமான பொதுவான சமய பீடமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இருக்கிறது எனக் கருதப்பட்டு வந்தாலும் கால வோட்டத்தில் பெரும்பாலான முதன்மைத் தரீக்காக்களுக்கும் உலமா சபைக்கும் இடையில் பனிப்போர் ஒன்று நடந்து வந்திருப்பது குளிர்காலம் முடிந்த பின்னர்தான் சமூகத்தில் வெளிப்படையாகியிருக்கிறது. எரிகிற இந்தத் தீயிற்கு எண்ணெய் வார்க்கும் வேலையைத்தான் ஞானசார தேரர் தலைமையிலான கூட்டத்தினர் செய்திருக்கிறார்கள் என்பது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக் கமிஷன் முன் ஞானசார தேரர் முன்வைத்த விடயங்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

இலங்கையிலுள்ள தரீக்காக்களை ஒரு தட்டிலும் மேலே சொல்லப்பட்ட ஏனைய அனைத்து அமைப்புக்களையும் வேறொரு தட்டிலும் வைத்து புதியதொரு சமன்பாட்டை அவர் முன்வைப்பது தெளிவாகத் தெரிகிறது. உலகளாவிய சூபி-ஸலபி வேறுபாட்டை வைத்து இலங்கை முஸ்லிம்களுக்குள்ளால் இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் இரு கூறாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. சூபி தவிர்ந்த அனைத்துத் தரப்பினரும் இலங் கையில் ஏற்கனவே ஊதிப் பெருப்பிக்கப்பட்டிருக்கும் வஹ்ஹாபிகளாக அடையாளப்படுத்தப்பட்டி ருக்கின்றன. சூபி தரப்பிலிருந்து சாட்சியமளித்த காத்தான்குடி சூபி அமைப்பைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடப்படும் மொஹமட் ஸஹ்லான் அவர்கள் தௌஹீத் ஜமாஅத், தப்லீக் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி அனைத்துமே வஹ்ஹாபிஸம் எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் ட்ரஸ்டின் சிமாக் சின்னலெப்பே அவர்கள் சாட்சியமளிக்கும் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிலுள்ளவர்களில் 95 வீதமானவர்கள் வஹ்ஹாபிகள் எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த வாக்கு மூலங்களைப் பார்க்கின்ற பொழுது முஸ்லிம்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் அறிந்து கொள்ளாத ஒரு நிலை இருப்பது தெளிவாகத் தெரிகிறது. வஹ்ஹாபிஸம் என்றால் என்ன, சூபிஸம் என்றால் என்ன, ஸலபுகள் யார், இஹ்வான்கள் யார் என்றெல்லாம் அறியாதவர்களாக முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பது நான்கு மதங்களாலும் செழிப்படைந்துள்ள இந்த நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. இதனால் ஒருவரையொருவர் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதும் அடுத்த வரை குற்றஞ்சாட்டுவதும் அதிகரித்து, சமூகம் தனக்குள்ளே சண்டை பிடித்துக் கொள்ளும் நிலையே உருவாக இடமிருக்கிறது.

இலங்கையில் உள்ள ஏனைய மூன்று மதங்களுக்குள்ளாலும் தனது மதப்பிரிவினையை தேசியப் பிரச்சினையாக்குகின்ற மோசமான பண்பாட்டைக் காண முடிவதில்லை. தமக்குள் அவை சாந்தமான போக்கினையே கடைப்பிடிக்கின்றன. சாந்தி மார்க்கம் மட்டும் இவற்றிலிருந்து விலகி சண்டையிலும் சச்சரவிலும் மூழ்கிப் போவது ஏனைய சக சமயங்களை விட தனது மதத்தைத் தாழ்த்திக் கொள்ளும் நிலையையே உருவாக்கும். அத்தோடு தமது சமயச் சண்டைகளிலேயே ஆழ இறங்கியதன் பின்னர் நாட்டின் அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் இவர்கள் அந்நியமாக்கப்படும் சூழல்கள் எழ முடியும்.

எனவே எனது தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது என்று கதை அளப்பதை விட்டு விட்டு தற்போதைய சூழலில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பை வழங்குவதற்காக முஸ்லிம் சமூகம் ஒன்றித்துப் பயணிப்பது நாட்டை வளப்படுத்தும் பணியில் முக்கியமானது. கடந்த காலச் சமூகத்தை வைத்து முஸ்லிம் சமூகம் பெருமைப்பட்டுக் கொள்வது போல எதிர்கால முஸ்லிம் சமூகமும் பெருமைப்பட வேண்டுமானால் நாட்டின் நலன் கருதி முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முன்வருவது காலத்தின் கட்டாயமாகும். இதற்காக முஸ்லிம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தமது வேறுபாடுகளை மறந்து இந்த நாட்டின் செழுமைக்கு வளம் சேர்க்கும் மதமாக இஸ்லாத்தையும் பங்களிப்புச் செய்ய வைப்பதில் தான் தேசம் தொடர்பான எதிர்காலச் சந்ததியின் எதிர்பார்ப்புக்கள் தங்கியிருக்கின்றன.

ஒவ்வொரு தரப்புக்கும் பிறிதொரு தரப்பிலிருந்து குற்றங்கள் நிகழ்ந்திருக்க முடியும். வேறு வேறு நோக்கத்தில் பிளவுபட்டு யுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கே பகை மறப்புக் காலம் இருக்கும் பொழுது ஒரே நோக்கில் இயங்குகின்ற தரப்புக்கள் தம்மிடையே பகை மறப்புக்கான சந்தர்ப்பம் ஒன்றை உருவாக்கிக் கொள்வது ஒன்றும் சிரமமானதல்ல. வேறு நோக்கங்கள் ஏதும் யாருக்கும் இல்லையென்றால் அவர்களால் இந்த உடன்பாட்டுக்கு நிச்சயமாக வர முடியும். அல்லது தத்தமது பிரச்சினைகள் தான் முக்கியம் என்றிருந்தால் நாட்டைப் பற்றிச் சிந்திப்பதில் இருந்து அவர்கள் விலகிச் செல்ல முடியும். அது நாட்டுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் பரவியிருக்கும் பிரதான சமயமொன்றுக்கும் செய்கின்ற நிந்தனையாக அமையும்.

கொரோனாவுக்குப் பின்னரான புதிய இயல்பு பல மாற்றங்களை உலகில் கொண்டு வந்திருக்கிறது. இலங்கை மக்களுக்கும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முஸ்லிம் சமூகம் பங்களிப்புச் செய்ய முடியும்.

About the author

Administrator

Leave a Comment