Features சமூகம்

கிழக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சினை

Written by Administrator

கிழக்கு மாகாணத்தில் புனித பிரதேசம், தொல்லியல் சின்னம் என்ற பெயர்களில் சிறுபான்மை மக்களின் நிலங்கள் தொடர்ந்தும் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட செயலணியில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த எவரும் உள்ளடக்கப்படவில்லை.

அதேவேளை, காணி அமைச்சு அதன் செயலாளர் ஆகியோரை விலக்கி வைத்து விட்டு ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இச்செயலணி உருவாக்கப்பட்டுள்ளது சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் பொத்துவில் பிரதேச முஸ்லிம்களுக்குச் சொந்தமாக இருந்த காணிகள் முஹுது விஹாரையின் புனிதப் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருவதாக பொத்துவில் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வடக்குக் கிழக்கில் யுத்த காலத்தில் இராணுவம் மற்றும் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் பல்லாயிரம் ஹெக்டயர் நிலங்கள் சிக்கின. அவற்றில் முஸ்லிம்களின் நிலங்களும் அடங்கும். முஸ்லிம் சிறுபான்மை மக்கள் மூன்று வகையான நிலப்பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இராணுவத்தால் படை முகாம்களை உருவாக்குவதற்கு பரிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் இதுவரை அவர்களிடம் மீள ஒப்படைக்கப்படவில்லை. இதற்கு இம்மாகாணத் திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் பல உதாரணங்கள் உள்ளன.

விடுதலைப் புலிகளால் கட்டுப்படுத்தப்பட்டு போருக்குப் பின்னர் சக சிறு பான்மை மக்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட முஸ்லிம்களின் நிலங்களும் இதுவரை முழுமையாக மீளப் பெறப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இத்தகைய நிலங்கள் சுமார் 3000 ஏக்கர் உள்ள  தென்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சமீபகாலமாக புராதன சின்னங்கள் என்ற பெயரிலும் தொல்பொருளியல் ஆய்வு என்ற வகையிலும் முஸ்லிம்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பிரதான மூன்று வகைகளில் முஸ்லிம்கள் நிலங்களை இழந்துள்ளனர்; இழந்து வருகின்றனர்.

இதற்கு மேலதிகமாக முஸ்லிம்கள் கவனம் கொள்ளாத ஒரு பக்கமும் உள்ளது இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். பிரதேச செயலக பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் அளவிலும் முஸ்லிம்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதாவது முஸ்லிம்களின் இன விகிதாசாரம் புறமொதுக் கப்பட்டுள்ளது. அறுதிப் பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அவர்களது விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலம் ஒதுக்கப்படவில்லை. மறுதலையாக அறுதிச் சிறுபான்மையாக பெரும்பான்மை இனம் வாழும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அவர்களது சனத்தொகை விகிதாசாரத்தை விட அதிகமான நிலங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன. அம்பாறை மாவட்டம் இதற்குச் சிறந்த உதாரணமாகும்.

சுமார் 75,000 முஸ்லிம்களைக் கொண்ட சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்கு 132.8 சதுர கி.மீ. நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பொத்துவிலில் உள்ள லஹுகல பிரதேச செயலகப் பிரிவுக்கு 850 சதுர கி.மீ. நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் அங்கு வாழும் சிங்களவர்களின் தொகை வெறும் 9000 ஆகும்.

இத்தகைய கொதிப்பான ஒரு சூழலிலேயே கிழக்கில் சிறுபான்மை பிரதிநிதிகள் இல்லாத, முற்று முழுதாக சிங்களப் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் தொல்லியல் காப்புத் தொடர்பான ஜனாதிபதி செயலணி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இது குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்ற விமர்சனமும் இன்னொரு பக்கம் முன்வைக்கப்படுகின்றது.

மனித இன வரலாற்றில் ஏகாதிபத்தியம் நிலத்தின் மீதான ஆக்கிரமிப்பாகவே தொடங்கியது. பலமானவன் சரியானவன் என்ற காட்டுச் சட்டம் அரசோச்சிய, நாகரிகமடையாத முகங்களை பின்நோக்கிப் பார்க்கும்போது இதுவே உண்மை எனத் தோன்றும். மன்னர்கள் குறுநில சக்கரவர்த்திகள் போன்ற ஆதிக்க சக்திகள் எல்லோரும் நிலச் சுவாந்தர்களாகவே இருந்துள்ளனர். நிலவுடமைச் சமூகங்களில் இது தெட்டத் தெளிவான உண்மை.

ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுமம் செறிவாக வாழும் பிராந்தியத்தில் அவர்களின் அரசியல் பலத்தைக் காயடிப்ப தற்கும் சமூகப் பலத்தை சிதறடிப்பதற்கும் வரலாறு நெடுகிலும் ஏகாதிபத்திய அரசுகள் கையாண்டு வரும் தந்திரோபாயங்களில் ஒன்றுதான் அம்மக்கள் குழுமத்திற்கு மத்தியில் இன்னோர் இனத்தைக் கொண்டு குடியேற்றுவதாகும். இத்தகைய நில ஆக்கிரமிப்புக்கு அரசியல் அதிகாரமும் இராணுவப் பலமும் பிரயோகிக்கப்படுவது வழக்கம். இதுதான் இப்போது கிழக்கிலும் நடைபெறுகின்றதோ என்ற அச்சம் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பரவி வருவது இயல்பானதுதான். இந்த அச்சத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

About the author

Administrator

Leave a Comment