குழுப்பக் கூடாத சிவில் – மிலிட்டரி அதிகார சமநிலை

12
  • தயான் ஜயதிலக்க

இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் மற்றும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் விரைவுபடுத்தப்படுவதற்கு அதிக சாத்தியமுள்ள விடயமாகக் கருதப்படுவது 70 வருடங்களாகப் பேணப்பட்டு வந்த இலங்கையின் சிவில் – மிலிட்டரி சமநிலையானது இராணுவத்திற்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் மாற்றத்திற்கு உள்ளாகும் என்ற விடயமாகும்.

புதிய ஜனாதிபதி கொரோனா காலப் பிரிவில் இதற்காக வேண்டி பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவ்விடயம் தொடர்பாகவும் அதிலுள்ள அரசியல் தொடர்பாகவும் போதுமானளவு கலந்துரையாடல்கள் நாட்டில் இன்னும் ஆரம்பமாகவில்லை. எனவே இக்கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கான சில கருத்துக்கள் மேலோங்கச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தலுக்கு முன்னர் கூட இராணுவ உயர் அதிகாரிகள் அரசாங்க நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு ஜனாதிபதியால் நியமிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

அரசாங்க வங்கி மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளின் முன்னர் ஜனாதிபதியால் கோபத்துடன் மேற்கொள்ளப்பட்ட உரையின் மூலம் விளங்கியது என்னவெனில், அரச வங்கித் துறையில் காணப்படும் பொடுபோக்கான மற்றும் மந்தகதியான நிலைமையானது தனது தனிப்பட்ட அரசியலை மேம்படுத்துவதற்கான பிரதானமான தடையாகக் கருதுகின்றார் என்பதாகும். இது போலவே அரசின் ஏனைய நிறுவனங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி இவ்வாறே கருதலாம் என்பதும் புதுமையானதொரு விடயமல்ல.

மூன்று கேள்விகள்

இங்கு மூன்று கேள்விகள் ஒன்றாகக் கலந்து காணப்படுகின்றன. முதலாது ஜனாதிபதி அரசாங்க சேவை மற்றும் இராணுவம் இரண்டையும் ஒப்பிட்டு இராணுவ கண்ணோட்டத்துடன் அரச சேவையைப் பார்க்கும் நிலையொன்று காணப்படுகின்றது. இராணுவம் மற்றும் அரச சேவை என்பன வேறு வேறு கலாச்சாராங்களைக் கொண்டன என்ற விடயத்தை ஜனாதிபதி புரிந்துகொள்ளவில்லை போல் தெரிகின்றது. இது இராணுவ அதிகாரிகளிடம் காணப்படும் ஒரு அடையாளமாகும்.

இராணுவ சேவை மற்றும் அரச சேவை இரண்டுக்கும் இடையில் அண்மையில் பிரச்சினைகள் தோன்றுவதற்கும் சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. அதேபோல் அரச வங்கிகள் மற்றும் மத்திய வங்கி என்பனவற்றை நிர்வகிப்பதற்கும் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கு சாத்தியங்கள் காணப்படுகின்றன. மத்திய வங்கி தொடர்பாக எவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறானதொரு முடிவெடுக்கப்படக் கூடாது என்பது தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள ஒருவரோ அல்லது பொருளாதார நிபுணர் ஒருவரோ ஜனாதிபதியிடம் கூறாமல் இருப்பதற்கே அதிக சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.

ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்திருக்கும் இந்த இராணுவமயமாக்கல் செயற்பாட்டிற்கு மத்திய வங்கி ஒருபோதும் உட்டபடுத்தக் கூடாது என்பதனை பிரஜைகள் என்ற வகையில் நாம் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் அனைத்து அரசாங்கங்களினதும் அரசியல் தலையீடு காரணமாக நிறுவனம் என்ற வகையில் பாதிக்கப்பட்ட மத்திய வங்கியானது அதன் பாதிப்புக் காரணமாக இராணுவமயமாக்கலுக்கு உட்படலாம் என்ற விடயத்தை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.

பிழையான புரிதல்.

இரண்டாவது காரணம் ஜனாதிபதியிடம் காணப்படும் அவசரமானது ஜனாதிபதிப் பதவி மற்றும் அதன் அதிகாரம் தொடர்பாக பிழையான புரிதல் காரணமாகவே ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்திலின் போதும் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னரும் கூறுகின்ற விடயங்களின் மூலம் தெரியவருவது என்னவெனில், தன்னை நியமித்திருப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவிக்கு என்ற பிழையான புரிதலாகும். அவரது தேர்தல் வாக்குறுதிகள் மூலம் கூறப்பட்ட அதிகமான விடயங்கள் கூட 19வது திருத்தத்தின் பின்னரான ஜனாதிபதியின் அதிகாரம் மூலம் நிறைவேற்றப்பட முடியாத விடயங்களாகும்.

தற்போதுள்ள அரசியல் யாப்பின்படி ஜனாதிபதிக்கு தனது விருப்பத்தின்படி மாத்திரம் தனக்குக் கீழ் இருக்கும் நிரந்தரச் செயலாளர்களை மாற்றுவது ஜனாதிபதி விசேட செயலணிகள் மூலம் அரசாங்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவது போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது.

ஏனெனில், ஜனாதிபதியினை விட அதிகாரம் கூடிய அமைச்சரவை மற்றும் அமைச்சர்கள் அவர்களைக் கட்டுப்படுத்தும் பாராளுமன்றமும் இருக்கின்றது. தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு இருந்தாலும் தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்றமும் புதிய பிரதமரும் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்படும். அடுத்ததாக பிரதமராக நியமிக்கப்பட இருப்பவர் தனது சகோதரர் என்றாலும் பிரதமர் மற்றும் பிரதமர் தலைமை வழங்கும் அமைச்சரவையை மேலோங்கிச் செல்லும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்பதாகும்.

தன்னால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சிவில் நிர்வாகத்தின் உதவி கிடைக்காமை தொடர்பான ஜனாதிபதியின் பொறுமையின்மைக்கு ஜனாதிபதிக்கு தனது அதிகாரம் தொடர்பாகக் காணப்படும் இந்தப் பிழையான புரிதலே காரணமாகும்.

சிவில் – மிலிட்டரி சமநிலை

மூன்றாவது காரணம் ஒன்றும் காணப்படுகின்றது. இது மேலே கூறப்பட்ட இரண்டு காரணங்களையும் விட பாதிப்புக் கூடியது. அதாவது இலங்கையின் அரசாங்க முறைமையில் 1948 முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிவில்-மிலிட்டரி சமநிலையை தனது விருப்பத்திற்கேற்றவாறு மாற்றுவதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதும் அதன் மூலம் ஏற்படவுள்ள பாதிப்புக்களுமாகும்.

ஜனநாயக அரசியல் முறைமையொன்றில் எழுதப்படாத ஆனால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விதிதான் இராணுவமானது சிவில் அரசியலுக்கும் சிவில் அரசாங்க சேவையினதும் கட்டுப்பாட்டில் அதாவது இரண்டாவது நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதாகும். அரசியல் விஞ்ஞானத்தில் இவ்விடயமானது இராணுவ அதிகாரமானது சிவில் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டிருப்பது (Civilian control of military) என்று கூறப்படு கின்றது. ஆனால் தற்போது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையானது புதிதாக அரசியல் கட்சியுடன் தொடர்புபட்ட ஒரு குழுவினர் மூலம் தனது அதிகாரத்தை நிறுவியுள்ள ஜனாதிபதியொருவர் மூலம் இவ்விடயத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாகும். இது இலங்கையில் தற்போது காணப்படும் அசாதாரண அரசியல் மாற்றமொன்றாகும்.

இவ்விடயத்தை மேலும் விளங்கிக் கொள்வதற்கு இராணுவமானது அரசின் சிவில் நிர்வாக சேவையின் கீழ் காணப்பட வேண்டும் என்ற உடன்பாடானது ஏன் ஏற்பட்டது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நாட்டின் இராணுவமும் பொலிஸாரும் தான் சட்ட ரீதியாக ஆயுதங்களை வைத்திருக்கக் கூடிய அதிகாரம் பொருந்திய ஓரே தரப்பினராகும். துப்பாக்கிகள் மட்டுமின்றி கண்டங்களுக்கு இடையில் ஏவக் கூடிய ஏவுகணைகள் அணு ஆயுதங்கள் பயன்படுத்தக் கூடிய அதிகாரம் காணப்படுவதும் ஒரு நாட்டின் முப்படையினருக்குமாகும்.

இந்த ஆயுதம் தரித்தல் காரணமாகவே ஒரு நாட்டின் இராணுவமானது சட்ட ரீதியாக இறுதியான கட்டுப்பாட்டு உட்பட வேண்டியது சிவில் மக்களுக்கே என்ற அடிப்படையிலாகும். இந்த உடன்பாடுதான் உலகின் பெரும்பாலான நாடுகளினால் நீண்ட நாட்களாகப் பின்பற்றப்பட்டு வருகின்து.

இதற்குச் சமாந்தரமாக பின்பற்றப்பட்டு வரும் இன்னுமொரு அடிப்படைதான் ஆயுதம் தரித்து தற்போது சேவையாற்றும் அல்லது முன்னர் சேவையாற்றியவர்கள் சிவில் நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்தி வைக்கப்பட வேண்டும் என்பதாகும். இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று சிவில் ஊழியர்களாக மாறியவர்களுக்கு ஒரு சில சந்தர்ப்பங்களில் அனுமதி வழங்கப்பட்டு வந்தாலும் இது ஒரு விதியாகவன்றி விதிவிலக்காகவே மேற்கொள்ளப்படுகின்றது. இராணுவ மற்றும் சிவில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தி வைக்கப்படுவது ஜனநாயக அரசியல் முறைமையின் ஒரு அடிப்படையான பண்பாகும். இதனை மீறுவதற்கு சிவில் அரசியல்வாதிகள் கூட சாதாரணமாக விருப்பப்படுவதில்லை.

இன்னுமொரு பிழையான நம்பிக்கை

ஓய்வுபெற்ற அல்லது தற்போது கடமையாற்றும் இராணுவத்தினரை சிவில் சேவைக்கு மேலாக நியமித்து அவர்கள் அமைச்சரவைக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ பொறுப்புக் கூறாமல் நேரடியாக ஜனாதிபதிக்கு பொறுப்புக்கூறும் முறைமையொன்றை ஏற்படுத்துவதன் மூலம் அரசாங்க நிர்வாகத்தை செயல் திறன்மிக்க தாக்கி நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்த முடியும் என்றதொரு கருத்து எமது நாட்டில் தற்போது காணப்படுகின்றது. இந்தக் கருத்தானது “மிலிட்டரி செயல்திறன்” என்ற பிழையான நம்பிக்கை யின் அடிப்படையில் ஏற்பட்டதொரு கருத்தாகும்.

உலகின் அரசியலை ஒப்பிட்டுநோக்கும் போது அது எமக்குக் கற்பிக்கும் பாடம் என்னவென்றால் “மிலிட்டரி செயல்திறன்” என்ற கோட்பாடானது இராணுவ செயல்பாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்பட்டது என்பதுடன் அது சிவில் சேவையில் தோல்வியடைந்ததொரு கோட்பாடு என்பதுவாகும்.

மிலிட்டரியினால் அரச அதிகாரத்தைக்  கைப்பற்றிய எல்லா சந்தர்ப்பங்களிலும் கூறப்பட்ட விடயமானது அரசியல் ஸ்தீரநிலமை, ஊழல் இல்லாமலாக்கல், உண்மைத்தன்மை, ஒழுங்கும் கட்டுப்பாடும், பொருளாதார வளர்ச்சி என்பனவற்றை குறுகிய காலத்தில் ஏற்படுத்துவோம் என்பதாகும். ஆனால் அனைத்து இராணுவ அரசாங்கங்களினதும் பொதுவான அனுபவமானது இரண்டு மூன்றாண்டுகள் செல்லும்போது குறித்த எதிர்பார்ப்புக்கள் கனவுகளாக மாத்திரம் மாற்ற மடைந்ததாகும்.

சிவில்மக்களை இராணுவ ஒழுக்கத்தின் மூலம் ஆட்சிசெய்ய முடியும் என்ற பிழையான நம்பிக்கையுடன் தனது ஆட்சியை ஆரம்பிக்கும் இராணுவ அரசானது சிறிது காலம் சென்ற பின்னர் அவ்வாறு முடியாது என்று விளங்கிக் கொண்ட பின்னர் தமது பயிற்சியின்படி மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும்.

ஊழக்கு எதிராக ஆட்சிக்கு வந்து சிறிது காலத்தின் பின்னர் ஊழக்கு உட்பட்டு தன்னிடம் மாத்திரம் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும். மிலிட்டரி செயல்திறனுக்குப் பதிலாக இராணுவ ஆட்சி இடம்பெறும். இதன் மூலம் மக்களுக்கும் அரசிற்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கும். அரசியல் உறுதிப்பாடன்றி அரசில் குழப்பநிலை ஏற்படும். பல வந்தமாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருந்தாலும் இறுதியில் ஆயுதமின்றிய மக்களின் போராட்டத்திற்கு மத்தியில் அதிகாரத்தை இழக்கும் நிலைக்கு உட்படும். எகிப்து, ஈராக், லிபியா, பாகிஸ்தான், பங்களாதேசம், பர்மா, இந்தோனேசியா, தாய்லாந்து, தென்கொரியா, பிலிப்பைன்ஸ், சிலி, ஆர்ஜென்டினா, நிகரகுவா, எல்சல்வோதர், நைஜீரியா, சுடான்… இதுபோன்று இன்னும் பல நாடுகளைக் குறிப்பிட முடியும். மேற்கூறிய அனைத்து நாடுகளிலும் மேலே குறிப்பிட்டது போன்ற நிலைமையே ஏற்பட்டது.

ஜனநாயக ஆட்சி முறையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இந்தக் குறைபாடுகள் எமது நாட்டில் மீண்டும் மீண்டும் பிரதிபலித்துள்ளன. முக்கியமான விடயம் குறித்த குறைபாடுகளிலிருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்றி செயல்திறன் மிக்க ஊழலற்ற பலமான ஜனநாயக ஆட்சி முறையொன்றைக் கட்டியெழுப்புவதாகும். புதிய நாடொன்றைக் கட்டியெழுப்ப வேண்டுமென புதிய ஜனாதிபதி அவர்களுக்குத் தேவையொன்றிருந்தால் அவரது அரசியல் பார்வை இவ்வாறானதாகத் தான் அமைய வேண்டும்.

நன்றி: ராவய,

தமிழில் – நூரா