பொய்ச்சாட்சியம் சொல்பவர்கள் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்

9

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் மீள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பலரும் மீளவும் விசாரணக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். இம்முறைய விசாரணைகளில் இதுவரை மூன்று தடவைகள் வாக்கு மூலம் அளித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் பல்வேறு தரப்புக்களில் இருந்தும் மறுப்புக்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன.

கட்டார் பிரஜையான கலாநிதி யூசுப் கர்ளாவியை எகிப்திய பிரஜை என ஆணைக்குழு முன்னால் அவர் வழங்கிய தகவலை மறுத்து எகிப்திய தூதுவரகம் அறி்க்கை வெளியிட்டிருந்தது. துருக்கி அரசாங்கத்தின் உதவியுடனும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வழிகாட்டலுடனும் இலங்கையில் தீவிரவாதத்தைப் போதிக்கும் அரபு சர்வதேச பாடசாலைகளின் வலையமைப்பொன்று செயற்பட்டு வருவதாகத் தெரிவித்ததை துருக்கி தூதரகம் மறுத்திருக்கிறது.

கலாநிதி யூசுப் கர்ளாவியை சந்தித்தமை பற்றிக் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் மறுத்துரைத்திருக்கிறார். 2013 விஜயத்தின் போது நாம் கலாநிதி யூசுப் கர்ளாவியை இரகசியமாகச் சந்திக்கவில்லை. அடிப்படைவாதம் பற்றி நாம் கலந்துரையாடவில்லை. ஆணைக்குழு முன்னிலையில் ஞானசார தேரர் எமது சந்திப்பு பற்றி வழங்கியுள்ள சாட்சியம் அடிப்படையற்றது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தேசிய சூறா சபை தொடர்பில் ஞானசார தேரர் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேசிய சூறா சபையின் பொதுச் செயலாளர் மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ், ஞானசார தேரர் தேசிய சூறா சபை பற்றி பிழையான, பொய்யான, தவறாக வழிநடத்தும் களங்கம் ஏற்படுத்தும் குற்றச் சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜாமிய நளீமியா கலாபீடத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள மறுப்பறிக்கையில் இந்தக் குற்றச் சாட்டுக்கள் அனைத்தையுமே மறுப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

பௌத்த பிக்குவான ஞானசார தேரர் வழங்கிய சாட்சியம் இப்படிப் பல தரப்பினாலும் பொய்யென மறுக்கப்பட்டு வருகிறது. ஆணைக்குழு முன் சாட்சியமளித்து விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஞானசார தேரர் குற்றஞ்சாட்டுகின்ற அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் விசாரணைக்கு அழைத்து உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளின் பின்னர் எடுக்கப்படப் போகும் முடிவுகள் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போவதாக இருப்பதனால் பலராலும் பொய்யென மறுக்கப்பட்டு வரும் ஞானசேர தேரரின் சாட்சியம் தொடர்பில் உரிய தரப்பினரிடம் விசாரித்தறிந்து கொள்வதே உண்மையான நேர்மையான தீர்மானமெடுப்பதற்கு வழியமைக்கும்.