Features அரசியல்

8 ஆண்டு கால பழிச் சொல்லுக்கு சமூகத்தின் கூட்டுப் பதில் என்ன?

Written by Administrator
  • மாலிக் பத்ரி

தம்புள்ளை கைரியா பள்ளிவாயல் விவகாரம் சர்ச்சைப்படுத்தப்பட்டது முதல் இனத் தேசியத்தின் நான்காம் அலை எகிறி எழுந்தது. அன்றிலிருந்து ஞானசார தேரர் முஸ்லிம் சமூகம், இஸ்லாம், சிவில் நிறுவனங்கள், இஸ்லாமிய அமைப்புகள் என்பன தொடர்பாக பல்வேறு பழிச் சொற்களையும் அபாண்டங்களையும் அவிழ்த்து வந்தார். இறுதியாக ஜாமிஆ நளீமிய்யா குறித்து இடக்கு முடக்கான சில குற்றச் சாட்டுக்களை அடுக்குகின்றார்.

கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு தேர்தல்கள் நடந்துள்ளன. தேர்தல் நெருங்கும் காலத்திலேயே பொதுவாக முஸ்லிம் சமூகத்தை நோக்கிய இனவாதக் குற்றச்சாட்டுக்கள் திடுமென பரப்பப்படுகின்றது. தேரருக்குப் பின்னால் அரசியல்வாதிகள் இருப்பதாகவும் அவரை இயக்குகின்ற சில மறைகரங்கள் செயற்படுவதாகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. எது எவ்வாறிருப்பினும் தேரரின் ஆதாரமற்ற அடிப்படைகளற்ற அத்தனை அபவாதங்களும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானவை என்பதை நாம் அனைவரும் மனங்கொள்ள வேண்டும்.

குர்ஆன் வன்முறையைத் தூண்டுகின்றது எனத் தொடங்கி முஸ்லிம் தனியார் சட்டம், நிகாப், மதமாற்றம், பாடசாலை இஸ்லாம் பாடப் புத்தகம், ஹலால் விவகாரம், மாடறுப்பு என உணர்ச்சிபூர்வமான பல விடயங்கள் குறித்தும் அவர் அடுக்கும் அபாண்டங்கள் அப்பழுக்கற்றவை. தென்கிழக்குப் பல்கலைக் கழகம், ஜாமிஆ நளீமிய்யா, Bcas, அஹதிய்யா பாடசாலைகள், அறபுக் கல்லூரிகள், குர்ஆன் பள்ளிக்கூடங்கள் என்று ஞானசாரரின் கட்டுக் கதைகள் எவ்வற்றையும் விட்டு வைக்கவில்லை.

இலங்கையில் செயல்படும் அனைத்து தஃவா சார் ஜமாஅத்களும் அவரது கடும் குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி வந்துள்ளன. ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பின்னர் பயங்கரவாதி ஸஹ்ரான் தலைமை வகித்த தேசிய தவ்ஹீத் ஜமாத் மட்டுமன்றி, நாட்டில் தவ்ஹீத் என்ற பெயரில் இயங்கும் அனைத்து ஜமாஅத்களும் தேரரினால் வஹ்ஹாப்வாதிகள் என்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் மீது தீவிரவாதம், அடிப்படைவாதம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை தேரர் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றார்.

கடந்த ஆண்டில் தேரரின் குற்றச்சாட்டில் வஹ்ஹாப் வாதம் பிரதான பேசுபொருளாக இருந்தது. பின்னர் அக்குற்றச்சாட்டுக்கள் இன்று வரை தொடர்கின்ற நிலையில், தேரரின் அபவாதம் முஸ்லிம் சமூகத்திலுள்ள அனைத்து ஜமாஅத்கள் மீதும் பற்றிப் படர்கின்றன. இல்லாத, பொல்லாத சூழ்ச்சிகரமான கதை கட்டுவதில் வல்லமை பொருந்திய தேரர், அவரைச் சூழவிருந்து சொல்லிக் கொடுக்கப்படுவதை ஊடகங்கள் முன்னால் அள்ளித் தெளிக்கிறார்.

கடந்த வாரம் ஈஸ்டர் குண்டுவெடிப்பு விசாரணை குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சிய மளித்த அவர், வஹ்ஹாப்வாதத்தை மீண்டும் சண்டைக்கு இழுக்கிறார். அவரது வாக்கு மூலம் முழுவதும் கடந்த வார ஐலண்ட் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அதில், கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்தையும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தேரரின் குற்றச்சாட்டுக்கு இலக்கான ஒரே அமைப்பு தவ்ஹீத் இயக்கங்களே என்று ஏனையோர் அமைதி காத்த நிலையில், தேரரின் சுட்டு விரல் சமூகத்திலுள்ள பிற அமைப்புக்கள் மீதும் ஒவ்வொன்றாக நீண்டது. சுமார் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் ஜம்இய்யதுல் உலமா மற்றும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி, தப்லீக் ஜமாஅத், ஜமாஅதுஸ் ஸலாமா தொடர்பிலும் அவர் பல்வேறு தீவிரவாத குற்றச்சாட்டுக்களை ஊடகங்கள் முன்னால் தோன்றி ஒப்புவிக்கின்றார்.

இந்த வரிசையில் இறுதியாக அவரது கவனம் நளீமிய்யாவை நோக்கித் திரும்பியுள்ளது. அந்நிறுவனம் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க சிந்தனைகளைப் போதிப்பதாகவும் அது சிந்தனா ரீதியான ஜிஹாத் என்றும் அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் அவர் உளறுகின்றார். உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர் அவர்களும் அவரது மிஷ்காத் நிறுவனமும் கூட புதிய தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

ஏலவே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கலாக இன்னும் பல அபாண்டங்களை தேரர் சுமத்துவது மிகவும் ஆபத்தானது. பள்ளிவாயல்களில் தீவிரவாதம் ஊட்டப்படுகின்றது எனவும் மத்ரஸாக்களில் தீவிரவாதம் போதிக்கப்படுகின்றது எனவும் அவர் கூறி வருகிறார். அதைத் தாண்டி சிங்களவர்கள் மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் எனவும் புனித இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன எனவும் பெரும்பான்மை மக்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முஸ்லிம்கள் சூழ்ச்சி செய்கிறார்கள் எனவும் அவரது குற்றச்சாட்டுக்களின் பட்டியல் நீண்டு செல்கின்றது.

கடந்த 8 ஆண்டுகளாக இக்குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களுக்கு முன்னால் ஒப்புவிக்கப்பட்டு அவை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் வெற்றிகரமாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கென வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ள ஊடகங்களை நாம் அறிவோம். கடந்த எட்டாண்டுகளில் muslimophobia பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்று, மியன்மார் மற்றும் இந்தியா போன்று இங்கும் நிலைகொண்டு விட்டது.

துரதிஷ்டமாக ஈஸ்டர் தாக்குதல் ஞானசாரரின் அபவாதங்களை பெரும்பான்மை மக்களின் உள்ளங்களில் உண்மைகள் என்று உணர்த்தி விட்டன. பெரும்பான்மை மக்களின் இந்தப் பிழையான நம்பிக்கையை நீக்குதல் என்பது இனிச் சற்றுக் கடினமானது. இந்தக் கட்டுரை எழுதப்படும் நோக்கத்திற்கு இப்போது நான் வருகிறேன்.

முக்கிய தனிநபர்கள், நிறுவனங்கள், முஸ்லிம் சமூகம், இஸ்லாம் என்று பார்த்தால் எதனையும் விட்டு வைக்காத வகையில் அத்தனை பேர் மீதும் தேரரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் நீண்டு செல்கின்றன. இதன் மூலம் முழு மொத்த இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீதும் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு சிங்களவர்களின் ஆழ் மனதில் ஆழ ஊன்றப்படுகின்றன.

ஆனால், இவற்றுக்கு யாரும் சிங்கள சமூகத்திற்குத் தெளிவுபடுத்தும் வகையில் சமூக ரீதியில் கூட்டு பதிலிறுப்பொன்றை (Collective Response) வழங்க இற்றைவரை முன்வரவில்லை. இதற்கான காரணம் என்ன? இன்றைய நாட்களில் இது மிகுந்த முக்கியம் வாய்ந்த கேள்வியாகும்.

ஞானசாரர் கட்டவிழ்க்கும் கட்டுக்கதைகள் பெரும்பான்மை சமூகத்தில் வேகமாகப் பரவி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதேவேளை, அக்குற்றச்சாட்டுக்கள் காட்டுத் தீ போல் விரைவாக சந்தைப்படுத்தப்படுகின்றன. இத்தகைய கொதிப்பான சூழலில் நாம் செய்ய வேண்டியது என்ன என்ற விடயத்தில் நிறுவனங்களும் தனிநபர்களும் குழம்பிப் போயுள்ளனர்.

இதுவரை இதற்கு பொறுப்பு வாய்ந்த முறையில் தேசிய ரீதியாக, ஒருங்கிணைந்த வகையில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து மறுப்புக் கூற வில்லை. அவ்வாறாயின், இதன் அர்த்தம் என்ன? அனைத்து ஜமாஅத்களும் ஒன்றிணைந்து உடனுக்குடன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சூழ்ச்சிகரமான இந்த அபாண்டங்களுக்கு பதில் வழங்கியிருக்க வேண்டும். அதைத் தவிர வேறெந்த மார்க்கமும் நமக்கு முன்னால் இல்லை.

குறைந்தபட்சம் தனிப்பட்ட நிறுவனங்கள் கூட தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக நிராகரிக்கவில்லை. இது எதிர்கால பேராபத்தின் அபாயச் சங்காகவே பார்க்கப்பட வேண்டும். ஜவாப்தாரிகள் வேறு எங்கோ விவாதத்தை திசைமாற்றி காலத்தை வீணடிக்கி றார்கள் போலவே தோன்றுகிறது.

8 ஆண்டு கால பழிச் சொற்களுக்கு பதில் சொல்ல திராணியற்றவர்களாய் நாம் இருப்ப தேன்? இன்னொன்று சூபிகளுடனான உள்ளகக் கலந்துரையாடலை உடனடியாகத் தொடங்குவதும் தவிர்க்க முடியாதது. இதிலிருந்து நாம் நழுவிப் போவதேன்?

About the author

Administrator

Leave a Comment