Features சர்வதேசம்

கொரோனாவுக்குப் பிந்திய உலக பொருளாதாரம்

Written by Administrator
  • Dr. றவூப் ஸெய்ன் (Ph.D)

நவீன உலகில் பூகோளமயமாதல் எனும் யதார்த்தம் கொரோனாவினால் கேள்விக்குள்ளாகி வருகின்றது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் திடுக்கிடச் செய்யும் அளவுக்கு நிகழும் கொரோனா மரணங்களும் தொற்றுக்களும் இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகின்றது. விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளமையால் நாடுகளுக்கிடையிலான ஏற்றுமதி இறக்குமதி ஸ்தம்பித்துள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சரக்குக் கப்பல்கள் நகர்கின்றன.

உற்பத்தித் துறையில் பாரிய தேக்கம் ஏற்பட்டுள்ளதோடு, விநியோகத்திலும் பெரும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. சில நாடுகள் உற்பத்தியை குறைத்துள்ளன. குறிப்பாக, ஒபெக் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை பல மில்லியன் பெரல்களால் மட்டுப்படுத்தியுள்ளன. விவசாயத்துறை நாடுகள் தமது உற்பத்தியை ஏற்றுமதி செய்யாமல் குறைத்துள்ளன. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் அரிசி ஏற்றுமதியை மட்டுப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

கடந்த 6 மாதங்களில் உலகின் பெரும்பான்மையான நாடுகள் தனித் தீவுகளாகச் செயல்படக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது. எந்தளவுக்கெனில், ஐரோப்பாவில் நிலத் தொடர்புள்ள நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலைமைகள் அனைத்தும் சேர்ந்து உலகின் ஒவ்வொரு நாட்டினது பொருளாதாரத்தையும் பெருமளவு பாதித்து வருகின்றது.

சந்தைப் பொருளாதாரம் மிகப் பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை கொரோனா நீடிக்கு மாயின், உலகில் பாரிய பட்டினியை ஆபிரிக்க, ஆசிய நாடுகள் எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளது. அவ்வறிக்கையின் எதிர்வுகூறல்கள் கொரோனா உலகப் பொருளாதாரத்தின் மீது ஓர் எதிர்நிலை விளைவை உருவாக்கலாம் என்பதை புள்ளி விபரங்களுடன் எடுத்துக் காட்டுகின்றது.

கடந்த ஆறு மாதங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மொத்தமாக உலகப் பொருளாதாரம் 9000 கோடி டொலர்களை இழக்க நேரிட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களில் இதன் தாக்கம் உச்ச நிலைக்குச் செல்லலாம் எனவும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் தாக்கம் ஒப்பீட்டு ரீதியில் உயர்வாக இருக்கும் எனவும் IMO எச்சரித்துள்ளது. இதனால் உலகப் பொருளாதாரம் 4 வீதத்தால் சுருங்கும் என்று எதிர்வுகூறப்படுகின்றது.

கொரோனாவைப் போன்று உலகப் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்திய வேறெந்த வைரஸும் கிடையாது என்கிறார் சர்வதேச நாணய நிதியத்தில் இயங்கும் பொருளாதார ஆய்வு மையத்தின் பணிப்பாளர் கீதா கோபாலன்.

World Economic Outlooks எனும் IMF அறிக்கையில், The Great lockdown  எனும் பெயரில் அவர் எழுதியுள்ள முன்னுரைக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கின்றார். பின்வரும் காரணி களால் உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்படலாம் என்கிறார் அவர்.

  1. எதிர்வரும் காலங்களில் தொற்று நோயின் போக்கு
  2. கொரோனாவைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள்
  3. பொருள் விநியோகத்தில் ஏற்படும் இடையூறின் செறிவு
  4. கடன் சந்தை முடக்கம்
  5. பொருட்களின் விலைத் தாக்கம்
  6. நுகர்வாளர் நடத்தை மாற்றம்

வரலாற்றில் என்றென்றைக்கும் இல்லாத வகையில் மசகு எண்ணெய் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ள தால் உலக மசகு எண்ணெய் உற்பத்தி 20 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்கள் விமானப் போக்குவரத்து வழமை நிலைக்குத் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் சில நாடுகளில் தொற்று தீவிரமாகப் பரவி வருவதால் அவ் எதிர்வுகூறலை நிச்சயிக்க முடியாது என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை தீவிரமாகவும் தீவிரமற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று நீடிக்குமாயின் உலகப் பொருளாதாரத்தில் பெரு மந்தம் ஏற்படுவது திண்ணம். 2021 நடுப் பகுதி வரை கொரோனா தொற்று நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதென்றே உலக சுகாதார அமையம் கூறுகின்றது.

கடந்த நூறு ஆண்டுகளில் 2020 ஆம் ஆண்டைப் போன்று உலகப் பொருளாதாரம் ஒருபோதும் வீழ்ச்சியடையவில்லை. 1920 களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பெரு மந்தம் (Great Depress ion) மீண்டும் தலைதூக்குவதையே  உலகப் பொருளாதாரத்தின் இன்றைய போக்குகள் காட்டுகின்றன.

100 ஆண்டுகள் நாகரிகங்களின் ஏற்ற இறக்கங்களை, எழுச்சி-வீழ்ச்சியை நிர்ணயிக்கும் காலப் பகுதி என்று இப்னு கல்தூன் எனும் சமூகவியல் ஆய்வாளர் குறிப்பிடும் கருத்து இங்கு நினைவுக்கு வருகின்றது.

இன்றைய கொரோனா எதிர்வரும் செப்டம்பர் வரை நீளுமானால் உலகப் பொருளாதாரம் 3 வீதத்தால் சரியும். இதன் பிரதான குறிகாட்டிகளில் ஒன்று பல்கிப் பெரும் வேலையற்றோர் வீதம் ஆகும். மற்றொரு குறிகாட்டி உலக மசகு எண்ணெய் உற்பத்தியிலும் நுகர்விலும் ஏற்படும் வீழ்ச்சியாகும். அமெரிக்காவின் ஊழியப் படையில் 7 மில்லியன் பேர் சடுதியாக வேலைவாய்ப்பினை இழக்க நேரிட்டுள்ளமை அமெரிக்காவை திக்குமுக்காடச் செய்துள்ளது.

பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, ஸ்பெய்ன் போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகள் அரச துறை ஊழியர்களை திட்டமிட்டுக் குறைத்து வருகின்றன. இந்நடவடிக்கை சிவில் சமூகத்தின் கிளர்ச்சியையும் அதிருப்தியையும் கிளறி வருகின்ற அதேவேளை, தேசியப் பொருளாதாரத்தை முகாமை செய்ய தமக்கு வேறு வழியில்லை என அந்நாட்டு அரசுகள் கூறி வருகின்றன.

முன்னேறிய நாடுகள் சரிவை சரிசெய்ய ஒதுக்கியுள்ள நிதி ஆதரவு போதுமானதாயில்லை. 2020 இல் அமெரிக்கப் பொருளாதாரம் 5.9 வீதத் தாலும் யூரோ வலய நாடுகளின் பொரு ளாதாரம் 4.7 வீதத்தாலும் பின்னடைவை எதிர்கொள்ளும் என எச்சரிக்கப்படுகின்றது. இத்தாலியின் GDP 9.1%, ஸ்பெய்ன் 8.0%, ஜேர்மன் 7.2%, பிரான்ஸ் 7.0% என்றவாறு வீழ்ச்சியடையும் என எதிர்வுகூறப்படுகின்றது.

ஆசிய, லத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரத்திற்கு இதைவிடப் பாரிய அடி விழும் என்பதில் ஐயமில்லை. உலகப் பொருளாதார மந்தம் எமது தேசிய பொருளாதாரத்திலும் மக்களின் அன்றாட வாழ் வியலிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும் ஐயமில்லை. எனவே, மீள்வதற்கான பொறிமுறைகளை வகுத்துச் செயல்பட வேண்டியது அரசுகளின் பெரும் பொறுப்பாக உள்ளது.

About the author

Administrator

Leave a Comment