பள்ளிவாயலடைப்பும் வாயடைப்பும்

53

கொரோனாவின் இரண்டாவது அலைக்கு வாய்ப்பில்லை என சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்புக்களும் அறிக்கை விடுத்து வருகின்றன. கொரோனாவை வெற்றி கண்ட மூன்று நாடுகளில் ஒன்றாக இலங்கை பேர் பெற்றிருக்கிறது. படிப்படியாக நிலைமைகள் வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்களும் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. ஸல்லூ பீ புயூத்திக்கும் நிறைவுக்கு வந்திருக்கிறது.

வணக்கஸ்தலங்களைத் திறப்பதற்கான அனுமதி 12 ஆம் திகதி வழங்கப்பட்ட போதும் 13 ஆம் திகதியே முஸ்லிம் பள்ளிவாசல்கள் நிபந்தனையுடன் திறக்கப்பட்டன. அப்போது விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை சமூகம் ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் ஏன் இப்படியான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன என்பதை சமூகம் சமூக இடைவெளியைப் பேணி எள்ளிநகையாடிக் கொண்டிருந்தது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் அன்றாட நடவடிக்கைகளை வழமைபோன்று செய்யத் தொடங்கியவர்கள் பள்ளிவாயலுக்கு வருவதில் மட்டும் பல அசௌகரியங்களை சந்திக்க நேர்ந்தது. பள்ளிவாயல்களுக்கு வருபவர்கள் முஸல்லா எடுத்து வர வேண்டும் என்று விதிக்கப்பட்டதனால் ஏற்பட்ட அசௌகரியங்கள் ஏராளம். கொழும்பிலே புறக்கோட்டைப் பகுதிகளில் தேவைகளை நிறைவேற்றுவதற்காகச் சென்றவர்கள் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காகச் சென்ற பொழுது முஸல்லா இல்லை என்ற காரணத்துக்காக திருப்பி அனுப்ப நேர்ந்திருக்கிறது. பல மைல்கள் கடந்து பஸ்களில் தான் வருவதே கஷ்டமாக இருக்கின்ற நிலையில் முஸல்லாவை இவர்கள் எப்படிச் சுமந்து வருவது ? தூர இருந்து வருபவர்கள் கொழும்பிலும் தொழ முடியாது, இரு வக்துக்களுக்கிடையில் வீடு போயும் சேர முடியாது என்ற இக்கட்டான நிலை.

அத்தோடு 51 ஆவது நபரின் நிலை தான் பரிதாபம். நாடு படிப்படியாகத் திறக்கப்படும் போது திருமண வைபவங்களுக்கு 100 பேர், தேர்தல் கூட்டங்களில் 100 பேர், டியூசன் வகுப்புக்களில் 100 பேர் என எண்ணிக்கை வரையறுக்கப்பட்ட போது ஏன் வணக்கஸ்தலங்களில் மட்டும் 50 பேர் ? பள்ளிவாசலுக்கு வருபவர்கள் முஸல்லா எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்றால் டியூசன் செல்பவர்கள் கதிரை மேசை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டுமா, திருமணத்துக்குச் செல்பவர்கள் பீங்கான கோப்பைகள் எடுத்துச் செல்ல வேண்டுமா என்றெல்லாம் நல்லடியார்கள் மாஸ்கைப் பிய்த்து யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா காலப்பிரிவில் எந்த அலுவலகத்துக்குச் சென்றாலும் அங்காடிக்குச் சென்றாலும் அங்கு நுழையு முன்னர் அவர்கள் கைகளைக் கழுவிவிட்டுத் தான் செல்ல வேண்டும். ஆனால் பள்ளிவாசலுக்கு வருபவர்கள் வீடுகளிலேயே வுழு செய்து கொண்டு வர வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. வுழுவின் ஆரம்பமே கைகழுவுவது தான். கைகளை வீட்டில் கழுவிக் கொண்டு செல்ல வேண்டிய இடமெல்லாம் சென்று தொட வேண்டிய இடங்களையெல்லாம் தொட்டு பள்ளிக்குச் செல்பவர்கள் எப்படி கொரோனா பரவுவதைத் தடுக்கப் போகிறார்கள் ?

சமூக இடைவெளி பேணும் விதிமுறை தான் சுவாரசியமானது. வாகனத்தில் பக்கத்தில் பக்கத்தில் ஒரே சீட்டில் மூவர் அமர்ந்து பள்ளிவாசலுக்குச் செல்கிறார்கள். மோட்டார் பைக்கில் இருவர் இருவராக நெருக்கமாக அமர்ந்து பள்ளிக்கு வருகிறார்கள். பள்ளிக்குள் நுழைந்தததும் சமூக இடைவெளி பேணி தூரத் தூரவாக இருந்து தொழுது விட்டு மீண்டும் வந்த வாகனத்திலேயே வந்த மோட்டார் சைக்கிளிலேயே திரும்பிச் செல்கிறார்கள்.

அது சரி, சமூகம் எள்ளிநகையாடும் அளவுக்கு இந்த மாதிரியான முடிவுகளை எடுத்தது யார் ? அரசாங்கமா ? இது பள்ளிவாசல்களுக்கு ஏதாவது விஷேட சட்டம் விதிக்கப்பட வேண்டும் என்பதற்காக விதித்தார்களா ? அல்லது கொரோனாவைக் கட்டுப்படுத்துவது இப்படித் தான் என்று அரசாங்கம் தீர்மானித்திருக்கிறதா ? அரசாங்கம் தீர்மானித்திருந்தால் சில வேளை அது சரியாக இருக்கலாம். மண்ணுக்கடியிலிருந்து கொரோனா வைரஸ் உயிரியல் ஆயுதமாக வெடித்துப் பரவும் என்ற நிலைப்பாட்டைப் போல இதனையும் எடுத்துக் கொள்ளலாம்.

அப்படி இல்லாமல் முஸ்லிம் விவகாரங்கள் தொடர்பில் அரசு கலந்தாலோசிப்பவர்கள் இந்த ஐடியாவைக் கொடுத்தார்களா ? அரசாங்கத்துக்கு ஆலோசனை சொல்ல முஸ்லிம் மத விவகார ஒருங்கிணைப்பாளர், முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம், முஸ்லிம் மத உயர் பீடங்கள் எல்லாம் இருக்கையில் யாரிடமும் கலந்தோலிக்கப்படாமல் இந்தத் தீர்மானங்கள் இராணுவத்தனமாக எடுக்கப்பட்டிருக்கிறதா ?

எது எப்படி என்றாலும் கொரோனாவுக்காக பள்ளிவாயலடைப்புத் தொடர்பில் இவர்கள் அனைவருமே வாயடைத்துப் போயிரு்பபார்கள் என்று தான் பரவலாகப் பேசப்படுகிறது. ஒன்றில் யாருக்குமே வாயைத் திறப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்காது. அல்லது வாயையே திறக்கக் கூடாது என்ற முடிவில் ஆலோசனை வேண்டப்பட்டவர்கள் இருந்திருப்பார்கள். எந்த வகையில் பார்த்தாலும் முஸ்லிம் தலைமைகளும் அதிகார பீடங்களும் கையறு நிலையில் இருப்பதை சமூகம் தெளிவாக விளங்கிக் கொண்டது.

அதனை இனி எந்த மாஸ்க் போட்டும் தடுக்க முடியாது.